in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எல்லாம் உங்களால் தான் அம்மா. நீங்கள் அந்த சுமதியுடன் வந்து நான் உயிருக்குயிராக நேசிக்கும் என் ரேஷ்மாவை கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறீர்கள். அந்த சுமதியெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள்? அவள் என்ன உங்கள் கூலிப்படையா? அதனால் ரேஷ்மா எப்படி அழுதாள் தெரியுமா? இவள் அழுதது என் உயிரே போய் விட்டது போல் இருந்தது. என்னைப் பற்றி இனிமேல் யார் என்ன சொன்னாலும் நான் அவளுக்கு மட்டும் தான் சொந்தம் என்ற உறுதியான எண்ணம் அவளுக்கு வேண்டும் என்பதற்காகத்தான் சதீஷ், அவன் மனைவி மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் கோயிலில் சாமி சந்நதியில் மணம் முடித்தேன். திருமணத்தைப் பதிவும் செய்து விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான்” என்று குற்றம் சாட்டும் தொனியில் கூறி முடித்தான் ரிஷி.

காமாட்சி கண்கள் கலங்கி நின்றாள். மனைவி கண்கள் கலங்குவதைப் பார்த்த ரிஷியின் தந்தை, “போனது போகட்டும் காமாட்சி. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்று நீ கேட்டதில்லையா? அதனால்தான் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று‘ என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ஏனம்மா ரேஷ்மா, நம் உறவினர்க்கெல்லாம் ஒரு ரிஸப்ஷன் வைத்து உங்கள் திருமணத்தை தெரியப் படுத்தலாமா?” எனக் கேட்டார்.

“இப்போது அதெல்லாம் வேண்டாம் தாத்தா. பாட்டி, அவர்கள் வீட்டு மருமகள் ஒரு சினிமா நடிகையாக இருக்கக் கூடாதென்றார்கள். அதனால் நானும் முன்பணம் வாங்கிய என் படங்களை முடித்து விட்டு வேறு நல்ல வேலையாகப் பார்த்துக் கொண்டு தான் உங்களிடம் என்னை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைப்பது எதுவுமே என் வாழ்வில் நடைபெற்றதில்லை, அதில் இதுவும் ஒன்று. ஆனால் இது ஒரு சந்தோஷமான ஏமாற்றமே”  என்றாள் ரேஷ்மா புன்சிரிப்புடன்.

லேசாக அவள் தலையை செல்லமாக ஆட்டிய ரிஷி, “ஆமாம், அதென்ன இந்த சினிமாக்களில் பாடுவது போல் எல்லோரும் ஒரு குடும்பப் பாடலை வைத்துக் கொண்டு எங்களையெல்லாம் ஆட்டு விக்கிறீர்கள்? என் அக்கா காவ்யா பாடிய ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’ என்ற பாடலை நீ பாடிய போது எனக்கு என் அக்காவைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லை, அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவள் நினைவாகவே இருந்த என் அம்மாவும் அப்பாவும் அந்தப் பாடலைக் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டிரிக்கிறார்கள்” என்று சாதாரணமாகப் பேசத் தொடங்கியவன் உணர்ச்சி வசப்பட்டு முடித்தான்.

“அந்தப் பாடலை ரேஷ்மா நம் வீட்டில் வந்து பாடும் போதே எனக்கும், உன் அப்பாவிற்கும் உடம்பெல்லாம் சிலிர்த்தது. உள்ளத்தில் ஏதோ ஒரு மின்மினிப் பூச்சிப் பறந்தது. இசையின் மகத்துவம் பெரியது” என்றாள் காமாட்சி.

“ஆம், இசையின் மகத்துவம் பெரியதுதான். இழந்த என் குழந்தையை என்னிடமே சேர்த்தது இசை தானே” என்றாள் காவ்யா கண்களில் நீர் மல்க.

“அக்கா, இசை மட்டுமல்ல… சதீஷும்தான் நம் குடும்பம் ஒன்று சேர மிகவும் பாடுபட்டான். முதலில் ரேஷ்மாவைக் கொண்டு வந்து நம் வீட்டில் அறிமுகப்படுத்தியவனே சதீஷ்தான். அவனோடு எல்லாவற்றிற்கும் துணையாய் நின்ற சாருவிற்கும், சதீஷிற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என்றாள் சௌம்யா. காவ்யாவுடன் கூடவே சுற்றிக் கொண்டிருந்தாள் சௌம்யா.

அப்போது சதீஷுடன் தயங்கியவாறு அங்கே வந்த சாரு, எல்லோருக்கும் அவள் வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்று விரும்பினாள்.

“அம்மா, நான் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க மாட்டீர்களே?” என்றாள் சாரு, காமாட்சியிடம்.

“கேள் சாரு, என்ன வேண்டும்? உன்னைப் போய் எங்களால் தவறாக நினைக்க முடியுமா?”

“உங்கள் எல்லோருக்கும் கீழே உள்ள எங்கள் வீட்டில் விருந்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எங்கள் வீட்டில் இன்று இரவு டின்னருக்கு வருவீர்களா?”

“சாரு விளையாடாதே. உனக்கே இப்போது ஏழு மாதம் கர்பம், நீ உடம்பை அலட்டிக் கொள்ளாதே. குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டும், பிறகு நாங்கள் எல்லோரும் வந்து உன் வீட்டில் விருந்து சாப்பிடுகிறோம். நீ நல்ல ரெஸ்ட் எடுத்துக் கொள்“ என்றாள் காமாட்சி.

“சாரு, நீங்களும் சதீஷ் அண்ணாவும் எனக்கும், எங்கள் குடும்பத்திற்கும் செய்த உதவிக்கு நானும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இனிமேல் நீங்களும் எங்கள் குடும்பத்தினரே, நீங்கள் இருவரும் செய்த மகத்தான உதவிக்கு இன்று உங்கள் இருவருக்கும் எங்கள் வீட்டில் ஒரு சிறிய விருந்து. இன்று இரவு இங்கே உங்களுக்கு டின்னர், சரிதானே பாட்டி” என்றாள் ரிஷியின் தோள் மீது சாய்ந்து கொண்டு, குறும்பு சிரிப்புடன் லேசாகப் பாட்டியைப் பார்த்து கண்ணடித்தவாறு.

“என் தம்பியைக் கொஞ்சம் ப்ரீயாக விடேன். நீயே எப்போதும் அவனோடு கொஞ்சிக் கொண்டு இருந்தால், நாங்கள் எப்போது அவனோடு பேசி மகிழ்வது?” என்றாள் காவ்யா.

“என் மாமு எனக்குத்தான்“ என்றவள் வேண்டுமென்றே அவன் கழுத்தைச் சுற்றி கைகளால் வளைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ரிஷியும் கடன் வைக்காமல் வட்டியுடன் உடனே திருப்பிக் கொடுத்தான்.

“பெரியவர்கள் இத்தனை பேர் எதிரில் இருக்கிறார்களே என்ற வெட்கம் கூட இரண்டுக்கும் இல்லையே“ என்று அவள் வெட்கப்பட்டு சிவந்தாள் காவ்யா. அப்துல்லா எல்லாவற்றையும் பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தான். சௌம்யாவும் ரகுவும் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“மாமா கிளம்புங்கள், கொஞ்சம் பர்சேஸ் வேலை இருக்கிறது” என்றாள் ரேஷ்மா.

“மாமாவா, இதென்ன புதியதாக? நீ ரிஷி என்றே கூப்பிடு ரேஷ்மா” என்றான் ரிஷி.

“அதெல்லாம் முடியாது மாமா. இது உறவில் வந்த உரிமை, இல்லையா பாட்டி?” என்று பாட்டியைத் துணைக்கு அழைத்தாள்.

“ஆமாம், எப்போதுமே உறவையும் உரிமையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” என்று பாட்டி பேத்திக்கு ஜால்ரா அடித்தாள்.

“இதெல்லாம் டூ மச்” என்றவன் ரேஷ்மாவுடன் வெளியே கிளம்பினான். வெளியே போனவர்கள், மதியம் லஞ்ச் முடித்து விட்டு பெரிய பெரிய ராதா சில்க், நல்லி பட்டுப் புடவை அட்டை பெட்டிகள் அடங்கிய பைகளுடன் மாலை நான்கு மணிக்கு வீடு திரும்பினர்.

கடையிலிருந்து வந்து இருவரும் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, அவர்கள் வாங்கி வந்த பொருட்களை ஒரு பாய் விரித்து அதில் பரப்பினர்.

சாருலதாவிற்கு கரும் பச்சை நிறத்தில், இரண்டு அங்குல அடர் ஜரிகையுடன் மைசூர் சில்க் புடவையும், அதற்குப் பொருத்தமான கலங்காரி எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் பிளௌசும், அழகான சிறிய முத்துக்களும் பவளங்களுடன் கூடிய ஒரு மோதிரமும், சதீஷிற்கு நல்ல பிராண்ட்டட் டீ ஷர்ட்டும் பேண்ட்டும் வாங்கினார்கள்.

சாருவின் மோதிரம் போலவே சதஷிற்கும் ஒரு மோதிரம் வாங்கினார்கள். ஆனால் சாருலதா மோதிரத்தில், சதீஷ் பெயரும், சதீஷ் மோதிரத்தில் சாருலதா என்ற பெயரும் பொறித்து எடுத்து வந்தார்கள்.

காவ்யா, அப்துல்லாவிற்குப் பிடித்த பிரியாணியும், காமாட்சி சமையல்காரர்களுக்கு மற்ற ஐட்டங்களும் தயார் செய்ய உத்தரவு கொடுத்தும் அங்கே ஒரு மாபெரும் விருந்து தயாரானது.

விருந்து முடிந்ததும் சாருலதாவிற்கும், சதீஷிற்கும் அவரவரக்கு வாங்கி வந்த ஆடைகளையும், நகைகளையும்  ஒரு வெள்ளித் தட்டில் பழங்கள், பூச்சரம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து காமாட்சி அம்மாளும் அவள் கணவரும் கொடுத்தனர்.

இரவு விருந்து முடிந்ததும் காமாட்சி, “நம் வீட்டில் இவ்வளவு பெரிய சந்தோஷ நிகழ்ச்சி நடந்துள்ளது. நாம் தொலைத்த சொந்தங்கள் யாவும் நமக்குத் திரும்ப கிடைத்துள்ளது. ரிஷிக்கும் ரேஷ்மாவிற்கும் திருமணமும் முடிந்திருக்கிறது. நம் சொந்தங்களுக்கு இவர்களை அறிமுகப்படுத்த வேண்டாமா? இதெற்கெல்லாம் நாம் கடவுளுக்கு நன்றி செல்வ வேண்டாமா? நம் குலதெய்வம் கோயிலுக்குப் போய் பொங்கல் வைக்க வேண்டுமே, எப்போது போகலாம்?” என்றாள்.

காவ்யா மிக உற்சாகமாக, “எப்போது வேண்டுமானாலும் போகலாம்” என்றாள்.

“இப்போது வேண்டாம் பாட்டி. நீங்கள்தான் உங்களுக்கு வரும் மருமகள் சினிமாத் தொழிலில் இருக்கக் கூடாதென்று சொன்னீர்களே. அதனால் நான் என் கையில் இருக்கும் நான்கு படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டு வருகிறேன். அதற்கெல்லாம் அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் முடிக்காமல் வர முடியாது. அத்துடன் இந்த சினிமாவிற்கு ஒரு முழுக்குப் போட்டு விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் பொங்கல் வைத்து எங்களை உங்கள் சொந்தங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். ரிஷி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் ரேஷ்மா.

“ஆமாம் அம்மா, ரேஷ்மா சொல்வதும் சரிதான்” என்றான் ரிஷி.

“நான்கு படங்களை முடிக்க எவ்வளவு நாட்களாகும்?” என காமாட்சி கேட்க

“குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று நினைக்கிறேன்” என்றாள் ரேஷ்மா.

“வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடலாம் இல்லையா?” என்றாள் காமாட்சி.

“இவ்வளவு நாட்கள் அவர்களால் பணம் சம்பாதித்து ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, இப்போது அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்தால்  அது நம்பிக்கை துரோகமில்லையா? அவர்களுக்கு வேறு ஒரு நடிகையை வைத்துப் படம் எடுக்க பணம், நேரம் எல்லாம் வீணாகுமில்லையா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அடுத்த வருடம் இதே நாள் எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ கைக்கு வர வேண்டும்” என்றார் காமாட்சி  அதிகாரமாக.

“அப்படியென்றால் இப்போதே நம் கோயிலுக்குப் போய், மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பொங்கல் வைத்து விட்டு மீதி சடங்குகளையும் ஐயரை வைத்து நேரம் குறித்து, செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும்” என்றார் ரிஷியின் தந்தை.

“அது என்ன மீதி சடங்கு?” என்றாள் ரேஷ்மா.

எல்லோரும் வாயைக் கையால் மூடிச் சிரித்தனர். சௌம்யா மட்டும், “சடங்கு செய்யும் போது பார்த்துக் கொள்” என்றாள்.

ரிஷி அவளைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணைச் சிமிட்டி சிரித்தான். அவர்கள் ஊரில் சென்று நான்கு நாட்கள் இருந்து விட்டு வருவதாக வீட்டில் உள்ள வேலைக்காரர்களிடம் சொன்னார்கள். சாரு நிறை மாதமாக இருப்பதால் சதீஷ் கார் ஓட்ட வேண்டாமென்று கூறி விட்டு ரிஷியே வண்டியை எடுத்தான். சதீஷ், ரேஷ்மாவின் மேனேஜராக எல்லா ஷூட்டிங் வேலைகளையும் பார்த்துக் கொள்வதால், ரேஷ்மாவும் கவலையில்லாமல் கிளம்பினாள்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை