in ,

ஒப்பீடு என்னும் தப்பீடு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

நாம் ஒருவருக்கு அறிவுரை கூற எண்ணினால், முதலில்  “அவர் நமது அறிவுரையை ஏற்றுக் கொள்பவரா?, அதன் நல்விளைவுகளை உணருபவரா?, நமது அறிவுரையின் சாராம்சத்தை நேர்மறையாகச் சிந்திப்பவரா?, அல்லது எதிர்மறையாக எடுத்துக் கொள்பவரா?”, போன்ற  பல விஷயங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, பிறகு அறிவுரை வழங்குவதுதான் சரியாகும்.  

அதேபோல்தான், ஒருவரைக் கண்டிக்கும் போதும்.  “அவரைக் கண்டிப்பதற்கும் இது சரியான தருணமா? அவரைக் கண்டிக்க நாம் உரிமை உள்ளவர்தானா? நாம் உபயோகிக்கும் முறை சரியானதுதானா? நமது கண்டிப்பு வார்த்தைகளை கேட்கும் நிலையில் அவர் இப்போது உள்ளாரா?” என்பதையெல்லாம் பார்த்த பின் அவரைக் கண்டிக்க ஆரம்பிப்பதே மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால், சூழ்நிலையைப் பொறுத்தே மனிதன் மனநிலையும் அமையும், என்பது நிதர்சனமான உண்மை.

நாம், இடம், பொருள், ஏவல், எல்லாவற்றையும் கணித்த பின் கண்டிப்போமானால், ஒருவேளை நாம் கண்டிக்கத் துவங்கியதும், எடுத்த எடுப்பில் அது அவர்களுக்கு ஆத்திரத்தைத் தந்தாலும், குறைந்தபட்சம் நாம் விலகிச் சென்ற பிறகாவது, அவர் அதைப் பற்றி நன் முறையில் சிந்திக்கலாமல்லவா?

      இன்றைய பெற்றோர்கள் செய்யும் மாபெரும் தவறு என்னவென்றால்?.. “ஒப்பீடு”.   ஆங்கிலத்தில் சொல்வதென்றால், “COMPARISON”.   அதாவது, நம் பிள்ளைகளை வேறொரு பிள்ளைகளோடு ஒப்பீடு செய்து அவர்களைக் கண்டிப்பது, அல்லது திட்டுவது.

      ஒரு பள்ளி மாணவனிடம் அவன் தாய், “அவனும் உன் வகுப்புதானே?…பாரு அவன் மூணு சப்ஜெக்டுல செண்டம் வாங்கியிருக்கான்!… நீ… ஒண்ணுல கூட செண்டம் வாங்கலே!” என்றும்,

      ஒரு இளைஞனிடம் அவன் தந்தை, “நீயும் அவனும் ஒண்ணாத்தானே போறீங்க… வர்றீங்க… சுத்தறீங்க?, உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதானே ஆகுது?, அவனைப் பாரு “டக்”குன்னு ஒரு பேங்க் எக்ஸாம் எழுதினான்… பாஸ் பண்ணினான்… கடைசில பேங்க்குல போயி வேலைல உட்கார்ந்துட்டான்!… ஹூம்… நீயும்தான் இருக்கியே!” என்றும்,

      ஒரு நடுத்தர வயதுக் கணவரைப் பார்த்து மனைவி,  “ஏங்க.. உங்க ஆபீஸ்ல உங்க கூட வேலை பார்க்கறவருதானே அந்த நாலாவது வீட்டுக்கார ஆளு?.. உங்க சம்பளம்தானே அவருக்கும்?… ஆனா பாருங்க பங்களாவாட்டம் வீடு கட்டிட்டாரு, கார் வாங்கிட்டாரு, பொண்டாட்டிக்கு பத்து பவுன்ல சந்திரஹாரம் பண்ணிப் போட்டிருக்காரு!… ப்ச்… உங்களுக்கு சாமார்த்தியம் பத்தாதுங்க!”என்றும்,

        ஒப்பீடு என்பது மனிதனின் மனதை பாதிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இது கவலை மற்றும் பொறாமைக்கு வழி வகுக்கிறது.

        நீங்கள் ஒருவருடன் சிறப்பாக ஒப்பிடப்பட்டால், நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். ஆனால், அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் அழுத்தத்தில் உள்ளீர்கள். பிறகு யாராவது சிறப்பாக ஒப்பிடுவார்களா? என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். கவலைப்படுவீர்கள்.

        அதே நேரம், நீங்கள் ஒருவருடன் குறைவாக ஒப்பிடப்படும் போது, நீங்கள் நேரடியாக மகிழ்ச்சியடையாமல் இருப்பீர்கள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீங்கள் ஒப்பீடு செய்வதால் மகிழ்ச்சியடையவில்லை.

        இவ்வுலகில் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவருடைய இயல்பும், அவர்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளும், பெற்றோரின் உளவியல், உடல் இயல்பு, அவரவர் உளவியல், நிதி நிலை மற்றும் குறிப்பிட்ட தருணத்தின் மனநிலை அனைவருக்கும் முற்றிலும் மாறுபடும். ஒவ்வொருவரின் இயல்பும். எல்லா அம்சங்களிலும் முற்றிலும் வேறுபட்டது.

        எனவே ஒப்பிடுவது உண்மையான முட்டாள்தனம்.

        இந்த உணர்வை ஆழமாகப் பெறுங்கள். ஒப்பிடுவது சிறப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்

      ஒப்பீட்டுப் பேச்சுக்கள் வரும் போது, கேட்போரின் மனதில் அவை ஒரு உத்வேகத்தையோ, ஒரு எழுச்சியான மாற்றத்தையோ, உண்டாக்குவதற்கு பதிலாக, தான் யாருடன் ஒப்பீடு செய்யப் படுகிறோமோ…அந்த நபர் மீதுதான் ஒரு பகையுணர்ச்சியைத்தான் தோன்ற வைக்கும்.  தொடர்ந்து இதே கம்பேரிஸன் நீடிக்கும் போது, அந்தப் பகையுணர்ச்சி வெறியுணர்ச்சியாக மாறி, இறுதியில் ஒரு பேராபத்தில்தான் கொண்டு போய் நிறுத்தும்.

        “இவர் நம்மைக் கண்டிப்பது நியாயம்தானே?…நாமும் அவரும் ஒரே நிலையிலிருந்தும், அவர் நம்மை விட எல்லாவற்றிலும் உயர்ந்திருக்கின்றார் என்றால், நம்மிடம்தானே ஏதோ குறை என்று அர்த்தம்?… அல்லது நாம் ஏதோ தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம்!…என்றுதானே அர்த்தம்?… ஆகவே நாம் உடனே நமது முறையை மாற்றிக் கொண்டு, அவரைப் போலவே உயர முயற்சிக்க வேண்டும்” என்கிற நேர்மறைச் சிந்தனையை அந்த ஒப்பீட்டுக் கருத்து உருவாக்கியிருந்தால் அதுதான் உத்தமம்.  மாறாக,

       “அவனால்தானே நமக்குத் திட்டு வருகின்றது?…அவனை என்ன செய்யலாம்?…எதைச் செய்து அவனைக் குப்புறத் தள்ளலாம்? என்கிற எதிர்மறைச் சிந்தனை மேலோங்கி விட்டால், விளைவு விபரீதமல்லவா?

      இந்த நிலைப்பாட்டினைக் கூர்ந்து கவனிக்கும் போது, ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது, ஒப்பீடு, ஒரு மனிதனின் சமநிலை மனப்பான்மையை மாற்றி, ஒரு விரோத..ஒரு குரோத மனப்பான்மையை உருவாக்கி விடுவதோடு, அவர்களைத் தவறுக்குத் தூண்டி விட்டு, வன்முறை வேதங்களையும் வாசிக்க வைத்து விடுகின்றது.

சில குடும்பங்களில் சில மூத்த உறுப்பினர்கள் கூட இந்த ஒப்பீடு என்னும் தப்பீட்டைச் செய்து, வீணான குடும்பப் பிரச்சினைகளுக்கு வித்திட்டு விடுகின்றனர்.  உதாரணமாக, இரண்டு மருமகள்கள் இருக்கும் குடும்பத்தில் அந்த மாமியாரோ… அல்லது மாமனாரோ… ஒரு மருமகளோடு இன்னொரு மருமகளை ஒப்பிட்டுப் பேசும் பட்சத்தில், அங்கு என்ன நிகழும் என்பதை, சொல்லவே தேவையில்லை.

அதே போல், கணவனானவன் மனைவியின் சமையலை உண்ணும் போது, அதில் ஏதேனும் குறையிருந்தால், நேரடியாக மனைவியிடம் சொல்லி விடலாம், அதை விடுத்து,

“என்ன ரசம் வெச்சிருக்கே?… வாயிலியே வைக்க முடியலை!.. ஹூம்… எங்கம்மாவெல்லாம் ரசம் வெச்சா…நான் வெறும் ரசத்தையே உள்ளங்கையில் வாங்கி..வாங்கிக் குடிப்போம் தெரியுமா?.. அத்தனை டேஸ்டா இருக்கும்!” என்று அவனையேயறியாமல் ஒரு ஒப்பீட்டுத் தத்துவத்தை உளறிவிடும் போது, அங்கு மூன்றாம் உலக யுத்தத்தின் உருவாக்கத்தை யார்தான் தடுக்க முடியும்?

பணியிடங்களிலும், அலுவலகங்களிலும் கூட சில உயர் அதிகாரிகள் செய்யும் ஒப்பீடானது, பெரும் “அலுவல் அரசியலை” (OFFICE POLITICS) உருவாக்கி விடுவது நடைமுறையாகி விட்ட இந்தக் காலத்தில், ஒப்பீடு செய்கையில் அது தப்பீடு ஆகாத வண்ணம் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக… மிக முக்கியமான ஒன்றாகும்.

  (முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நரகமும் இன்பமாகும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    பயத்தைத் தூக்கிப் பரணில் போடு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்