in ,

ஓவர் பில்ட்-அப் வேணாங்க (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

தமிழில் “மிகைப்படுத்தல்” என்றொரு விதியுண்டு.  அதாவது ஒரு விஷயத்தை அது இருக்கும் இயல்போடு உரைக்காமல், சற்று உயர்வாக, வேறு சில விஷயங்களை அதிகமாய்ச் சேர்த்து, மிகைபட உரைப்பது “மிகைப்படுத்தல்”ஆகும்.  உதாரணத்திற்கு கதைகளிலும், கவிதைகளிலும், இது போன்ற மிகைப்படுத்தல் இடம் பெறும் போது அங்கு அழகுணர்ச்சி கூடும், சுவையும், நயமும் அதிகரிக்கும், வாசிக்கும் வாசகனுக்கு நல் விருந்தாய் அமையும்.

தேவையற்ற அற்புதமான வார்த்தைகளைக் கூறி ஒரு உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளின் இயல்பான தரத்தை உயர்த்துதல். ஆனால், இதே மிகைப்படுத்தல் முறையை நடைமுறை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மனிதன் பயன்படுத்தினான் என்றால், அதுவே பல பிரச்சினைகளின் ஊற்றுக்கண் ஆகி விடுகின்றது.  தற்போது உலவும் வழக்குச் சொல்லில் சொல்வதென்றால் “ஓவர் பில்ட்-அப்” பண்ணுவது.  நவநாகரீக மனிதன் ஒவ்வொரு நிலையிலும் தன்னை ஓவர் பில்ட்-அப் பண்ணப் போகத்தான், பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்திக்கிறான்.  விளைவாய் சமூகமே பிரச்சினையான சமூகமாக மாறிவிடுகின்றது.

பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் புகழைப் பெரிதுபடுத்துகிறார்கள், இதன் விளைவாக, குழந்தைகள் தங்கள் சுயமதிப்பு, திறன்கள் மற்றும் திறன்களைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட, நம்பத்தகாத மதிப்பீட்டை வளர்த்துக் கொள்கிறார்கள்.

விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளின் விரும்பத்தக்க தன்மையை மிகைப்படுத்துகிறார்கள், மேலும் நாம் அடிக்கடி யதார்த்தத்தால் ஏமாற்றமடைகிறோம்.

புதிதாக பணியில் சேரும் ஒரு இளைஞன், உண்மையில் தனக்கு என்னென்ன வேலைகள் தெரியுமோ?… அவற்றை மட்டுமே சொல்லி, பணியில் சேர்ந்தானாயின், அவன் பணியில் அவனுக்கு எந்தவித பிரச்சினையுமே ஏற்பட வாய்ப்பில்லை.  மாறாக, தனக்கு இந்த வேலை தெரியும்!… அந்த வேலை தெரியும்!, என்றும், “இதற்கு முன் நான் வேலை பார்த்த கம்பெனியில் நான்தான் செக்‌ஷனுக்கே இன்சார்ஜ்” என்றும் தன்னைப் பற்றி ஓவர் பில்ட்-அப் கொடுத்து விட்டு, பணியில் சேர்ந்தானாயின், அவன் நிச்சயம் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.  ஏதோ ஒரு நேரத்தில் அவனது ஓவர் பில்ட்-அப் விஷயம் தெரிய வரும்.  அப்படித் தெரிய வரும் போது, அவன் வேலைக்கே அது உலையாய் மாறினாலும் மாறலாம்.

“தாமே தமக்கு சுற்றமும்… தாமே தமக்கு விதி வகையும்!” என்று திருவாசகம் கூறும், ஆனால்… இங்கு அவனே அவனுக்கு எதிரியாகவும், அவனே அவனுக்கு தலைவிதியாயும், மாறும் நிலைக்கு காரணம் அந்த ஓவர் பில்ட்-அப்.

மேலே குறிப்பிட்டது ஒரு சிறிய உதாரணம்தான்.  இது போல் அன்றாட வாழ்க்கையில் பல பில்ட்-அப்கள், பல நிலைகளில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.  இதில் அளவுக்கதிகமான பில்ட்-அப்கள் நிகழ்வது கல்யாணச் சந்தையில்தான்.

யாரோ ஒரு பெருமகனார் அந்தக் காலத்தில் “ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணலாம்!” என்று ஏதோ ஒரு அர்த்தத்தில் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.  பல நல்ல விஷயங்களை உடனே ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மனித மனம், இதை மட்டும் உடனே ஏற்றுக் கொண்டு, ஓவர் பில்ட்-அப்பில் இமயத்தையே இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றது.

வெறும் பத்தாயிரம் மட்டும் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று கூசாமல் கூறுவது,

ஒரு நிறுவனத்தில் உதவியாளனாக இருக்கு ஒருவனை அவன் தான் அங்கு மேனேஜர் என்று புளுகுவது, டிகிரியே முடிக்காதவனை கிராஜுவேட் என்றும், வாடகை வீட்டை சொந்த வீடு, என்றும், எல்லா கெட்ட பழக்கங்களும் உள்ள ஒருவனை “பையன் தங்கம்” என்றும், இப்படிப் பலப்பல விஷயங்களை மறைத்து, பலப்பல விஷயங்களை சேர்த்து, இருப்பதை இல்லையென்று கூறி, இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லி, பில்ட்-அப்களையே அஸ்திவாரமாக்கிக் கட்டப்படும் பல இல்லறக் கோட்டைகள், பின்னாளில் பிரச்சினைகளை சந்திக்கும் போது, ஆரம்பத்தில் பில்ட்-அப் செய்தோர் யாருமே அங்கு உடனிருக்க மாட்டார்கள். பிறகென்ன?… வாக்குவாதம்தான், கைகலப்புதான், விவாகரத்துதான்.

இந்த இழி நிலை தேவையா?.  உள்ளதை உள்ளபடி சொல்லி, இயல்பாய் நடப்பவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை மனத்தோடு இல்லறக் கோட்டைகளை அமைத்தால், அவைகள் திருமலை நாயக்கர் மகாலைப் போல், கரிகாலன் கட்டிய கல்லணையைப் போல், காலங்களைக் கடந்தும் அதே உறுதியோடு கம்பீரம் காட்டி நிற்குமல்லவா?

அடுத்து விளம்பரங்கள். பொதுவாகவே விளம்பரங்களில் மிகைப்படுத்தல் என்பது தவிர்க்க முடியாதவொன்று.  வியாபாரத்தில் அவையெல்லாம் ஒரு வியாபார யுத்தி எனவும், வியாபார தந்திரம் எனவும்தான் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால், அங்கும் “ஓவர் பில்ட்-அப்” கலாச்சாரம் புகுந்ததால், தீங்கான ஒரு பொருளை ஒரு பெரிய நடிகரையும்… நடிகையையும், வைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து விற்பனையில் உச்சம் தொட்ட ஒரு நிறுவனம் சடாரெனச் சரிந்த கதையை நாடே அறியும். 

மிகைப்படுத்தல் என்பது தவறான அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அனுமானங்களுக்கு வழி வகுக்கும் ஒரு சிதைந்த சிந்தனை முறையாகும்.  ஒன்று அல்லது இரண்டு தனிப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு நபர் ஒரு முடிவுக்கு வந்து, அதன் விளைவுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அனுமானங்களைச் செய்யும் போது இது நிகழ்கிறது.

ஆகவே, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் இலக்கணத்தை மனிதன் அறிந்து கொண்டானெனில் அவன் சிக்கலில்லா சீரான வாழ்க்கையை சிறப்போடு வாழ முடியும். எதுவுமே மிகையாக்கப்படும் போதுதான் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. மிகையாக காற்றடித்தால் டயர் வெடிப்பது போல்,  மிகையாக உணவு உட்கொண்டால் வயிறு கெட்டு விடுவது போல், மிகையாக வேலை செய்தால் சரீர வலி ஏற்படுவது போல, மிகையாக செலவு செய்தால் வறுமை நெருங்குவதைப் போல், நம் பேச்சிலும் செயலிலும் மிகையைத் தவிர்ப்போம்.  மீட்சி பெறுவோம்.

(முற்றும்)             

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அச்சம் தவிர் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    நீங்களும் வாங்கலாம் நோபல் பரிசு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்