எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை நேரம், வாசல் தெளித்து விட்டு வீட்டிற்குள் வந்த லட்சுமி, உறங்கிக் கொண்டிருந்த வித்யாவை உசுப்பினாள். “எழுந்திருடி!… பால் பூத் திறந்திருப்பான்… சீக்கிரமா ஓடிப் போய் கால் லிட்டர் பாக்கெட்டு வாங்கிட்டு வந்திடுடி!” அழுக்கு ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் திணித்தாள் லட்சுமி.
மெல்ல எழுந்த வித்யா, “எப்படிம்மா?…என்னாலதான் ஓட முடியாதே!” என்று சொல்ல,
முகம் சுண்டிப் போன லட்சுமி, தன் எட்டு வயது மகள் வித்யாவின் இடது காலை சோகமாய்ப் பார்த்தாள். சூம்பிப் போய், வலது காலில் பாதி அளவிற்கே வளர்ந்திருந்தது. நடக்கும் போது வலது காலின் முட்டியைப் பிடித்துக் கொண்டு, சூம்பிப் போன இடது காலைத் தூக்கித் தூக்கி வைத்து நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் லட்சுமிக்கு நெஞ்சு பதைபதைக்கும்.
பால் பூத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வித்யா சிறுவர்கள் எதையோ வைத்துக் கொண்டு வட்டமாய் நின்று “காச்..மூச்”சென்று கத்திக் கொண்டிருக்க, எட்டிப் பார்த்தாள்.
குட்டி நாயை கல்லால் அடித்தும், தண்ணீரைக் கொட்டியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அது கத்தக் கூட திராணியில்லாமல், முனகியபடியே கிடந்தது. ஆங்காங்கே ரத்தக் காயங்கள்.
வித்யா கத்தினாள். “டேய்… டேய்… பாவம்டா… விட்டுடுங்கடா!” கெஞ்சினாள்.
“டேய்… இந்த காலாட்டிக் குருவி… வாலாட்டி நாய்க்கு வக்காலத்து வாங்குதுடா!”
வித்யா அந்த வழியே சென்ற ஒரு பெரியவரை உதவிக்கு அழைத்தாள்.
“போங்கடா!… நீங்கெல்லாம் படிக்கற பசங்களாடா?… உங்களுக்கெல்லாம் இந்த குட்டி நாய்தான் விளையாட்டு பொம்மையா?.. போங்கடா…!” பெரியவரின் கத்தலில் சிறுவர்கள் தெறித்தோடினர்.
வித்யா அந்த நாய்க்குட்டியின் அருகே சென்று குனிந்து மெதுவாய் அதைத் தொட்டாள். வலியால் முனகியது அது. மெல்லத் தூக்கினாள்.
“அதுக்கு காலு ஒடிஞ்சி போச்சு புள்ள!” பெரியவர் சொல்ல.
“தாத்தா… இதை நான் வளர்க்கட்டுமா?” அப்பாவியாய்க் கேட்டாள்.
“ம்ஹும்… இன்னும் கொஞ்ச நேரந்தான் அதுக்கு ஆயுசு!”
“நான் பொழைக்க வெச்சுக்கறேன்!”
இடது கையால் நாய்க்குட்டியை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, வலது கையால் காலைப் பிடித்துக் கொண்டு, தாங்கித் தாங்கி நடந்தாள் வித்யா.
பால் வாங்கச் சென்றவள் அடிபட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வர, ஆத்திரமானாள் லட்சுமி. “ஏண்டி… எங்கேடி பால்?” கத்தினாள்.
“பாவம்மா!… இதைப் பசங்க கல்லால அடிச்சு காலை ஒடிச்சிட்டாங்கம்மா!… இன்னும் கொஞ்ச நேரத்துல செத்திடுமாம்!… தாத்தா சொன்னார்… விடக் கூடாதும்மா… இதைச் சாக விடக் கூடாதும்மா!… இதுக்கும் என்னைய மாதிரியே இடது காலு ஊனமாயிடுச்சும்மா!”
உடைந்து தொங்கும் அதன் இடது காலைப் பார்த்த லட்சுமியின் மனதில் ஈரம் சுரந்தது.
“இந்தாடி… கால் லிட்டருக்கு பதில்… அரை லிட்டர் பால் பாக்கெட் வாங்கிடு!… பாதி நமக்கு.. மீதி இதுக்கு!” இன்னொரு அழுக்கு நோட்டை எடுத்துக் கொடுத்தாள். “மீதிக் காசுக்கு ரெண்டு “பன்”னு வாங்கி பால்ல நனைச்சுக் குடு”
“சரிம்மா!”
நாயின் ரத்தக்காயங்களை ஈரத் துணியால் துடைத்தெடுத்த வித்யா பழைய துணிகளையெல்லாம் அடுக்கி மெத்தை போலாக்கி அதன் மீது அந்தக் குட்டியைப் படுக்க வைத்தாள்.
நிதானமாய்ச் சென்று பாலும், பன்னும் வாங்கி வந்து, பாலைக் காய்ச்சி, பழைய அலுமினியக் குவளையொன்றைத் தேடிப் பிடித்து, அதில் பாலை ஊற்றி நாய்க்குட்டியின் முன் வைத்தாள்.
ஆரம்பத்தில் முரண்டு செய்து விட்டு சில நிமிடங்களில் பருக ஆரம்பித்தது. வித்யாவின் முகத்தில் ஆனந்தம்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று பால் வார்த்தாள். அவ்வப்போது “பன்”னையும் பாலில் நனைத்து வைத்தாள்.
கொஞ்சமாய் தெம்பாகி விளையாடத் துவங்கிய நாய்க்குட்டியை, மாலையில் வந்து பார்த்த லட்சுமி வியப்பானாள். “பார்றா… நான் போகும் போது சாகக் கெடந்திச்சு… இப்ப வாலை ஆட்டுது!”
“பொழைச்சிட்டுதும்மா” கை தட்டிச் சொன்னாள் வித்யா.
ஆறே மாதத்தில் கிட்டத்தட்ட முழு நாய் அளவிற்கு வளர்ந்து முறுக்கேறி நின்றது அது. ஆனால், உடைந்து போன இடது முன்னங்கால் மட்டும் வளர்ச்சியின்றி, வலது காலின் பாதியளவோடு நின்றிருந்தது. மூன்று கால்களால் மட்டுமே அதுவும் இயங்கிக் கொண்டிருந்தது.
வித்யாவும், நாயும் தெருவில் செல்லும் போது, பலர் கிண்டலடித்து மகிழ்வர். “இவளுக்கு இடது கால் சூப்பை… நாய்க்கு இடது கால் சப்பை”
அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாது, தானுண்டு… தன் நாய் உண்டு என்கிற ரீதியில் ஒரு உற்சாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் வித்யா.
அன்று காலை பதினோரு மணியிருக்கும்,
தெரு திடீரென்று பரபரப்பானது. போலீஸ் வேன்களும், பத்திரிக்கைக்காரர்களின் வாகனங்களும் வந்து குவிந்திருக்க, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள் வித்யா.
“பள்ளிக்கூடத்துல வெடிகுண்டு வெச்சிருக்கறதா போலீஸுக்கு தகவல் வந்திருக்காம்… அதான் வந்திருக்காங்க!”
“அய்யோ… பள்ளிக்கூடத்துல குழந்தைகளெல்லாம் இருப்பாங்களே!” பதறினாள் வித்யா.
“குழந்தைகளையெல்லாம் வெளியேத்திட்டிருக்காங்க!… பெத்தவங்கெல்லாம் வந்து குவிஞ்சிருக்காங்க!… ஒரே களேபரமா இருக்கு!”
வேகமாய்ச் செல்ல முடியாத போதிலும், சிரமப்பட்டு விந்தி விந்திச் சென்றாள் வித்யா. நாயும் அவளுடன் சென்றது.
“போங்க! போங்க!… யாரும் இதுக்கு மேல வரக் கூடாது!” பொது மக்களைத் தடுத்து நிறுத்தி வைத்தனர் போலீஸார்.
கூட்டமோ நெருக்கித் தள்ளியது.
பள்ளிக் கூடத்திற்குள்ளிருந்து குழந்தைகளும், பெற்றோர்களும் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். எங்கும் அலறல் சத்தம். மரண ஓலம்.
வேனில் வந்திறங்கிய, பாம் ஸ்குவாட் ஆட்கள், மோப்ப நாய்களுடன் பள்ளிக் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிகுண்டைத் தேடத் துவங்கினர். எல்லோரும் வெளியேறிவிட்ட நிலையில் தேடல் மேலும் தீவிரமானது.
அரை மணி நேரமாகியும் வெடிகுண்டு இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
அப்போது, பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் சில மாணவர்களின் தலை தெரிய, போலீஸாரும் பொது மக்களும், “கீழ இறங்கி வந்துடுங்க!… கீழ இறங்கி வந்துடுங்க!” கத்தினர். பயந்து போன சிறுவர்கள், அங்கேயே நின்றபடி ஓலமிட்டனர்.
திடீரென்று வித்யாவின் நாய், தடுப்பை மீறிக் கொண்டு மூன்று கால் பாய்ச்சலில் பள்ளிக்குள் ஓடியது.
“யார் வீட்டு நாயப்பா இது?…” இன்ஸ்பெக்டர் கேட்க,
எல்லோரும் வித்யாவைக் காட்டினர்.
அவளையும், நொண்டி நொண்டி ஓடும் நாயையும் மாறி மாறிப் பார்த்த இன்ஸ்பெக்டர் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டார்.
அப்போது, பள்ளிக்கூடத்திற்குள்ளிருந்து ஒரு டிபன் காரியர் பையை வாயில் கவ்விக் கொண்டு, வெளியேறியது வித்யாவின் நாய்க்குட்டி.
“இங்க இத்தனை களேபரம் நடந்திட்டிருக்கு… அந்த மூணுகால் நாய் சோத்து மூட்டையைத் திருடிக்கிட்டு வருது…” எவனோ கிண்டலாய்ச் சொல்ல, மொத்தக் கூட்டமும், “கொல்”லென்று சிரித்தது.
மூன்றாம் தளத்தில் மாட்டியிருந்த சிறார்கள் கீழே இறங்கி வரத் துவங்கிய போது, டிபன் காரியர் பையைத் தூக்கியபடி பள்ளியின் விளையாட்டு மைதானம் நோக்கி ஓடியது நாய்க்குட்டி.
சிறுவர்கள் எல்லோரும் பத்திரமாய் கீழே இறங்கி வந்து கூட்டத்தினரோடு கலந்து விட்ட பிறகு, அந்த ஓசை கேட்டது.
“ட…..மா….ர்!”
கட்டிடமே அதிர்ந்தது.
வெடிகுண்டு கக்கிய புகையும், மைதானத்திலிருந்து கிளம்பிய மண் புழுதியும் அந்த இடத்தையே புகை மண்டலமாக்கி விட, “அய்யோ….” அலறினாள் வித்யா.
புகை மண்டலம் கலைந்த பின், பாம் ஸ்குவாட் ஆட்கள் மட்டும் அந்த இடத்திற்குச் சென்றனர்.
துண்டு துண்டாய்ச் சிதறிக் கிடந்தது வித்யாவின் நாய்க்குட்டி.
தாங்கித் தாங்கி நடந்து சென்ற வித்யா தன் நாயை கறித் துண்டுகளாய்த்தான் பார்த்தாள்.
தரையிலமர்ந்து கதறியவளை, தொட்டுத் தூக்கி ஆறுதல் சொன்னார் ஒரு காவலர்.
கத்திக் கொண்டு வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டு அழுதனர், கடைசியாய் வந்து சேர்ந்த சிறார்கள்.
“மன்னிச்சிடு வித்யா… அன்னிக்கு நாங்கதான் அந்த நாயோட காலை ஒடிச்சோம்! ஆனா அது தன்னோட உசுரைக் குடுத்து எங்களைக் காப்பாத்திடுச்சு!…”
அதை சிறிதும் கண்டு கொள்ளாமல், சிதறிக் கிடக்கும் நாயின் சதைத் துண்டங்களைத் பார்த்தபடியே, வலது கால் முட்டியைத் தாங்கிக் கொண்டு, இடது காலைத் தூக்கித் தூக்கி வைத்தபடி நடந்தாள் வித்யா.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings