இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காமாட்சி முழு விவரமும் கூறாமல், பொங்கல் வைப்பதாக மட்டும் கூறியதால் வயதான பெரியவர்கள் மட்டும் நேரே கோயிலுக்குவந்து விட்டு அங்கிருந்து அப்படியே விடைபெற்று அவரவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
உறவினர்களுக்கு காவ்யாவையும், அப்துல்லாவையைம் அங்கே பார்த்ததில் மிகவும் ஆச்சர்யம். அவர்கள் பெண்தான் புகழ்பெற்ற நடிகை ரேஷ்மா என்பதிலும் ஆச்சர்யம். ஆனாலும் ஒரு சினிமா நடிகையை, ஒரு முகமதிய வகுப்புப் பெண்ணை அவர்கள் வீட்ட மருமகளாக்கிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பின் சௌம்யா, “ரிஷி இன்று மாலை விசேஷத்திற்காக வீட்டில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ரேஷ்மாவை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியே போய்விட்டு வா, அவளை வைத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யமுடியாது. ஏதாவது கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பாள். நம் வயல்களைச் சுற்றிக் காட்டு, அதற்குள் இரண்டு மணி நேரமாவது ஆகி விடும்” என்றாள்.
ரிஷியும் தன் மோட்டார் பைக்கில் ரேஷ்மாவை அழைத்துக் கொண்டு தங்கள் வயல்களைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றான். அமைதியாகப் போய்க் கொண்டிருந்தவள் பைக், வரப்பின் மேல் போகும்போது, கீச்கீச்சென்ற சிட்டுக் குருவிகளின் சப்தமும், மைனாக்களின் குரலும், பல்வேறு பறவைகளின் இசையும் அவளை என்னவோ செய்ய, மெதுவாகப் போய்க் கொண்டிருந்த பைக்கில் இருந்து ‘டக்’கென்று குதித்து நடனமாடியபடி தன் துப்பட்டாவை தலைக்கு மேல் விசிறி போல் பிடித்துக் கொண்டு ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்று பாடியபடியே ஓடத் தொடங்கினாள்.
ரிஷியும் சிரித்துக் கொண்டே, “ஏய் ரேஷ்மா மெதுவாகப் போ, வரப்பில் வேகமாக ஓடினால் கீழே விழுந்து விடுவாய்” என்று எச்சரித்தபடியே பைக்கில் போய்க் கொண்டிருந்தான்.
கண்மூடிக் கண்திறப்பதற்குள் எங்கிருந்தோ ஒருவன் வேகமாக இடையில் வந்து கத்தியால் அவள் கழுத்தைக் குறிவைத்துக் குத்தப் பார்க்க, ரேஷ்மா பயந்து அலறியபடியே பின்னால் நகர, மார்பில் குத்தி விட்டு ஓடினான்.
ரிஷி மோட்டார் பைக்கை அப்படியே போட்டு விட்டு ரேஷ்மாவைத் தாங்கிப் பிடித்தான். இரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி மயங்கி அவன் மேலேயே விழுந்தாள் ரேஷ்மா. தப்பி ஓடிய அந்தக் கொலைகாரனை வயலில் வேலை செய்த ஆட்கள் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டனர்.
ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், ரிஷி ஆம்புலன்ஸை வரவழைத்தான். ஆம்புலன்சில் போகும் போதே வீட்டிற்கும் எந்த மருத்துவமனை என்ற தகவல் தெரிவித்தான். ரிஷிக்குத்தான் எதுவுமே தோன்றவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல் ஏதேதோ சொல்லி அற்ற்றிக்கொண்டே அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
மருத்துவமனையில் ரேஷ்மாவை ICUவில் வைத்து மருத்துவர்கள் கூடி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக ரத்தம் வெளியேறுவதைத் தடுத்தனர். அவளுடைய பிளட் குரூப் O பாசிட்டிவ் என்னும் அரிதான குரூப். அருகில் உள்ள எந்த ரத்த வங்கியிலும் கிடைக்கவில்லை, அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அப்துல்லா தனக்கு அந்த குரூப்தான் என்று கூற, அவனைப் பரிசோதித்து விட்டு அவனுடைய ரத்தத்தை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
அந்த அவசரப் சிகிச்சையின் கதவில் பொருத்தப்பட்டுள்ள சின்னஞ்சிறு கண்ணாடியின் வழியே ரேஷ்மாவைப் பார்த்தவனுக்கு, உயிரே போய்விடும் போல் இருந்தது.
அன்று நடக்கப் போகும் ‘விசேஷ நிகழ்ச்சி என்ன?’ என்று கேட்டுத் துளைத்தவளிடம் தான் ஏதும் சொல்லாமல் குறும்பாக சிரித்ததால், தன் உதட்டைச் சுழித்து அழகெடுத்துவிட்டு சற்று முன் சிட்டுக் குருவியைப் போல் பறந்து பறந்து ‘சிட்டுக்குருவிக் கென்ன கட்டுப்பாடு’ என்று பாடிய அதே ரேஷ்மாவா இவள்? உடலை மருத்துவமனை ஆடை மூடியிருக்க, தலை முடியை கவர்செய்து சர்ஜரிக்கு தயார் செய்துக் கொண்டிருந்தார்கள்.
அவள் உடம்பில் இரத்தம் ஒரு பக்கம் ஏறிக் கொண்டிருக்க, அந்த இரத்தக் குழாயில் ஏதேதோ மருந்துகள் வேறு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ‘என் கண்மணி பிழைப்பாளா?’ என்ற கேள்வி வேறு அடிக்கடி ரிஷியின் அடி மனதில் எழுந்துக் கொண்டிருந்தது. இரத்தக்கறை படிந்த அவன் ஆடையும், தலைவிரித்த கோலமும் அவனையே ஒரு பைத்தியக்காரனாகக் காட்டியது.
காவ்யாவையும் அப்துல்லாவையும் தேற்ற வழி தெரியாமல், சௌம்யாவும் ரகுவும் அவர்களுக்கு ஆதரவாக அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் இருந்து வித்யாதரும் அவன் மனைவி நான்ஸியும் , தங்கள் குழந்தை ஆஷாவுடன் ரேஷ்மாவைப் பார்க்க ஆவலுடன் இந்தியா வந்தனர்.
ஆஷாவை தன் வீட்டில் அம்மா ,அக்கா ஆகியோரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி, அவளுக்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொடுத்து விட்டு ரேஷ்மாவைப் பார்க்க மருத்துவமனை வந்தனர். அவளை அந்த நிலையில் பார்க்க அவர்களுக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. வித்யாதரும் அவன் மனைவி நான்ஸியும் மிகவும் கவலைப்பட்டு எதுவும் சாப்பிடாமல் கூட ரிஷியுடன் துணையாக நின்றார்கள்.
சர்ஜரியே ஆறு மணி நேரம் நடை பெற்றது . ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு டாக்டர்கள் களைத்து வெளியே வந்தவுடன், ரிஷி மூச்சிரைக்க எதிரே போய் கண்கள் கலங்க கையைப் பிசைந்து “டாக்டர்” என்று ஒரு சொல்லுடன் நின்றானே தவிர, வேறு வார்த்தை வரவில்லை. கண்ணீர்தான் வழிந்தது.
சீப் டாக்டர் கூப்பிய அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “கத்தி மார்பில் பாய்ந்ததால் எங்கே முக்கியமான ஆர்கன்களை பாதித்திருக்குமோ என்று பயம் இருந்தது. ஆனால் கழுத்தில் வைத்த குறி தவறி மார்பில்பட்டதால், கத்திக் குத்து ஆழமில்லை. கழுத்திலும் லேசான காயம், அதற்கும் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறோம், ஆபத்து இல்லை. இன்னும் மயக்கம் தெளியவில்லை, சிறிது நேரத்தில் வார்டுக்கு மாற்றி விடுவார்கள். பிறகு நீங்கள் போய் பார்க்கலாம்” என்றவர் சிரித்துக் கொண்டே, “ரேஷ்மாவின் நடனத்திற்கும் நடிப்பிற்கும் நானும் ஒரு விசிறி தான்” என்றார்.
காவ்யாவும் அப்துல்லாவும் கண்களில் நீர்மல்க கைகூப்பி நின்றுக் கொண்டிருந்தனர்.
ரேஷ்மாவை, ஸ்பெஷல் வார்டிற்கு மாற்றும் போது, ரேஷ்மாவை கொலை செய்ய முயற்சித்தவனைக் கட்டிப் போட்ட விவசாய நிலத்து ஆட்கள் ரிஷியைத் தேடி ஓடி வந்தனர். ரிஷி இருக்கும் நிலையில் அவனோடு ஏதும் பேச முடியாதென்று, வித்யாதரிடம் போலீஸ் அந்த கொலைகாரனை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர்.
ரேஷ்மா சுயநினைவு அடைந்து விட்டால், அவளிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறினர். ரிஷி தனக்குத் தெரிந்த விவரங்களை உள்ளது உள்ளபடி விவரித்தான். அனஸ்தீசியா கொடுத்த மயக்கம் வெகு நேரமாகியும் ரேஷ்மா தெளியவில்லை. கன்னத்தில் தட்டித் தட்டி எழுப்ப வெகுநேரம் கழித்துத்தான் நினைவிற்கு வந்தாள்.
போலீஸ் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. “யாராவது விரோதிகள் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள்.
“நானே இந்த ஊருக்குப் புதியவள். இங்கிருப்பவர்கள் உறவினர்களாக இருந்தாலும், அவர்களும் எனக்குப் புதியவர்களே. அப்படியிருக்கும் போது நான் யாரைச் சொல்ல முடியும்?” என்றாள் ரேஷ்மா.
நன்றாகப் பரிசோதித்து உடம்பில் ஒன்றும் குறையில்லை என்று அறிவித்து, மருத்துவமனையிலிருந்து ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்தனர். அன்று வீட்டிற்கு ரேஷ்மா வந்தவுடன் மீண்டும் போலீஸ் வந்தனர்.
“கொலை செய்ய முயன்ற ஆளைத் தகுந்தபடி விசாரித்ததில், சுமதிதான் பணம் கொடுத்து ரேஷ்மாவைக் கொல்ல ஏற்பாடு செய்திருக்கிறாள்” என்று தெரிவித்தனர்.
அவள் உறவினள் என்றதால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸ் அவர்கள் அபிப்பிராயத்தைக் கேட்டனர். வித்யாதரனுக்கு மிகவும் கோபம் வந்து, கண்கள் சிவந்து கழுத்து நரம்புகள் புடைத்தன.
“FIR போட்டு கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். நல்ல படித்த பணக்கார வீட்டுப் பெண் இவ்வளவு மட்டமாக நடந்து கொண்டால், படிக்காத ஏழைப்பெண்கள் எப்படி நடப்பார்கள்? அவ்வளவும் பணத்திமிர், கொழுப்பு. அவள் ஆசைப்பட்டது யாரையாவது கொன்றுவிட்டாவது அடைந்து விடவேண்டுமென்ற அகம்பாவம். இந்த மாதிரிப் பெண்களுக்கெல்லாம் ஜெயிலில் களி தின்றால்தான் புத்தி வரும்” என்றான்.
அந்த நேரத்தில் சுமதியின் பெற்றோர் அழுதுக் கொண்டே காமாட்சியின் கைகளைப் பிடித்துக் கொண்டனர். அவளுடைய அப்பா காமாட்சியிடம், “அக்கா, அவள் ரிஷியின் மேல் உள்ள அதிகமான அன்பினால் தவறு செய்து விட்டாள். அதனால் அவள் மேல் எந்த நடவடிக்கையும் வேண்டாமென்று சொல்லக்கா, இனிமேல் அவள் இவர்கள் வாழ்வில் குறுக்கிடவே மாட்டாள் அக்கா” என்று கதறிக் கொண்டு கடைசியில் காலிலும் இருவருமாக விழுந்து கெஞ்சினார்கள்.
காமாட்சிக்கு அவர்களைப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருந்தது, இருந்தாலும் அதிசயமாகக் கிடைத்த அவர்கள் பேத்தியை அல்லவா கொல்லப் பார்த்தாள் இந்த சுமதி. இப்போது இதை செய்தவள், மன்னித்து விட்டால் மீண்டும் கத்தியைக் கையில் எடுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? அதை நினைத்தவுடன் அவள் முகம் இறுகியது.
“நாங்கள் என்ன சொல்ல முடியும்? இவ்வளவு மோசமான செயலை ஒரு உறவுக்காரப் பெண் செய்வாள் என்று நம்பமுடியவில்லை. சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ரிஷியின் அப்பா.
அப்போது ரேஷ்மா மிகவும் பலஹீனமான குரலில், “தாத்தா, நான் கொஞ்சம் பேசவேண்டும்” என்றாள்.
“சொல்லம்மா” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சார்… நான்தான் பிழைத்துக் கொண்டேனே, அதனால் அந்தப் பெண் மேல் எந்த நடவடிக்கையும் வேண்டாம். மேலும் அவளுக்கு என் மேல் இவ்வளவு கோபமும் ஆத்திரமும் வருவதற்கு அவள் மட்டும் காரணமல்ல. இதோ இங்கிருக்கும் என் உறவினர்கள். நான் உறவு என்று தெரியாதபோது, அநாதை என்ன ஜாதியோ சினிமா நடிகைதானே என்ற மட்டமாக எங்கள் வீட்டுப் பெரியவர்களே என்னைப் பேசினார்கள். அந்த வெறுப்பு அந்தப் பெண்ணின் ஆழ்மனதில் படிந்து, கோபமாகவும், ஆத்திரமாகவும் மாறியிருக்கிறது.
அந்தப் பெண்ணின் மேல் நடவடிக்கை எடுத்தால், அவள் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு, உறவினர்களே பகைவர்களாகவும் மாறுவார்கள். அதனால் தயவு செய்து அந்தப் பெண்மேல் எந்த நடவடிக்கையும் வேண்டாம். நான் வேண்டுமானால் எழுதித் தருகிறேன்” என்றாள்.
ரிஷியின் மனதில் ரேஷ்மா உயர்ந்துக் கொண்டே போனாள். அருகில் வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். வித்யாதரோ, “இவ்வளவு நல்லப் பெண்ணாக இருந்தால் எப்படியம்மா பிழைக்கப் போகிறாய்?” என்றான்.
“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்றுதான் படித்திருக்கிறோமே மாமா” என்றாள்.
நான்ஸி ரேஷ்மாவின் சொல்லுக்குப் பொருள் தெரியாமல், ‘என்ன’ என்று வித்யாதரின் முழங்கையைச் சுரண்டினாள். வித்யாதர், ரேஷ்மா கூறிய எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கிக் கூறினான். நான்ஸி ,ரேஷ்மாவின் பெருந்தன்மையால் உணர்ச்சிவயப்பட்டு, அவளுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings