“முஸ்தபா… முஸ்தபா… டோண்ட் வொரி முஸ்தபா!… காலம் நம் தோழன் முஸ்தபா!… டே பை டே… வாழ்க்கைப் பயணம் டே பை டே!… மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்!” என்ற ஒரு திரைப்படப் பாடல் சில வருடங்களுக்கு மிகப் பிரபலமாய் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். அந்த வரிகள் உண்மைதான், நட்பு என்பது மூழ்காத ஒரு கப்பல்தான்.
வாழ்க்கையில் நட்பு என்பது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடுமென ஒருவருடன் ஏற்படும் பழக்க உறவு. அது நல்ல புரிதலோடு, எதிர்பார்ப்புக்களைக் கடந்து நிலைப்படும் போது அங்கு அன்னியோன்யம் வளர்கின்றது. அன்பு… பாசம்… நேசம் என எல்லா உணர்வுகளும் மேலோங்கி வரும் போது அது உண்மையான நட்பாக மிளிர்ந்து காலம் கடந்து நிற்கின்றது. அக்கம் பக்கத்தார்களுடன், உடன் பயில்வோருடன், உடன் பணி புரிவோர்களுடன், இப்படி அன்றாடம் சந்திப்போருடன் நாம் கொள்ளும் நட்புறவு நமக்கே தெரியாமல் நம்முள் ஒரு பெரிய பலத்தை உண்டாக்கிவிடும், என்பதுதான் உண்மை. வள்ளுவர் கூட நட்பு நன்மையை மட்டுமல்ல…வலிமையையும் தரும் என்கிறார்.
பொதுவாகவே, நட்பு ஒத்த குணம், அல்லது ஒத்த பழக்கம் உள்ளவர்களிடையேதான் இயல்பாக மலரும். முரண்பட்ட கருத்து மற்றும் பழக்க வழக்கம் உள்ளோர் நட்பு மேலோட்டமாய் மட்டுமே இருக்கும். அங்கு புரிதலும் இருக்காது, உண்மையான அன்பும் இருக்காது. சுயநலமும், வறட்டு கௌரவுமே நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு, வேறு வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் ஏதாவதொரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக மட்டும் சிரித்துச் சிரித்துப் பேசி தாங்கள் இருவரும் மிகவும் நட்போடு இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், உள்மனத்தில் இதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் ஏதாவது கிட்டுமா? என்பதை மட்டுமே இருவரும் எண்ணிக் கொண்டிருப்பர்.
அதே நேரம், ஒத்த ஆர்வம் உள்ள இருவரின் நட்பு இருவருக்குமே இன்பத்தை அளிப்பதோடு இனிமையான மலரும் நினைவுகளைச் சேர்த்து வைக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலக்கிய ஆர்வம் உள்ள இருவர் பழக ஆரம்பித்து இலக்கியங்களைப் பற்றி தினமும் அளவளாவும் போது அவர்களின் இலக்கிய அறிவு மேம்படுவதோடு, நட்பும் இறுக்கமாகிக் கொண்டே போகும்.
சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு வளர்ச்சி, நட்பின் இன்னொரு பரிமாணத்தை இயல்பாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஃபேஸ் புக்… வாட்ஸ்அப்…. ட்விட்டர்… என சமூக வலைத்தளங்கள் நட்பின் புதுக் கோணத்தை நடைமுறைப் படுத்தியுள்ளன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக் கோரிக்கையை முன் வைத்து இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் குழுமிப் போராடியதற்கு மூல காரணமே இந்த சமூக வலைத் தள நட்புதான் என்பதை எல்லோரும் அறிவர். நேருக்கு நேர் முகத்தைக் கூடப் பார்த்திடாத போதும் வலைத்தள நட்பிற்கு மதிப்புக் கொடுத்துக் கூடிய அந்த இளைஞர்கள் இறுதியில் கோரிக்கையில் வெற்றியடைந்த நிகழ்வு உண்மையான… உறுதியான,… கைம்மாறு கருதாத நட்பு என்றுமே ஜெயிக்கும் என்பதற்கு மாபெரும் ஆதாரம்.
நட்பிற்கு இன்னொரு எதிர்மறை பரிமாணமும் உண்டு. அதுதான் கூடாநட்பு. “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று நம் முன்னோர் காலத்தில் ஒரு சொலவடையும் உண்டு. வள்ளுவப் பெருந்தகை எந்த அளவிற்கு உயர்ந்த நட்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரோ, அதே அளவிற்கு கூடா நட்பு பற்றியும் கூறியுள்ளார்.
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்”
சான்றோராய் விளங்கும் நண்பர்கள் கூட்டத்துள், சான்றாண்மை சிறிதும் இல்லாத பேதை புகுதல் ஒருவர் தூய்மை இல்லாதவற்றை மிதிதும் கழுவாத காலை படுக்கையில் வைத்தற் போன்றது, என்கிறார்.
மேலும், கூடா நட்பை எப்படி இனங் கண்டு கொள்வது?…அதை எங்ஙனம் உதறித் தள்ளுவது?…அது பகையாக மாறி விடாமல் எப்படிக் காத்துக் கொள்வது? என்பதையும் வள்ளுவர் அழகாகவும், ஆழமாகவும், தெளிவாகவும் சொல்லியுள்ளார்.
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்”
அதாவது, அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில் மட்டும் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியாக நகைக்கும் தன்மையுடையோர் நட்பை விட பகைவரால் வருவன பத்துக் கோடி நன்மையாகும் என்கிறார். மேலே கூறப்பட்ட அரசியல்வாதிகளின் நட்பே இதற்கு உதாரணம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தற்காலத் திருமண வரவேற்பு நிகழ்வுகளில் மேடையில் உள்ள மணமக்களுக்கு வரிசையாகச் சென்று வாழ்த்துச் சொல்லி, பரிசுப் பொருளைக் கொடுத்து, நாகரீகமாய்ப் புன்னகைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் மனிதர்களைக் காண்கின்றோம். அந்தப் புன்னகைகளில் எத்தனை புன்னகை உண்மையான புன்னகை?… எத்தனை புன்னகை போலித்தனமான… வேஷப் புன்னகை என்பதை ஆராய்ந்து பார்த்தால் மனம் வெறுப்பில் ஆழ்ந்து போகும்.
உயர்ந்தவர்… தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டினை மறந்து, ஏழை… பணக்காரர் என்கிற வேறுபாட்டினைத் துறந்து, தன்னலமில்லாது, விட்டுக் கொடுக்கும் பெருங் குணத்தோடு, மிளிரும் நட்பே “உயர் நட்பு”.
“குடி பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும்!”
உயர்ந்த, தகுதியான குடும்பத்தில் பிறந்து, தனக்குப் பழி பாவம் வராமல் இருக்க வேண்டும் என்று அஞ்சுகிற மனம் உடையவரை பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நட்பு என்பது மனம் அறிவது, உள்ளம் உணர்வது. அந்த நட்பு நம் மனத்தை வருடி, உற்சாகத்தைத் தந்து நீங்காது இடம் பெற வேண்டும். நம் வலிகளுக்கு அது மருந்தாகவும், நம் துயரங்களுக்கு அது சுமைதாங்கியாகவும், நம் குழப்பங்களுக்கு அமைதிச் சூத்திரமாகவும் இருக்க வேண்டும். உண்மையான நட்பின் பலன் இதுதான்.
கோடிக் கணக்கில் சொத்து சேர்த்திருந்தாலும் உண்மையான நட்புடையோரை உடன் வைத்திருந்தால் மட்டுமே பிறவிப் பெருங்கடலை மகிழ்வோடு நீந்திக் கடக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது பிறர் மீது அக்கறை காட்டுவதுதான். நாம் பிறர் மீது காட்டும் அக்கறை மட்டுமே நமக்கு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துத் தரும். இல்லாவிட்டால், நாம் வைத்திருக்கும் காசு பணத்திற்காக மட்டுமே நம்மை வளைய வரும் கூட்டத்தின் மத்தியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings