in

ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 1) – ✍ சியாமளா கோபு

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நாம் எல்லோருமே சிறுவயதில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு நிலாவைப் பார்த்தவாறு பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்திருப்போம். நமக்கு எத்தனை வயதானால் தான் என்ன! நமக்குள் இருக்கும் சிறுமியோ சிறுவனோ எண்ணங்களால் இன்னும் வளராமல் தான் இருப்பார்கள் இல்லையா!

இன்றைக்கும் இரவில் வானத்தின் உச்சியில் அந்த நிலைவைப் பார்க்கும் போதும் அந்த கதைகளினால் நமக்குள் விரிந்திருக்கும் கற்பனைகள் சிறகடிக்கத் தொடங்கும் அல்லவா! நமக்குள் அத்தகைய ஒரு அனுபவம் இருக்கும் தானே. அத்தகைய கற்பனையை விவரிக்கும் சிறு முயற்சி தான் இந்த கதை.

சிறுவர் கதைகள் எழுதுவது அத்தனை சுலபமானது அல்ல. நாமே அத்தகைய ஒரு சிறுப்பிள்ளைத்தனமான கற்பனைக்குள் அமிழ்ந்தால் மட்டுமே அதேப் போல ஒரு கதையைக் கொடுத்திட இயலும். ஆனால் இன்று வளர்ந்த பிள்ளைகளாகிய நமக்குள் இருக்கும் அந்த சிறுமியையோ சிறுவனையோ வெளியே கொண்டு வந்து விடக்கூடிய ஒரு முயற்சியை செய்திட எண்ணி இந்த கதையை எழுத தொடங்குகிறேன்..

நன்றி.

G. சியாமளா கோபு

இனி கதை வாசிப்போம் வாருங்கள்…

 “டேய் ராஜு…………டேய். ராஜா………. எங்கேடா போயிட்டே?”  எவ்வளவு நேரமா உன்னை தேடறது? டேய் ராசு…..”

குடிசைக்குள் இருந்து வெளியே வந்த மாரியம்மா தன் பலம் கொண்ட மட்டும் கத்தினாள். “ராசு……….. எங்கேடா போயிட்டே?”

குடிசையின் பக்கவாட்டிலிருந்து வந்தான் ராசு என்கின்ற ராஜேந்திரன். “அம்மா ஏன்மா கத்தறே?” என்ற ராஜேந்திரன் இருபது வயதில் ஒல்லியாக உயரமாக முடி முகத்தில் புரள வயதிற்கேற்ற மிடுக்கோடு திடகாத்திரமான தேகப் பொலிவோடு கண்களில் கூரான பார்வைக்கும் கீழே சதா காலமும் கற்பனையில் மிதப்பதைப் போன்ற பாவனையில் இருப்பவன்.

“எங்கே போயிருந்தே?”

“பின்னாடியிருக்கிற மல்லிக் கொடியிலே ஒரு சின்ன சிட்டுக்குருவி வந்து உக்காந்துச்சும்மா. அதைப் பிடிக்கலாம்னு போனேன்”

“ஆளு தான் வளர்ந்திருக்கே” வார்த்தையை முடிக்கும் முன்,

“ஆமாம். ரொம்ப வளந்துட்டேன்” என்று எம்பிக் காண்பித்தான்.

“பார்த்து, ரொம்ப வளந்திடாம. வானத்தை முட்டப் போறே”

“நீ பாத்துக்கிட்டே இரு. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் நான் அந்த வானத்துக்கே ஏறிப் போய் நிலாவைப் பிடிச்சிக்கிட்டு வந்து, இதா இந்த விளக்குப் பொறையில வைக்கிறேனா இல்லையான்னு பாரு” 

“தினமும் உனக்கு இதே பிழைப்பா போச்சு. எதையாவது பேசிக்கிட்டு ஏதும் பின்னாடியாவது திரியறது. சோத்து வேலைக்காவது வீட்டுக்கு வரலாம் இல்லே”

“சரி. சரி. சாப்பாடு போடும்மா. பசிக்கிது”

“நான் சாப்பிடக் கூப்பிட்டாத் தான் உனக்கு பசியே தெரியும்”

“அம்மா, பேசிக்கிட்டே இருக்காதே. தட்டை வை”

“ஏண்டா இவ்வளவு நேரம் குருவி ஆடு மாடுன்னு ஏதும் பின்னாலே சுத்தும் போது உனக்கு பசி தெரியலையா? வூட்டுக்குள்ள வந்தா தான் பசிக்கிதுன்னு வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பே”

சோறு போட்டு குழம்பை ஊற்றி தட்டை அவன் முன் வைத்தாள். தட்டில் இருந்த உணவை பிசைந்து ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தான்.

“அம்மா. நல்ல ருசிம்மா. இன்னும் ரெண்டு மீன் போடும்மா”

அவன் உண்பதை அன்புடன் பார்த்தவாறே இன்னும் ரெண்டு மீன் துண்டுகளை அவன் தட்டில் வைத்தாள். “நீ காலையிலே குளத்தில இருந்து பிடிச்சிக்கிட்டு வந்த மீனு தான்”

“அது தான் இத்தனை ருசியா இருக்கு”

“ஊரில இருக்கிறவங்க யாருக்குமே குளத்திலே ஒரு சின்ன மீனு கூட கிடைக்கலையாம்”

“யாரும்மா சொன்னா?”

“நம்ம சண்முகம் தான் சொன்னான். விடிய வெள்ளனே குளத்துக்குப் போயி தூண்டில் போட்டு உக்காந்திருந்தேன். ஒரு மீன் குஞ்சு கூட கிடைக்கலை. ஆனால் உன் மவன் வந்த கொஞ்ச நேரத்திலடக்குன்னு அவனுக்கு ஒரு மீன் கிடைச்சதுன்னான்”

“ஆமாம் நானும் சண்முகம் சித்தப்பாவை குளத்துல பாத்தேன். ஆனால் அவரும் மீன் பிடிச்சிருப்பாருன்னு நெனச்சேன்”

“ஒரு மீன் கூட கிடைக்கலைன்னு அதுக்கு முன்னாடி உங்க தாத்தா சொல்லிட்டு போனாரு”

“யாருக்கும் கிடைக்கதும்மா”

“நீ பெரிய இவன். உனக்குத் தான் கெடைக்குமோ?”

“ஆமாம். நான் அந்த மீன்கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அது இன்னைக்கு வரேன்னு சொல்லிட்டுப் போச்சு”

“எது……! மீனு உன்னிட்ட சொல்லிட்டு போச்சா? என்னடா கதையான கதை விடறே”

“மெய்யாலுமே. நேத்திக்கு குளத்துலே குளிக்கப் போனப்போது ஒரு அழகான மீனு வந்து என் காலைக் கடிச்சது. அதை விரட்டிக்கிட்டே நீஞ்சி போனேன். குளத்துக்கு அடியில அதை  பிடிச்சிட்டேன். அப்போது தான் இந்த மீனு வந்து என்னிட்ட சொல்லிச்சி. நீ இவளை விட்டுடு. நான் நாளைக்கு உன்னிடம் வரேன்னு”

“எப்படிடா இப்படி எல்லாம் கதை விடுவே?”

“அய்யே. சொன்னா நம்ப மாட்டே. நேத்து நான் வெரட்டின மீனு அந்த குளத்துக்கு இளவரசியாம். அதனால தான் அதை விட்டுட சொல்லிக் கெஞ்சியது இந்த மீனு”

“நீ இதுப்போல அப்பப்போ கதை விடுவது வாடிக்கையா போச்சு. ஆனாலும் வேடிக்கையாத் தான் இருக்கு” விழுந்து விழுந்து சிரித்தாள்.

“என்னம்மா கதை விட்டாங்க?”

“ஏண்டா விடலை. போன வாரம் பக்கத்துக் கொல்லையில கட்டி வெச்சிருந்த அந்த பசுமாடு உனக்கு பாலு கறந்துவிட்டதுன்னு பாத்திரம் நெறையபாலு கொண்டு வந்து கொடுத்தே”

“ஆங். பாலு கொண்டு வந்து கொடுத்தேன் இல்லே. எனக்கு யார் தந்துருப்பா? அந்த மாடு தான்மா சொல்லிச்சி”

“சொல்லும். பின்னாடியே கொல்லைக்காரன் வந்தான் சண்டைக்கு. உன் மவன் என் வீட்டு மாட்டைக் கறந்துட்டு வந்துட்டான்னு”

“அது என்னவோ தெரியாது எனக்கு. சொன்னா நீ நம்ப மாட்டே. என்னிட்ட அந்த மாடு தான் பேசியது. பாலு கொடுத்தது”

“நான் நம்பத் தான் மாட்டேன். களவாணிப்பய நீ. என்னாலே என் புள்ளை களவாணிப்பயன்னு வெளியே சொல்ல முடியுமா?”

“அந்த சண்முகம் அப்படியா சொன்னான்?”

“அதிர்ஷ்டக்காரப் பய உன் மவன் என்று சொல்லிட்டுப் போனான். நெசமாலுமே நீ ஆறுக்குப் பொறகு ஏழாவதா பொறந்த அதிர்ஷ்டக்காரன் தான்”

“எனக்கு முன்னாலே பொறந்த ஆறு பேரும் என்ன ஆன்னாங்கம்மா?”

“எத்தனை தடவை கேப்பே? எல்லாரும் பொறந்து செத்தாங்க. செத்தும் பொறந்தாங்க”

“ஏனம்மா அப்படி?”

“என்னத்தை சொல்ல?”

“நான் பொறந்த கதையை சொல்லும்மா”

“எத்தனை தடவைடா சொல்றது?”

“சொன்னா என்னம்மா?”

“சரி போ சொல்றேன். இதுல ஒரு சந்தோஷம் உனக்கு” அவன் சாப்பிட்டு வைத்த தட்டை எடுத்து உள்ளே கொண்டு கழுவி வைத்தவள் கையை புடவை தலைப்பில் துடைத்துக் கண்டு வெளியே வந்தாள். அதே புடவையால் அவன் வாயை துடைத்து விட்டாள். அவனும் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

“நீ சொல்ற கதையே எனக்கு தலை சுத்துது. அத்தனை கதை விடறே நீ. இதுல என்கிட்டே கதை கேட்டுப்புட்டு இன்னும் எத்தனை கதை விடுவியோ” சிரித்தாள்.

“நீ நம்பாட்டா போ. ஒருநாள் உனக்கே தெரியும்”

“தெரியற அன்னைக்குப் பார்த்துக்கலாம்”

“நீ கதையை சொல்லும்மா”

பழைய நினைவில் பெருமூச்சு விட்டாள். “அது ஒரு பெரிய கொடுமைடா ராசு. ஊரே அல்லோலப்பட்டுச்சு. அப்படி ஒரு ராட்சசன் நம்ம ஊருக்கு வந்தான்” என்று தொடங்கினாள்.

“அவன் பேரு மகாசுரன்” என்று ராசுவும் உடன் தொடரவே

“அதான் உனக்கே தெரியுதுல்ல. நான் சொல்லலை போ” என்று எழுந்து போக முனைந்தாள்.

“அம்மாம்மா, இனி நான் குறுக்கே பேசலை. கதையை சொல்லு. ஆங். அந்த அரக்கன் பேரு மகாசுரன்” என்று விட்ட இடத்தில் இருந்து  கதையை எடுத்துக் கொடுத்தான்.

அவளுக்குமே அந்த ராட்சசன் நினைவு வந்து அவனால் இந்த ஊர் மக்கள் பட்ட கஷ்டம் கண்முன் வந்தது போலும். “அதோ அங்கே தெரியுது பாரு மலைங்க. அதுல ஒன்னுத்தில தான் அவன் இருந்தானாம்” என்று கதையை தொடர்ந்தாள்.

கதைக் கேட்கும் ஆர்வத்தில் படுத்திருந்த ராஜேந்திரன் எழுந்து உட்கார்ந்து அருகில் முறத்தில் வைத்திருந்த வேர்கடலையை ஒவ்வொன்றாக உரித்து தின்ன தொடங்கினான்,

புதுவயல் கிராமத்திற்கு மேற்கே சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளில் ஒன்றான சுர நாட்டை பலாசுரன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் பிள்ளைப்பேறு இல்லை.

ரேணுகா தேவி, மதிவதனா என்று ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள் இருந்தும் பிள்ளை வரம் இல்லையே என்று சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தான் பலாசுரன். அவனுடைய குருவின் வார்த்தைப்படி தவத்தின் கடைசியில் ஒரு யாகம் வளர்த்தான். அதில்  நிறைய பொன்னையும் பொருளையும்பட்டையும் பீதாம்பரத்தையும் ஆஹுதி செய்தான்.

அது போதாது என்று காட்டில் வாழும் மிருங்கங்களையும் காளி தெய்வத்தின் முன்பு பலியிட்டான். இத்தனைக்குப் பின்பு காளி தெய்வம் அவனுக்கு மனமிரங்கி ஹோமகுண்டத்தில் ஒரு தங்கப்புஷ்பத்தை வெளிக் கொணர்ந்தது.

“இந்த புஷ்பத்தை தங்கத்துடன் சேர்த்து உருக்கி தேனுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்து எட்டு நாட்களுக்கு தவறாமல் உண்டு வந்தால் கரு தரிக்கும். ஆனால் எல்லா கர்பத்தையும் போல பத்து மாதத்தில் அல்லாமல் இந்த பிள்ளை பதினெட்டு மாதங்கள் சென்று பிறக்கும். ஏனெனில் நாற்பது பிள்ளைகளுக்கு சமமான பலத்துடனும் வளர்ச்சியுடனும் இந்த பிள்ளை பிறக்கும்.” என்று வரம் தந்தது.

அந்த புஷ்பத்தை பலாசுரனின் கையில் இருந்து சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கையில் மிகவும் பக்தி பரவசத்துடன் வாங்கிக் கொள்வதைப் போல் தட்டிப்பறித்துக் கொண்டாள் முதல் மனைவி ரேணுகா தேவி. தர்மப்படியும் தார்மீகப்படியும் முதல் மனைவியின் பிள்ளை தானே இளவரசாக முடியும். மன்னருக்குப் பிறகு அரசு ஏற்க முடியும்.

அதனால் பலாசுரனுமே தங்கபுஷ்பம் ரேணுகாதேவியின் கைக்குப் போனதில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியோ தனக்கு ஒரு வாரிசு வேண்டும். அது யாரால்  என்றாலும் சரி தான்.

காளி தெய்வம் சொன்னதைப் போல அந்த தங்கப்புஷ்பத்தை தயார் செய்து கொடுக்கவென்று தன் தாயை வரவழைத்தாள் அவள். அந்த தாயும் கர்மசிரத்தையுடன் அதை  தயார் செய்து தந்தாள். எக்காரணத்தைக் கொண்டும் மதிவதனாவுக்கு ஒரு பிள்ளை பிறந்து விடக்கொடாது என்று மகளுக்கு தூபம் போட்ட வண்ணம் இருந்தாள்.

ஆனால் பலாசுரன் விரும்பி மணந்து கொண்ட  மதிவதனாவோ தன்னுடைய பிள்ளை தான் இந்த சுர நாட்டை ஆள வேண்டும். அதற்கு தனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும். தங்கபுஷ்பமோ சக்களத்தியிடத்தில் இருக்கிறது. அவளுக்குள் முதலில் பிள்ளை பிறந்து அதற்கு  இளவரசு பட்டம் கட்டி விட்டால் என்ன செய்வது? எனவே தனக்கும் இப்போதே தங்கபுஷ்பம் வேண்டும். அதை தருவிக்க கணவனான பலாசுரனால் தான் முடியும்.

“அரசே, எனக்கும் பிள்ளைப்பேறு வேண்டும். அந்த பூவில் எனக்கும் பாதியைத் தாருங்கள். தயவு செய்யுங்கள்” மதிவதனா கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“ஆ, அது எப்படி? ஒரே ஒரு தங்கப்புஷ்பம் தானே கிடைத்தது. அதில் எப்படி பாதியைக் கொடுக்க முடியும்? பிறகு பிறக்கும் பிள்ளை பாதி பலவானாக பிறந்து விட்டால் என்ன செய்வது?”

“அது உண்மை தானே. யோசிக்க வேண்டிய விஷயமும் கூட” என்று பலாசுரன் யோசிக்கவே செய்தான்.

“அப்படியென்றால் எனக்காக வேறு ஒரு புஷ்பம் பெற்று தாருங்கள் அரசே” 

“இனி வேறு ஒன்று எப்படி கிடைக்கும்?” மதிவதனாவிற்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ரேணுகாதேவி.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – இறுதிப்பகுதி) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி