எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அழைப்பு மணியை அழுத்தி விட்டு தயக்கத்துடன் நின்றாள் சுகன்யா. வந்த போது இருந்த துணிவும் திடமும் எங்கே போயிற்று என்று தெரியாமல் போனது.
சாதாரணமாக அவள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. செல்ஃபோனில் பேசிக் கொண்டே நடப்பவர்களையும் சரியாக நடுவீதியில் நிறுத்தி இடைஞ்சல் செய்யும் வாகன ஓட்டிகளையும் பார்க்கும்போது எரிச்சலும் கோபமும் வந்தாலும் அவள் எதுவும் சொல்வதில்லை. பேசிப் பிரயோசனமில்லை என்பதால் மட்டுமில்லை, ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள் உணரவும் மாட்டார்கள் என்பதால் தான்.
எங்கே இப்போதெல்லாம் தான் செய்யும் தவறுகளை யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லையே! ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண நினைப்பதே இல்லையே!
கதவு திறந்த ஓசையில் கவனம் கலைந்தாள் அவள். “என்ன வேண்டும்?” திறந்தவளைப் பார்த்து புன்னகைத்தாள் அவள்.
“உள்ளே போய் பேசலாமா?”
நகர்ந்து வழி விட்டாள் அவள்.
“கார்த்தி உங்க பையன் தானே!”
‘ஆமாம்’ என்று தலையசைத்தவள், ‘டேய் கார்த்தி! என்ன பண்ணினே! இந்த அம்மா வந்திருக்கிறார்கள் பார்’.
அவள் திகைத்துப் போனாள். என்ன இது! இந்தப் பெண் மீரா இவ்வளவு பதட்டமாக இருக்கிறாள்.
“இல்லை நீங்கள் தப்பா புரிஞ்சுகிட்டீங்க. நான் வந்தது வேறு விஷயமா!”
“சொல்லுங்க ! என்ன விஷயம்!” கத்தி போல் கூர்மையாக வந்தன வார்த்தைகள்.
சுகன்யா தடுமாறினாள். சட்டென்று பேச முடியவில்லை.. இவளைப் பற்றி அத்தனை வீட்டிலும் பேசுவது இவளுக்கு தெரியாதா!
அந்தப் பையன் தினமும் வாட்ச்மேன் அருகில் சோர்வும் அலுப்பும் பசியுமாக உட்கார்ந்திருக்கிறான் என்பது இவளுக்கு தெரியாதா? பள்ளி விட்டு வந்து சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பதை எல்லோருமே பார்த்து மனம் குழம்பி போனதை இவள் அறிய மாட்டாளா! ஒருநாள் அவள் பையன் மகேஷ் வலுக்கட்டாயமாக அவனுடன் கூட்டி வந்தான்.
“அம்மா ! கார்த்திக்கும் ஏதாவது சாப்பிட கொடும்மா”
“ஏன் ! அவன் அம்மா வீட்டில் இல்லையா?”
“இல்லம்மா, தினமுமே அவர்கள் 6 மணிக்கு மேல் தான் வருகிறார்கள். வீடு பூட்டியிருக்கிறது”
அவள் கார்த்திக் முகத்தில் தெரிந்த அயர்வை பார்த்து வியந்து போனாள். மிகவும் சின்ன குழந்தைகளை தனியாக விடவே மாட்டார்கள் கொஞ்சம் பெரிய பையனாக வளர்ந்த பிறகு அவர்களே செட் சேர்த்துக் கொண்டு போக வர இருப்பார்கள். ஆனால் இரண்டும் கெட்டானாக இருக்கும் இவனைப் போன்றவர்கள் எப்படி தனியாக சமாளிக்க முடியும்?
அவள் ஒன்றும் பேசாமல் அவனுக்கும் பால் கலந்து கொடுத்தாள். இருவருக்கும் பொதுவாக முறுக்கு பிஸ்கட் என்று வைத்தாள்.
அந்தப் பையன் சாப்பிடும் விதத்திலேயே அவன் பசி புரிந்தது. என்ன அம்மா அவள் என்று கோபமும் எரிச்சலும் வந்தது.அதுதான் வீடு தேடி வந்து விட்டாள்.
“தினமும் கார்த்திக் சாயந்திரம் வாசலில் பார்க்கிறேன். நீங்க வீட்டில் இருக்கிறதில்லை போலிருக்கிறது.”
சட்டென்று அவள் உடலில் ஒரு விறைப்பு தோன்றியது.
“உங்களுக்கு எதுக்கு வேண்டாத கவலை!”
“இது வேண்டாத கவலை இல்லைங்க. தினமும் ஒரு சின்ன பையன் வாசலில் உட்கார்ந்திருக்கிறதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் தெரியுமா? எத்தனையோ சமூக விரோதிகள் தெருவில் நடமாடுகிறார்கள்.”
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“என் பையனை எப்படி நடத்தணும் அப்படின்னு நீங்கள் சொல்ல தேவையில்லை”.
“எப்படி நடத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கும்மா. வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக சின்ன பசங்களுக்காக எத்தனையோ சட்ட திட்டம் இருக்கு. இப்போ இங்கேயும் நிறைய மாறுதல் வந்துடுச்சு. பிரச்சினைகளை நீங்களே வலிய வரவழைச்சுக்கிறீங்க. அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். இது நீடித்தால் சிறுவர் நல அமைப்புக்கு தகவல் சொல்லவேண்டி வரும். அக்கம் பக்கத்தில் என்ன நடக்குதுன்னு பேப்பர் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறோம். யாரும் அடுத்தவர்களைப் பற்றி கவலைப் படுவதே இல்லை.”
“சமூக அக்கறை உங்களுக்கு அதிகமா இருக்கும் போல!”
“ஆமாம்மா! நாளைக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது எல்லோரும் பதில் சொல்ல வேண்டிவரும். யாராவது கடத்தலாம். இல்லை இவனே கீழே விழுந்து அடிபடலாம். பசியில் மயக்கம் வரலாம். இன்னும் எத்தனையோ இருக்கு. இரண்டு நாள் எங்க வீட்டில் மகேஷ் கூட வந்தான். சின்ன பசங்க அவங்களோட ஃப்ரண்ட்ஸை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அவங்களோட உலகமே வேற. உங்களுக்கு தெரியப் படுத்தாம இருக்கிறது தப்புன்னு தோணிச்சு. நான் வரேன்.”
‘ஒரு நிமிஷம்!’ எழுந்தவள் நின்று தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
மீராவின் கைகளில் இரண்டு வயதுக் குழந்தை இருந்தது. அழகாக சுருட்டை முடியுடன் இருந்த அந்த குழந்தை அவளைக் கவர்ந்தது.
“இந்த குழந்தை உஷாவாலதான் இப்போ எல்லா பிரச்சினையும்” அவள் சட்டென்று விசும்பினாள்.
“திடீர்னு ஒரு காய்ச்சல் வந்தது, பேச்சு நின்று போச்சு. டாக்டர் வந்து ஸ்பெஷல் சைல்டா இருக்கலாம்னு அபிப்ராயப்படுகிறார். டெஸ்ட் எடுத்து பார்த்துத்தான் சொல்லணும்னு. அதுக்கு ஒரு வாரம் ஆகுமாம். அதற்குள் ஸ்பீச் தெரபி கொடுக்கலாம்னு சொன்னதால் தினமும் போறேன். சரியாக சாயந்திரம் தான் டைம் பிக்ஸ் பண்ணி கொடுத்தார். நான் என்ன செய்யட்டும்?”.
மனதில் மூடி வைத்திருந்த வேதனையைக் கொட்டினாள் அவள்.
“நீங்க யார்கிட்டயாவது விவரம் சொல்லி ஹெல்ப் கேட்டிருக்கலாமே!.”
“உங்ககிட்ட கூட சொல்ல தயக்கமாத்தான் இருந்தது. பயம், பதட்டம், எதிர்காலம் பற்றிய அச்சம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அவள் கண்களில் கண்ணீராக பொங்கி வழிந்தது.
“யாருக்கும் சொல்லவே மனசுலே திடம் இல்லை. இப்போ இருக்கிற நிலையில் மற்றவங்களோட ஏளனப்பார்வையும் இளக்காரமும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.”
அழுது கொண்டு இருப்பவளிடமிருந்து குழந்தையை வாங்கி கட்டிலில் படுக்க வைத்தாள் சுகன்யா.
“முதல்லே கண்ணைத் துடைங்க. எந்த ஒரு பிரச்சனையும் அழறதால தீராது. கடவுள் படைப்பில் எத்தனையோ விசித்திரங்கள். சில சமயம் பயமுறுத்துவது கடைசியில் ஒன்றுமே இல்லாமல் கூட போகலாம். அஞ்சலி படத்தில் ரகுவரன் சொல்வாரே யார்கிட்ட கொடுத்தா இந்த குழந்தை நல்லா வளரும்னு தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார் என்று.
அதோட, ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும்னு சொல்லுவாங்க. ஏதாவது ஒரு திறமை அவர்களிடமும் இருக்கும். எத்தனையோ ஸ்பெஷல் குழந்தைகள் பிரபலமாகவும் ஆகியிருக்கிறார்கள். காது கேட்காத குறையிருந்தும் எடிசன் படைத்த படைப்புகள் எத்தனை? கண்களே தெரியாத போதும் லூயிஸ்ப்ரெயில் எழுத்துக்களை வடிவமைக்க வில்லையா? ஹெலன் கெல்லர் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்! இப்போது விஞ்ஞானமும் மருத்துவமும் வெகுவாக வளர்ந்துவிட்ட நிலையில் எத்தனையோ சவால்களை சமாளிக்கலாமே!
இறைவன் நமக்கு பல வசதிகளையும் வாய்ப்புகளையும் வாரி வழங்கும் போது நாம் எதுவும் சொல்வதில்லை. ஒரு கஷ்டம் என்று வரும் போது உடனே துவண்டு போகிறோம். உஷாவுக்கு என்ன பிரச்சினை வருமோன்னு பயந்து ஒழுங்கா இருக்கிற கார்த்திக்கையும் மன சோர்வுக்கு உள்ளாக்கிட்டீங்க.
‘அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் அவள் அருள் நினைத்தே அழும் குழந்தை’ என்று படித்திருக்கிறீர்களா! ஒரு ஏழு வயதுப் பையனால் என்ன புரிந்து கொள்ள முடியும் சொல்லுங்க!”
“தப்புத்தாங்க”. அவள் அருகில் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை இழுத்து அணைத்துக் கொண்டாள் மீரா. அந்த தாய் மனம் படும் பாடு சுகன்யாவால் உணர முடிந்தது.
“உங்க ஹஸ்பெண்ட் எங்கே? அவர் என்ன சொல்றார்?.”
“அவர் ஊரில் இல்லைங்க. ஆஃபீஸ் வேலை விஷயமா மைசூர் போயிருக்கிறார். அடுத்த வாரம் வந்துவிடுவார். டெஸ்ட் ரிசல்ட் தெரிந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று தெரியப்படுத்தவில்லை. முக்கியமான வேலையில் இருக்கும் போது சொன்னால் உடனே வரணும் என்று நினைப்பார். மனது கஷ்டப்படும் என்றுதான் சொல்லவில்லை. ஜூரம் என்று மட்டும் தான் சொன்னேன்”. அவள் வறட்சியாக புன்னகைத்தாள்.
“கவலைப்படாதீங்க. இதுவும் கடந்து போகும் அப்படின்னு நினைங்க. அதோடு எல்லோருமே உதவத்தான் நினைப்பார்கள். அவரவர் வேலைகளில் நேரம் கிடைப்பது இல்லை. உண்மையான அன்புடன் அக்கறையுடன் உதவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தானாக வந்து கேட்க தயக்கம் தான். இன்றைய கால கட்டத்தில் தேவையில்லாமல் பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கிப் போகிறவர்கள் தான் அதிகம்”
‘உண்மைதான்’, அவள் ஒத்துக் கொண்டாள். “எனக்கும் அதே தயக்கம் தான். யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். மனசு முழுக்க ஒரே இருட்டு. எப்படி சமாளிக்கும் போகிறோம் என்று ஒரே பதட்டம் பயம்.சரியாக தூங்கக் கூட முடியலை.. உங்களைப் பார்க்கும் போதும் எதையும் சொல்ல வேண்டாம் என்றுதான் அப்படி நடந்து கொண்டேன்”.
“பரவாயில்லை ! எனக்கு புரியுது. நிறைய பேர் இந்த தப்பைத்தான் செய்கிறார்கள். சமுதாயத்தைப் பார்த்து பயம், சுயபச்சாத்தாபம், தாழ்வுமனப்பான்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சமுதாயத்தை புலின்னு நினைச்சு பயந்தா அது கூர்மையான நகங்களால் பிறாண்டி வேட்டையாடி விடும்.அதே பூனை என்று நினைத்தால் பயந்து ஒதுங்கிப் போய்விடும்.உங்க அளவில் எது முக்கியம் அவசியம்னு பார்த்தால் போதும்.”
“நீங்க சொல்றது நிஜம் தாங்க. ஆனா என்னால யோசிக்கவே முடியலை. இப்போ நல்லாப் புரியுது.மன்னிச்சுடுங்க” அவள் கரங்களை கூப்ப சுகன்யா தடுத்தாள்.’
“நல்லதே நடக்கும்னு நம்புங்க!”
அவள் புன்னகையுடன் விடை பெற்றாள். ‘கார்த்தி , நீ நாளைக்கு மகேஷ் கூட எங்க வீட்டுக்கு வந்துடு. நீங்க நிதானமா டாக்டர் செக் அப் முடிச்சு வாங்க. நல்லதே நினைப்போம்”.
கார்த்தியைத் தட்டிக் கொடுத்து விட்டு விடைபெற்று செல்பவளையே விழிகளில் நீருடன் பார்த்துக் கொண்டு நின்றாள் மீரா.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings