in ,

நெகிழிக்கனவு (சிறுகதை) – கோவை தீரா

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விசித்திரமான ஒரு கனவு கலைந்து எழுந்தான் சந்துரு. கை தடவி மேசை மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக்மடக்கென குடித்தான். மணி இரண்டரை என்று அலறிவிட்டு ஓய்ந்தது சுவர்க்கடிகாரம். வியர்த்தது.

எழுந்து ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தான். கனவை அசைபோட்டான். அந்தப் பெருநகரத்தின் காபிஷாப் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். சுற்றும் யாரும் இல்லை. வாகனங்களில்லாமல் சாலை வெறிச்சென்றிருந்தது. கடையிலும் ஆளில்லை.

ஆச்சரியமும் குழப்பமுமாக அவன் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அப்போது தான் எதிர்புற சாலையைக் கடந்து அவள் காப்பிஷாப்பை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

அவனைப்பார்த்து புன்னகைத்தபடி ‘ஹாய் சந்துரு’ என்றபடி எதிரே அமர்ந்தாள்.

அவன் ஆச்சரியமாக ‘நீங்க? என் பேர் எப்படி தெரியும்?’ என்றான்.

அவளைவிட அவள் உடை வித்தியாசமாக இருந்தது. நிறைய ப்ளாஸ்டிக் பொருட்களையும் நெகிழிப் பைகளையும் சேர்த்து தைக்கப்பட்ட கவுன் போன்ற உடை.! கைகளின் இருபுறமும் நெகிழிக்குப்பிகளை பூப்போன்ற வடிவத்தில் வெட்டி இணைத்து தைத்திருந்தது. வினோதமான கிரகத்திலிருந்து வந்த அழகியோ? 

‘சந்துரு! என்ன அடையாளம் தெரியலையா?’ நல்லாப்பாரு!’

‘என்ன சொல்கிறாள்?’ அவன் யோசிக்கையில் அவள் எழுந்து வந்து அவன் மடி மேலே அமர்ந்து அவனது கழுத்தை நெரித்தாள்.

சத்தம் எழுப்ப வழியின்றி முடிந்தமடடும் அவள் கைகளைத் தட்டிவிட முயன்றான். முடியவில்லை. அவள் இறுக்கினாள். கண்விழி பிதுங்கி மூச்சுமுட்டியது. பலமாக அவளைத் தள்ளிவிட்டு எழுந்தான். கனவு!  அப்படியே எழுந்து வந்து சோபாவில் படுத்து உறங்கிப் போனான். 

அடுத்தநாள் ஆபிஸிற்கு சென்றதும்  காபி பிரேக்கில் ராகவியை  காண்டீனிற்கு கூட்டிக் கொண்டு போய் கனவைப்பற்றி கூறினான். ராகவி அவனுடன் வேலை பார்ப்பவர !கல்லூரித்தோழி. அதைவிட அவள் அவனது நலம்விரும்பியும் கூட.. காதலற்ற ஆனால் அபரிமிதமான அன்பு அவளுக்கு சந்துருவிடம் இருந்தது. 

‘ஏய் லூசு! லேட்நைட் ஏதாவது ஏலியன் படம் பாத்துட்டு தூங்கினியாடா?’

அவன் பொய்யான கோபத்துடன் ‘கலாய்க்காத, நேத்து படம்லாம் பாக்கல. கொஞ்சமா சரக்கடிச்சுட்டு படுத்துட்டேன்.’ 

‘அதான்! ஓவரா சரக்கடிச்சா இப்படித்தான். மயக்கம் என்ன தனுஷ் மாதிரி ஆயிரும்’ சிரித்தாள்.

‘மறுபடியும் பாத்தியா? இந்த மாதிரிக்கனவு ரெண்டாவது தடவயா வருது ராகி, முதல்ல வந்தப்ப தியேட்டர்ல இதே ட்ரஸ்ஸோட வந்தா.. இந்த தடவ காஃபி ஷாப். அதுதான் வித்தியாசம். கழுத்தை நெரிக்கறது மட்டும் சேம்’ 

ராகவிக்கு லேசாக கவலையானது. இருந்தாலும் ‘ஒண்ணு பண்ணு! இன்னிக்கு ரூம் பாய்ஸோட சேர்ந்து சரக்குப்போடாம ஏதாவது புக் படிச்சுட்டு தூங்கப்போ. கனவு வருதான்னு பாப்போம்’ 

‘புக் படிக்கறதா? நானா? எந்தக் காலத்துல? சான்ஸே இல்ல’ 

‘அப்புறம் எதனால இந்தமாதிரி கனவு  ஏன் வருதுன்னு எப்டிறா தெரிஞ்சுக்கறது?’ 

‘தெரியல. போன வாரம் படத்துக்குப் போய்ட்டுவந்து படுத்த அன்னிக்குத்தான் வந்துச்சு. ஆனா அன்னைக்கு நான் குடிக்கவே இல்லயே’ 

என்னவாக இருக்கும்? யோசித்துக்கொண்டே நடந்தாள் ராகவி. சந்துருவும் நடந்தான். அடுதத சிலநாட்களுக்கு கனவு வரவில்லை.

சந்துரு அடுக்ககம் ஒன்றில் தனிஃப்ளாட்டில் கல்லூரி நண்பர்கள் இரண்டு பேருடன் தங்கியிருந்தான். மற்றவர்களுக்கு வேறுவேறு இடங்களில் வேலை. சந்துருவுக்கு சமையல் வராது. மற்றவர்களுக்கு சமைக்கப் பிடிக்காது. மூன்றுவேளையும் வெளியேதான்.

பல நாட்கள் சுவக்கி, சொமாட்டோ என்று போனது. பார்சல் சாப்பாட்டு வாழ்க்கை. ஃள்ளாட்டின் கிச்சனில் டீ போடும் பாத்திரத்தையும் நான்கு டம்ளரையும் தவிர பார்சல் வாங்கினவையும் மற்றுமாக நெகிழிக்குப்பை மலை போல சேர்ந்திருந்தது. யாரும் அப்புறப்படுத்தவோ கண்டுகொள்ளவோ இல்லை. 

அன்று நல்லமழை!  காரை மெதுவாக செலுத்திக்கொண்டே சாலையில் வந்து கொண்டிருந்தான் சந்துரு. அடுக்கத்தின் அடித்தளத்தில் காரை நிறுத்திவிட்டு, லிப்டில் ஏற, உள்ளே அவள்! அது! அந்த வேற்றுகிரக வாசி!

இம்முறை இரு கைகளிலும் பச்சைநிறப்பின்னணியில் ஏழு என்று வெள்ளைநிறத்தில் எழுதப்பட்ட ஒரு வடிவம் ஒட்டியிருந்து. சிரித்துக்கொண்டே நெருங்கினாள். அவன் லிப்டின் பொத்தானை பதற்றத்துடன் வேகமாக அமுக்கினான். அதற்குள் அவனை நெருங்கி லிப்டின் சுவரோடு சேர்த்துத் தள்ளி, அவன் கழுத்தை நெரிக்கலானாள்.

‘க்றீச்’ என்ற பலத்த சத்தத்துடன் கார் நின்றது. யாரோ திட்டுவது கேட்டது. பார்த்தான். சாலை நடுவே வலப்புறம் மேற்பாலத்துக்காக வளையும் இடத்தில் அவனையுமறியாமல் சடக்கென நிறுத்தியிருந்தான்.

வண்டி ஓட்டும்போது கனவு வந்திருக்கிறது. முந்தையநாள்  கனவைப்பற்றிய பயத்தில் சரியாகத் தூங்கவில்லை. இப்போது பெரிய விபத்தே நடந்திருக்கும். கடவுளே! பதைபதைப்புடன் காரை மெல்ல ஓட்டி அடுக்ககம் வந்தான்.

ராகவியிடம் தொலைபேச, அவள் அதிர்ந்து போனாள். ‘இன்னிக்கு எப்படியாவது சமாளிச்சுக்க. நாளைக்கு லீவ் போட்டுட்டு சைக்கியாட்ரிஸ்ட்ட போவோம், கண்டிப்பா போறோம்’

‘சரி! ‘ வைத்துவிட்டு, அறையைத் திறந்து நுழைந்தான்.

மற்றவர்கள் இன்னும் வரவில்லை. பாத்ரூம் போய்விட்டு உடை மாற்றி வந்தவனுக்கு ஒரு டீ சாப்பிடத் தோன்றியது. கிச்சனுக்குள் போய் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினான்.  டீத்தூள் பாட்டிலை தேடி எடுகக அதன் சிவந்த லேபிள் வண்ணம் எங்கோ பார்த்திருந்ததை நினைவூட்டியது.

அந்த கனவுப்பெண்! அவளது உடையில் இந்த வடிவம் இருந்தது. சட்டென தலையில் ஏதோ மின்ன நெகிழிக்குப்பைகள் கிடக்கும் இடத்திற்கு வந்தான்.

அந்தப்பெண்ணின் உடைகளில் கண்டவையெல்லாம் அங்கே பாட்டில்களாக, பைகளாக இருந்தன. பெரிய, பச்சை நிற பாட்டில் ஒன்று வெள்ளை நிறத்தில் ஏழு என்ற எழுத்துடன் கிடந்தது. நேற்றுக்குடித்த 7 அப் குப்பி! சந்துருவுக்குப் புரியத்தொடங்கியது. 

ராகவியை அழைக்க தொலைபேசியை எடுத்தான்.

எழுத்தாளர்  கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வதந்திகள் (சிறுகதை) – கோவை தீரா

    விடை (சிறுகதை) – கோவை தீரா