அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்,
‘என்ன வாசகர்களே தலைப்பே புரியாத மாதிரி ஆங்கிலத்தில் எழுதிருக்கே’னு நீங்கள் நினைக்கலாம்
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பை நினைத்து பயப்படும் இந்த நேரத்தில், இது என்ன புதுசா இருக்குனு யோசிக்க வேண்டாம் மக்களே
‘நோசோபோபியா’ என்ற சொல் கிரேக்க மொழியில் நோய் மற்றும் பயத்தை குறிக்கும் ‘நோசோஸ்’ மற்றும் ‘போபோஸி’லிருந்து வந்தது
‘நோசோபோபியா’ என்பது நோயை பற்றிய ஒரு வித பகுத்தறிவற்ற அச்ச உணர்வு. நமக்கும் இப்படி நிலைமை வந்திருமோ அப்படினு யோசிச்சு, இந்த அச்சத்தால் மனஅழுத்தம் அல்லது மூச்சு திணறல், இன்னும் பல வியாதிகள் வந்திருமோனு நினைத்து, அவற்றால் ஏற்படும் பயம்
இன்றைக்கு பொதுவாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ்அப், பேஸ்புக் என எல்லாவற்றிலும் கொரோனா பற்றிய செய்தி தான்
காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை இதே செய்தி தான் காதில் விழுந்து கொண்டிருக்கிறது
அதுவும் குறிப்பாக மீம்ஸ், ஆக்ஸிஜன் இல்லாததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இத்தனை பேர் பலி என்று படத்துடன் விளம்பரம். இப்படி பல பயமுறுத்தும் செய்திகள் ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது
இன்றைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்து கொண்டு வரும் இந்த தருணத்தில், கொரோனா வைரஸ் பயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் குணமாகியவர்களை பற்றிய செய்தியை விட, ஆக்ஸிஜன் இல்லாமல், மருத்துவமனையில் பெட் வசதி இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது
வைரஸ் தாக்குதலால் இறந்த மக்களின் உடலை எரிக்க கூட இடமில்லை என்ற செய்திகள் ஊடகங்கள் ஒளிப்பரப்பு செய்வதாலும், அச்செய்திகளை அடிக்கடி நாம் பார்ப்பதாலும், மேலும் நம்மையே அறியாத ஒரு வித பய உணர்வு நமக்குள் ஏற்பட்டு விடுகிறது
ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனாவினால் பல மக்கள் பலியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில், நாம் அனைவரும் அலட்சியமாக காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும், அது அவசியம் தான், ஆனால் பயம் தேவையில்லை
உலகமே பயந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில், பயப்பட வேண்டாம் என்று சொல்கிறேன் என உங்கள் மனம் குழம்பலாம்
“பயப்படுவதால் பாதிப்பும் இழப்பும் நமக்கு தான்”
பயத்தை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன்
இப்போது கஷ்டமான காலகட்டம் தான், அதேசமயம் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால், பாதிப்பு வராமல் நம்மால் கடக்க முடியும்
நோசோபோபியா மற்றும் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள்:
- முதலில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும், 30 நிமிடங்கள் மட்டும் செய்திக ளை பாருங்கள்
- சமூக வலை தளங்களில் வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்களை, திரும்ப திரும்ப பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அதைப் பற்றி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள்
- எப்போதும் பாஸிடிவ் எண்ணங்கள் இருக்கிற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
- நாம் நன்றாக இருப்போம், நமக்கு ஒன்றும் ஆகாது போன்ற நேர்மறை எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும்
- நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம் அல்லது மனதை இலகுவாக்கும் திரைப்படங்கள் / சிரிப்பு காட்சிகள் பார்க்கலாம்
- வீட்டில் யாருக்கேனும் திடீரென உடல் நலம் குன்றினால் பரிசோதனை செய்து கொள்வதற்கு முன், கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என கற்பனையை நிறுத்துங்கள். சாதாரண சளிப்பிடித்தால் கூட தேவையில்லாமல் பயப்பட வேண்டாம்
- அறிகுறிகள் தென்பட்டால் பயப்படாமல் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்
- மனம் இறுக்கமாக இருக்கும் சமயத்தில், மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். முடிந்தால் தினமும் பிராணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள்.
- தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
- முககவசம் அணிந்து வெளியே செல்லுங்கள்
- அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
- தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள்.
- கிருமிநாசினி பயன்படுத்துங்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பழம், காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.
- வாரத்திற்கு இரண்டு முறை மூலிகை கசாயங்கள் குடியுங்கள்
- பல ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸை விட மிகக் கொடிய வைரஸ் தாக்குதலிலிருந்து இந்த உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது என்பதை மனதில் பதிய வையுங்கள்
- நாம் எப்போதும் நிதானமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், எதை கண்டும் அஞ்சாமல் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டால், எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், அதை நம்மால் முறியடிக்க இயலும்
- விரைவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்
அச்சத்தை தவிர்ப்போம்!!!
நோசோபோபியாவை அடியோடு ஒழிப்போம்!!!
கொரானா வைரஸ் பாதிக்காமல் பாதுகாப்பாக இருப்போம்!!!
“முககவசம் நம் உயிர் கவசம்”
தனித்திருங்கள் !!! விழித்திருங்கள்!!! வீட்டிலே இருங்கள்!!!
ஆனந்தமாக ஆரோக்கியமுடன் வாழுங்கள்!!!
வாழ்க்கை வாழ்வதற்கே!!! வாழ்க வளமுடன்!!!
பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி
#ad
#ad
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings