in ,

நேராய் ஒரு எதிர்மறை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

    “சார்… ஒரு நிமிஷம்” என்று சொல்லி என் வகுப்பு மாணவன் விவேக்கின் அப்பா பார்த்தசாரதியை  நிறுத்தினேன். “என்ன சார்?…சொல்லுங்க?” அவர் கேட்க,

      “ஒவ்வொரு மாசமும் தவறாம வந்து… உங்க மகன் விவேக்கோட படிப்பு… ஒழுக்கம் பற்றிய விபரங்களை கேட்டுட்டுப் போறீங்க!… பெற்றோர்கள்ன்னா உங்களை மாதிரித்தான் இருக்கணும்!…”

      அவர் புன்னகைக்க, “ஆனா… ஒரு விஷயம்தான் சார் எனக்கு ரொம்ப நெருடலாயிருக்கு!….. இதே ஸ்கூல்லதான் உங்க முத்த பையன் கோவிந்தும் படிக்கறான்!… அவனைப் பற்றி நீங்க கண்டுக்கறதே இல்லையாமே!… அவனோட கிளாஸ் டீச்சர் சொன்னாங்க!… உங்களை நேர்ல வரச் சொல்லி அவனோட ஸ்கூல் டைரில எழுதி அனுப்பினாலும் வர்றதிலையாமே?… ஏன் சார்?… மூணாம் வகுப்பு படிக்கற சின்னவன் மேல் காட்டும் அக்கறையை… ஆறாம் வகுப்பு படிக்கற பெரியவன் மேல் காட்டுவதில்லையே ஏன்?… கோவிந்தும் உங்க மகன்தானே?…” கேட்டேன்.

      “சார்… சின்னவன் மேல் காட்டற அக்கறையை விட இரண்டு மடங்கு அக்கறையை பெரியவன் மேலே… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காட்டினேன்!… வாரம் ஒரு தடவை வந்து பெரியவனோட படிப்பைப் பத்தி விசாரிச்சிட்டுப் போவேன்!… அப்படி விசாரிச்சுக் கிடைச்ச விபரங்களையும்… அவனுடைய ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுகளையும் தீர ஆராய்ந்ததில்… ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுது!” என்றார்.

      “என்ன விஷயம் சார்?” நான் விடாமல் கேட்டேன்.

      “பெரியவன் கோவிந்தின் அறிவாற்றல் நார்மலுக்கும் கீழே!…. அதை “கற்றல் குறைபாடு!ன்னு கூடச் சொல்லலாம்!… இந்த மாதிரிப் பசங்களுக்கெல்லாம்… ஒரு அளவுக்கு மேலே படிப்பு ஏறாது சார்!… ஸ்பெஷல் டியூஷனெல்லாம் வெச்சுக் கசக்கிப் பிழிஞ்சாலும்… அதிக பட்சம்  “ஜஸ்ட் பாஸ்” ஆவாங்க!… ஸோ…பெரியவனோட கெப்பாஸிட்டி இவ்வளவுதான்!னு  தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு மேலே நாம எதிர்பார்த்தா அது நம்ம தப்பு!…” என்றார் பார்த்தசாரதி.

                 “சரிங்க… அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா?” கேட்டேன்.

                “விட்டுடலையே?… பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிட்டுத்தானே இருக்கேன்?… பாஸாகிற வரைக்கும் படிக்கட்டும்!… ஃபெயிலுன்னு ஆயிட்டா அத்தோட நிறுத்திட்டு… அவனுக்கு வேற  ஏற்பாடு பண்ணிக்கலாம்!னு நான் நினைச்சிட்டிருக்கேன்!” அதைக் கேட்டு, என் ஆசிரிய மனம் மௌனமாய் அழுதது.

       “சார்… அப்பாவான இப்படிப் பேசறது எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு சார்!.. நீங்க பெரியவனை கண்டுக்காம இருக்கறது… சரியில்லை சார்” என்றேன்.

      நான் மௌனம் சாதிக்க,

      “சார்… படிப்புல மட்டும் அவன் வீக் இல்லை!… டிசிப்ளின்  படுமோசம்!… காலைல எட்டு மணி வரைக்கும் தூங்குவான்!… “படிடா”ன்னா படிக்க மாட்டான்!… எப்பவும் வீடியோ கேம்ஸ்….. “சின்னவனைப் பாருடா ஆறு மணிக்கு எந்திரிச்சுப் படிக்கறான்!..”னு சொன்னா… என்னையே முறைக்கறான்!!… கொஞ்சம் கொஞ்சமாய் தறுதலை ஆயிட்டிருக்கான் சார்!… அதான் நான் கண்டுக்காம விட்டுட்டேன்” என்றார்.

       “சார்… நீங்கதான் அதையெல்லாம் சொல்லி ‘சரி’ பண்ணணும்” என்றேன் நான் விளக்கமாய்.

      “நீங்க ஆசிரியர்தானே?… அவனைக் கூப்பிட்டுப் பேசி… ஒரு நாள்…. ஒரே ஒருநாள்… காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சுப் படிக்கச் சொல்லுங்க பார்ப்போம்?….முடியாது …அவனை மாற்றவே முடியாது!”

                விவேக்கின் தந்தை பார்த்தசாரதி “சவால்”விடும் தொணியில் பேச ஆரம்பிக்க, அவருடன் வாக்குவாதத்தைத் தொடர விரும்பாத நான், “ஓ.கே…சார்!…நீங்க கிளம்புங்க!…” என்று சொல்லி வலுக்கட்டாயமாய் அவரை வழியனுப்பி வைத்தேன்.

       நீங்க ஆசிரியர்தானே?…அவனைக் கூப்பிட்டுப் பேசி…ஒரு நாள்….ஒரே ஒருநாள்…காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சுப் படிக்கச் சொல்லுங்க பார்ப்போம்!….முடியாது சார்!…அவனை மாற்றவே முடியாது!

                 அவர் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகள் காதுகளுக்குள் ரீங்காரமிட்டன. நீண்ட யோசனைக்குப் பின், ஆறாம் வகுப்பை நோக்கி நடந்து, வகுப்பாசிரியர் வெங்கிடாசலத்திடம் கோவிந்தைப்  பற்றி விசாரித்தேன்.

                “படிப்புத் திறமையெல்லாம் இருக்கு சார்!…  முறையாகச் செதுக்கினால் நல்லா வருவான்!… கொஞ்சம் விளையாட்டுப் புத்தி!.. அவனைக் கண்ட்ரோல் பண்றது சிரமம்!… பண்ணிட்டா…. பயல் சாதிச்சிடுவான்” என்றார்.

      அன்று மாலையே அந்த கோவிந்தை வரவழைத்தேன். “விவேக்கோட அண்ணன்தானே நீ?… ரொம்பக் குறும்பாமே?”  புன்முறுவலுடன் கேட்டேன்.

                தலையாட்டி மறுத்தான்.   “உங்கப்பா கிட்டப் பேசினேன்… அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்குமாம்…. சொன்னார்” பொய் சொன்னேன்.. 

      “இல்லை… அவருக்கு என்னைப் பிடிக்காது” என்றான். 

                “யாரு சொன்னது?” கேட்டேன்.

                “எனக்கே தெரியும்!”

                “எப்படித் தெரியும்?” .

      “.மாச மாசம் ஸ்கூலுக்கு வந்து உங்களைப் பார்த்து… என் தம்பி படிப்பைப் பத்தி மட்டும் விசாரிச்சிட்டுப் போறார்… எங்க கிளாஸ் டீச்சர் கிட்டே என்னைப் பத்தி விசாரிக்கறதும் இல்லை”  அவன் குரலில் கரகரப்பு.

      “நீ திறமைசாலி… அறிவாளி… உன் திறமை மேலே முழு நம்பிக்கை இருக்கு”ன்னு அர்த்தம்!…. நீ இயற்கையிலேயே புத்திசாலி!… தெனமும் படிக்கணும்ங்கற அவசியமே  இல்லை!…. கடைசி நேரத்துல… படிச்சு… எழுதினாலும் பாஸ் பண்ணிடுவே!ன்னு அவருக்குத் தெரியும்!… உன் மேலே ரொம்ப நம்பிக்கை!… உன்னைக் கண்டுக்காமல் விட்டாலும் நீ ஃபெயிலாக மாட்டே!ங்கற தைரியம்!…” என்றேன். 

                நான் சொல்வதை விழிகளை விரித்துக் கொண்டு கேட்டான் கோவிந்த்.

      “உன் தம்பி அப்படியில்லை!… அவனைக் கூர்ந்து கவனிக்கணும்!…இல்லேன்னா… பயல்  ஃபெயிலாயிடுவான்!…”.

      “சார்… நிஜமாவா சொல்றீங்க?” கேட்டான்.

      “உங்கப்பாவே என் கிட்டச் சொன்னார்!”

      கோவிந்தின் முகத்தில் ஒரு உற்சாகம்.

      “எப்பவுமே நீ பரிட்சை சமயத்துலதான் படிப்பியாமே?… நிஜமாவா?” கேட்டேன்.

      அவன் முகம் சுருங்கிப் போனது. “எதுக்குக் கேட்கறேன்னா?…. கடைசி நேரத்துல அரையும் குறையுமாய்ப் படிச்சே…. பாஸ் பண்ணிடறே!… அன்றைக்கு சொல்லித் தரும் பாடத்தை அன்றைக்கே படிச்சேன்னா நீ ஃபர்ஸ்ட் ரேங்க்  வாங்கிடுவே!” என்றேன் நான்.

      அவன் என்னைப் பார்க்க, “ஆமாம்ப்பா…. மொதல்ல கிளாஸ் ஃபர்ஸ்ட்… அப்புறம் ஸ்கூல் ஃபர்ஸ்ட்… அப்புறம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் கூட வரலாம்” எளிதாகச் சொன்னேன். அவன் சிந்திக்கத் தொடங்கினான். 

    “ஆமாம் சார்…இனிமேல் அன்றைய பாடத்தை அன்றைக்கே படிச்சு வெச்சுக்கறேன்!”

     அவன் சென்றதும், “பார்ப்போம்!… என்ன முடிவு வருது?ன்னு” எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

      இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆறாம் வகுப்பு ஆசிரியர் வெங்கிடாசலம் வந்து,  “சார் அந்த கோவிந்த் இந்த மாதம் முதல் ராங்க்!”  என்று சொல்ல மலைத்தேன். 

      மறுநாள் வந்திருந்த விவேக்கின் அப்பாவிடம் “சார்… சின்னவன் விவேக்… நாலாம் ராங்க்கிலிருந்த்… இரண்டாம் ராங்க்கிற்குப் போயிட்டான்!…” என்று சொல்ல, அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு  “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார்.

      “இரண்டாவது ராங்கிற்கே சந்தோஷப்படறீங்களே?… இதுவே முதல் ராங்க்கா இருந்தால்….. என்ன பண்ணுவீங்க?”

     “ஜங்கு…ஜங்கு”ன்னு குதிப்பேன்!…”என்றார்.

    “அப்பக் குதிங்க” என்றேன் நான்.

      “என்ன சார்?… “விவேக் ரெண்டாவது ராங்க்”ன்னு இப்பத்தான் சொன்னீங்க?” அவர் கேட்க, “சின்னவன் விவேக்தான் இரண்டாவது ராங்க்!… பெரியவன் கோவிந்த் முதல் ராங்க்” என்றேன்..

      “காமெடி பண்ணாதீங்க சார்!” என்றார் பார்த்தசாரதி,

      ஆறாம் வகுப்பாசிரியர் வெங்கிடாசலத்தை அழைத்து,, “இந்த மாசம் உங்க வகுப்புல ஃபர்ஸ்ட் ராங்க் யாரு சார்?” கேட்டேன்.

       “கோவிந்த்” என்றார்.

      “இவர்தான் கோவிந்தோட அப்பா… இவர் கிட்டே சொல்லுங்க”என்றேன்.

       வெங்கிடாசலம் சொல்ல, “எப்படி சார்?.. ஸ்பெஷல் டியூஷனெல்லாம் வெச்சே…. நாற்பதுக்கு மேலே போகாதவன்… எப்படி?… யார் காரணம்?” கேட்டார் பார்த்தசாரதி.

      “நீங்கதான் காரணம்” என்றேன் நான்.  “வாட்?…நானா?…” வாயைப் பிளந்தார்.

       “மாசாமாசம் வந்து சின்னவனைப் பற்றி மட்டும் விசாரிச்சிட்டு பெரியவனைக் கண்டுக்கலை!… அதுதான் அவனை முதல் ராங்க் ஸ்டூடண்ட் ஆக்கியிருக்கு” என்றேன்.   

        “புரியலையே?” என்றார் அவர்.

         விளக்கினேன். ஒரு நெகடிவ் அப்ரோச்சை நிறம் மாற்றி, பாஸிடிவ் அப்ரோச்சாய் மாற்றியதால் ஏற்பட்ட விளைவைச் சொன்னேன். “சார்…. “நம் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை!…அவற்றை பூக்களைப் போல் தூவினால் மாலை கிடைக்கும்!…மாறாக, கற்களைப் போல் வீசினால் காயங்கள்தான் கிடைக்கும்”… நீங்கள் கற்களைப் போல் வீசிய வார்த்தைகளை நான் பூக்களைப் போல் மாற்றினேன்!… உங்கள் மகன் கழுத்துக்கு மாலை கிடைத்தது. இனிமேலாவது தவறான முடிவுகளுக்கு அடிமையாகி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கெடுப்பதை நிறுத்திக்கங்க சார்!” நான் சொல்ல அவர் தலை குனிந்தார்.

     ஒரு ஆசிரியனாய் நான் தலை நிமிர்ந்தேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்வைக்குப் புரியாது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    காத்ரீன்… ப்யூட்டிஃபுல்… காத்ரீன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை