in ,

நரகமும் இன்பமாகும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

இயற்கை மனித இனத்திற்கு எத்தனையோ அற்புதமான அருட்கொடைகளை வழங்கியுள்ளது.  அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று  “கற்பனை”.   பலருக்கு அதுவே வெற்றிக்கான ஏணி.  சிலருக்கு அதுவே வீழ்ச்சிக்கான காரணி. 

தேசிய விருதினை ஒரு திரைப்படம் பெறுகின்றது என்றால் அது அந்த இயக்குனரின் கற்பனைத் திறன்.  ஒரு எழுத்தாளன் எழுதிய நூலுக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகின்றது என்றால் அது அந்தப் படைப்பாளின் கற்பனை வளம்.  ஆக, கற்பனை என்பது மனத்தின் ஓர் அடுக்கு.  அந்த அடுக்கிலிருந்து விரியும் எண்ணங்கள் சில நேரங்களில் பலரது எதிர்காலத்தையே செதுக்கும் வல்லமை கொண்டவைகளாய்த் திகழுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். 

             ஒரு வாளிக்குள் நீரைக் கொட்டி, சிறிது சோப்புத் தூளைப் போட்டால் லேசாய் நுரை தெரியுமே தவிர, பொங்கி வராது. அதே நேரம், நாம் கைகளை அதற்குள் விட்டுக் கலக்க நுரையின் அளவு அதிகரிக்கும்,  நாம் கலக்கும் வேகத்தையும் நேரத்தையும் கூட்டக் கூட்ட நுரை பொங்கிப் பொங்கி அந்த வாளியே நிறைந்து வெளியே வடியும்.  அது போலத்தான் நம் கற்பனையும், ஆரம்பத்தில் சிறு பொறியாய்த் தோன்றும் ஒரு எண்ணத்தை நாம் திரும்பத் திரும்ப அசை போட அசை போட அதன் வடிவம் மாறும்,  அதன் அழகு அதிகரிக்கும்,  அதன் பல்வேறு பரிமானங்கள் அடையாளம் பெறும்.  இறுதியில், அது ஒரு நல்ல ஆழ் மனப்பதிவாய் நமது மனதிற்குள் ஒட்டிக் கொண்டு, ஒரு வழிகாட்டலாய் மாறும்.  அந்த வழி காட்டலை நேர் மறையாக்கி, ஒரு லட்சியத்தை நோக்கிச் செலுத்தும் போது வெற்றி நம்மைத் தேடி வரும்.  மேலே கூறப்பட்ட திரைப்பட இயக்குனரும், எழுத்தாளரும் விருதுகளைக் குவிக்கும் வரலாறு இதுதான். 

              இன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்னும் கலை சகல துறைகளிலும் ஊடுருவியிருப்பது மறுக்க இயலாதவொன்று. இந்தக் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்ற பாடங்களைப் போல் ஒரு ஃபார்முலாவைப் படித்து, அதைப் பயன்படுத்துவது போல் அல்ல.  இங்கு கற்பனைத் திறன் கொண்ட ஒருவனால் மட்டுமே ஜெயிக்க முடியும்.  நண்பரொருவர் திருமணம் மற்றும் இதர விசேஷ நிகழ்ச்சிகளில் வீடியோ எடுக்கும் வீடியோ கிராபர்.  ஒவ்வொரு முறையும் அவர் தான் எடுத்த திருமண வீடியோவை சம்மந்தப்பட்டோருக்கு அனுப்பும் முன், என்னிடம் போட்டுக் காட்டுவார்.  அதில் அவரது கற்பனைத் திறன் மிளிரும்.  “இப்படியெல்லாம் கூட ஒரு திருமண வீடியோவைத் தயாரிக்க முடியுமா?” என்று நான் வியக்கும் வண்ணம் தயாரித்திருப்பார்.  இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால்,  ஒரு திருமண வீடியோ போல் இன்னொன்று இருக்காது.  ஒவ்வொரு முறையும் புதுப் புது கற்பனைகளை பொதித்திருப்பார். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவரது கற்பனைத்திறனே அவரது வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

              நவீன உலகில் மனிதன் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து அறிவியல் ஆக்கங்களுமே, என்றோ ஒரு நாள், எங்கோ ஒருத்தன் தன் கற்பனையில் கண்டதாகத்தான் இருக்கும். எந்த அளவுகோலுக்குள்ளும் அடங்காத ஜல்லிக்கட்டுக் காளையாக கற்பனை இருப்பதனால்தான் நிகழ்காலப் புதிரை எதிர்காலத்தில் சாதிக்க வைக்கின்றது.

            ஆக்கப்பூர்வமான கற்பனைகளின் ஆச்சரியமான வெற்றிகளைப் பார்த்தோம்.  பொதுவாகவே உலகில் எல்லா நிலைகளிலும் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கும்.  மேடு என்றால் பள்ளமிருக்கும்.  வெளிச்சம் என்றால் இருளிருக்கும்.  நெகடிவ் என்றால் பாஸிட்டிவ் இருக்கும்.  கற்பனையிலும் அனாவசியக் கற்பனை என்று ஒன்றுண்டு.   இதை ஒரு நோய் என்றே கூறலாம்.  இந்த அனாவசியக் கற்பனைகள் மனித வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், தோல்விகளுக்கும் காரணமாய் அமைந்து விடும் அவலத்தை சம்மந்தப்பட்ட மனிதன் கடும் சோதனைகளை அனுபவித்த பிறகே உணர்வான். 

           சரி, அனாவசியக் கற்பனைகள் ஏன் தோன்றுகின்றன?…என்பதை ஆராய்ந்து பார்த்தால், ஒரு விஷயத்தைப் பற்றி நாம் எதிர்மறையாக எண்ணும் போதுதான் அனாவசியக் கற்பனைகள் புறப்பட்டு விடுகின்றன என்பது புரிய வரும்.  சிலர், சாதாரண நெஞ்சு வலியைக் கூட “ஹார்ட் அட்டாக்” என்றும், வயிற்று வலியை “கிட்னி ஃபெயிலியர்” என்றும், சிறிய தலைசுற்றலை “ஹை-பிரஷ்ஷர்” என்றும், இன்னும் ஏதேதோவெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர். அந்த மன அழுத்தமே அவர்களுடைய சரீரத்திற்கு கேடு விளைவித்துவிடும் என்பதை உணர்வதேயில்லை.

            எல்லாவற்றிற்கும் மேல் “விபரீதக் கற்பனை” என்று ஒன்றும் உண்டு.  சமீபத்தில் ஒரு தோழியோடு சென்னை நிகழ்ச்சியொன்றிற்கு சென்றிருந்தேன்.  இரவு ரெயிலில், ரிசர்வ் செய்யப்பட்ட பெர்த்தில், சுகமான பயணம்.  மறுநாள் காலை சென்னையில் இறங்கியதும், தோழியிடம் கேட்டேன். “என்னம்மா நல்லா தூங்கினியா?” என்று.  “க்கும்… ஒரு நிமிஷம் கூடத் தூங்கலை” என்றாள். காரணம் கேட்டேன்.

            “மேலே பெர்த்தில் படுத்திருக்கும் போது…ரயிலின் ஓட்டத்தில் திடீரென்று ரொம்ப அதிகமாய்  “தட…தடா! தட…தடா” சத்தம் கேட்டால், ரயில்… தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு நிலத்தில் ஓடுவதாய் நினைத்து பயப்படுவேன்!… சில நேரங்களில் எந்த சத்தமுமே இல்லாமல் பூப்போல் ஓடினால், பாலத்திலிருந்து கீழே ஆற்றில் விழுந்து ஆற்று நீரில் மிதப்பதாய் நினைத்துக் கொள்வேன்…. அவ்வப்போது ஏதாவதொரு ஸ்டேஷனைத் தாண்டும் போது நிறைய புகை வாடையடிக்கும்… அப்போதெல்லாம் பக்கத்து கேரேஜில் தீப்பிடித்து விட்டதாகவும்… விரைவில் நம்ம பெட்டிக்கும் வரக் கூடும்!” என்றும் நினைத்துக் கொண்டு படுத்திருப்பேன்!” என்றாள்.  எனக்கு அவளைப் பார்த்து சிரிப்பதா?…அழுவதா?…என்றே புரியவில்லை.  அந்த ஒரு இரவு தூங்காததால் அவள் மறுநாள் நிகழ்ச்சி முழுவதிலும் அந்த தோழி சொதப்பியதற்க்குக் காரணம்…“விபரீதக் கற்பனை”யே.

             முடிவாய், அனாவசியமான…. ஆதாரங்களற்ற…விபரீதக் கற்பனைகள் ஒருவன் மனத்தில் நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டால், சொர்க்கத்திற்கே அவனைக் கொண்டு போய் இறக்கினாலும் அங்கு சுகங்களை அனுபவிக்காமல் துன்பங்களையே அனுபவிப்பான்.  அதே நேரம், ஆக்கப்பூர்வமான… அற்புத வழிகாட்டுதலுடன் கூடிய கற்பனைகள் ஒருவன் மனதில் நிறைந்து விட்டால் அவனைக் கொண்டு போய் நரகத்தில் தள்ளினாலும், அங்கும் இன்பத்தையே காண்பான்.  ஏனென்றால், கற்பனை என்பது ஒளிந்திருக்கும் உண்மை.  அதற்கு விடுதலை கொடுத்தால் வெற்றியைக் காணலாம்.  சரி, எப்படி விடை கொடுப்பது?

             உளவியல் அறிஞர்கள் கூறுவது போல் கற்பனையை “VISUALIZE”  செய்து பார்க்க வேண்டும்.  அதாவது பாஸிட்டிவ் கற்பனைகளை அடைந்தே விட்டதாய் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.  தினமும் செய்து பார்க்க வேண்டும்.  உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டோடு செய்து பார்க்க வேண்டும்.  ஒரு இண்டர்வியூவிற்குப் போகும் போதே வேலை கிடைத்து, பணியில் சேர்ந்து, அலுவலகத்திற்குச் செல்வதை கற்பனையில் பார்க்க வேண்டும். 

             ஆம்!… கற்பனை இல்லாத மனிதன் நம்பிக்கை இல்லா மனிதனாகத்தான் இருப்பான்.  நம்பிக்கை இருந்தால்தானே கற்பனையே வரும்..கற்பனை வந்தால்தானே காட்சிப் படுத்திப் பார்க்க முடியும்.  தினமும் காட்சிப்படுத்திப் பார்த்தால்தானே அந்தக் காட்சியை நிஜமாக்க முடியும்.

            “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்!…. பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!… பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்!… கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்!… காட்சி கிடைத்தால் கவலை தீரும்!… கவலை தீர்ந்தால் வாழலாம்!” இது கவிஞனின் கற்பனை வரிகள்.  இதைப் புரிந்து கொண்டால் எல்லோர்க்கும் இந்த வரிகள் வெற்றியின் விதைகள்.

  (முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புன்னகையும் ஒரு மூலதனமே (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    ஒப்பீடு என்னும் தப்பீடு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்