in ,

நம்மாலன்றி யாரால் முடியும்? (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

முன்னோக்கி நடப்பது… நடந்து கொண்டே இருப்பது!

அதாவது, வாழ்ந்து கொண்டே வளருவது!… வளர்ந்து கொண்டே வாழுவது!

வளர்ச்சி என்பது இங்கு வெறும் உடல் முதிர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல!.. வாழ்வில் எழுச்சி பெறுதல், முன்னேற்றமான நிலையை எட்டிப் பிடித்தல், சாமான்யனாய் இருந்து சாதனையாளனாக மாறுதல், போன்ற வளர்ச்சிகளைக் குறிப்பதாகும்.

“வந்தான்… வாழ்ந்தான்… மடிந்தான்” என்கிற சாதாரண… சராசரி வாழ்க்கை அறிவுடையோர்க்கு அழகல்ல!… இயற்கையாகவே நமக்குள் பல அரிய சக்திகள் புதைந்து கிடக்கின்றன, ஆற்றல்கள் மறைந்து இருக்கின்றன, அறிவுப்பூர்வமான சிந்தனைகள் உள்ளார்ந்திருக்கின்றன.  

அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து “முயற்சித்துப் பார்ப்போம்” என்று முனைபவர்களே மனிதர்கள். “நம்மால் அன்றி யாரால் முடியும்” என்று நம்பிக்கையுடன் இறங்குபவர்களே ஆண்மையாளர்கள். “வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும்!… செயலில் ஈடுபட்டோம்!… கடமையை நிறைவேற்றி விட்டோம்!” என்கிற எண்ணத்தில் மகிழ்ச்சி காண்பவர்களே உண்மையான இலட்சியவாதிகள்.

எந்தச் செயலையும் சிந்திக்கும் போதே, “இது நம்மால் முடியுமா?.. ம்ஹூம்!… நிச்சயம் முடியாது!” என்று பின்னோக்கி நடப்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு உகந்ததல்ல.  அது அவன் பலமல்ல… பலவீனம். சிறந்த நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரமே அச்சமின்றி சிந்திக்க முடியும், சிந்தித்ததை செயல்படுத்த முடியும், செயல்பாட்டை வெற்றியாக்க முடியும், வெற்றியை நிலைப்படுத்த முடியும், நிலைப்பாட்டினை நீட்டிக்க முடியும்.

நம்பிக்கையைத் தொலைத்தவர்கள் பலவீனர்கள். அவர்களால் ஆசைப்படத்தான் முடியுமே தவிர, ஆசையை அரங்கேற்றிக் கொள்ள முடியாது.  வெற்றியைத் தொடக்கூட முடியாது. சாதனையைச் சந்திக்க முடியாது.

நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டியிருக்கின்றது?… நம் வாழ்க்கை எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்கிற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும்.  

பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் அரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத, செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிக குறையும்.

ஒரு நாளை… ஒரு வாரத்தை… ஒரு மாதத்தை… ஒரு வருடத்தை…மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இதனை சாதிக்க வேண்டும், என்று திட்டமிடுங்கள். செயல் படுங்கள்.  உங்கள் திட்டம் முழுக்க முழுக்க உங்கள் எண்ணப்படியே நிறைவேறும் என்று எதிர்பார்ப்பது கூட ஒரு விதத்தில் தவறானதே. ஏனென்றால், நீங்கள் நினைத்திராத எத்தனையோ தடைகளும், இடர் பாடுகளும் வரும்.  

அதன் காரணமாய் திட்டமே வேண்டாம்!… என்று முடிவு கட்டி விடக்கூடாது. தடைகளைத் தாண்ட வேண்டும்!… சூழ்நிலைகளை மாற்ற வேண்டும்!… அப்போதுதான் வெற்றி கிட்டும்.  இயற்கையாகவே, திட்டமிட்டு செய்யப்படும் எல்லா செயல்களும் 100 சதவீத வெற்றியைத் தராமல் போனாலும், குறைந்த பட்சம் 60 சதவீத வெற்றியையாவது தந்தே தீரும்.

ஆனால், திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நிச்சயமல்ல. அதேபோல், திட்டமிட்டுச் செயல்படும் போது எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவிற்கு கிடைக்காவிட்டாலும், கண்டிப்பாக தீமைகள் விளைய வாய்ப்பேயில்லை.  ஆனால், திட்டமேயில்லாத வாழ்க்கையில் தீமைகளே அதிகம் விளையும்.

வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள், அவ்வாறு செய்வீர்களானால் பிற்பாடு நீங்கள் எந்த நிலையிலும்… எதற்கும்.. வருத்தப் பட வேண்டிய அவசியமேயிருக்காது.

அடுத்து, “பலம்”. “பலம்” என்றால் என்ன? வெறும் உடல் பலம் மட்டும் பலமா?… இல்லை!

அதனுள்ளே உள்ள “மனபலம்”தான் உண்மையான பலம். மனபலம் உள்ளவர்களிடம் அச்சமில்லாத… தெளிவான சிந்தனை இருக்கும். திட்டமிட்ட செயல்பாடு இருக்கும். சலிப்படையாத விடா முயற்சி இருக்கும்.  இவர்கள் இந்த உலகத்தை தமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டு, எண்ணியதை முடிக்கும் திண்ணியராய் வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஆகவே!… நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த நோக்கத்தை நோக்கியே தினமும் நமது முழு பலத்தையும்… முழு மனத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  நம் இலட்சியத்திற்காக முயன்று தோற்றாலும் பரவாயில்லை.  ஒரு செயலில் ஈடுபடாது இருப்பதை காட்டிலும் ஈடுபட்டுத் தோற்றுப் போவது கூட வீரம்தான்.

நம்மில் பலர் தங்கள் திறமைத் தாங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு, ஒரு சூன்ய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குறுகிய வட்டத்திற்குள் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு கிடப்பதுதான் இம்மனிதர்களின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போய் விடுகின்றனர்.  

நம்முடைய திறமைகளை நாம் வெளிப்படுத்தா விட்டால், நாம் திறமைகள் பெற்றுப் பயனேதும் இல்லை.  இங்கு வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதைக் கண்டறிந்து, சரியாகப் பயன்படுத்துவதே ஆகும்.

உயர்ந்த சாதனையாளர்கள் எல்லோரும் தற்காலிகமாக ஏற்படும் தடைகளையெல்லாம் தயங்காமல்… தடுமாறாமல்… தாண்டி வந்தவர்கள்தாம்.  எப்படி அவர்கள் மட்டும் தம் திறமைகளை சாமார்த்தியமாகக் கண்க்கிடுகின்றனர்?…. அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கின்றனர்?.. செயல்பாட்டின் போது கூட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர்?, என்பதை தீர்க்கமாக யோசித்துப் பார்த்தால்… அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் லட்சியத்தின் மீது கொண்டு விட்ட தீவிர பற்றுதான் என்பது புலப்படும். 

ஆம்!.. இலட்சியமே ஒருவரை சாதாரணமானவராயிருந்தாலும்… பெரும் வலிமையுள்ளவராய் மாற்றி விடும்.

எப்படி நீங்கள் இந்த உலகத்தை அணுகுகிறீர்களோ அப்படியேதான் உலகம் விடியும்.

நம்மால் அன்றி யாரால் முடியும்?              

நம்பிக்கை கொள்!… எதுவும் முடியும்!… எளிதில் முடியும்!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கொஞ்சம் காமெடியும் வேணும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    வேண்டாத அன்பளிப்பு! (சிறுகதை) – இரஜகை நிலவன்