in ,

தவறவிட்ட பர்ஸ் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்றுதான் பணம் கட்ட கடைசி நாள். சாயங்காலத்துக்குள் பீஸை கட்டி ஹால் டிக்கட்டை வாங்கிக் கொள்ள வேண்டும், மறுநாள் பரீட்சை ஆரம்பிக்கிறது.

காலையில், அம்மாவிடம் மறுபடியும் நினைவூட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்பிப் போனாள் மஞ்சு. மாலாவும் சாயங்காலத்திற்குள் வந்து பணத்தை கட்டிவிடுவதாக அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பியிருந்தாள்.

கையிலிருந்த பணத்துடன், அக்கம் பக்கம் அங்கே இங்கே என்று கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கி ஆறாயிரம் ரூபாயாக எடுத்து பர்ஸுக்குள் வைத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினாள், மாலா. எச்சரிக்கையாக மொபெட்டின் முன்பக்க வளைப்பெட்டிக்குள் வைத்த பர்ஸை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அதற்குள் தானே பணமும்  பணம் கட்டச் சொல்லி வந்த லெட்டரும் வைத்திருந்தாள்.

மூன்று மாதங்களாக பெய்த மழையால் உண்டான மேடு பள்ளங்களும் காண்ட்ராக்டர்கள பறித்த குழிகளும் அவளை சோதித்தன. கடந்த மூன்று நாட்களும் வேறு தொடர்ந்து மழை. ரோடெல்லாம் ஆங்காகாங்கே பள்ளத்தாக்குகள் போலவும், சிறுசிறு ஏரிகள் குளங்கள் போலவும் தண்ணீர் தேங்கிக் கிடந்தன. அதனால் பள்ளத்தில் மொபட்டை விட்டுவிடாமல் ரொம்பவும் சிரமப்பட்டு ஓட்டினாள்.  

அப்படி பார்த்துப் பார்த்து ஓட்டியும் ஒரு பள்ளத்தில் டங்கென்று சக்கரத்தை விட்டு,  குடை சாய இருந்த மொபெட்டை சாமர்த்தியமாய் தாங்கிப் பிடித்து… நின்று… நிதானித்து… நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தவள்… மேற்கொண்டு யோசித்து… நிதானித்து… சாதுர்யாமாய் மொபெட்டை ஓட்டினாள்.

திடீரென்று ஒரு சந்தேகம். வண்டியின் முன்பக்க வளைப்பெட்டிக்குள் வைத்திருந்த பர்ஸை கவனிக்காமலேயே வந்துவிட்டோமே என்று. பார்த்தாள். பகீர் என்றது. திடீரென்று பர்ஸைக் காணவில்லை.

‘ ஐயோ… ‘ என்று அலறியே விட்டாள். மொபட்டை அப்படியே ஓரம் கட்டியும் விட்டாள்.

‘கடவுளே… பர்ஸ் எப்படி காணாமப் போச்சு…‘ பதறிக்கொண்டு மறுபடியும் நன்றாக கை விட்டுத் தேடினாள். அது பேப்பர்கள் வைத்துக்கொள்ளும் கம்பிவளையிலான திறந்தவெளிப் பெட்டி.

‘வண்டி குலுங்கும்போது எங்கேயாவது விழுந்திருக்குமோ… ஐயோ கடவுளே… இன்னிக்கு பணம் கட்டலைனா நாளைக்கு புள்ளைக்கு பரிச்சை எழுதாமப் போயிடுமே… ‘ தவிப்புடன் பின்பக்கம் திரும்பி, தான் வந்த பாதையைப் பார்த்தாள்.

‘பர்ஸ் எங்கே விழுந்ததோ தெரியவில்லையே… ‘ கைகளை பிசைந்தாள்.

யாராவது வண்டியிலிருந்து பர்ஸ் கீழே விழும்போது பார்த்திருந்து எடுத்து இவளிடம் கொடுக்கலாம் என்று ஓடோடி வருவார்களோ என்றும் ஒரு நைப்பாசை.  கண்களால் ரோடை அலசினாள். அப்படி யாரும் ஓடியும் வரவில்லை. பயம் வந்து கண்களை இருள்போல் சூழ்ந்தது.

‘அய்யோ… பாப்பா பரிச்சை எழுதனுமே… ‘ வேண்டிக்கொண்டே மொபெட்டை அப்படியே வந்த பாதையில் திருப்பினாள்.

யோசனை ஓடியது. ‘அந்தக் குழில வண்டி தடுமாறி விழ இருந்து சாமர்த்தியமா பேலேன்ஸ் பண்ணினோமே… அங்கேயேதும் விழுந்திருக்குமோ… ‘

புலம்பிக்கொண்டே மொபெட்டை விரட்டினாள். ரோடின் முன்பக்கம் பார்த்துக்கொண்டும், அடிக்கடி பக்கவாட்டிலும் பார்த்துக்கொண்டும் வேகத்தைக் குறைத்து ஓட்டினாள். அந்த குழியையும் தாண்டி ரொம்ப தூரம் வந்தும் விட்டாள். ஆனாலும் பர்ஸைக் காணவில்லை. இப்போது நெஞ்சு பலமடங்காக அடித்துக் கொண்டது.

‘கடவுளே… ‘

மொபெட்டை நிறுத்திவிட்டு யோசித்தாள். உடனே அதே வழியில் மறுபடியும் வந்தாள். ரோடின் இருமருங்கிலும் பார்த்துக்கொண்டேயும் வந்தாள், யாராவது கையில் அவளது பர்ஸுடன் தெரிகிறார்களா என்று.  பர்ஸை எடுத்தவர்கள் அவளைக் கண்டதும் கையை ஆட்டக் கூடுமல்லவா…

நோட்டமிட்டுக்கொண்டே கொஞ்ச தூரம் வந்ததும் மொபெட்டை நிறுத்திக் கொண்டாள். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. புரியவுமில்லை.

‘இன்றைக்கு பணம் கட்டியாகவேண்டுமே…. இல்லாவிட்டால் ஹால்டிக்கட் தர மாட்டார்களே… ‘

கவிதா அக்காவிடம் ஆயிரம் வாங்கினாள். முருகேசன் ஐநூறு கொடுத்தான். செந்தாமரை ஆயிரத்தைநூறு கொடுத்தாள். எப்போதுமே இல்லை என்று சொல்லும் சுமதி கூட குழந்தையின் பரிட்சைக்கு என்றதும் ஆயிரம் ரூபாயை மறுபேச்சு இல்லாமல் எடுத்துக் கொடுத்தாள். இப்போது மறுபடியும் யாரிடம் போய் பணம் கேட்பது.

‘கடவுளே… என் புள்ளை நாளைக்கு பரிச்சை எழுத வேண்டுமே… காப்பாத்து… ‘

ரொம்ப நேரம் நின்றபடியே யோசித்துவிட்டு வேறு வழி எதுவும் புரியாமல் மொபெட்டை வீட்டுக்குத் திருப்பினாள்.

‘வெறும் கையுடன் பள்ளிக்கூடத்துக்குப் போய் என்ன பிரயோஜனம்…  ‘

என்ன செய்யலாம். இனி யாரிடமும் கேட்கமுடியாது. இருந்த காசும் போச்சு. யோசனை ஓடியது.

சட்டென வீட்டில் இருந்த தங்கச்சங்கிலியின் ஞாபகம் வந்தது. யாரிடமாவது கொடுத்து கடன் வாங்கலாமா… யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தவள், அவசர அவசரமாய் சங்கிலியை எடுத்து பொட்டலமாக கட்டினாள். யோசனை மாற, பேப்பரை தூக்கி எறிந்து விட்டு சங்கிலியை அப்படியே கழுத்தில் போட்டுக்கொண்டாள்.  அதையும் தொலைத்து விட்டு அப்புறம் என்ன பண்ணுவது.

நான்கு தெருக்கள் தள்ளி அடமானத்தின் பேரில் கடன் கொடுக்கும் முத்துமணி இருக்கிறாள். அவளைத்தான் தேடிப் போனாள். இவளது துரதிருஷ்டம் அவள் வீட்டில் இல்லை. நான்கு மணி போலத்தான் வருவாள் என்று தகவல் சொன்னார்கள். களைப்புடன் வீட்டுக்கு திரும்பி வந்தவள் கவலையும் அசதியும் அழுத்த அப்படியே  படுத்து விட்டாள்.

சாதாரணாமாக படுத்தால் உடனே தூங்கிவிடுபவள். இப்போது கொட்ட கொட்ட விழித்துக் கிடந்தாள். மண்டை காய்ந்தது. பணம் கட்டவேண்டுமே.

‘அம்மா… வந்து பணம் கட்டிடுவேதானே… ‘ மஞ்சு கண்களுக்குள் நுழைந்து கேட்பது போல இருந்தது.

‘வந்துர்றேண்டி செல்லம்… சங்கிலி இருக்கில்ல… அடமானம் வச்சாவது பணத்தோட வந்துடறேன்… ‘ முனகிக்கொண்டாள்.

மணி மூன்றரை ஆனதோ இல்லையோ எழுந்து ஓடினாள். முத்துமணி வீட்டில் இருந்தாள். விவரத்தை சுருங்கச் சொல்லி சங்கிலியை எடுத்து நீட்டினாள்.  உடனே ஆறாயிரத்தை எடுத்து கொடுத்தாள், முத்துமணி.

பணம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த லெட்டர்…? பரவாயில்லை, மஞ்சு, ஏழாவது பி செக்ஷன் என்று சொன்னால் ஆயிற்று. பணத்தை இப்போது ஜாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு ரூட்டை மாற்றி மொபெட்டை விரட்டினாள்.

ஸ்கூல் ஆபீஸுக்குள் பதற்றத்துடன் நுழைந்தவளை டேபிளுக்கு பின்னல் இருந்த பெண்மணி அதிசயமாய் பார்த்தாள்.

‘என்னம்மா… யார் நீங்க… ஏன் இப்படி தலை தெறிக்க ஓடிவர்றீங்க… ‘

‘மேடம்… என் பொண்ணு மஞ்சு. ஏழாவது பி செக்ஷன்.  இன்னிக்கு பணம் கட்டணும்னு சொல்லி லெட்டர் குடுத்துவிட்டிருந்தீங்க…  ‘

‘ஓ… ஆமா… ‘ என்றபடியே  அந்தம்மாள் டேபிள் மேல் இருந்த கிளிப் பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள்.

‘என்னம்மா இது… ‘ புரியாமல் கேட்டாள் மாலா.

‘ரசீது… ‘ என்றாள் அந்த மேடம்.

இவளுக்குப் புரியவில்லை.

அந்தம்மாளே விவரித்தாள், ‘ஒருத்தர் மத்தியானமே வந்து பணம் கட்டினார்மா… லெட்டரையும் பணத்தையும் கொடுத்தார்… ரசீது போடறதுக்குள்ளே மறைஞ்சிட்டார். ரசீதை பத்திரப்படுத்தி வச்சிருந்தேன்… ‘

அந்தம்மாள் சொல்ல சொல்ல இவளுக்கு தலை கிர் என்றது.

‘ஐயா… நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்… ‘

முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கடவுளை வேண்டிக்கொண்டாள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கையளவு மனசு! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    கிரிக்கெட் மேட்ச் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்