இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிறிது தூரத்தில் ஒரு தரைக் கிணறு ஒன்று இருந்தது, அதில் கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
“அடேயப்பா எவ்வளவு பெரிய கிணறு, இதில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?” என்றவள் ஆர்வக்கோளாறினால் கிணற்றை எட்டிப் பார்க்க அருகில் ஓடினாள்.
இதை சௌம்யாவோ வேறு யாருமோ எதிர்ப்பார்க்கவில்லை. அவள் ஓடிய வேகத்தில், அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிர்ந்து நிற்க முயன்றாள். ஆனால் ஈரப்பதமான மண் வழுக்கி விட்டது.
‘ஆ’வென்று கத்திக் கொண்டே விழப் போனவளை டக்கென்று தாவிப் பிடித்து பின்னால் இழுத்துக் கொண்டான் ரிஷி.
நல்ல வேளையாக அவள் பின்னால் வேகமாக ஓடி வந்த ரிஷி அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினான், இல்லையென்றால் ரேஷ்மா கிணற்றில் தவறி விழுந்திருப்பாள். வேடன் கையிலிருந்து தப்பிய புறாபோல் ரேஷ்மாவின் உடல் நடுங்கியது.
கைகள் அவன் இடுப்பைச் சுற்றி இறுக அணைக்க, முகத்தை அவன் மார்பில் அழுந்தப் புதைத்துக் கொண்டாள். பயத்தில் அவள் கண்களைத் திறந்து பார்க்கக் கூட முயலவில்லை.
அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். ரிஷி அவள் தலையை லேசாக வருடிக் கொடுத்தான். சின்னக் குழந்தைக்கு முதுகில் தட்டி தைரியம் சொல்வது போல் அவள் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் வாயைத் திறந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சதீஷ்.
சௌம்யாதான் கொஞ்சம் தெளிந்து, “ரிஷி, அவளை மெதுவாக அழைத்துச் சென்று அங்கிருக்கும் சிமென்ட் பென்ச்சில் உட்கார வை. சதீஷ், நீ ஓடிப் போய் கார் ட்ரங்கில் இருக்கும் பிளஸ்க்கை எடுத்து வா. சூடான காபி இருக்கும், அதைக் குடித்தால் கொஞ்சம் ப்ரஷ்ஷாக இருக்கும்” என்றாள்.
ரிஷி அவளை அழைத்துப் போய் பெஞ்ச்சின் மேல் உட்கார வைத்து, அவள் கீழே விழுந்து விடாமல் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு அவள் நெற்றியில் புரளும் சுருண்ட கூந்தல் கண்களில் படாமல் தள்ளி விட்டான்.
அதற்குள் சதீஷ் பிளாஸ்க்கை எடுத்து வர, அதிலிருந்து சூடான காபியை ஊற்றி, கொஞ்சம் ஆற்றி திட்டமான சூட்டில் எடுத்துக் கொண்டான்.
லேசாக அவள் கன்னத்தைத் தட்டி, மெதுவாக “ரேஷ்மா” என்று அழைத்து அவளை எழுப்பினாள். அவளும் கண்களைத் திறந்து மருண்ட மான் போல் விழித்தாள்.
சதீஷ் உடனே, “ரேஷ்மா, நினைவு திரும்பி விட்டதா? உடனே சினிமாவில் கேட்பது போல் நான் எங்கிருக்கிறேன்? கிணற்றின் உள்ளா இல்லை பூமியிலா என்று கேட்காதே. ஜம்மென்று ரிஷியின் மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாய்” என்றான்.
“இந்த காபியை கொஞ்சம் குடி ரேஷ்மா, பயமும் களைப்பும் சரியாகி விடும்” என்ற சௌம்யா, காபியை கொஞ்சம் கொஞ்சமாக்க் குடிக்கக் கொடுத்தாள்.
மெதுவாகக் கண்களைத் திறந்த ரேஷ்மா, அப்போது தான் ரிஷியின் மார்பில் சாய்ந்திருப்பதை உணர்ந்து, வேகமாக நிமிர்ந்து உட்கார்ந்தவள், ரிஷியையும் சௌம்யாவையும் பார்த்து முகம் வெட்கத்தால் சிவந்தவள், “ஸாரி, உங்களுக்கு மிகவும் கஷ்டம் கொடுத்து விட்டேனா?” என்று கேட்டாள் தலை கவிழ்ந்து.
“எங்கள் கஷ்டம் ஒன்றும் பெரிதில்லை. நீ ஓடிப் போன வேகத்தில் எங்கே கிணற்றில் விழுந்து விடுவாயோ என்று தான் பயந்தோம். நல்ல வேளையாக ரிஷி ஓடி வந்து தடுத்து விட்டான். புது இடம், பழகாத இடம் இங்கெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கண்ணம்மா” என்றாள் சௌம்யா தழுதழுத்த குரலில்.
ரிஷியின் மடியிலிருந்து வேகமாக எழுந்து கொள்ளப் பார்த்தாள் ரேஷ்மா. எங்கே விழுந்து விடுவாளோ என்று ரிஷி அவளைத் தாங்கிப் பிடித்தான். மெதுவாக அவன் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தாள் ரேஷ்மா.
“ஏய் என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்றாள் சௌம்யா.
“நீங்கள் கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீர்களே, அது என்னது?” என்றாள் ரேஷ்மா.
“நான் என்ன சொன்னேன்? ‘கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கண்ணம்மா’ என்று தானே சொன்னேன். அது தப்பா?”
“இல்லை தப்பில்லை, ஆனால் என்னை யாரும் இது நாள் வரை இப்படியெல்லாம் பிரியமாகக் கூப்பிட்டதில்லை. கேட்க நன்றாக இருந்தது” என்றவள் சின்னக் குழந்தை போல் சிரித்தாள்.
ரிஷியின் கண்கள் இமைக்காமல் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தன, இவள் பெண்ணா இல்லை தேவதையா என்று வியந்தான்.
“இப்படியே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் எப்போதுடா உன் பெற்றோரைப் பார்ப்பது, அங்கிருந்து எப்போது நாம் சென்னை செல்வது?” என்றான் சதீஷ்.
“ரேஷ்மா பார்த்தது போதுமா? இல்லை இன்னும் தூரமாக ஓடிச்சென்று ஏதேனும் பார்க்க வேண்டுமா?” என ரிஷி கேட்க. சிரித்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள் ரேஷ்மா.
அவளின் ஆக்ஷனைப் பார்த்த ரகு விழுந்து விழுந்து சிரித்தார். சிரிப்பும் கலாட்டாவுமாக ஒரு வழியாக ரிஷியின் பெற்றோரிடம் போய் சேர்ந்தனர்.
ரிஷியின் அம்மாவும் அப்பாவும் வாசலில் வந்து வரவேற்றனர். அவர்கள் சிரித்துக் கொண்டே வரவேற்றாலும் ரேஷ்மாவைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் ஏதோ சில இனம் புரியாத உணர்ச்சிகள் ஓடியதை ரேஷ்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு வேளை இவள் வரவை அவர்கள் விரும்பவில்லையோ என வீட்டினுள் செல்லத் தயங்கினாள். ஆனால் ரேஷ்மா வெளிப்படையாக தன் உணர்ச்சிகளைக் காட்டவில்லை.
அந்தத் தோட்டத்து வீடு வெகு அழகாக இருந்தது. உள்ளே நுழையும் போதே ஒரு நீண்ட நடை, அதை ஒட்டினாற் போல் ஒரு பெரிய லிவிங் ஹால். அதில் அழகிய சோபா செட்களும், ஒரு ராக்கிங் சேரும் இருந்தது.
பெரிய ஹோம் தியேட்டரும் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் நேரத்தை சந்தோஷமாக செலவிடுவதற்கு டி.வி. தான் அற்புதக் கண்டுபிடிப்பு.
அதை ஒட்டினாற் போல் மற்றொரு ஹால், அது டைனிங் ஹால் போலும். செவ்வக வடிவத்தில் எட்டடி நீளத்தில், நான்கடி அகலத்தில் ஒரு பெரிய டைனிங் டேபிள்.
அதை ஒட்டினாற் போல் சமையல் அறை. அங்கே இரண்டு பெண்கள் வேலை சமையல் வேலை செய்து கொண்டிருந்தனர். வாசனை கமகமவென்று வீசியது. பிரியாணி வாசனையும், மீன் வறுவல் வாசனையும் இல்லாத பசியையும் தூண்டி விட்டன.
வீட்டில் இருக்கும் ஆட்கள் என்னவோ இருவர் தான், ஆனால் அவர்களுக்கு வேலை செய்யும் ஆட்கள் எத்தனை பேர் என்று ஆச்சர்யம் அடைந்தாள் ரேஷ்மா.
சிறிது நேரம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்ட பிறகு, “இப்போது மணி பதினொன்று தான் ஆகிறது. லஞ்ச் ரெடி, ஸ்னேக்ஸ் சாப்பிட்டு விட்டு பிறகு கொஞ்ச நேரம் கழித்து லஞ்ச் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டாள் அவர்கள் அம்மா.
சௌம்யா உடனே, “அம்மா, நானும் ரகுவும் உங்களுடன் தான் இருப்போம். ரிஷி தான் அவர்களுடன் சென்னை போகிறான்” என்று பெற்றோருக்கு அறிவித்தாள்.
சமையல்கார மாமி எல்லோருக்கும் சின்ன பீங்கான் தட்டுகளில் சுடச்சுட வெங்காயப் பகோடா கொண்டு வந்து அவரவர் கைகளிலேயே கொடுத்தாள்.
வாசனை அள்ளியது. வாயில் போட்டால் வெண்ணையாய் கரைந்தது. பச்சை மிளகாய் காரம் வேறு நாக்கை சுண்டி இழுத்தது. எல்லோரும் இரண்டு தரம் மூன்று தரம் என்று டிபனையே சாப்பாடு போல் கேட்டு வாங்கி சாப்பிட்டனர். டீயும் குடித்தனர்.
“ரிஷி… இன்னும் சாப்பாடு வேண்டாம், பகோடா சாப்பிட்டு டீ குடித்தவுடன் வயிறு புல். கொஞ்ச நேரத்தில் கிளம்பலாமா? எனக் கேட்டாள் ரேஷ்மா.
“அதெப்படி? சாப்பாடே ரெடியாகி விட்டது. நீங்கள் வீடு, தோட்டம் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தால் சாப்பிட்ட பகோடா காணாமல் போய் விடும். மதியம் சாப்பிடாமல் போக முடியாது” என்று அம்மா திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.
ரகு மட்டும் ஏதோ ஒரு மெடிகல் ஜர்னலைப் படித்துக் கொண்டிருந்தார்.
ரேஷ்மாவை அழைத்துக் கொண்டு சௌம்யா வீடு முழுவதும் சுற்றிக் காட்டினாள். பூஜை அறையைப் பார்த்து பிரமித்தாள் ரேஷ்மா. அவ்வளவு அழகாக பூக்களாலேயே அலங்காரம் செய்திருந்தார்கள்.
அங்கே போடப் பட்டிருந்த கோலமும் பூக்களாலேயே நிரப்பப் பட்டிருந்தது. அதனால் பூஜை அறையினுள் நுழையும் போதே ஒரு தெய்வீக மணம் வீசியது. ஊதுவத்தி வாசனையும், விபூதி சந்தன வாசனையும், பூக்களின் வாசமும் கலந்து எல்லோரையும் பக்தி மயமாக்கியது.
ரேஷ்மா சாமியை வணங்கி விட்டு விபூதியும் அழகாக நெற்றியில் இட்டுக் கொண்டு நிமிர்ந்த போது, அங்கே ஒரு வீணை உறைக்குள் இருப்பதைப் பார்த்தாள்.
“சௌம்யா அக்கா, நீங்கள் வீணை வாசிப்பீர்களா?” என்று வியப்புடன் கேட்டாள் ரேஷ்மா.
“இல்லை எனக்குத் தெரியாது, நான் பரதம் தான் ஒரு காலத்தில் கற்றுக் கொண்டேன்”
“அக்கா… நான் இந்த வீணையை வாசிக்கட்டுமா? வீணையைத் தொட்டு ரொம்ப நாட்களாகி விட்டது”
“உனக்கு வீணை வாசிக்கத் தெரியுமா?” அவ்வளவு நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“சுமாராக வாசிப்பேன் அம்மா, வாய்ப்பாட்டும் தெரியும். எங்கள் ஹோமில் எந்தக் குழந்தைக்கு எது இன்ட்ரஸ்டோ அதைச் சொல்லித் தருவார்கள்”
“ஹோமா? அப்படியானால் அம்மா அப்பா?” என ஆச்சர்யத்துடன் கேட்டாள் அம்மா.
“நாங்கள் கடவுளால் கை விடப்பட்டவர்கள் அம்மா, ஹோமில் உள்ள மதர் தான் அம்மா அப்பா எல்லாம்”
பேச்சை வேறு திசையில் திருப்ப, “ரேஷ்மா, நீங்கள் வீணையை மீட்டிக் கொண்டே ஏதாவது மெல்லிசையில் ஒரு பாட்டுப் பாடுங்களேன். உங்களுக்கும் நன்றாக ஜீரணமாகும், எங்களுக்கும் பொழுது போகும்” என்றான் ரிஷி.
ரிஷியின் அம்மாவை அனுமதி கேட்பது போல் பார்த்தாள் ரேஷ்மா. அம்மா ‘சரி’ என்று தலையசைக்க, ரேஷ்மாவும் வீணையைத் தொட்டு வணங்கி விட்டு மிகுந்த ஆர்வத்துடன் சுருதியை மீட்டி, “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” என்று பாரதியாரின் பாடலை மிக அழகாகப் பாடினாள்.
அதுவரை அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, அந்தப் பாடல் முடியும் போது கண்களில் நீர் வழிய திக்பிரமைப் பிடித்தாற் போல் ரேஷ்மாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பூஜையறையின் கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டு இருந்தார் ரிஷியின் அப்பா.
இந்த அம்மா ஏன் இப்படி வெறித்தாற் போல் பார்க்கிறார்கள் என்று யோசனை செய்த ரேஷ்மா, “ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டாள்.
“நீ ஏன் இந்தப் பாட்டைப் பாடினாய்?” என ரிஷியின் அன்னை கேட்க
“நான் பாரதியார் பாட்டிற்கு அடிமை. எனக்கு அவருடைய எல்லாப் பாடல்களுமே பிடிக்கும்” என்றாள் ரேஷ்மா.
“காவ்யா விரும்பிப் பாடும் அதேப் பாடல், அவள் கூறும் அதே வார்த்தைகள். யாரம்மா நீ?” என குரல் தழுதழுக்க கேட்டார் ரிஷியின் தந்தை.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings