in

ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 3) – ✍ சியாமளா கோபு

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1    பகுதி 2

“போன வாரம் என் மாடுங்களில் செவளியைக் காணலையேன்னு தேடிக்கிட்டுப் போனேன். மாட்டைக் கடைசி வரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால் அதோ அங்க உஷ். உஷ்ன்னு சத்தம் கேட்கவே மாட்டைத் தேடறதை விட்டு பயந்து ஓடியாந்துட்டேன்”

சொன்ன கருப்பை வழி மொழிந்தான் செவந்தி. ”ஆமாம், கன்னிப்பா. நான் கூட பயந்து போயித் தான் ஓடியாந்துட்டேன். ஒருவேளை நாம தான் கற்பனை பண்ணிக்கிட்டோமான்னு யோசித்தேன். ஆனால் இவன் சொல்றதைப் கேட்டப் பிறகு தான் நெசமாவே நானும் கேட்டது இதோ இவன் சொல்ற சத்தத்தை தான்”

அன்றைக்கு மூன்றும் பேரும் ஒரு முடிவு எடுத்தார்கள். இனி மூவரும் தனித்தனியாக போகக் கூடாது. சேர்ந்தே இருப்பது என்று. மாட்டையும் அவர்கள் கண்பார்வையிலேயே மேய்த்துக் கொள்வது என்று முடிவு செய்த பிறகு தான் ஓரளவுக்கு பயம் தெளிந்தவர்களாக இருந்தார்கள்.

“ஏய் கன்னியப்பா” குடிசையின் வாசலில் தலையாரியின் குரல் கேட்டது. இந்நேரத்துக்கு எதற்கு நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று யோசித்தவாறே வெளியே வந்தான் கன்னியப்பன்.

“உன்னை உடனே சாவடிக்கு வர சொன்னாங்க மணியக்காரரு”

“ஏன் அண்ணே, இந்த நேரத்தில?’

“ஏன் இந்த நேரத்துக்கு என்ன?”

“ராத்திரி நேரமாஇருக்கே. மாரியம்மாவுக்கு பிரசவ நேரம் வேறே”

“நீயாடா கூட இருந்து பிரசவம் பாக்கப் போறே?”

“அண்ணே”

“அண்ணே நொந்நேன்னு”

வேறு வழியில்லை. போய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் கிளம்பினான் கன்னியப்பன். அதற்குள் குடிசைக்குள் இருந்த மாரியம்மா “அண்ணே எதுக்கு எம் புருஷனைக் கூப்படறாங்க?” என்று வழி மறித்தாள்.

இதை கேட்கத் தோணவில்லையே நமக்கு என்ற யோசனை ஓட, “ஆமாம் எதுக்கு கூப்பிடறாங்க?” என்று கன்னியப்பனும் கேட்டான்.

“ம்… உன்னை விருந்துக்கு கூப்பிடறாங்க” நெட்டி முறித்தான் அவன்.

“அண்ணே”

“ஆளைப் பாரு. உன் மேல் பிராது வந்திருக்கு. வளவளன்னு பேசிக்கிட்டு இருக்காம வெரசா கிளம்பி வா”

“அய்யோ என்ன மச்சான்? என்ன பிராது?” கதறினாள் மாரியம்மா.

“இரு புள்ளை. பார்த்துட்டு வந்துடறேன்”

சாவடியில் கிட்டத்தட்ட கிராமத்தினர் அனைவரும் கூடி இருந்தார்கள். அதிலும் முக்கியமாக பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நடுவே கருப்பும் செவந்தியும் வேறு. என்ன நடக்கிறது இங்கே? என்று குழம்பியவனாக கூட்டத்தினரை விலக்கி கொண்டு உள்ளே வந்தான்.

கூட்டாளிகள் இருவரையும் ஒரு சேர காணவும் சரி தான் மாடு காணாமல் போனதைப் பற்றி விசாரிக்கத் தான் கூப்பிட்டிருப்பார்கள் என்று முடிவற்கு வந்தவனாக சபையைப் பார்த்து வணக்கம் என்று கும்பிட்டு நின்றான் கன்னியப்பன்.

“என்ன கன்னியப்பா, மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுட்டு நல்லா தூங்கினியா?”

“அய்யா, நான் தூங்குவது இல்லைங்க”

“அப்புறம் எப்படி இத்தனை மாடுங்க காணமல் போகும்?”

“சொன்னீங்களாடா?” நண்பர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டான்.

“சொன்னோம் அண்ணே” ஒத்து ஊதினார்கள் இருவரும்.

அது தான் சொல்லி விட்டார்களே அப்புறம் என்ன? என்பதைப் போல ஊர் பெரியவர்களைப் பார்த்தான் கன்னியப்பன்.

“என்னடா நீயும் இவுங்க விட்ட அதே கதையைத் தான் விடப்போறியா? பேசி வெச்சிக்கிட்டு கதை விடறீங்களா? மரியாதையா மாடுகளை என்ன செய்தீங்கன்னு விவரம் சொல்லிடீங்க”

“அய்யா நானே வந்து உங்க கிட்ட விவரம் சொல்லாம்னு நெனச்சென்னுங்க. அங்கே காட்டுக்கு முகப்புல இருந்து கல்லெறியும் தூரத்தில் ஒரு பாம்புபுத்து இருக்குங்க. அங்கே இருந்து உஷ்உஷ்ன்னு சத்தம் வருது. அங்கே காத்து கருப்பு ஏதானும் இருந்து அது தான் மாடுகளை காவு வாங்கிடுது போல.”

“இதென்ன புதுசா இருக்கு. நம்பற மாதிரியா இருக்கு.”

“யாராவது எங்களோட வந்து பாருங்க. உங்களுக்கேத் தெரியும்”

காத்து கருப்பு என்றதும் பெரியவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் அடிமனதில். ஆனாலும் இவர்கள் சொல்வது போல ஏதேனும் ஏடாகூடாமாக இருந்து, இதைப் போல பலி விழுந்தது என்றால் அப்போது கிராமத்தார்கள் அப்போதே அந்த மாடு மேய்ப்பவர்கள் சொன்னார்கள். நீங்களே ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்திருக்கலாம் இல்லே என்று நம்மை பழி சொல்வார்களே.

என்ன செய்வது? என்று யோசித்தார்கள். பாக்கு வெட்டியில் வைத்தது போல கிடிக்கிப்பிடியாக இருக்கிறதே என்று அலமலந்து போனார்கள்.ஆனாலும் வறட்டு கவுரவத்தை விடாமல்  தங்களுக்குள் ஆலோசித்தார்கள்.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாளை இரவு வரைக்கும் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் மாடுகளுக்கு என்னவாயிற்று என்பதைக் கண்டுபிடித்து வர வேண்டும். அப்படியில்லாவிட்டால் தொலைந்து போன மாடுகளுக்கு நீங்கள் தான் கிரயத்தை எண்ணி எடுத்து வைக்க வேண்டும்”

“நாங்க அம்மாம் பணத்துக்கு எங்கே போவது?” திகைத்துப் போனார்கள் மூவரும்.

“நாங்க என்னப்பா பண்ணுவது?”

அதற்குள் வடக்கு வீதி செல்லாயி கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தவள் “அய்யா, நான் என் ஒத்தை மாட்டை வெச்சிக்கிட்டு தான் பொழச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு புருஷனும் இல்லை. இருக்கிற சின்னப்பயலும் நானும் இனி என்ன பண்ணுவது?”

“ஆமாங்கய்யா, சும்மாவா சொல்லியிருக்காங்க, சம்சாரி வீட்டுக்கு ஒரு பசுமாடுன்னு. ஆளு அம்புன்னு எதுவும் இல்லாம அநாதரவா இருக்கிற செல்லாயிக்கு இந்த மாடு இல்லாட்டா பொழப்பே நாறிப்போய்டும்”

“ஏன் எனக்கும் தான்”

“எனக்கு மட்டும் என்னவாம்?”

கூட்டத்தில் பெண்கள் ஆளாளுக்குப் பேசத் தலைப்பட்டார்கள். சிலர் கோபமாக. சிலர் அழுகையுடன். சாவடியே மிகவும் சோகமாக இருந்தது. கன்னியப்பன் கருப்பு செவந்தி இவர்கள் மூவருக்கும் ஆதரவாக பேசுபவர்கள் இல்லை. அவர்களும் ஏழைகள் தானே. அவ்வளவு பணத்தை எப்படி ஈடுக் கட்டுவார்கள்?

கடைசியில் கன்னியப்பன் ஒத்துக் கொண்டான் மாடுகளின் கதி என்னவாயிற்று என்று அறிந்து மாட்டை மீட்டுக் கொண்டு வருவதாக. வேறு வழியில்லை. விடிய வெள்ளனே போகலாம் என்று பேசிக் கொண்டு வீட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது கன்னியப்பனின் தாய் எதிரே பதறியபடி வந்தாள்.

“ஏலேகன்னிப்பா, மாரியம்மாவுக்கு நோவு கண்டுடுச்சு. ஓடு. போய் மருத்துவச்சியைக் கூட்டியாந்துடு. நான் வீட்டுக்குப்போறேன்”

“என்னம்மா இப்போ நாளில்லையே”

“பிறப்பையும் இறப்பையும் யாரால் கணிக்க முடியும்? நின்னு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காம ஓடு” சொல்லி விட்டு அவளுமே வீட்டை நோக்கி வேக நடையில் பாதி நடையும் ஓட்டமுமாக விரைந்தாள். 

மருத்துவச்சியை அழைத்துக் கொண்டு கன்னியப்பன் வீட்டிற்கு வந்த போது மாரியம்மாள் பிள்ளையைப் பெற்றிருந்தாள். ஆனால் பிறந்த பிள்ளை மூச்சு விடுவதற்கு திணறிக் கொண்டிருந்தது. கன்னியப்பன் கையிலே பிள்ளை இறந்தும் போனது.

பொழுதும் விடியத் தொடங்கியது. பிள்ளை பிறந்து இறந்ததிற்கு அழுது முடித்து விட்டு களைத்து போன கன்னியப்பனை தேடிக் கொண்டு கூட்டாளிகள் வந்து விட்டார்கள். மாரியம்மாவிடம் விவரம் சொல்லப் போய் அவள் அதற்கும் சேர்த்து அழவே பிரசவ ஜன்னிக் கண்டு விட்டது அவளுக்கு.

கன்னியப்பனுக்கோ எங்கே மாரியம்மா தன்னை விட்டு விட்டுபிறந்த பிள்ளையுடன் பரலோகம் போய் விடுவாளோ என்று கவலையில் அழுவதற்கு கூட முடியாமல் கிராமத்தினரின் நெருக்கடிக்காக காட்டை நோக்கி போகும் படி ஆகி விட்டது.

நாள் முழுவதும் காட்டில் மாட்டைத் தேடி நடந்தார்கள் மூவரும். காணவில்லை மாடுகள். இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று காட்டின் உள்ளே போய் விட்டார்கள். அலுத்துக் களைத்துப் போய் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். பொழுது போய் இருட்டத் தொடங்கி விடவே வீட்டிற்கு திரும்பும் வழி தெரியாமல் இரவு இங்கேயே தங்கி விடுவது என்று தீர்மானித்தார்கள்.

மாடு இல்லாமல் போனால் அதற்கு உண்டான கிரயத்தை கட்டனும். அதற்கு இங்கே மரத்தின் மீது ஏறிப்படுத்துக் கொள்வது. விடிந்ததும் மீண்டும் மாடுகளைத் தேடத் தொடங்குவது என்று தீர்மானித்துக் கொண்டு மரத்தின் மீதி ஏறிப் படுத்துக் கொண்டார்கள்.

விடிந்து வெளிச்சம் வரத் தொடங்கிய அந்த அதிகாலைப் பொழுதில் உஷ்உஷ் என்று சத்தம் கேட்டு கண் முழித்தார்கள். எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. எதற்கு வந்தோம் என்றும் புரியவில்லை.

உஷ்உஷ் என்ற சத்தம் தான் அவர்களுக்கு தாங்கள் தேடி வந்த மாடுகளை நினைவுபடுத்தியது. சத்தம் வந்த திசையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு பாம்பு புற்றில் இருந்து தான் அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு மாடு காணப்பட்டது.

“ஏண்டா இந்த மாடு தான் அப்படி சத்தம் போட்டதா?”

“நம்ம மாடு தானே!”

“ஆமாம்”

“அப்பாடா நல்லவேளையா ஒன்னை கண்டு பிடிச்சிட்டோம். அப்படினா மத்தது எல்லாம் இங்ஙனக்குள்ளத் தான் சுத்திக்கிட்டு இருக்கும். பாவம் வழி தெரியாம சுத்திக்கிட்டு இருக்குங்க”

“நமக்கே வழி தெரியலையாம். பாவம் அதுங்க என்ன பண்ணும்”

“சரி இறங்குவோம். இந்த மாட்டை பிடிச்சிக்கிட்டு மீத மாட்டையும் தேடலாம் வாங்கடா” சொல்லியவாறே மரத்தில் இருந்து இறங்கத் தொடங்கினார்கள். 

அப்போது.!

புற்றிலிருந்து வெளியே வந்த அந்த உருவத்தைக் கண்டு திகைத்துப் போய் அப்படியே இறங்காமல் நின்று விட்டார்கள்.

என்னவொரு பயங்கரமான உருவம். !

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த கோர உருவம் மாட்டைப் பிடித்து அப்படியே வாயில் போட்டு மென்று முழுங்கியது. மீண்டும் புற்றில் போய் படுத்துக் கொண்டு விட்டது.

மெல்ல தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள் மூவரும். ”நம்மளோட மாடுகளை எல்லாம் இந்த ராட்ஸசன் தான் முழுங்கி இருக்கான்.”

“அடப்பாவமே. என்னவொரு கோர உருவமடா!”

“இது ராட்ஸசன்னு உனக்கு எப்படிடா தெரியும்?”

“எங்க பாட்டி சொல்லியிருக்குடா ராட்ஸசங்க தான் இவ்வளவு அசிங்கமா கோரமா இருப்பாங்கன்னு”

“அப்படின்னா நெசமாவே இது ராட்ஸசனா?”

“ஆமாம். எங்க பாட்டன் கூட சொல்லும். இதோ தெரியுதே மலைங்க. அதில தான் அரக்கனுங்க எல்லாம் வசித்து வந்தாங்களாம்”

“இப்போதும் அங்கே தான் இருக்காங்களா?”

“இல்லை. அவுங்களுக்கும் தேவர்களுக்கும் பெரிய சண்டை கூட நடந்ததாம். கடைசில தேவர்ங்க தான் ஜெயித்ததாம். அந்த அரக்கன் எங்கேயோ ஓடிப் போய் ஒளிஞ்சிக்கிட்டானாம்”

“ஒருவேளை அவன் தான் இவனோ?”

“இருக்கலாம்”

“ஐயோ. மெல்லமா இறங்குங்கடா. ஊருக்கு ஓடலாம்”

“மாடாவது மண்ணாவது”

“ஆமாம். ஓடியாங்கடா”

ஊரில் இவர்கள் வந்து சொன்ன தகவலைக் கேட்டு உண்மையில் ஊரார் பயந்து தான் போனார்கள். ஏதோ நாம் செய்த புண்ணியத்தால் அந்த அரக்கன் காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருக்கனே. அந்த மட்டும் நாம் தப்பினோம். மாட்டை இனி மேல் அங்கே மேய்ச்சலுக்கு கொண்டு போக வேண்டாம் என்று தீர்மானித்துக் கொண்டு சற்றே அச்சம் அகன்றவர்களாக இருந்தார்கள்.

மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்பது ஒன்று இல்லாமல் போய் விடும் அல்லவா! மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன!

ஒருநாள் மதியவேளையில் உச்சி வெய்யிலில்ஊரின் மையத்தில் வந்து நின்றான் மகாசுரன். ஆம். தேவர்களுடனான போரில் தோற்று ஓடிப் போய் மண்ணுக்குள் பதுங்கி கொண்டிருந்த மகாசுரனே தான். ஆனால் மண்ணுக்குள் புதைந்திருந்ததினால் பழைய பெருத்த உருவமன்றி சாதாரண மனிதர்களை விட சற்றே உயரமாக அதாவது ஏழடி உயரத்தில் ஒற்றைக் கண்ணுடன் அகோரமாக வந்து நின்றான்.

சித்திரை மாதத்தின் அக்கினி நட்சத்திரத்தின் உக்கிர வெய்யிலுக்கு பயந்து யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அந்த உச்சி வேளைப் பொழுது. தார்க்கட்டி நெருப்பில்லாமல் உருகி விடக் கூடிய வெப்பம். ஆடு மாடுகளும் கூட கொட்டகையில்தான் அடைந்து கிடந்தது.  தாகத்திற்கு நீர் குடிப்பதற்காக என்றால் கூட வெளியே போக விரும்பாத வெய்யில்.

ஊரும் உலகமும் முடங்கிக் கிடக்கும் பொழுதில் சாவடியில் வந்து நின்ற மகாசுரனை யாரும் பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த மகாசுரன் தான் வந்து நின்றதற்கு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இந்த கிராமம் இத்தனை துணிச்சலுடன் நிம்மதியாக இருக்கிறதே என்று முதலில் சற்று ஆச்சரியப்பட்டவன் “ஊஹூம் இது சரிப்படாது. இவர்களை ஒரு வழி செய்தால் தான் சரி” என்று தீர்மானித்தவனாக சுற்றும் முற்றும் பார்த்தான். என்ன செய்யலாம்?

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    புதுப்பொலிவில் சஹானா, போட்டி அறிவிப்பு & மூன்றாம் ஆண்டு நிறைவு