எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கடைத் தெருவில் அகிலாவைப் பார்த்துவிட்டாள் மரகதம். நான்கு எட்டுக்கள் வேகமாய் எடுத்து வைத்துப் போய் அவளது தோளைத் தட்டினாள்.
‘ எப்படிடீ இருக்கே… ‘ என்றாள்.
திரும்பிப் பார்த்த அகிலா, அவளை அங்கே எதிர்பார்க்கவில்லையானாலும் வாயெல்லாம் பல்லாகி சிரித்தாள்.
‘ நல்லா இருக்கேம்மா… நீங்க எப்படி இருக்கீங்க… ‘
‘ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேண்டி… ‘ என்றுவிட்டு, ‘ சரி சரி, நாளைக்கு பாணுவுக்கு பொறந்தநாள் வருது. அதான் டிரெஸ் எடுக்க வந்தோம்… காலையில கேக் வெட்டுறோம்… ஒரு பதினோரு மணிபோல மறக்காம வீட்டுக்கு வந்துடு… சரியா… ‘ என்றாள் கமலம்.
மறுபேச்சு பேசாமல், ‘ சரிம்மா… ‘ என்று சொல்லிவிட்டாள் அகிலா.
மரகதத்தின் வீட்டில் நான்கைந்து வருடங்களாக வீட்டு வேலை செய்தவள் அகிலா… புதிதாக வந்த மருமகளுக்கு அகிலாவை பிடிக்கவில்லை. அதனால் அவளை வேலையிலிருந்து நிறுத்திவிட்டாள்.
ஆனால் மரகதத்திற்குதான் மனது கேட்காமல், ‘ கோவிச்சுக்காத அகிலா… அவளுக்கு என்ன வந்ததுன்னு தெரியலை… இப்போ பாரு… நாலாயிரம் வாங்கிட்டிருக்கற உன்னை நிறுத்திட்டு… ஆறாயிரம் சம்பளத்துல வேறொருத்தியை வரச்சொல்லியிருக்கா… என்னவோ போ… ‘ என்று சலித்துக் கொண்டாள்.
அகிலாவும் மனமுடைந்து போகாமல் ஏற்கனவே வரச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டில் போய் வேலைக்கு சேர்ந்துவிட்டாள். அவர்கள் ஐந்தாயிரம் தருகிறார்கள்.
சின்னம்மா உண்டாகி பாணு பிறந்த பிறகு அகிலாவுக்கு வேலைப்பழு கூடிப் போனது. ஆனாலும் அத்தனையையும் முகம் சுளிக்காமல் இழுத்துப் போட்டு செய்து முடித்து விட்டுத் தான் வீட்டுக்குப் போவாள் அகிலா. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது குற்றம் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பாள் சின்னம்மா. ஆனாலும் அதையெல்லாம் பொறுத்துக் கொள்வாள் அகிலா. மரகதத்திற்குத்தான் மனது கேட்காது.
ஆரம்பத்தில் தனது மகள் மஞ்சுவையும் கூட்டிக்கொண்டு போவாள் அகிலா. சின்னம்மாவின் மகள் பாணு வளர வளர மஞ்சுவிடம் நெருங்கிப் பழகினாள. தன்னுடைய பொம்மைகளை வைத்துக் கொண்டு மஞ்சுவுடன் விளையாடுவாள் அவள். தான் பார்த்து பிறந்தவள், வளர்ந்தவள் என்பதால், பாணுவின் மேல் தனிப்பாசம் எப்போதும் உண்டு அகிலாவுக்கு.
சின்னம்மா இவளை வேலையை விட்டு நிறுத்திவிட்டாலும், மரகதத்தின் உண்மையான அன்புக்கும் பாணுவின் கள்ளம் கபடமற்ற பேச்சுக்கும் அகிலா அடிமைப்பட்டிருந்ததால் மரகதம் கேக் வெட்ட கூப்பிட்ட பொழுது அகிலாவால் தட்டிகழிக்க முடியவில்லை. மறு பேச்சு பேசாமல் உடனே வருவதாக ஒப்புக்கொண்டாள்.
மரகதம் நகர்ந்த பிறகுதான் கவலை உண்டானது அகிலாவுக்கு. என்ன பரிசு வாங்கிக் கொடுப்பது என்று. அகிலாவின் தகுதிக்கு அதிகப் பட்சம் இருநூறு அல்லது முன்னூறுக்கு மேல் செலவு செய்ய முடியாது. யோசித்தபடியே கண்ணில் தென்பட்ட டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றுக்குள் நுழைந்தாள். பாணுவுக்கு ஏதாவது ஒரு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசனை. ஆனால் எல்லாமே ஆயிரம் இரண்டாயிரம் என்று தானிருந்தன.
அவள் ஒவ்வொன்றாய் ஒதுக்கிகொண்டே போவதைப் பார்த்துவிட்ட கடைக்காரர், ‘ என்ன விலையில பார்க்கறீங்கம்மா…’ என்று கேட்க, அவரிடம் கொஞ்சம் தயங்கியபடி, ‘ ஒரு முன்னூறு நானூருக்குள்ள…’ என்று தயக்கத்துடன் சொன்னாள்.
கடைக்காரர் உடனே உள்ளே இருந்து சில பொம்மைகளை எடுத்துப் போட்டார். ஒரு மேலைநாட்டு சிறுமி பொம்மை அழகாக இருந்தது. விலையைக் கேட்டாள். அறுநூறு சொன்னார். ஆனாலும் பேரம் பேசி அதையே வாங்கியும் கொண்டாள்.
xxxxxxxxxx
அம்மா கொண்டுவந்த பரிசுப் பெட்டியைப் பார்த்துவிட்டு, ‘ அம்மா, இந்தப் பெட்டியை நான்தான் பாணுக்கிட்டே கொடுப்பேன்… ‘ என்று சிணுங்கினாள் மஞ்சு. இரண்டு பெரும் தோழிகளல்லவா. உடனே ஒப்புக்கொண்டாள்.
மறுநாள் காலையில் இருப்பதிலேயே கொஞ்சம் நல்ல டிரெஸ்ஸாக போட்டுக்கொண்டு இருவரும் கிளம்பி அரை மணிநேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.
அங்கே ஏற்கனவே பத்து பதினைந்து பேர் கூடியிருந்தார்கள். சில முகங்கள் தெரிந்தும் சில தெரியாமலும் இருந்தன. எல்லோரும் ஜூஸ் குடித்துக்கொண்டும் பேசிச் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். கலர் பேப்பர்களை தோரணமாய் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு பிளக்ஸ் போர்டில் பாணு அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
‘ அப்படியே பெரியம்மா ஜாடை… ‘ என்று இங்கிருந்தபடியே நெட்டிமுறித்துக்கொண்டாள் அகிலா.
அகிலாவைப் பார்த்ததும் ஓடி வந்து உள்ளே இழுத்துக் கொண்டு போனாள் மரகதம். மஞ்சுவை பார்த்துவிட்ட பாணு ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு, ‘ ஹை… ’ என்று சொல்லி அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சிரித்தாள். சின்னம்மா எதேச்சையாக அகிலாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்தே மெலிதாய் புன்னகைத்தாள். மேற்கொண்டு அவள் எதுவும் பேசவில்லை. மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அகிலாவுக்கு.
அப்போதுதான் கவனித்தாள் அகிலா. வந்திருந்த ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் பெரிய பெரிய கலர் பெட்டிகளை வைத்திருந்தனர். தன்னிடம் இருக்கும் கைப்பையை பார்த்தாள். ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்று நினைத்துக்கொண்டாள்.
ஒரு ஸ்டூலை அலங்கரித்து அதில் கேக் வைத்திருந்தார்கள். நடுவில் நான்கு மெழுகுவர்த்திகளை நிறுத்தி வைத்து பக்கத்தில் தீப்பெட்டியும் ஒரு பிளாஸ்டிக் கத்தியும் வைத்திருந்தார்கள்.
ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தார்கள். வாங்கிக் கொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் புது வேலைக்காரி ஓடியாடி வேலை செய்துகொண்டிருப்பதை. அவளை ஏற்கனவே பார்த்திருக்கிறாள் அகிலா.
கேக் வெட்டினார்கள். பாட்டுப் பாடினார்கள். எல்லோரும் தாங்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலர் பெட்டிகளை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அகிலாவுக்கு தயக்கமாக இருந்தது. கூட்டம் குறைந்த பிறகு கொடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.
அந்த நேரம் அங்கே வந்த மரகதம், ‘ போட்டோ எடுத்துக்குவே வா… ‘ என்று சொல்லி அகிலாவை இழுத்துக்கொண்டு போனாள். மஞ்சுவும் கூடவே ஓடினாள்.
சின்னம்மாவுக்கு ஒரு புன்னகை செய்துவிட்டு பாணுவின் கன்னத்தைத் தட்டி, ‘ எங்க சின்ன சின்னம்மாவுக்கு எங்களோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்… ‘ என்றுவிட்டு, தனது பைக்குள்ளிருந்த கலர் பெட்டியை எடுத்து மஞ்சுவிடம் கொடுத்து, பாணுவிடம் கொடுக்கச் சொல்லி ஜாடை காட்டினாள்.
பரவசத்துடன் அந்த பெட்டியை வாங்கி தனது தோழிக்குக் கொடுத்தாள் மஞ்சு. அதை ‘தாங்க்ஸ் ‘ சொல்லி வாங்கிக்கொண்ட பாணு தோழிக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
சாப்பிட்டாகிவிட்டது. பரிசு கொடுத்தாகி விட்டது. போட்டோ எடுத்தாகிவிட்டது. பெரியம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றெண்ணி அவளைத் தேடியபோது, எதேச்சையாய் அவளும் கையில் ஒரு பையுடன் எதிரே ஓடிவந்தாள்.
‘ உள்ளே பிரியாணி வச்சிருக்கேன்… எடுத்துக்கிட்டு போ… ‘ என்றாள். பூரித்துப் போன அகிலா தன் மகளிடம் ‘ பாட்டிக்கு டாட்டா சொல்லு, போலாம்… ‘ என்றாள். அவளும் சொன்னாள்.
அதுவரை நெஞ்சு அடித்துக் கொண்டுதான் இருந்தது அகிலாவுக்கு, ஒருவேளை சின்னம்மா நாம் வாங்கிய பொம்மையை இளக்காரமாக பார்ப்பாளோ என்று. அதற்குள் பாணு இவர்கள் கொடுத்திருந்த பெட்டியைப் பிரித்து அந்த பொம்மையை எடுத்து அதனுடன் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அதை அகிலாவும் கவனித்துவிட்டாள்.
கதவை விட்டு வெளியேறும் முன்பாக திரும்பி ஒருமுறை பார்த்தாள் அகிலா. அதே சமயம் பாணுவும் எதேச்சையாய் இவர்களைப் பார்த்துவிட்டு கையில் அதே பொம்மையுடன் ஓடோடி வந்தாள். திகைப்புடன் நின்றுவிட்டாள் அகிலா.
அருகில் ஓடிவந்த பாணு அந்த பொம்மையை இடதுகையால் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மறுகையால் மஞ்சுவைப் பிடித்துக்கொண்டு, ‘ நீ குடுத்த பொம்மை ரொம்ப அழ்கா இருக்கு… ‘ என்று சொல்லி சிரித்தாள். கன்னங்களில் விழுந்த குழியைப் பார்த்து மறுபடியும் திருஷ்டி கழித்தாள் அகிலா.
எத்தனையோ பெரிய பெரிய பார்சல்கள் வந்திருக்கும்போது, பாணு இந்த பொம்மையை மட்டும் ஏன் கொஞ்சவேண்டும். காரணம் அது அவளுக்கு ரொம்பவும் பிடித்த தோழி மஞ்சு கொடுத்தது.
அப்படியென்றால்… ‘ பெட்டி சிறியதாய் இருந்தாலும் அதன் மதிப்பு அந்த பொம்மையின் விலையில் இல்லை, அதைக் கொடுத்தவரைப் பொருத்தே அமைகிறது.‘
இப்போது நெஞ்சு நிறைவுடன் ‘ டாட்டா ‘ காட்டியபடி திரும்பி நடந்தாள் அகிலா.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings