எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பசி எடுத்துவிட்டது பாஸ்கருக்கு..
அப்பாவுக்கு போன் போட்டு சொல்லியிருந்தான் சாப்பிட ஏதாவது ஆர்டர் போடச்சொல்லி.
நான்கைந்து தடவை பால்கனிக்கு வந்து எட்டி எட்டி பார்த்துவிட்டுப் போனான். டெலிவரி பாய் கண்ணுக்குத் தெரியவில்லை.
அம்மா அவசரமாக ஊருக்குப் போய்விட்டார்கள். இவனுக்கு டியூஷன் இருப்பதால் போகவில்லை. அப்பா ஆபீஸ் போய்விட்டார். மத்தியானம் சாப்பிட எதுவுமில்லை. ராத்திரிக்கு அப்பா வந்து தோசை ஊற்றிக் கொள்வார்கள்.
பொறுமை இழந்தவன், அப்பாவுக்கு போன் போட்டு ஆர்டர் போட்டாரா இல்லையா என்று கேட்கலாமா என்று யோசித்தவன், எதற்கும் ஒருதடவை எட்டிப் பார்த்துவிட்டு பிறகு போன் போடலாமே என்று யோசித்தபடி எட்டிப்பார்த்தான். தெருமுனையில் சிவப்பு டிரெஸ் போட்ட டெலிவரி பாய் திரும்பிகொண்டிருந்தான். மடமடவென படிகளில் இறங்கினான்.
டெலிவரி பாய் பார்சலைக் கொடுத்துவிட்டு திரும்பிப் போய்விட்டார்.
ஏற்கனவே அகோரப் பசியில் இருந்த பாஸ்கர் மடமடவென படிகளில் ஏறி வந்து பொட்டலத்தை பிரித்தான். சிக்கன் பிரியாணி மூக்கைத் துளைத்தது. சாப்பிட ஆரம்பித்தான்.
பசியில் சாப்பிடவும் விக்கல் எடுத்தது. ஓடிப்போய் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து குடித்தான். காரம் கண்களை கசிய வைத்தது.
நாம் சொன்னதும் அப்பா சிக்கன் பிரியாணி ஆர்டர் போட்டுவிட்டார் போல என்று நினைத்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.
அந்த நேரம் பார்த்து ஊருக்குப் போயிருந்த அம்மாவிடமிருந்து போன்.
‘ என்னடா பண்ணிட்டிருக்கே… ‘
‘ சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்மா… அப்பா சிக்கன் பிரியாணி ஆர்டர் போட்டு, வந்து… இதோ சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்…. ‘
‘ என்ன சிக்கன் பிரியாணியா… இன்னிக்கு வெள்ளிக்கிழமைடா… உங்கப்பாவுக்கும் உனக்கும் இதே வேலையாப் போச்சு… ஒரு நாளு கிழமைன்னு எதுவும் பார்க்கவே மாட்டீங்களா… ‘
‘ தடதட… தடதட… ‘
கதவு தட்டும் சத்தம், பலமாய் கேட்டது…
‘ கொஞ்சம் இரும்மா… யாரோ கதவைத் தட்டறாங்க… ‘
போனை வைத்துவிட்டுப் எழுந்து போய் கதவைத் திறந்தான். மேல்போர்ஷன்காரர் நின்றிருந்தார். கண்களில் ஆக்ரோஷம்.
‘ தம்பி… என்ன சாப்பிட்டுக்கிட்டிருக்கே… ‘
‘ ஏன் ஸார்… சிக்கன் பிரியாணி… ‘
‘ அது நான் போட்ட ஆர்டர்… இதோ நீ போட்ட தயிர் சாதம்… தயிர் சாதம் ஆர்டர் போட்டுட்டு நான் போட்ட ஆர்டர் சிக்கன் பிரியாணியை வாங்கித் தின்னிட்டிருக்கே… அசிங்கமா இல்லே… ‘
முழித்தான் இவன். அவரையும் சிக்கன் பிரியாணியையும் மாறிமாறிப் பார்த்தான்.
‘ அப்போ இது அப்பா போட்ட ஆர்டர் இல்லையா… அம்மா சொன்னதுக்கு ஏற்ப தயிர்சாதம்தான் ஆர்டர் போட்டாறாரா அப்பா… ‘ யோசித்தான்.
அவரே தொடர்ந்தார், ‘ நான் சிக்கன் பிரியாணி ஆர்டர் போட்டுட்டு மேலேயிருந்து அப்பைக்கப்போ எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தேன். இடையில நான் போட்ட ஆர்டர் வரும்போது நீ போயி வாங்கிட்டே… நான் பார்க்கும்போதும் டெலிவரி பாய் வந்தான். ஓடிப்போய் பார்சலை வாங்கித் திறந்தா ஒரே அதிர்ச்சி. சிக்கன் பிரியாணிக்குப் பதிலா தயிர்சாதம். பேர் கேட்டதும்தான் சொல்றான், பாஸ்கர்னு… சரி நம்ம பார்சல் இன்னும் வரலை போலன்னு நினைச்சிக்கிட்டு இதை உன்கிட்டே கொடுக்கலாம்னு வந்தா இப்போத்தான் தெரியுது… நீ என்னோட சிக்கன் பிரியாணியை வெட்டிகிட்டிருக்கே… ‘
அவர் உச்சஸ்தாயியில் கத்த, நன்றாக புரிந்து போனது இவனுக்கு.
‘ ஸார் கத்தாதீங்க… தப்பு நந்துபோச்சு… உங்க பிரியாணி வந்து சேரும்… ‘
‘ எப்படி… நீ சாப்பிட்டு வச்ச மீதியா… ‘
‘ பொறு பொறு ‘ என்பது போல சைகை காட்டியவன், ஓடிப்போய் போனை எடுத்து, ‘ அம்மா நான் அப்புறமா பேசறேன்… ‘ என்றுவிட்டு அப்பாவுக்கு போன் போட்டான். அந்த பார்சல் வந்த பொட்டலத்தையும் ஒருதடவை பார்த்துக் கொண்டான்.
‘ அப்பா உடனே கே.ஆர்.எஸ். ரெஸ்டாரன்ட்ல ஒரு சிக்கன் பிரியாணி ஆர்டர் போடுங்க… உடனே… இப்போவே… ‘
மறுமுனையில் ஒன்றுமே புரியாமல் அவன் சொன்ன ஆர்டரை போட்டார் அவனது அப்பா.
‘ வரும் ஸார்… போங்க… ‘ என்றுவிட்டு திரும்பிப் போய் சாப்பிட உட்கார்ந்தான்.
பக்கத்தில் கிடந்த தயிர் சாத பொட்டலம் அவனைப் பார்த்து ‘ என்னைத் திற… ‘ என்று கண்சிமிட்டியது.
‘ சிக்கன் பிரியாணி என்னை விட்டுவிடாதே… ‘ என்றது.
அதைத் திறந்து சாப்பிடலானான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings