in ,

நிறமில்லாத பூக்கள்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று கல்லூரியின் சார்பில் எக்ஸிபிஷன் வைத்திருந்தார்கள். கல்லூரி ஆசிரியை வீணா பொறுப்பேற்று  அந்த ஹோட்டலின் மேல் தளத்தில் ஒரு ஹால் முழுக்க தங்கள் மாணவர்களுடைய  கலைத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம்  பலபடைப்புகளை  அழகுற அமைத்திருந்தார்கள்.

ஓவியங்கள், போஸ்டர்கள், கவிதைச்சாரல்கள்  என்று எல்லாமே மாணவர்களின் கை வண்ணங்கள்தான். 

டிஸ்ப்ளே செய்திருந்த அத்தனையும் கற்பனையின் செறிவும், வண்ணங்களின் சிதறலும் சேர்ந்து  பொருத்தமான வாக்கியங்களுடன் அழகோவியமாக  கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

அவர்கள் கல்லூரி மாணவர்கள் தவிர மற்ற கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுவித்திருந்தனர். வந்தவர்கள் எல்லோருமே பாராட்டிப் பேசும் அளவுக்கு சிறப்பு பெற்றிருந்த அந்த ஓவியங்கள் காவியங்களாக எல்லோரது மனதையும் கவர்ந்தது  என்றால் மிகையாகாது..

நட்பு என்னும் வானில் அன்பு என்னும் சிறகை விரித்து பறக்க நினைக்கும் மாணவ உள்ளங்களின் கற்பனை நயமும் வார்த்தை வளங்களும் சேர்ந்து  விற்பனையை எளிதாக்கி விட்டன.

கண்காட்சியை இன்னும் ஒரு முறை  விரிவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அத்தனை  படைப்புகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.பாபுவுக்கும் சங்கருக்கும் பெருமை தாங்கமுடியவில்லை. அத்தனை பேரின் பாராட்டுகளை பெற்ற போதும் தேவி அமைதியாக இருந்தாள். 

இத்தனைக்கும் காரணம் வீணா மேடம் .அவர்களுக்குத்தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

கல்லூரியில் மாணவர்களிடம் பல முறை பேசி அவர்களின் சிந்தனையை தூண்டிவிட்ட வீணா சமுதாயத்தின் அவலங்களையும் சுட்டிக் காட்டி சமூக முன்னேற்றத்துக்கு இளைய தலைமுறையினரின் பங்களிக்க வேண்டிய அவசியத்தையும் அடிக்கடி  சொன்னதோடு அதற்கு ஒரு முன்மாதிரியாகத்தான் அவர்களின்  அந்த  கலைக்கண்காட்சியை  ஏற்பாடு செய்திருந்தாள்.

ஏற்கனவே பேசித் தீர்மானித்தபடி  அங்கு வசூலான தொகையை உதவிக் கரங்கள் அமைப்புக்கு தருவதற்காக வீணாவிடம் வந்து பேசினார்கள் அந்த மாணவர்கள். அவர்களின் ஒற்றுமை உணர்வையும் பொறுப்புணர்ச்சியையும்  வெகுவாக சிலாகித்தாள் அவள்.

விளையாட்டும் வேடிக்கையுமாக இருந்தாலும் மாணவர்களின் மனதில்  நல்ல எண்ணங்களை விதைத்து விட்டால் அது வேகமாக வளரும் என்பதை நிதர்சனமாக உணர்ந்தாள் அவள்.குறிப்பிட்ட சில மாணவர்களுடன் அந்த ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்துக்கு சென்றாள் அவள்.

சின்ன சின்ன பிஞ்சுகள் பெற்றவர்கள் யாரென்றே தெரியாமல் தவிக்கும் அந்த வேதனை அவர்கள் மனதை நெருடியது.. யாரோ செய்யும் தப்புக்கு ஒன்றுமறியாத குழந்தைகள்  பலியாகிறார்கள்.

செல்வத்திலேயே பிறந்து வசதியாகவே வாழ்ந்து வரும் எண்ணற்ற மனிதர்களுக்கு சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் ஆதரவுக்கு ஏங்கும் சின்ன உயிர்கள் கண்ணுக்கே தெரிவதில்லை. அந்த அமைப்பின்  பொறுப்பாளரிடம்  அவர்கள் நிறைய நேரம் பேசினார்கள்.

ஃப்ரெண்ட் ஷிப் கார்டு ஒன்றை  எல்லா குழந்தைகளுக்கும் தனித்தனியாக கொடுத்தபோது அவர்களால் அந்த சந்தோஷத்தை  அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. துன்பமும் துயரமும் அனுபவிப்பர்களால் தான் உணர முடியும்.

காற்றை நிரப்பிக் கொண்டு இருக்கும்  பலூன் ஒரு சின்ன பசிக்கு உடைவது  மாதிரி அன்பான ஒரு சொல்லில் ஆதரவான ஒரு வார்த்தையில் நெகிழ்ந்து போனார்கள் அந்த சிறுவர்கள்.

“ஓரளவுக்கு இப்போது முன்னேற்றம் இருக்குமேடம்! நிறைய பேர் பொருளாக  பணமாக உதவி செய்கிறார்கள்.சிலபேர் பிறந்த நாள் மாதிரி விசேஷ நாட்களில் இங்கு வந்து இவர்களுக்கு விருந்து கொடுப்பதும் உண்டு.”

“அது சரி! ஆனால் குழந்தைகள் எண்ணிக்கை ஒரு புறம் ஏறிக் கொண்டு தானே இருக்கிறது! “

வீணா கவலையுடன் கேட்டாள்.”அதற்கு என்ன பண்ணமுடியும் மேடம்! பொறுப்பில்லாமல் தட்டிக் கழித்துவிட்டு போகும் மனப்பான்மை தான் நிறைய பேருக்கு இருக்கிறது.”

“உரிய முறையில் வந்தால் குழந்தை தெய்வம்.ஆனால் இந்த முறைகேடுகளுக்கு குழந்தைகள் எப்படி பொறுப்பாவார்கள்! அவர்களை உதாசீனம்  செய்யும் போது பழி ஓரிடம் , பாவம் ஓரிடம் என்றாகிறதே!”

“இளைய தலைமுறையினர் யோசிக்க வேண்டிய விஷயம் இது . சின்ன சிரிப்புடன் சொன்ன நிர்வாகி மேலும் சொன்னார்.

“இங்கே ஓரளவுக்கு மனம் பக்குவப்பட்டு விட்டாலும் எதிர்காலத்தில் இவர்கள் எத்தனை வேதனைகளை தாங்க வேண்டியிருக்கும் தெரியுமா! உங்கள் மாணவர்களுக்காவது  சொல்லுங்கள் மேடம்! காதலிப்பது தவறு இல்லை.ஆனால் காதலோ , திருமணமோ எதுவானாலும் பொறுப்புகளை உள்ளடக்கியது என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

மழை பெய்தால் வரும் வானவில்லின் வண்ணம் மாதிரி, காதலின் இனிமை கொஞ்ச நாட்களுக்குத்தான்.அந்த இனிமையை  மெருகேற்றிக் கொள்வது சம்பந்தப்பட்ட இருவர் கையில் தான் இருக்கிறது.”

அவர்கள் கொண்டு போயிருந்த இனிப்புகள் தின்பண்டங்களை அந்த  குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை ரசித்தார்கள்.மேலும் கொஞ்சநேரம் அங்கே இருந்துவிட்டு திரும்பும் போது  மனம் கனத்துப் போயிருந்தது.கொண்டு போயிருந்த பொருட்கள்  எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வந்த போதிலும் மனதின் பாரம் தாங்காமல் தவித்தார் கள்.

“எப்போதோ ஒருமுறை நாம் போய் பார்த்துவிட்டு வருவதால் மட்டும் இவர்கள் வாழ்க்கை சீரமைத்து விடுமா மேடம்!” சுமதியின் கேள்விக்கு தேவி பதிலளித்தாள்..”இப்படி நினைத்துக்கொண்டு தான் நிறைய பேர் எதுவுமே செய்யாமல் இருந்து விடுகிறார்கள்.நாம் செய்வதை பார்த்து இன்னொருவர் முன் வரலாம் இல்லையா!”

“நிஜம்தான்! சில சமயங்களில்  சில குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். எப்படியோ அவர்கள் வாழ்க்கை மலர்ந்தால் சரிதானே!”

“ஆமாம் ! மேடம் , அந்தப் பெண் கலா அதற்கு என்ன நான்கு வயதிருக்குமா!  என்ன ஒரு துறு துறுப்பு பார்த்தீர்களா! பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை  வரும்!”

“நீதான் சொல்லேன்! நிறைய பேரிடம் சொன்னால்  யாராவது விரும்பி  வரலாம்  இல்லையா! “பாபு சொன்ன போது தேவி ஆமோதித்தாள்.

“ஏன்! எல்லோருமே சொல்வோமே! வளர்க்க நினைப்பவர்கள் காதுகளில் இப்படி ஒரு விஷயம்  விழும்போது அவர்கள் முன்வருவார்கள் இல்லையா!”

மெல்ல விரியும் பூவின் இதழ்களை போல அவர்களது மனமும் கல்வி மட்டுமன்றி உலகின் மற்ற விஷயங்களையும் புரிந்து கொள்ள விரிந்தன.அந்த வளரும் தலைமுறையை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்த ஆசிரியை.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தேவதை வந்தாள் வாழ்விலே! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    இது நீரோடு செல்கின்ற ஓடம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்