எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அறிவில்லையா உங்களுக்கு? சோத்தை திங்கறீங்களா வேற ஏதாவது திங்கறீங்களா?”
முதலாளியிடமிருந்து சீறும் அனலாய் வந்து விழுந்தன வார்த்தைகள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சிலையாக நின்றாள்.
“கண்ணு முன்னாடி நிக்காதீங்க. போய் தொலைங்க”
வீசியெறிந்த காகிதங்களை சேகரித்துக் கொண்டு அமைதியாக இருக்கைக்கு திரும்பினாள். எத்தனை நாள் தான் இப்படி செய்யாத தவறுக்கு திட்டு வாங்குவது? வேலையை விட்டுவிடலாமென்றால் மாதம் சுளையாக முப்பதாயிரம் நின்று போகுமே. இருவர் சம்பாதித்தும் பற்றாக்குறையில் தானே வண்டி ஓடுகிறது என கண்ணை மூடி அமைதியாக இருந்தாள்.
அப்போது இருகால்களும் வெலவெலத்துப் போனது. கீழ் இடுப்பிலே ஒரு கடுப்பையும் வலியையும் உணர்ந்தாள். கணினித் திரையில் காலண்டரை பார்த்தவளுக்கு கணவனின் மேல்தான் எல்லாக் கோபமும் திரும்பியது.
‘இவர் மட்டும் சரியா இருந்தா இவன்கிட்ட எல்லாம் ஏன் கண்டபடி திட்டு வாங்கறோம்’
ஏன் தான் பொம்பளையா பிறந்தோமோ என இந்த மாதமும் நினைத்தாள். இன்டர்காமின் அலறல் அவள் யோசனையை கலைத்தது. ‘நேர்ல இப்பதான திட்டுனான். உடனே போன்லயும் திட்டணுமா? ‘என நினைத்துக் கொண்டாள்.
“ஹலோ! நான் கிளம்பினதுக்கு பின்னாடி என் கேபின் போங்க. அதுவரை யாரையும் உள்ள போக வேண்டாம்னு சொல்லிருக்கேன். நீங்க வெளில வந்ததுக்கு அப்புறமா டேபிள்ல இருக்கிற கொட்டேஷன கேஷியர எடுத்துக்க சொல்லீருங்க. ஈவினிங் வீட்டுக்கு போன பின்னாடி எனக்கு போன் பண்ணுங்க” இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இப்படித்தான் மொட்டை மொட்டையா பேசி குழப்பிட்டு நம்மள திட்ட வேண்டியது என்றவாரே முதலாளியின் கேபினுக்குள் சென்றாள்.
அங்கே தரையில் இரு சொட்டு குருதி. உடனே செய்வதறியாது பதட்டமான அவளது கண்களுக்கு டேபிள் மேலே இருந்த காட்டன் தென்பட்டது. அவ்வளவு நேரம் வரை சுட்டெரிக்கும் சூரியனாக இருந்த முதலாளி குளிர் சந்திரனானார்.
மாலை போனில் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் மனைவிதான் அழைப்பை ஏற்றார். மகப்பேறு மருத்துவரான அவர், அடுத்த நாள் காலை தன்னை மருத்துவ மனையில் சந்திக்குமாறு கூறினார். சில நேரங்களில் நெருப்புக்குள்ளும் ஈரமிருக்குமோ?!
எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings