2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முதலாளி சொல்லிவிட்டார் என்பதற்காக கடையிலிருந்து தெருவில் இறங்கி எதிர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ‘அந்த நடிகனின்” போஸ்டரை சுத்தமாய்க் கிழித்து பக்கத்திலிருந்த சாக்கடையில் போட்ட கனகராஜூக்கு உள்ளுரக் கொஞ்சம் உதறல் இருக்கத்தான் செய்தது.
பின்னே… அந்த நடிகன் கோடானு கோடி ரசிகர்களின் தானைத் தலைவன்… தங்கத் தலைவன் ஆயிற்றே!… அந்த ரசிகர் படையின் தொண்டன் எவனாவது பார்த்துத் தொலைத்து விட்டால் தனக்கு தர்ம அடி சர்வ நிச்சயம், என்பது அவனுக்கு நன்றாகவே தெரியுமே!… ஆனாலும் ஆணையிடுவது முதலாளி… அடி பணிந்துதானே ஆக வேண்டும்?..அவன் சம்பளக்காரன் அல்லவா?
அரைமணி நேரத்திற்குப் பிறகு, தங்கள் கடை முன் வந்து நின்ற அந்த கும்பலைப் பார்த்தும் அடி வயிறு கலங்கியது கனகராஜூக்கு. ‘போச்சுடா… வந்துட்டானுக!… கடவுளே… என்ன நடக்கப் போகுதோ?…. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் எந்த ஆஸ்பத்திரியில் கிடக்கப் போறேனோ… தெரியலையே?””
“இந்தாப்பா… தம்பி… கொஞ்சம் கடைய விட்டு வெளிய வர்றியா?” சற்று தடியாய் இருந்த ஒருத்தன் கனகராஜூவைப் பார்த்துக் கூற, கனகராஜ் முதலாளியைப் பார்த்தான்.
“ஏன்?…எதுக்கு அவனை வெளிய கூப்புடறீங்க?… நீங்கெல்லாம் யாரு?… உங்களுக்கு என்ன வேணும்?” முதலாளி அந்த தடியனைப் பார்த்துக் கேட்டார்.
“ம்…இவன் எங்க தலைவர் நடிச்ச படத்தோட போஸ்டரை கிழிச்சு சாக்கடைல போட்டிருக்கான்… இன்னிக்கு நேற்றல்ல… மூணு…. நாலு மாசமாவே இந்த வேலையப் பண்ணிட்டிருக்கான்… அதனால இன்னிக்கு அதுக்கு ஒரு முடிவு கட்டாம நாங்க இங்கிருந்து போக மாட்டோம்…” என்றவன் திரும்பி கனகராஜைப் பார்த்து, “ம்… வாடா வெளிய” கத்தினான்.
“சரி… என்ன பண்ணப் போறீங்க அவனை?” முதலாளி ஒரு குறுஞ்சிரிப்புடன் கேட்க,
“ம்…போஸ்டரை அவன் கிழிச்ச மாதிரி… நாங்க அவனைக் கிழிக்கப் போறோம்” சொல்லி விட்டு அவன் உடன் வந்தவர்களைப் பார்க்க, அவர்கள் அனைவரும் அதை ஆமோதிப்பது போல் மேலும் கீழும் தலையாட்டினர்.
“அப்படின்னா… நீங்க கிழிக்க வேண்டியது அவனை அல்ல… என்னை!….ஏன்னா இதைச் செய்யச் சொன்னதே நான்தான்…அவன் வெறும் அம்பு…. எய்தவன் நான்”
“என்னது… நீங்கதான் அப்படிச் செய்யச் சொன்னீங்களா?… ஏன்?… எதுக்கு?… ஓ நீங்க எங்க தலைவருக்கு போட்டியா இருக்கற அந்த நடிகனோட ரசிகரா?”
“த்தூ… நான் எவனுக்கு ரசிகன் இல்லை” என்ற கடை முதலாளி தன் கடையின் உள் பக்கம் மாட்டப்பட்டிருந்த ஒரு போட்டோவை அவர்களுக்குக் காட்டினார். இருபது…. இருபத்தியோரு வயதிருக்கும் ஒரு இளைஞன் புகைப்படம் மாலை போட்டு, ஊதுபத்தி ஏற்றப் பட்டிருந்தது.
“இது யாருன்னு உங்க யாருக்காவது அடையாளம் தெரியுதா?” கடை முதலாளி கேட்க,
அவர;கள் அனைவரும் மீண்டுமொரு முறை அந்தப் புகைப் படத்தை உற்றுப் பார்த்து விட்டு, உதட்டைப் பிதுக்கியவாறே, இட..வலமாய்த் தலையாட்டினர்.
கடை முதலாளி அவரே சொல்ல ஆரம்பித்தார். ‘இது வேற யாருமில்லை… என் கூடப் பொறந்த தம்பிதான்… இவனும் உங்களை மாதிரிதான்… “அந்த நடிகனோட” பரம ரசிகன்… ம்ம்… ரசிகன்கூட அல்ல… வெறியன்… பக்தன்!… எங்க சொந்த ஊரு சிவகிரி… அந்த ஊரு தலைமை ரசிகர் மன்றத்தோட தலைவன் இவன்!… நாலு வருஷத்துக்கு முன்னாடி உங்க தலைவரோட படம் ஓண்ணு ரிலீஸானப்ப… கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ண மேலே ஏறியவன் கீழே விழுந்து தலை சிதறி செத்தே போயிட்டான்.!… அந்த சம்பவம் நடந்ததாவது ஞாபகம் இருக்கா உங்கள்ல யாருக்காவது?”
கூட்டத்தில் ஓரிருவர் மட்டும் தயக்கமாய்த் தலையாட்ட, “அப்ப… எல்லா செய்தித்தாள்கள்லேயும்… இதைப் பெரிசாப் போட்டிருந்தாங்க… டி.வி.லே எல்லாம் வந்திச்சு… தமிழ்நாடு பூராவும் எல்லாருக்கும் தெரியும்…!… ஆனா… இன்னிக்கு அது எல்லாருக்கும் சுத்தமாவே மறந்து போச்சு… அப்படித்தானே?”
அவர்கள் எல்லோரும் “ஆமாம்”என்பது போல் தலையை மேலும் கீழுமாய் ஆட்ட,
“அதான்… அந்த மறதிதான் அந்த நடிகனுக்கு சாதகமான விஷயமாப் போச்சு…”
சட்டென்று இடையில் புகுந்த தடியன், “கடைக்காரரே… நீங்க சொல்ற விஷயமெல்லாம் எனக்கு ரொம்ப நல்லாவே ஞாபகத்துல இருக்கு… அது மட்டுமல்ல எங்க தலைவர் உங்க குடும்பத்துக்கு ரெண்டு லட்சம் நிதி உதவி பண்ணினதும் கூட ஞாபகத்துல இருக்கு!” என்றார் பெருமிதத்தோடு.
“ஹா…. ஹா… ஹா…” என வாய் விட்டுச் சிரித்த கடைக்காரர், “தம்பி… அப்படின்னு அறிக்கை மட்டும் குடுத்து… பேரு வாங்கிட்டதோடு சரி… பத்துப் பைசா கூட வரலை… அந்த விஷயம் தெரியுமா உங்க யாருக்காவது?”
எல்லோரும் மௌனமாகி விட, “த பாருங்கப்பா… நீங்க எல்லோருமே… என் தம்பிக மாதிரிதான்! ஏன் இப்படி இந்த இளம் வயசுல ஒரு நடிகனுக்குப் பல்லக்கு தூக்கி உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்கறீங்க?… உங்க தாய் தகப்பன் எல்லாம் எத்தனை கனவுகளோட உங்களைப் பெத்து வளர்த்து ஆளாக்கியிருப்பாங்க!… அவங்களை ஒரு தரமாவது…. ஒரு விநாடியாவது நெனைச்சுப் பார்த்திருக்கீங்களா?… சொந்தக் காசைப் போட்டு… பேனர் அடிச்சு… கட்அவுட் வெச்சு…. அதுக்கு பாலாபிஷேகம் பண்ணப் போய் கீழே விழுந்து செத்து… ச்சை….என்ன விதி இது?…. அந்த நடிகன் என்ன கடவுளா?… அப்படியே கடவுளாகவே இருந்தாலும் அந்தக் கடவுளும் அம்மா… அப்பாவுக்கு அப்புறம்தானே?… படிச்சிருக்கீங்கல்ல நீங்க?… தனக்காக உசுரையே விட்ட ஒரு சின்னப் பையனோட தாய் தகப்பனுக்கு மனசார உதவி செய்ய ஒரு மனசு வராத ஒரு மனுசன் உங்களுக்கெல்லாம் தங்கத் தலைவனா?”
“டேய்…போகலாம்டா” அந்த தடியன் திரும்பி கூட்டத்தினரைப் பார்த்துச் சொல்ல, எல்லோரும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்
பத்தடி சென்றதும் அந்த தடியன் திரும்பி கடைக்காரரைப் பார்த்து ஒரு அர்த்தபுஷ்டியுடன சிரிக்க, அந்தச் சிரிப்பு “அண்ணே… நான் தெளிவாய்ட்டேன் அண்ணே!” என்று சொல்லாமல் சொல்லியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை!