in ,

ஊருக்குத்தான் உபதேசம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

             மரியாதையான தோற்றம் என்பார்களே… அது இயற்கையாகவே அமைந்திருந்தது பிரசாத்திற்கு.  போதாக் குறைக்கு அந்த ஜிப்பாவும், மூக்கின் நுனியில் தொங்கும் அந்த மூக்குக் கண்ணாடியும் அவனுக்கு ஒரு ஜீனியஸ் அந்தஸ்த்தை அட்சர சுத்தமாய் ஏற்படுத்தியிருந்தன. இரைந்து பேசும் ஆட்டோகாரனும்… எடுத்தெறிந்து பேசும் மார்க்கெட் வியாபாரியும் கூட அவனிடம் சற்று தணிந்துதான் பேசுவர். 

           காரணம்… அவனுடைய அறிவு ஜீவித் தோற்றம்.

            வழக்கமாக சிகரெட் புகைக்கும் அந்தப் பெட்டிக் கடைக்கு வந்து ஒரு கோல்ட் ஃபில்டரை வாங்கிப் பற்ற வைத்த பிரசாத் பார்வையில் சற்றுத் தொலைவில் விரக்தி முகத்துடன்…. வித்தியாசப் பார்வையுடன்…. விநோத நிலையில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் பட, அவனையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

            அவன் அடிக்கடி பக்கத்திலிருந்த செல்போன் டவரை அண்ணாந்து  பார்த்துக்  கொண்டிருந்தான்.

            சிகரெட் முடிந்ததும்  தூக்கியெறிந்து விட்டு நூலகத்திற்குச் சென்று அன்றைய தினசரிகளை மேய்ந்து விட்டு, திரும்பும் வழியில் மீண்டும் பெட்டிக்கடையில் நின்று, கோல்ட் ஃபில்டரை வாங்கிப் பற்ற வைத்த போது தூரத்தில் அதே இளைஞன்… செல் போன் டவரை  அண்ணாந்து பார்த்தபடி,

            ‘ஓ…ஸம் திங் ராங்!…. இவனை விசாரிக்கணும்…!” அந்த இளைஞனை நோக்கி நடந்தான் பிரசாத்.

            ‘ஹல்லோ…மிஸ்டர்…யூ வாண்ட் சிகரெட்?” ஒரு சம்பிரதாயத்திற்காக தன் கையில் இருந்த எச்சில் சிகரெட்டை பிரசாத் நீட்ட,

            சற்றும் லஜ்ஜையின்றி அதைப் பிடுங்கி அவசர அவசரமாகப் புகைத்தான் அந்த விரக்தி இளைஞன்.

            குறுஞ்சிரிப்புடன் அதை ரசித்த பிரசாத், மொத்த சிகரெட்டையும் உறிஞ்சி விட்டு,  கை சுட்டதும், உதறலுடன் வீசினான்.

            வீசி விட்டு மறுபடியும் அண்ணாந்து செல் போன் டவரையே பார்க்க ஆரம்பித்தான்.

            ‘மிஸ்டர்…. உங்க பேரு?” பிரசாத் கேட்க,

            ‘ம்ம்ம்…. என்ன… என்ன கேட்டீங்க?” செல் போன் டவரிலிருந்து பார்வையை  வலுக்கட்டாயமாய்க்  கீழிறக்கி  விட்டுக் கேட்டான்.

            ‘உன் பேரு என்ன?ன்னு… கேட்டேன்”

            ‘கோபி!….கோபிநாத்…முழுப்பேர்”

            ‘ஓ.கே. மிஸ்டர் கோபி… நானும் ரொம்ப நேரமாக் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்… இந்த செல்போன் டவரையே அண்ணாந்து… அண்ணாந்து பார்த்திட்டிருக்கியே…. ஏன்?… எதுக்கு?”

          ‘அது மேல ஏறி…. அங்கிருந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சுக்கப் போறேன்.. அதான் எப்படி மேல ஏறுறதுன்னு பார்த்திட்டிருக்கேன்”

         கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவன் சொன்னதும் அதிர்ந்து போனான் பிரசாத்.

         ‘ஓ…. என்ன மிஸ்டர் கோபி… எதுக்கு இந்த முடிவு?”

         ‘பின்னே?… எங்கப்பன் பஸ் விபத்துல செத்து மூணு வருஷத்துக்கும் மேலாச்சு… ஒரு லட்சம் நஷ்ட ஈடுன்னு அறிவிச்சாங்க.. அறிவிச்சதோட சரி… கைக்கு வரலை…! நானும் பார்க்காத ஆளில்லை… ஏறாத ஆபீஸில்லை… யாரைக் கேட்டாலும்.. ‘அவரைப் பாருங்க… இவரைப் பாருங்க!”ன்னு சொல்றாங்க… அந்த அவரையும் இவரையும் போய்ப் பார்த்தா…  “வரும்;; வரும்… வெய்ட் பண்ணுங்க சார்”ன்னு சொல்றாங்க!.. இவனுகெல்லாம்  சும்மா வெறுமனே கேட்டா வேலை செய்ய மாட்டானுக… ஒரு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சாத்தான் செய்வானுக…”

         ‘அதுக்காக….?”

         ‘இதா.. இந்த செல் போன் டவர் மேல ஏறி… கீழ குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கப் போறேன்… பார்க்கலாம்  அதுக்கப்புறமாவது ஏதாவது நடக்குதான்னு”

         கேட்டுக் கொண்டிருந்த பிரசாத், மெல்ல எழுந்து, அந்த இளைஞனுடன் நெருங்கி அமர்ந்து, அவன் தோளில் கை போட்டு,  “த பாரு கோபி… உன் கோபம் நியாயம்தான்… அதுக்காக இந்தத் தற்கொலை முயற்சி… ம்ஹும் … ஏத்துக்க முடியாது”

        அவன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு பிரசாத்தையே பார்க்க,

         ‘பொதுவாகவே இந்த மாதிரி… நஷ்ட ஈடு… போன்ற விஷயங்கள் நம்ம நாட்டுல கொஞ்சம்.. மந்தமாத்தான் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்தவொன்று… ஏன்… உனக்கே கூடத் தெரியும்…!…என்ன தெரியும்தானே?”

            அவன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினான்.

            ‘பார்த்தியா… பார்த்தியா… நீயே… கூட.. ஒத்துக்கறே…!…ஸோ… அவசரப்படாம…கொஞ்சம்  நிதானமா…. பொறுமையா ஃபாலோ பண்ணினா அது கெடைச்சிடும்…எங்கியும் போயிடாது”

            அவன் முகத்தில் லேசாய் நம்பிக்கைக் கீற்றுக்கள் தென்பட,

            உற்சாகமானான் பிரசாத்.

            ‘மேலும்… நீ உன்னோட சொந்தப் பிரச்சினைக்காக இப்படியொரு மோசமான முறையைத் தேர்ந்தெடுக்கும் போது ..இதைப் பார்க்கறவங்கள்ல நாலு பேர்… நாளைக்கு அவங்களும் அவங்க பிரச்சினைக்காக… இதே முறையைத் தேர்ந்தெடுத்தாங்கன்னா… அது நல்லாவா இருக்கும்?… அப்படியொரு கெட்ட விஷயத்துக்கு நீ முன்னுதாரணமாகலாமா?”

            இப்போது அந்த கோபி இட,வலமாய் தலையாட்டினான்.

            ‘ஒரு வேளை… நீ ஒரு வேகத்துல குதிச்சு… ரத்தக்களறியாகிப் போனேன்னா அதைப் பார்க்கற எத்தனை பேர் மனசு பாதிக்கப்படுவாங்க!… யோசிச்சுப் பாரு!… கோபி… ஒண்ணு சொல்றேன் நல்லாப் புரிஞ்சுக்க… ஆண்டவன் நமக்குக் குடுத்த இந்த உசுரை வெச்சுக்கிட்டு வாழத்தான் நமக்கு உரிமை இருக்கே தவிர… அதை அழிக்க அல்ல!.. உன்னோட தாய் உன்னை பத்து மாசம் தன் வயித்துல சுமந்து… பிரசவம்!ங்கற ஒரு ஜீவ மரணப் போராட்டத்துக்குப் பிறகு… உன்னைப் பெத்து தன்னோட ரத்தத்தையே பாலாக்கி உனக்குக் கொடுத்து… உன்னையத் தோளிலேயும்… மாரிலேயும் போட்டுத் தாலாட்டி… சீராட்டி… ஒரு ஈ… எறும்பு கடிக்காமப் பாதுகாத்து… ச்சே… நெனைச்சுப் பாரு…அந்த தாயை நீ ஏமாத்தலாமா?”

            தீவிர யோசனையுடன் மலங்க மலங்க விழித்தான் அந்த கோபி.

            ‘கோபி…. வாழ்வதற்காக வந்து பொறந்த பூமியிலே…. வாழ முடியாமத் தோற்றுப் போய் புற முதுகிட்டு ஓடற கோழைதான் தற்கொலை பண்ணிக்குவான்… நீ… கோழையல்ல… வீரன்… மாவீரன்!…. உன்னாலே எத்தனையோ சாதிக்க முடியும்… சாதிக்கப் போறே…”

            கேட்கக் கேட்க கோபியின் முகத்தில் அசாத்தியத் தெளிவும்… அணையாப் பிரகாசமும் தோன்றியது.

            ‘ஸோ… வேண்டாம்… உன்னோட எண்ணத்தைக் கை விடு!… போ… எந்தெந்த ஆபீஸுக்கெல்லாம் போனியோ… அதே ஆபீஸுக்கெல்லாம் தொடர்ந்து போ… ஆயிடும்…. நிச்சயம் ஆயிடும்…. நம்பு… நம்பிக்கைதான் வாழ்க்கை!”

            சட்டென்று பிரசாத்தின் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்ட கோபி என்ற அந்த இளைஞன், ‘சார்…. என் கண்களைத் திறந்து விட்டுட்டீங்க சார்….இத்தோட சரி… இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமான காரியத்துல நிச்சயம் ஈடுபட மாட்டேன் சார்.. நீங்க சொன்ன மாதிரியே தொடர்ந்து அந்த ஆபீஸுகளுக்கெல்லாம் போயி… எங்களுக்குச் சேர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகைய வாங்கியே தீருவேன் சார்!… இப்ப எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு சார்!”

            ‘வெரி குட்… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்…மொதல்ல இந்த இடத்தை… இந்த செல் போன் டவரை விட்டுக் கிளம்பு” சொல்லியபடியே பிரசாத் எழ,

            அந்த கோபி, ‘ஓ.கே. சார்…” என்று உற்சாகத் துள்ளலாய்ச் சொல்லி விட்டு, புத்துணர்ச்சியுடன் நடக்கலானான்.

            மூன்று நாட்களுக்குப் பிறகு,

            ஏதோ ஒரு வேலையாக… அதே செல் போன் டவர் இருக்கும் ஏரியாவிற்கு வந்த கோபி, அந்த செல் போன் டவரின் கீழே… மனிதர்கள் கூட்டமாய் நின்று கொண்டிருக்கக் கண்டு, ஒரு ஆர்வ உந்தலில், தானும் சென்று அந்தக் கூட்டத்துடன் நின்று அண்ணாந்து பார்த்தான்.

            மேலே…. டவரின் உச்சியில் நின்று கொண்டிருந்த ஒருவன் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தான்.

            ‘நான் வேலை பார்த்த கம்பெனி மூடப்பட்டு கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு…. ஆனா… எனக்குச் சேர வேண்டிய பணம்…. இதுவரைக்கும் கைக்கு வந்து சேரலை… நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன்…. கதறிப் பார்த்துட்டேன்… பேராடிப் பார்த்துட்டேன்…. ஒண்ணும் பிரயோஜனமில்லை… அதனால… இப்ப இங்கிருந்து குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கப் போறேன்…. என் சாவுக்குப் பிறகாவது அது கிடைக்கட்டும்… என் குடும்பமாவது அதை அனுபவிக்கட்டும்!”

            ‘யாரிவன்?…சுத்தப் பைத்தியக்காரனா இருப்பான் போலிருக்கு!…” என்று யோசித்தபடி புருவங்களின் மேல் உள்ளங்கையால் கூடாரமிட்டு உற்றுப் பார்த்த கோபி மொத்தமாய் அதிர்ந்தான்.

            ‘அட… இவன்…. இவன்… அன்னிக்கு… எனக்கு அட்வைஸ் பண்ணின ஆளல்லவா?”

            அவன் யோசனையில் மூழ்கிய அதே வேளை, செல் போன் டவரின் மீதிருந்து ‘தொபுக்கடீர்‘ என்று குதித்தான் பிரசாத் என்னும் அந்த அறிவுஜீவி.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)               

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தானே தன் தலையில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை