இந்த நவீன யுகத்திலும், எல்லா நிலைகளிலும் எலக்ட்ரானிக்ஸ் கோலோச்சி நிற்கும் கம்ப்யூட்டர் காலத்திலும், முன்பிருந்ததை விட அதிகமாக ஜோதிடத்தையும், இன்னும் நியூமராலஜி, நேமாலஜி, ஜெம்மாலஜி, வாஸ்து, ஐதீகம் போன்றவற்றையும் முழுக்க முழுக்க சார்ந்திருக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அவைகளையெல்லாம் பொய் என்றோ, தவறு என்றோ, ஏமாற்று வேலை என்றோ, வாதிக்க வரையப்பட்டதல்ல இந்தக் கட்டுரை. நம் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் அவைகளின் கோட்பாட்டிலேயே செய்ய வேண்டும், அதுவே வெற்றிக்கு உரம், அதுவே வெற்றியைக் கொண்டு வந்து தரும் வரம், என்று நினைப்பவர்களின் செவியில் ஊதப்படும் ஒரு சங்குதான் இந்தக் கட்டுரை.
ஒரு நிறுவனத்தின் மேலாளர் அவர். காலையில் கண் விழிக்கும் நிமிடம் முதற் கொண்டு, இரவு கண்ணுறங்கப் போகும் நிமிடம் வரை, அவர் திடமாய்க் கடைப்பிடிப்பது பல்வேறு கண் மூடித்தனமான ஐதீகங்களையே. தன்னுடைய அந்தப் பழக்கத்தை அவர் அலுவலகப் பணிகளிலும் பலவந்தமாய்த் திணிக்க ஆரம்பித்தார். கால நேரம் பார்த்தே காரியங்களை செய்ய வேண்டும் என மற்றவர்களுக்கும் கட்டளையிடத் துவங்கினார்.
ஒருமுறை வியாபார சம்மந்தமாக கலந்தாய்வுக்கு வந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களை, “இன்னிக்கு நாள் சரியில்லை!… இன்னிக்கு பேசினா பிசினஸ் லாபகரமானதாய் இராது!” என்று சொல்லி, மறுநாள் அவர்களுக்கு அப்பாயிண்மெண்ட் கொடுத்துள்ளார். விளைவு?… அந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இவர்களுடைய போட்டிக் கம்பெனிக்கு அதே நாள் சென்று வெற்றிகரமாகத் தங்கள் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு, கையோடு ஒரு பெரிய தொகைக்கான ஆர்டரையும் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். இவர் சரியில்லை என்று சொன்ன நாள் அவர்களுக்கு மட்டும் எப்படி சரியான நாள் ஆனது?
அதே போல், ஒரு குறிப்பிட்ட தினத்தில்… அதாவது வெள்ளிக்கிழமை நாளில், நாம் நம்மிடமிருக்கும் பணத்தையோ, அல்லது காசோலையையோ, பிறருக்குக் கொடுத்தால் நமது செல்வச் செழிப்பு முழுவதும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடும், என்கிற ஒரு ஐதீகத்தை சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம், அதையே நிறுவனத்தில் கடைப்பிடித்தால் அது வியாபாரத்திற்குச் சரிப்படுமா?. அந்த நண்பர் அதையும் செய்தார்.
கொடுத்த பொருளுக்கான தொகை தாமதமாக வரும் போது, யார்தான் தொடர்ந்து கடன் கொடுப்பார்கள்?
தொடர்ந்து அவர் எல்லா இடங்களிலும் பல்வேறு ஐதீகங்களைக் கடைபிடித்ததில் பல சிக்கல்களை அவர் சந்திக்க நேர்ந்தது, அவரால் நிறுவனமும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், அவரால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை. ஒரு கட்டத்தில் நிர்வாகமே அவருக்கு வி.ஆர்.எஸ்.கொடுத்து அனுப்பியது.
அந்த நிகழ்விற்கும், “எனக்கு நேரம் சரியில்லை… அதான் இப்படி நடந்துள்ளது” என்று வியாக்கியானம் பேசி எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.
மேற்கூறிய உதாரணம் கருத்தை வலுப்படுத்த மட்டும் சொன்ன உதாரணமல்ல. நடைமுறை வாழ்க்கையில் நிஜமாக நடந்தவொன்று.
சிலர், ஆங்காங்கே பரவிக் கிடக்கும் போலி “நியூமராலஜிஸ்ட்”களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்டு, தங்கள் பெயருக்கான எழுத்துக்களை, அனர்த்தமாக மாற்றிக் கொள்வர். “வரதராஜன்” என்னும் பெயரை “வருத்தராஜன்” என்றும், “நாகராஜன்” என்ற பெயரை “நாக்குராஜன்”என்று மாற்றிக் கொள்ளுவர். அந்தப் பெயர் மாற்றத்திற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளதா? எனக் கேட்டால், அதற்குத் தெளிவான பதிலை நிச்சயம் அவர்களால் கூற முடியாது. “முன்னைக்கு இப்பக் கொஞ்சம் பரவாயில்லை” என்பார்கள், அல்லது, “அப்படியொண்ணும் பெருசா வித்தியாசம் தெரியலை” என்பர்.
இன்னும் சிலர், பச்சைக்கல் மோதிரம், சிவப்புக்கல் மோதிரம், வெள்ளைக்கல் மோதிரம், என்று “ஜெம்மாலஜிஸ்ட்”டின் சிபாரிசுக்கு ஏற்ப கலர் கலராய் மோதிரங்களை அணிந்து கொண்டு, அதன் மூலம் சிகரத்தை எட்ட முடியுமா? என்று நினைப்பர். மோதிரங்கள் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றால், பல வெற்றியாளர்கள் இங்கு உருவாகி இருப்பார்களே?
நான் கேட்கிறேன், உலகத்தையே வியக்க வைக்கும் அளவிற்கு சாதனை புரிந்தவர்கள் யாராவது தங்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் எந்த ஒரு இடத்திலாவது, “நான் என்னுடைய இத்தனையாவது வயதில் ஒரு நியூமராலஜிஸ்டைப் பார்த்தேன்… ஒரு ஜெம்மாலஜிஸ்டைப் பார்த்தேன், அவரது அறிவுரைப்படி செய்ததால்தான் நான் வெற்றியடைந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்களா?
சச்சின் டெண்டுல்கர் எந்த நியுமராலஜிஸ்டிடம் சென்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்?
ஏவுகணை நாயகர் அப்துல் கலாம் அய்யா எந்தக் கலர் மோதிரம் அணிந்து விஞ்ஞானத்தில் வியத்தகு சாதனை புரிந்தார்.
உண்மையைச் சொல்வதென்றால், திறமை இல்லாதவர்களும், தன்னம்பிக்கை அறவே இல்லாதவர்களும், சோம்பேறிகளும், அச்சமுற்றவர்களும்தான் மேற்சொன்ன ஐதீகங்களை நம்பிக் கடைப்பிடிப்பர்.
யோசித்துப் பாருங்கள், பண்டைத் தமிழர்கள் எந்தவித வசதி வாய்ப்புக்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகம் முழுவதும் சென்று வியாபாரம் புரிந்தார்களே? அவர்களெல்லாம் ஜோதிடத்தின் பின் சென்றுதான் சாதித்தார்களா?. ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு இது போன்ற நியூமராலஜி, நேமாலஜி, ஜெம்மாலஜிகளெல்லாம் இல்லாமலே இருந்ததே, அந்தக் காலங்களில் நாடு என்ன இருண்டா கிடந்தது?.
ஒரு நிமிடம் செவி கொடுங்கள்… ஒரு ரகசியம் சொல்லித் தருகிறேன்!… உங்களது முயற்சிக்கும் வெற்றிக்கும் இடையே உள்ள சின்னச் சின்ன தடைகளை, நிதானமாக, மெல்ல மெல்ல விலக்கிடுங்கள்!… நிச்சயம் நீங்களும் வெற்றியாளர்தான். இங்க “தடைகள்” எனக் குறிப்பிடப்பட்டவைகள் உங்கள் மனதில் உள்ள அவநம்பிக்கை, அச்சம், தயக்கம், சோம்பல் குணம், செயலில் உறுதிப்பாடின்மை, போன்றவைகளே!
செதுக்கப்பட்ட, செறிவாக்கப்பட்ட எந்தவொரு திட்டமும், உறுதிப்பாடோடு முன்னெடுத்துச் செல்லப்படும் போது சிக்ஸர் அடிப்பது போல் சக்சஸ் அடிக்கும். அதை விடுத்து, போலித்தனமான, மூடத்தனமான, கண் மூடித்தனமான ……….லாஜிகளை நம்பினால் லாஸ்கள்தான்(LOSS) லாபமாகும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings