in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரிஷி அம்மாவை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே வந்தான். கீழே வந்து வீல் சேரில் உட்கார வைத்தான். கூடவே தொடர்ந்து வந்தாள் காவ்யா. அப்துல்லா அவனுடைய மாமனாரிடமும் ரிஷியுடனும் பேசிக் கொண்டிருந்தான். முதலில் அவன் பேசுவதற்குத் தயங்கினாலும், அவர்கள் இருவரும் சகஜமாகப் பேசி அவன் தயக்கத்தைப் போக்கினார்கள். சமையல் அறையில் சாப்பாடு பலமாக நடந்து கொண்டிருந்தது.

காவ்யாவோ, அவளுடைய அம்மாவை வீல் சேரில் உட்கார வைத்து வீடு முழுவதும் சுற்றி வர ஆசைப்பட்டு முதலில் பூஜை அறைக்குச்  சென்றாள். அங்கே உறையினுள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த வீணையை எடுத்து ஒரு பட்டுத் துணியால் அதை மென்மையாகத் துடைத்தாள். காமாட்சிக்கு அப்போது ரேஷ்மாவின் நினைவு வந்தது. அவள் முகம் வெறுப்பைக் காட்டியது.

“அம்மா, ஏன் உன் முகம் திடீரென்று மாறி விட்டது? நான் வீணையைத் தொட்டது பிடிக்கவில்லையா?“ என்று கேட்டாள், அவள் முகத்தைப் பார்த்த காவ்யா.

“அசடு மாதிரிப் பேசாதே காவ்யா. இது உன் வீணை. ஆனால் அந்த சினிமாக்காரி ஒருத்தி வந்து இந்த வீணையை எடுத்து நீ பாடிய அதே பாட்டை, ராகம், தாளம் தவறாமல் பாடினாள். அப்போதுதான் கோபம் எரிச்சல் எல்லாம் வந்தது. அந்த சினிமாக்காரி பார்ப்பதற்குக் கூட, நீ சின்ன வயதில் எப்படி இருந்தாயோ அப்படியே இருந்தாள் தெரியுமா?” என்றாள்.

“அம்மா, ஒருத்தரைப் போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லக் கேட்டதில்லையா அம்மா?” என்று சொல்லிச் சிரித்தாள் காவ்யா.

“அது கூடப் பரவாயில்லை. இந்த ரிஷி அவள் அழகில் மயங்கி அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறான். நான் ஏற்கெனவே அவனை  இனிமேல் சினிமாத் தொடர்பான எந்த உறவும் இந்த வீட்டில் வேண்டாம் என்று கூறியிருந்தேன். அப்படியும் அவன், அந்தப் பெண் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கவும் எனக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அதனால் உன் மாமா மகள் சுமதியுடன் போய் அந்தப் பெண் ரேஷ்மாவை நன்றாக உரைக்கும்படி கேட்டு விட்டு வந்தோம்” என்றாள்.

“ரேஷ்மாவா? அம்மா, அவளைப் பார்த்தால் எங்களுக்கே கூட ஏதேதோ நினைவுகள்.  அம்மா, எங்களுக்கு ஒரு மகள் இருந்தாள். கதீஜா என்று பெயர்” என்று சொன்னாள் காவ்யா.

“மகள் இருந்தாளா? அப்படியென்றால்?” என்றாள் காமாட்சி.

“காசிக்குப் போனால் எல்லோரும் மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்றை விட வேண்டும் என்பது ஐதீகம் இல்லையா? எங்களிடம் விடுவதற்கு எதுவும் இல்லை என்று அந்த கடவுளுக்குத் தெரியுமாதலால் எங்கள் மகளை எடுத்துக் கொண்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதே கல்கத்தா போலீசில் பதிவு செய்தோம். இன்றுவரை எங்கள் மகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த ரேஷ்மா சினிமா படப்பிடிப்பிற்காக லண்டன் வரும் போதுதான் ரிஷி, சதீஷ் இவர்கள் மூலம் சந்தித்தோம்” என்று நிறுத்தினாள்.

“ஏய் காவ்யா, நீ என்ன சொல்ல வருகிறாய்? ரேஷ்மா உன் மகள் என்று சந்தேகப்படுகிறாயா?” என காமாட்சி கேட்க

“முதலில் அப்படித்தான் பலமாக நம்பினேன். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படிச் சொல்வது? ரிஷிதான் அந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு உதவுவதாகக் கூறியுள்ளான். பார்க்கலாம். அப்துல்லாவோ, ‘உன் பெற்றோரைத் தவிக்க விட்டு உன்னை எடுத்துக் கொண்டேன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா. அதனால்தான் கடவுள் என் குழந்தையை எடுத்துக் கொண்டு என்னை தண்டிக்கிறார்’ என்று தினம் தினம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறான்” என்றாள்.

“நீ என்ன சொல்ல வருகிறாய்? அந்தப் பெண் ரேஷ்மாதான் உன் பெண் என்று சந்தேகப்படுகிறாயா?” என காமாட்சி மீண்டும் கேட்க

“ஆம் அம்மா, சந்தேகம்தான். ரிஷி எங்களை விட வயதில் மிகவும் சிறியவனாக இருந்தாலும், மிகவும் பொறுப்பும் மனிதர்கள் மேல் அன்பும் கொண்ட நல்லவன். அவன் எங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவதாகக் கூறியுள்ளான். அதனால் நீ தயவு செய்து உன் தம்பிப் பெண், நாத்தனார் பெண் என்று எவளையாவது அவனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தாதே“ என்றாள் காவ்யா.

அதற்குள் ரிஷி, ”அம்மா, சாப்பாடு ரெடியாகி விட்டதா? நானும் அப்துல்லாவும் கொஞ்சம் சென்னை வரைப் போக வேண்டிய வேலை இருக்கிறது“

“இவர்களுக்கு உதவிசெய்வதாகக் கூறி விட்டு சென்னைக்கு ஏன் போக வேண்டும்?” என்றாள் காமாட்சி.

’அந்த ரேஷ்மாவைத்தான் போய் பார்ப்பான். இவனுக்குத்தான் அவளைப் பார்க்காவிட்டால் தூக்கமே வராதே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

சதீஷோ, “அம்மா, நானும் என் குடும்பத்தை விட்டு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டன” என்றான்.

ரிஷி ‘நானும்தான்’ என்று சொல்ல வந்தவன், உடனே வாயை மூடிக் கொண்டான். சதீஷ் அவனை முறைத்தான்.

காரை சதீஷ் ஓட்ட, பின் சீட்டில் அப்துல்லாவும் ரிஷியும் பயணம் செய்தனர். ஏதோ யோசனையில் இருந்த ரிஷி, திடீரென்று பேச ஆரம்பித்தான்.

“மாமா” என்றான்.

அப்துல்லா சுற்றிச் சுற்றிப் பார்த்தான். “யாரைக் கூப்பிடுகிறீர்கள் ரிஷி சார்” என்று ஆச்சர்யமாக்க் கேட்டான்.

“ஏன் மாமா உங்களைத்தான். என் அக்காவின் கணவர் தானே எனக்கு மாமா” என்றான் ரிஷி. கார் ஓட்டிக் கொண்டிருந்த சதீஷ் கூட ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்த்தான்.

“டேய் ரோடைப் பார்த்து ஓட்டுடா” என்று அவனை முறைத்தான் ரிஷி. பிறகு அப்துல்லாவைப் பார்த்து சிரித்தான்.

அப்துல்லா ஆச்சர்யத்துடன், “என்னை மாமாவென்று ஏற்றுக் கொண்டீர்களா?” இன்னும் தெளிவாகாமல் கேட்டான்.

“காவ்யாவை அக்கா என்று ஏற்றுக் கொண்ட பின்னர் உங்களை மாமாவென்றுதானே கூப்பிட வேண்டும். அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை, விடுங்கள் மாமா. நாம் இப்போது நேரிடையாக விஷயத்திற்கு வருவோம். நீங்கள் உறுதியாக ரேஷ்மாவை உங்கள் மகள் என்று நம்புகிறீர்களா?” எனக் கேட்டான் ரிஷி.

“ஆமாம் ரிஷி, நான் உறுதியாகத்தான் நம்புகிறேன். உன் அக்காவும் இதில் உறுதியாகத்தான் இருக்கிறாள்” என்றார்  அப்துல்லா.

“மாமா ,லண்டனிலிருந்து வந்த பின்னர் நான் ரேஷ்மாவை என் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். இந்த சதீஷும் அவன் மனைவியும்தான் திருமண ரெஜிஸ்டிரார் ஆபீசில் முக்கிய சாட்சி கையெழுத்துப் போட்டார்கள். இனிமேல் அவள் என் மனைவி என்ற ஒரு முகவரியே எனக்குப் போதும். அவளுடைய நதி மூலம் ரிஷி மூலம் எனக்கு வேண்டாம். ஆனால் சேயைத்தேடி அலையும் என் அக்காவின் மனதையும் உங்கள் மனதையும் சமாதானம் செய்யவும், என் பெற்றோர்களுக்கு சந்தோஷம் தரவும் அவள் உங்கள் மகளாக இருந்தால் அதை என்று நிரூபிக்க வேண்டியது என் வேலை” என்று மூச்சு விடாமல் பேசினான்.

“கடவுளே, இது முடியுமா மச்சான்?” எனக் கேட்டார் அப்துல்லா.

“முயற்சி செய்தால் முடியாதது கிடையாது மாமா. நாம் நம் முயற்சிகளை, ரேஷ்மாவை வளர்த்தார்களே ஒரு ஆஸ்ரம்ம் அதிலிருந்தே தொடங்கலாம் சரியா?” என்றான் ரிஷி.

“ஏன் மாப்பிள்ளை, சாரி உங்களை மாப்பிள்ளை என்று கூப்பிடலாம் என்று நினைக்கிறேன்” என்றான் அப்துல்லா தயக்கத்துடன்.

“அதெல்லாம் தாராளமாகக் கூப்பிடலாம். என்னவோ சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லுங்கள்” என்றான்.

“இப்போதுதான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறதே, இந்த டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் சுலபமாக நிரூபிக்கலாம் என்கிறார்களே! அந்த டெஸ்ட் செய்து பார்த்தால் என்ன?”

“வெரி குட் மாமா, முதலில் அந்த ஹோமில் விசாரிக்கலாம். எந்த விசாரணையும் வேரிலிருந்து தொடங்கலாம். நிறைய வேலைகள் இருக்கிறது மாமா. நாம் இப்போது ரேஷ்மா வீட்டிற்குத்தான் போகிறோம், ஆனால் அவளுக்கு இப்போது ஏதும் தெரிய வேண்டாம். அங்கேயே அவுட்ஹௌசில் தான் சதீஷும் அவன் மனைவி சாருவும் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் கொஞ்ச நேரம் இருங்கள். நானும் ரேஷ்மாவை தனியே விட்டு வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. அவளோடு கொஞ்ச நேரம் பேசி சமாதானம் செய்து விட்டு வருகிறேன். பிறகு அந்த ஹோமிற்குப் போகலாம்“ என்றவன் அப்துல்லாவை சதீஷ் வீட்டில் இறக்கி விட்டு, சாருவிற்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ரேஷ்மா வீட்டிற்குக் கிளம்பினான்.

ரேஷ்மா, பால்கனியின் கைப்பிடிச் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு எங்கோ யோசனையில் இருந்தாள். மாடிப்படியில் ஆள் ஏறிவரும் அரவம் கூட அவளுக்குக் கேட்கவில்லை. அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த வலை பீரோவின் மேல் ஏதோ புத்தகங்கள் வேறு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  

அருகில் போய் கூப்பிட்டால் அதிர்ச்சியில் எங்காவது கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையாக அவளை அணைத்துக் கொண்டான்.

“ஏய் யாரடா நீ? திடீரென்று என்னை வந்து பிடிக்கிறாய்?” என்று வலிக்காமல் அவன் மார்பில் லேசாகக் குத்தினாள்.

“என்னது ஏயா? யாரடாவா? கொஞ்சம் மரியாதை கொடுடா“ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு அவளைக் குழந்தை போல் தன் கைகளில் தூக்கிக் கொண்டு மலர் மாலை போல் மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்து, அவனும் பக்கத்தில் தலையணைமேல் சாய்ந்தாற் போல் உட்கார்ந்து கொண்டான்.

“ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டு, உடனே இரண்டு நாட்களில் வருகிறேன் என்று சொல்லி விட்டுத்தானே ஊருக்குப் போனாய்? பத்து நாட்கள் கழித்து வருகிறாயே” என்று கத்தியவளுக்கு அதற்கு மேல் பேச வரவில்லை. துக்கத்தில் தொண்டை அடைத்தது. கண்களில் நீர் வழிந்தது.

“பல வருடங்களுக்கு முன் காணாமல் போன என் பெரிய அக்காவை கண்டுபிடித்துக் கொண்டு வந்தோம். அவ போட்டோவைப் பார்த்தவுடன் அம்மா அதிர்ச்சியில் மயக்கமடைந்து விட்டாள். அவளுக்கு வைத்தியம் பார்த்து, அதிர்ச்சியிலிருந்து மீட்டு சரியாக்குவதற்குள் இத்தனை நாட்களாகி விட்டன” என்றான் ரிஷி அவள் கைகளைத் தன் கைகளில் அடக்கிக் கொண்டு.

“பெரியக்கா என்றால், அன்று வீணையில் நான் பாடும் போது, அவர்களைப் போலவே இருக்கிறேன் அவர்கள் பாடிய அதே பாட்டை பாடுகிறேன் என்று சொன்னார்களே, அந்த அக்காவா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“ஆம், அதே அக்கா தான்” என்றான்.

“ரிஷி, எனக்கும் அவர்களைப் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது” என்றாள்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை