ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் பெற்று சிறந்து விளங்குபவர்கள் பலர் உண்டு.
உதாரணமாய்…
சாக்ரட்டீஸ் தன் அற்புத தத்துவங்களால் எல்லோரையும் ஈர்த்தார்,
மைக்கேல் ஜாக்ஸன் தனது சிறப்பான இசை…மற்றும் நடனத்தால் உலகில் பல கோடிப் பேரை தன் வயப்படுத்தினார்,
ப்ரூஸ்லீ தன் அதிவேக சண்டையால்,
அமிதாப் பச்சன் தன் அலட்டலில்லாத நடிப்பால்,
சிவாஜி கணேசன் தன் சிம்மக் குரலால்,
ரஜினிகாந்த் தன் அதிரடி ஸ்டைலால்…
இப்படி எத்தனையோ பேர் உண்டு. மற்ற எவரிடமும் இல்லாத எதோவொன்று அவர்களிடம் இருப்பதாய் உலகம் காணும் போது உள்ளங்கள் அவர் வசம் இழுபடுகின்றன. அதுதான் ஈர்ப்பு சக்தி, வசீகரம் (ஆங்கிலத்தில் CHARM). அச்சக்தியுடையோர் மக்கள் கூட்டத்தைத் தன் பால் திருப்ப முடியும், ஏன்…திருத்தவும் முடியும்.
அன்பால் வசீகரி:-
. ஆம்!…நீங்கள் வசீகரன் ஆக வேண்டுமென்றால், முதலில் உங்களிடமிருக்கும் “நான்… எனக்கு” என்கிற சுயநல குணத்தை விட்டு விட்டு பொது நல மனப்பான்மையை, அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையை, வளர்த்துக் கொள்ளல் மிக மிக அவசியம். சுய நல எண்ணம்தான் ஈர்ப்பு சக்திக்கு முதல் எதிரி எனலாம். அடுத்தவரிடம் அன்பு காட்டி, அவர்களுடைய உணர்வுகளை மதித்து., அவர்களைக் கௌரவித்து, கண்ணியப் படுத்திப் பாருங்கள். உங்களைச் சுற்றி வரும் நண்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். பொதுவாகவே, தங்களுடைய பேச்சைக் கேட்டு, தங்களுடைய விருப்பு வெறுப்புக்களை மதித்து நடக்கிறவர்களிடம் மக்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும், அன்னியோன்யமும் ஏற்படுவது இயல்பு. ஆக, இதுதான் சக மனிதனின் நெஞ்சைத் தொடுகின்ற ஒரு மனோரீதியான அணுகுமுறை. உதாரணமாக, ஒரு உணவு விடுதிக்கு சிற்றுண்டி அருந்தச் செல்கிறீர்கள். அங்கு பரிமாறும் பணியில் இருப்பவனிடம் கடுமையாகவோ, ஒருவித கண்டிப்புடனோ, விறைப்பாகவோ கட்டளையிடாமல், அடுத்த அடுப்பில் அவன் பெயரைக் கேட்டு, கொஞ்சம் தன்மையான குரலில் மென்மையாக உங்களது கட்டளையை இட்டுப் பாருங்கள், நீங்கள் வெளியேறும் வரை மிக சிரத்தையாக உங்களுக்கு சிரமேற் கொண்டு பணிபுரிவான். அப்போது மட்டுமல்ல, நீங்கள் அதே உணவு விடுதிக்கு எப்போது சென்றாலும் புன்னகைப்பான். உங்களால் வசீகரிக்கப்பட்டு அவன் உள்ளூர உங்களை ரசிப்பான். இம்முறையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களிடமிருக்கும் சின்னச் சின்ன குறைபாடுகள் கூட பெரிதுபடுத்தப்படாது மறைந்து விடும். உண்மையில் வசீகரம் என்பது அன்பு, அடக்கம், சாதூரியம், இரக்கம், பொறுமை, போன்றவைகளின் கூட்டுக் கலவையேயாகும்.
பாராட்டால் வசீகரி:-
மனித உறவுகள் சுமுகப்பட பாராட்டு ஒரு பாலமாகும். நீங்கள் கொடுக்கும் வேறெந்த வெகுமதியையும் விட பாராட்டே சிறந்ததாக கருதப்படும். பாராட்டுக்கும், முகஸ்துதிக்கும் சிறிய வேறுபாடுதான். முகஸ்துதி என்பது புகழ்ந்து கூறும் தன்மையே இல்லாத ஒன்றை, ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் புகழ்ந்து தள்ளுவது. அதே நேரம், பாரட்டு என்பது உண்மை உயர்வைத் தொட்டு விட்ட ஒரு செயலை மனமுவந்து…எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாது புகழ்வது. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் கொடுக்கப்பட்ட ஒரு பணியை நீங்கள் செவ்வனே செய்து முடிக்கையில் “வெல்டன் மிஸ்டர்!…கீப் இட் அப்” என்கிற ஒரு நாகரீகமான பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும் போது நீங்கள் அனுபவிப்பீர்களே ஒரு சுகம்…அந்தச் சுகத்தை நீங்கள் மற்றவர்களுக்கும் கொடுங்கள். நல்லவற்றை எங்கு கண்டாலும் மனம் விட்டுப் பாராட்டுங்கள். எந்த நிலையாயிருப்பினும் தயக்கமே வேண்டாம். உண்மையோடும், பெருந்தன்மையோடும், புன்முறுவலோடும், நீங்கள் பாராட்டும் போது உங்களுடைய வசீகரம் உங்களுக்கே தெரியாமல் பல மடங்கு அதிகரிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானவர்கள்தாம். அங்கீகாரம் பெறுகின்ற ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும். அந்த அங்கீகாரம் நேரடியாகக் கிடைக்கும் போது, அதை வழங்குகிறவர்கள் மீது அவருக்கு அலாதி பிரியம், கவர்ச்சி, அபிமானம், எல்லாமே ஏற்பட்டுவிடும். பாராட்டும் போது நீங்கள் வெளியிடுகின்ற வார்த்தைகள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவை. ஆம்!…அவை கேட்பவர்க்கு மட்டுமல்லாது, கொடுப்பவர்க்கும் பலனை…பலத்தை அளிப்பவை.
“HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE?” என்ற ஆங்கில நூலில் அதன் ஆசிரியர் “டேல் காரினிஜி” என்பவர் அழகாக ஒரு கருத்தைச் சொல்லுவார். அதாவது, “நிறைய நண்பர்கள் வேண்டும்..நிறைய மனிதர்களுடன் நல்ல உறவு வேண்டும்! என்று விரும்புபவர்கள் உடனே செய்ய வேண்டிய செயல் என்னவென்றால்…பிறரை பாராட்டுவதுதான்!” என்கிறார். ஆங்கிலத்தில ஒரு பழமொழி கூட உண்டு, “EVEN GOD IS PLEASED, WHEN PRAISED”, “பாராட்டப்படும் போது கடவுளாய் இருந்தால் கூட மகிழ்வார்” என்பதுதான் இதன் விளக்கம்.
அடுத்து, பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுங்கள். ஏனென்றால் பொதுப்படையாகப் பாராட்டும் போது அது ஒரு சம்பிரதாயமாகத்தான் தெரியுமே தவிர, சத்துடையதாய் இருக்காது. வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள். ஆக, நீங்களும் அவரைப் பொறுத்தவரையில் வசீகரர் ஆகி விடுகின்றீர்.
பேசவிட்டு வசீகரி:-
உண்மையில் எதிராளியைக் கவர்வதற்கான சரியான வழி…நீங்கள் பேசுவதல்ல. அவர்களைப் பேச விட்டு, அதை ஆர்வமுடன் கவனிப்பதுதான். ஒருவேளை எதிராளியின் பேச்சில் நீங்கள் சலிப்படைந்தால் கூட, அதைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் இருப்பதுவே நாகரீகம். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என மட்டுமே நினைக்காமல் அவர்களுடைய பேச்சை நீங்கள் கேளுங்கள். நீங்கள் ஆர்வத்துடன் கேட்கிறவர் என்று உணர்ந்தால் அதிராளி உங்களை முழுமையாக நம்பி, தன் மனதை நிச்சயம் திறப்பார். மொத்தத்தையும் உங்களிடம் கொட்டுவார். இடையில் அவ்வப்போது குறுக்கிட்டு சில பாராட்டு வார்த்தைகளையோ, ஊக்குவிப்புக்களையோ செய்யுங்கள். உங்களின் வசீகரம் வானளாவ உயரும்.
இறுதியாக, தன் மேல் நம்பிக்கையுள்ளவர்களால்தான் யாரையுமே வசீகரிக்க முடியும். நம்பிக்கையற்ற பேர்வழிகளை ஆங்கிலத்தில் “PESSIMIST” என்பர். அவர்களால் மக்களை வசீகரிக்க முடியாது. அவர்களுக்கு நல்லதில் நம்பிக்கை இருக்காது. தீமைகள் ஏற்படும், என்கிற சுபாவமேயிருக்கும். அதே நேரம், எல்லாம் நன்மைக்கே, என்று நம்புகிறவர்களை, எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவர்களை மக்கள் வெகுவாக விரும்புவர், வரவேற்பர். அவர்களைத்தான் ஆங்கிலத்தில் “OPTIMIST” என்பர். அவர்களுடைய கதவுகளும் என்றும் “OPTIMIST”-களுக்காகவே திறந்திருக்கும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings