in ,

ஒரு வாரம்… இரண்டு நாள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

‘ஹை… என் பெண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா‘ என்று உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அப்படி ஒரு சந்தோஷம்… ஒரு குதூகலம். அப்போதுதான் ராணியை திருச்சி பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

‘அப்பாடா… ஒரு வாரத்துக்கு ஜாலிதான்… அவ தொல்லை இல்லை…’ என்று சந்தோஷப்பட்டபடியே மெத்தையில் குப்புற விழுந்தான்.

ஆபீசிலிருந்து வர கொஞ்சம் லேட்டானால், ‘ ஏன் லேட்… ‘ என்பாள்.  டிரெஸ் போட்டால், ‘போட்டதையே போடணுமா… ‘ என்பாள். ‘ இதென்ன மேட்சிங்… ரசனையே இல்லாமல்… ’ என்பாள். ‘இனிமே குடிச்சிட்டு வராதீங்க. வந்தா வெளியிலேயே படுத்துக்கிடந்துட்டு காலைல வாங்க… ’ என்பாள்.  ‘ ச்சே… என்ன கெடுபிடி… என்ன கெடுபிடி… ‘

ஒருவாரமும் ஜாலியாக ஓடப்போகிறது என்று நினைத்தபோது பரவசம் பறந்துவந்து அவனை பற்றிக்கொண்டது.

மொபைல் சிணுங்கியது. முத்துதான் கூப்பிட்டான். ‘ மச்சி… நான் சொன்னேன்ல.. பாட்டில் வந்திடுச்சு.  மருதுவும் வர்றேன்னிருக்கான். சைடு டிஷ் அவனோடது… ‘  என்றான்.

ராணிதான் ஊருக்கு போய்விட்டாளே, பேசாமல் நம் வீட்டிலேயே பார்ட்டியை வைத்துக்கொள்ளலாமே என்றெண்ணிய,  ‘ மச்சீ… என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டாடா… இங்கேயே எடுத்துக்கிட்டு வந்திடுங்க… விழாவை இங்கேயே வச்சுக்கலாம்… ’ என்று சொல்லி குதூகலத்துக்கு கூடுதல் சேர்த்தான்.

சாப்பாட்டுக்கு என்ன செய்ய… உடனே ஓடிப்போய் ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தான்.   தோசைமாவு கொஞ்சம் வைத்துவிட்டுப் போயிருந்தாள் ராணி. ‘ ஓகே இது போதும், தோசை ஊற்றிக்கொள்ளலாம், தொட்டுக்கொள்ள ஆன்லைனில் ஆர்டர் போட்டுக் கொள்ளலாம் ‘

ராத்திரி எட்டுமணிக்கெல்லாம் முத்துவும் மருதுவும் வந்துவிட்டனர். மருது வரும்போதே சைடுடிஷ்களையும் வாங்கிவந்திருந்தான். உடனே ஆன்லைனில் இரண்டு கிரேவி ஆர்டர் போட்டார்கள்.  எல்லாமே அசைவம்தான்.

பிரசாத்திற்கு சமையல் எதுவும் தெரியாது. அவனது அம்மா அவனுக்கு எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. ராணியும் கிச்சனுக்குள் அவனை விடவே இல்லை.

ஆனால் மருதுவுக்கு சமையல் ஓரளவு தெரியும். அதனால், மருதுவே தள்ளாட்டத்துடன் எழுந்து போய், தோசை ஊற்றினான். ஆனால் அவையெல்லாம் அடி பிடித்துகொள்ள, தோசை கரண்டியால் குத்தி… நோண்டி… எல்லாம்  பிய்த்துக்கொண்டு வந்தன.

‘அடேய்… தோசை வார்க்கச் சொன்னா… கொத்து பரோட்டா வார்த்துக் கொண்டு வந்திருக்கே… சரி விடு… தோசையானாலும் பிய்ச்சிதானே திங்கனும்… ’ என்று ஜோக்கடித்துக் கொண்டு கிரேவியை கலந்து சாப்பிட்டு முடிக்கும்போது நள்ளிரவு மணி ஒன்று.

யாரும் எழுந்து நிற்கும் நிலைமையில் கூட இல்லை. அப்படி அப்படியே சாய்ந்துவிட்டனர், பிரசாத்தும்தான்.

XXXXXX

லேசாய் தூக்கம் களைந்தபோது செல்லை எடுத்துப் பார்த்தான் பிரசாத், எல்லாம் மங்கலாய் தெரிந்தன. ஆனாலும் மணி நான்கு.  எப்போது படுத்தோம், எப்போது தூங்கினோம் என்று எதுவுமே தெரியவில்லை.  வயிறு புரட்டியது. தொண்டையை எதுவோ முட்டியது. எழுந்து வாஷ்பேஸினுக்கு ஓடினான். வழியிலேயே, ‘ உவ்வே. ‘

கண்கள் சொக்கின. தலை சுற்றியது. அப்படியே சரிந்துவிட்டான்.

மறுபடியும் எழுந்தபோது மணி எட்டு.  இடையில் எழுந்தது, வாந்தி எடுத்தது எல்லாம் கனவு போல் வந்து போனது. இன்னும் வயிற்றுக்குள் புரட்டலும் தலைவலியும் இருந்தது.

திரும்பிப் பார்த்தான். வாஷ்பேஸின், சுவர், தரை எல்லாம் அவன் எடுத்த வாந்தி. பதறிக்கொண்டு எழுந்தான். மருதுவும் முத்துவும் அலங்கோலமாகக் கிடந்தனர். இன்னும் வாந்தி வருவது போலத்தான் இருந்தது. எழுந்து ஓடினான். மறுபடியும் வாந்தி.

வாந்தி எடுத்ததும், பக்கெட்டில் தண்ணீர் பிடித்து ஊற்றி கழுவி விட்டான். பழைய துணி எடுத்து வந்து வாஷ்பேஸின் சுவர் எல்லாம் துடைத்துவிட்டான். டெட்டால் தெளித்தான். மாப்புப் போட்டான்.

அதற்குள் எழுந்த மற்ற இருவரும், ‘ என்னப்பா..  என்னாச்சு…’ என்று வடிவேலு ஸ்டைலில்  கேட்க, பிரசாத்துக்கு அதை ரசிக்க முடியவில்லை. கோபப்பட்டும் பிரயோஜனமில்லை. அவர்கள் முகம் மட்டும் அலம்பிக்கொண்டு அப்படியே கிளம்பிவிட்டனர். குளித்து முடித்தான். இடையில் மேலும் இரண்டு முறை வாந்தி வருவது போல இருந்தது. வரவில்லை.

ஆபிஸ் போய் உட்காரமுடியாது என்று தோன்றியது. ஆபீசிற்கு லீவு சொல்லிவிட்டு உடனே டாக்டரிடம் கிளம்பிவிட்டான்.

‘ புட் பாயிஸன் மாதிரி தெரியுது… ‘ என்று சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார் டாக்டர்.

வீட்டுக்கு வந்தான். வயிறு காலி. ஆனாலும் பசிக்கவில்லை. வயிறு கின்னென்றிருந்தது

ராத்திரி போட்ட சரக்கோ… சைடு டிஷோ எதுவோ சரியில்லை. மருது, முத்துவிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. ‘ நமக்கு மட்டும்தான் சேரவில்லையோ… ‘

ஹோட்டல் சாப்பாட்டை தவிருங்கள் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ‘ அதுசரி, இப்போ எப்படி சாப்பிடுவது. ‘ எழுந்து போய் பிரிஜை திறந்தான். மாவு காலி. முட்டை மட்டும் இரண்டு மிச்சம் இருந்தது. அது வேண்டாம் என்று தோன்றியது. பேசாமல் மாமி மெஸ்ஸிற்கு நடந்தே போனான். சாம்பாரை லேசாய் தொட்டு இட்லி சாப்பிட்டுவிட்டுத் திரும்பினான்.

வந்ததும் மாத்திரையை போட்டுக்கொண்டு நன்றாகத் தூங்கிவிட்டான். அது தூக்கமா… கிறக்காமா என்றும் தெரியவில்லை.

மதியம் எழும்போது மணி இரண்டு. இனி அசைவமே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டான். பார்ட்டியும் வேண்டாம்… கீர்ட்டியும் வேண்டாம் என்றும் முனகிக் கொண்டான். மறுபடியும் மெஸ்ஸிற்கே போய் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்துசேர்ந்தான்.

ராணிக்கு போன் பண்ணலாம் என்று யோசித்து பிறகு பண்ணவேயில்லை. ராத்திரி சாப்பிடாமலேயே படுத்து தூங்கிவிட்டான். காலையில் எழுந்தபோது கொஞ்சம் சுமாராக இருந்தது.  சுடுதண்ணீர் போட்டு குளித்தான். பேண்ட் சட்டையைத் தேடினான். நிறைய துணிகள் துவைக்காமல் கிடந்தன. துவைத்தவை அயர்ன் செய்யாமல் கிடந்தன.

ராணிதான் அவனுக்கு எப்போதும் துணிகளை தேய்த்துத்தருவாள். இப்போது வேறு வழியின்றி அயன் பாக்சை எடுத்து அவனே தேய்த்தான். ஆனாலும் ராணி தேய்ப்பது போல வரவில்லை.  ஒருவழியாய் தேய்த்து எடுத்துப் போட்டுக்கொண்டான்.

ஆபீஸ் வேலைக்கு நடுவில் ராணிக்கு போன் செய்ய நினைத்தான். ஆனால் ராத்திரி நடந்தவைகளை சொல்லவேண்டாம் என்றும் நினைத்துக் கொண்டான். போன் போட்டான்.

‘ என்ன பண்றீங்க, சாப்பிட என்ன பண்ணுனீங்க, ஆபீஸ் போகும்போது வீட்டை ஒழுங்கா பூட்டினீங்களா, டிரெஸ் அயன்பண்ண நேரமில்லாம வந்துட்டேன். அயன் பண்ணி போட்டுக்கிட்டு ஆபீஸ் போனீங்களா இல்லை அப்படியே எடுத்துப் போட்டுக்கிட்டு போனீங்களா, துணிங்க துவைக்கவும் நேரமில்லை எனக்கு. அதுசரி… உங்களுக்கும் துவைக்கத் தெரிஞ்சாதானே… வீட்டை சுத்தமா வைங்க.. நான் இல்லேன்னு பிரண்ஸோட பார்ட்டிக்கு போய்டாதீங்க… தோசை மாவை அப்படியே வச்சிட்டு வந்துட்டேன். உங்களுக்கு தோசை வார்க்கத் தெரியாதில்லையா, எடுத்து பேஸின்ல கொட்டிட்டு லேசா கழுவிடுங்க. நான் வந்து பார்த்துக்கறேன்… ’ என்றவள், ‘ நேத்து முழுசா நான் போனே பண்ணல… ஜாலியா இருந்துச்சா… ‘ என்று சிரித்தாள். எல்லாவற்றுக்கும் ஊம் மட்டும் கொட்டினான், இவன்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்தபோது எல்லாம் அப்படி அப்படியே கிடந்தன. தோசை மாவு பாத்திரம் காய்ந்து கிடந்தது. மருது ஆம்லேட் போட்டிருக்கிறான், முட்டை ஓடுகள் ஸ்டவ் மேலேயேயும் கீழேயுமாக  கிடந்தன. முட்டை உடைக்கும்போது ஆங்காங்கே சிந்திக்கிடந்தன.  ஸ்டவ்வைச் சுற்றி தோசை மாவு திட்டுத்திட்டாய் கிடந்தன. சாப்பிட்ட தட்டுகள் மேஜை மேல் அப்படியே காய்ந்து கிடந்தன.

இப்போது எறும்புகளும் ஈக்களும் வந்து அங்கே பார்ட்டி கொண்டாடிக்கொண்டிருந்தன.

கழற்றி போட்டிருந்த சட்டையில் அவன் எடுத்த வாந்தி நாறிக்கிடந்தது. ஸ்டவ் முழுதும் துடைத்துவிட்டு, மேடையை துடைத்து, மேஜையைத் துடைத்து, பாத்திரங்களை கழுவி, துணிமணிகளை ஊறவைத்து துவைத்து… துடைப்பம் கொண்டு வீட்டைப் பெருக்கி, மாப்பு போட்டு… அசந்து போனான்.

ஆனால் எல்லாமே அரை குறையாய்… தேய்த்த பாத்திரம் சரியாக கழுவாமல் தெரிந்தது. காயப் போட்ட சட்டைக்காலரில் அழுக்கு தெரிந்தது. பெருக்கி மாப்பு போட்ட பிறகும் தரையில் ஆங்காங்கே குப்பை கோடுகோடாய் தெரிந்தது.

‘ உஸ்… அப்பாடா… ‘ என்று வந்து சோபாவில் சாய்ந்தான்.

‘ ச்சை… இனிமே பார்ட்டியே வேண்டாம்… ஆர்டர் பண்ணி தின்னவும் வேண்டாம்… ‘ என்று நினைத்துக் கொண்டான்.

‘ ச்ச்சே. ஒரு வாரம் ஜாலியாக ஓட்டலாம் என்று நினைத்திருந்தோமே, இரண்டு நாள்கூட ஓட்டமுடியவில்லையே… ‘ விரக்தியாய் முனகினான்.

மொபைலை எடுத்தான். ராணியின் நம்பரைப் போட்டான்.

‘ ராணி, உடனே நீ கிளம்பி வந்துடு. என்னால முடியலை… ’ என்றான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. கதை நடைமுறையை நன்றாக விளக்குவதாக தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர். எனினும் கருத்துக்களை இந்தத் தளத்தில் பதி விட்டால் அனைவரையும் அவை சென்றடையும்.

  2. மனைவி இல்லாதபோது ஏற்படுவதாகத்தோன்றும் சந்தோஷம் கானல் நீர்..அந்த அருமை இப்படிக்கஷ்டப்பட்டால் மட்டுமே புரியும்

நிஜத்தின் நிழல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 29) – தி.வள்ளி, திருநெல்வேலி