in ,

ஒரு மாருதிக் காரும், தண்ணி வண்டியும் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஹை… ஹை” என்று சப்தம் செய்தபடி மாட்டின் வாலைப் பிடித்துத் திருகினான் தண்ணி வண்டிக்காரன். அது வலி தாளாமல் வேகம் பிடித்தது.

“காலையிலிருந்து இது மூணாவது ட்ரிப்….  மதியம் மூணு மணிக்குத்தான் தண்ணி தோட்டத்துக்காரன் தண்ணி விடறதை நிறுத்துவான்!… அதுக்குள்ளார எப்படியாவது இன்னும் இரண்டு ட்ரிப் அடிச்சிடணும்”. மனதிற்குள் கணக்குப் போட்டான்.

     அந்த ஏரியாவின் தண்ணீர்ப் பஞ்சத்தால்தான் அவன் பிழைப்பே நடக்கிறது.

     பக்கத்து ஊரு தோட்டத்திலிருந்து வண்டியில் தண்ணீர் பிடித்து வந்து ஒரு வண்டி நூறு ரூபாய் என்று வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

     வண்டி ரயில்வே கிராஸிங்கை நெருங்கும் போது கேட் மூடப்பட்டது.

      “அட கெரகமே!… இவனுகளுக்கு இதே வேலையாப் போச்சு!.. ஆன்னா… ஊன்னா… கேட்டை மூடிக்குவானுங்க!” அவன் அவசரம் அவனுக்கு.

     பத்து நிமிடத்தில் ஒரு கூட்ஸ் ரெயில் கடந்ததும் கேட் திறக்கப்பட்டது.

     நின்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகர ஆரம்பித்தன.  தண்ணி வண்டிக்காரனும் தன் வண்டியை மெல்ல நகர்த்தினான்.

.
     அப்போது பின்புறம் வந்து கொண்டிருந்த ஒரு மாருதி காது ஜவ்வு கிழியும் அளவிற்கு ஹாரன் அடிக்க,  “அட.. இருய்யா!.. என்ன கேடு?… எதுக்கு இப்படிப் பறக்கிறே?… ஒவ்வொரு வண்டியாய்த்தானே போகணும்?… பெரிய கலெக்டர்ன்னு நெனப்பு” தனது வழக்கமான மூன்றாம் தர வசனத்துடன் திரும்பி காருக்குள் பார்த்தவன்.  “அட… இவன் நம்ம கூட பள்ளிக்கூடத்தில் ஒண்ணாப் படிச்சவனாச்சே?… அப்ப எப்படி எல்லாம் லூட்டி அடிச்சாலும்… இப்ப கார்ல பந்தாவாப் போறானே!.. சரி… அவன் அப்பவே பெரிய வீட்டுப் பிள்ளையாச்சே… அதுவுமில்லாம நல்ல படிப்பாளி வேற?… நானுன்ந்தான் இருந்தேனே… ஒரே வகுப்புல ரெண்டு வருஷம் மூணு வருஷம் படிச்சுக்கிட்டு… கடைசில படிப்பே வேணாம்ன்னு தண்ணி வண்டியைப் பிடிச்சுக்கிட்டு… ஹும் எல்லாம் விதி”

     கும்பலை விட்டு வெளியேறி தனியாய் வண்டியை ஓட்டி சென்று கொண்டிருந்தவனை அந்த மாருதி வழிமறித்து குறுக்கே நின்றது.

காரிலிருந்து வெளியே வந்த அந்த சஃபாரி மனிதன்,  “என்ன நடராஜ்… நல்லா இருக்கியா?.. என்னை ஞாபகம் இருக்கா?” கேட்டார்.

     “ஞாபகம் இல்லாமல் என்ன?… ஜெகநாதன்தானே…. வா.ஊ.சி..காலனியில்தானே வீடு?”

     “பரவாயில்லையே…. கண்டுபிடிச்சிட்டியே?”.

     “அதெல்லாம் அப்பவே பார்த்துட்டேன்!… சரி… நீ… இப்ப பெரிய மனுஷனாயிட்டே!… என் கூடவெல்லாம் பேசுவியோ?… மாட்டியோ?ன்னு நெனைச்சுத்தான் தெரியாதவனாட்டம் போனேன்”.

      “அது எப்படி?… பேசாமல் போவேனா நான்?.. நாமெல்லாம் அந்தக் காலத்தில் ஒரே செட்டாச்சே?”

     சிறிது நேரம் பால்ய கால நினைவுகளையும், பள்ளிக்கால சேட்டைகளைப் பற்றியும் பேசிவிட்டு,  “சரி நடராஜ்!… நான் கிளம்புறேன்… இன்னொரு நாள் பார்க்கலாம்” சொல்லி விட்டு அவன் கார் ஏறிப் பறக்க, நெகிழ்ந்து போனான் வண்டிக்கார நடராஜ்.

“பெரிய மனுஷன்ன்னா… இவன்தான்யா பெரிய மனுஷன்!… எவ்வளவு பெரிய ஆளாகியும்… என்னை மறக்காமல்… காரை விட்டு இறங்கி… நின்னு பேசிட்டு போறானே?… இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா?”.

            அதே நேரம், ஓடிக் கொண்டிருந்த மாருதியில் ஜெகநாதனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவனது மேனேஜர்,  “ஏன் சார்… உங்க ஸ்டேட்டஸுக்கு நீங்க இறங்கிப் போய் அந்தத் தண்ணி வண்டிக்காரன் கிட்டப் பேசணுமா?” கேட்க,

.
      “மேனேஜர் சார்!… காசு… பணம்… அந்தஸ்து… இதெல்லாம் வெறும் மாயை சார்!… எப்பவும் மனுஷங்கதான் முக்கியம் சார்!… ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியாத அந்தப் பள்ளி பருவத்திலே இவன் கூடவெல்லாம் நான் ரொம்ப அன்னியோன்யமா பழகியிருக்கேன்!… இப்ப வித்தியாசம் இருக்குது!… ஆனாலும் நான் பழைய மாதிரியேதான் இருக்க விரும்பறேன்”.

     அந்த மேனேஜர் அதற்கு மேல் பேச முடியாமல் வாயடைத்து போனான்.

     ஒரு அரைக் கிலோ மீட்டர் சென்று இருப்பார்கள்,
 “கிரீச்”சென்ற பிரேக் சத்தமும் அதை தொடர்ந்து,  “அய்யோ… அம்மா” என்ற அலறலும் கேட்டது.

     எசகு பிசகாக வந்து மாருதியில் மோதி விழுந்த அந்த நடுத்தர வயதுக்காரன் நடுரோட்டில் படுத்துக் கொண்டு மரண ஓலம் எழுப்பினான். “மள… மள”வென்று கூட்டம் சேர்ந்தது.

     மாருதியிலிருந்து இறங்கி வந்த ஜெகநாதனும் அவனது மேனேஜரும் கூட்டத்தில் சிக்கினர். ஆளாளுக்குத் திட்ட ஆரம்பித்தனர்

.
     “இவனுகளுக்கெல்லாம் கார்ல ஏறிட்டா பிளேன்ல போற நெனைப்பு”/

     “கண்ணு முன்னாடி இருக்கா?… பின்னாடி இருக்கா?.”

     “காரைப் பிடிங்கி வெச்சிட்டு நடந்து போகச் சொல்லுங்கடா… அப்பத்தான் புத்தி வரும் இவனுகளுக்கு”

.
     “ஆபரேஷனுக்கு மொதல்ல ஒரு அம்பதாயிரம் வாங்குங்கடா…
அப்புறம் மருந்து மாத்திரைக்கு ஒரு இருபத்தஞ்சாயிரம் வாங்குங்கடா”.

     அதே நேரம் அடிபட்டு விழுந்தவன் சர்வ சாதாரணமாக எழுந்து மற்றவர்களுடன் ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருந்தான்.

             ஜெகநாதன் குழப்பம் மேலிட அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சிறிது நேரத்திற்கு பிறகு,  “சரி ஆனது ஆயிடுச்சு… ஒரு எழுபத்தியஞ்சாயிரம் ரூபாய் கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டுப் போங்க” என்றான் அடிபட்டவனிடம் பேசி முடித்த ஒருவன்.

      அதற்குள் அடிபட்டவன் குறுக்கே வந்து, “என்னண்ணே.. வெறும் எழுபத்தியஞ்சாயிரம் கேட்கறீங்க?…  ரவுண்டா ஒரு லட்சம் கேளுங்கண்ணே” என்றான்.

     “என்னது?… ஒரு லட்சமா?” கையை பிசைந்த ஜெகநாதன், “ஆஹா… பணம் பறிக்கும் கும்பல் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோம் போலிருக்கே… இப்ப என்ன பண்றது?”யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடராஜின்  தண்ணி வண்டி வந்து நின்றது.

      அதிலிருந்து இறங்கி வந்தான் நடராஜன்.  “என்ன ஜெகநாதன்?… என்னாச்சு?”.

     ஜெகநாதன் விஷயத்தை கூற, கப்பென்று புரிந்து கொண்டான் நடராஜன்.

     “அடேய்… திருட்டு பசங்களா… உங்க வேலையை எங்க ஆளுகிட்டயே காட்டுறீங்களா?… த்தா… வெட்டி போடுவேன் வெட்டி!… ஒழுங்கா மரியாதையா எல்லோரும் ஓடிப் போயிடுங்க!… இல்ல ஒரு பயல் உருப்படியாப் போக மாட்டீங்க!” ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டு கூட்டத்தின் நடுவில் புகுந்து ருத்ர தாண்டவம் ஆடினான் நடராஜ்.

     அவனது ஆவேசத்தை சற்று எதிர்பாராத கூட்டம் விட்டால் போதும் என்று ஓட ஆரம்பித்தது. அடிபட்டவன் மட்டும் தனித்து நின்று, “த பாரு தண்ணி வண்டி இது உனக்கு சம்மந்தமில்லாத வேலை…  பேசாமப் போயிடு… இல்லேன்னா…” என்று ஆட்காட்டி விரலைக் காட்டிப் பேச,

            “என்னடா… என்னடா பண்ணுவே?… இதோ இந்த ஜெகநாதன் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்…”

     அடுத்த நிமிடம் அவன் ஓடிய திசையில் புழுதி பறந்தது.

     அனைவரும் சென்றபின் ஜெகநாதன் தன் பழைய நண்பனை நன்றியுடன் பார்க்க, ”நீ பயப்படாம போ ஜெகநாதா… நானாச்சு” என்று தைரியம் ஊட்டி காரில் ஏற்றி அனுப்பினான் நடராஜன்.

     போகும் வழியில்,  “என்ன மேனேஜர்… என்னோட தகுதிக்கு அவன் கூடவெல்லாம் பேசணுமா?ன்னு கேட்டீங்களே… இப்பப் பாத்தீங்களா?… இந்தக் கூட்டத்தை சமாளிக்கற தகுதி… அவன் கிட்ட மட்டும்தான் இருந்திருக்கு!… நம்ம ரெண்டு பேர் கிட்டேயும் இல்லை!… இப்பவாது புரியுதா ஸ்டேட்டஸை விட மனுஷங்கதான் முக்கியம்!னு” ஜெகநாதன் கேட்க,

     மேனேஜர் தலை குனிந்தார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உனக்கு ஒண்ணும் தெரியாது (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    ஏனிந்த கொலை வெறி (இறுதி அத்தியாயம்) – சுஶ்ரீ