எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுந்தருக்கு செமகோபம். அந்த ரோடு திருப்பத்தில் திடீரென்று ஒரு குப்பை மேடு முளைத்திருந்தது. ஸ்கூட்டரை பிரேக் போட்டு நிறுத்தியவன் திட்டிக் கொண்டே தனது மொபைலில அந்தக் காட்சியை அப்படியே இரண்டு போட்டோக்கள் பிடித்துக்கொண்டான்.
‘ச்சே… அவனவன் வீட்டுலையே கூடையில போட்டு வச்சிருந்து கார்ப்பரேஷன் வண்டி வரும்போது கொடுக்க வேண்டியதுதானே. இப்படியா போற வழில தூக்கி வீசிட்டு போவானுங்க… மனசாட்சியே இல்லாதவனுங்க?‘ என்று திட்டிக்கொண்டே வீட்டை பார்த்து வண்டியை விட்டான்.
இது ஒன்றும் புதிதில்லை, திடீர் திடீர் என்று ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவது அந்தப் பகுதி மக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது.
அவனுக்கும் தெரியும், கழிவுகளை கொட்டி வைக்க என்று தனி இடம் எதுவும் கார்ப்பொரேஷன்காரர்கள் ஒதுக்கவுமில்லை. குப்பை வண்டியை தெருவுக்குள் கொண்டு வந்து விசில் சத்தம் போடும்போது வீட்டிலிருப்பவர்கள் தரம் பிரித்து வைத்திருக்கும் வீட்டுக் குப்பைகளை தனித்தனி கூடைகளில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள்.
சில நாட்கள் குப்பை வண்டி வராது. வண்டி ரிப்பேர், டிரைவர் லீவு, ஆள் இல்லை, ஸ்ட்ரைக் என்று ஏதாவது காரணங்கள் வரும். அப்படி வண்டி வராதபோது மக்கள் இப்படி வந்து வீசி விட்டுப் போய் விடுகிறார்கள்.
xxxxxxxxx
வீடு வந்து சேர்ந்தவன், தனது மனைவியிடமும் அதைத் தெரிவித்தான்.
‘அது சரி, இந்த குப்பை வண்டி தெனமும் தவறாம வந்தா மக்கள் ஏன் ரோடுல கொட்டிட்டு போறாங்க… அதுமட்டுமில்லாம, ஒருநாளைக்கு எட்டு மணிக்கு வர்றாங்க, ஒரு நாளைக்கு ஒன்பது மணிக்கு வர்றாங்க… இன்னொரு நாள் பத்து, பதினோரு மணிக்கு கூட வர்றாங்க… எல்லாரும் ஆபீஸ் ஸ்கூல்னு கிளம்பினதுக்கப்புறம் இவங்க வந்தா யார் வீட்டிலே இருந்து குப்பையை கொடுப்பா… மக்களை மட்டுமே குறை சொல்லாதீங்க… அதுமட்டுமா… பாருங்க… ரெண்டு நாளா வண்டி வரலை, கூடை ரொம்பி, கவர்லேயும் கொட்டி வச்சிருக்கேன்… ‘ என்று சற்றே எரிச்சலுற்றாள்.
அங்கே போட்டு வைத்திருந்த குப்பைக் கூடையை அவள் காட்ட, அவளை ஒருமுறை முறைத்துவிட்டு தன் வேலைகளைக் கவனிக்கப் போனான்.
அவர்களது காலனிகாரர்களுக்கென்று ஒரு வாட்ஸப் க்ரூப் இருக்கிறது. அடிக்கடி மெசேஜ் போடுவார்கள், ‘யாரும் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்காதீர்கள்‘ என்று.
அந்த க்ரூப்பை பார்த்தான். ஏற்கனவே இரண்டு பேர் மெசேஜ் போட்டிருந்தார்கள். அதில் அதே குப்பைமேட்டை போட்டோபிடித்தும் போட்டிருந்தார்கள். ‘நாமும் போடுவானேன்‘ என்று அப்படியே விட்டுவிட்டான்.
xxxxxxxxx
காலையில் ஆபீஸ் கிளம்பும்போது செல்வி ஒரு பெரிய பையை அவனிடம் நீட்டினாள்.
‘என்ன இது… புது பையில…‘ என்றான்.
‘குப்பைங்க… வீட்டுலேயே வச்சிருந்தா நாறுதில்லே… போற வழீல ஒதுக்குபுறமா எங்காவது தூக்கிப் போட்டுட்டு போங்க…‘ என்றாள் அவள்.
‘நீயுமா… ‘ என்று ஒரு முறை முறைத்தவன், உடனே, ‘ வேண்டாம்… எங்க ஆபீஸ் பார்க்கிங்ல ஒரு பெரிய குப்பைத்தொட்டி வச்சிருக்காங்க… நான் அங்கேயே போட்டுக்கறேன்… ‘ என்றபடி அந்தப் பையை வாங்கி கொக்கியில் மாட்டினான்.
‘ புது பையா இருக்கே… இதுலேயா கொடுக்கறே… ‘ என்றான்.
‘ பழைய பைக்கு நான் எங்கே போவேன்… ‘ என்று சிரித்தாள் அவள்.
பையை பார்த்தான். கணபதி சில்க்ஸ் கொடுத்தது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.
போகிற வழியில் பார்த்தான். குப்பை மேடாக இருந்த இடம் இப்போது சுத்தப் படுத்தப் பட்டிருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டான். ஆபீஸ் போனவன், ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, நேரமாகி விட்டதால் வேகவேகமாக ஓடி லிப்ஃட்டில் ஏறிப் போய் தனது சீட்டில் உட்கார்ந்தான்…
திடீரென்று மதியம்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது, செல்வி கொடுத்த குப்பை பையை ஸ்கூட்டர் கொக்கியில் மாட்டினோமே என்று.
‘சரி… வீட்டுக்கு கிளம்பும்போது பார்க்கிங் தொட்டில போட்டுட்டா போச்சு… ‘ என்று தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டு வேலைகளைத் தொடர்ந்தான்.
சாயங்காலம் கீழே வந்து ஸ்கூட்டரை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. பையைக் காணவில்லை.
‘யாராவது அது குப்பை என்று தெரியாமல் ஏதோ விளையுயர்ந்தவை இருக்கும் பையோ…’ என்று நினைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்களோ என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
காலனிக்குள் நுழைய ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்போது புதியதாய் ஒரு குப்பை மேடு முளைத்திருந்தது. சட்டென பிரேக் போட்டு திட்டிக்கொண்டே நிறுத்தியவன் தனது மொபைலில் கிளிக்கினான்.
அப்போது ஒரு அதிர்ச்சி… அவன் எடுத்துப் போயிருந்த புது பையும் அங்கேதான் கிடந்தது. இப்போதுதான் புரிந்தது, அவனது பை அங்கே தவறி விழுந்திருக்க, மற்றவர்களும் அது குப்பை போடும் இடமென்று அங்கேயே தாங்கள் கொண்டுவந்த குப்பையையும் போட்டிருந்திருக்கின்றனர் என்று.
‘ச்சே… நாமலே இதுக்கு காரனமாகிவிட்டோமே… ‘ என்று தன்னையே நொந்துகொண்டவன், அந்தப் பையை எடுத்து வீட்டுக்கு கொண்டு போயவிடலாமா என்று நினைத்தபடி கொஞ்சம் முன்னே நடந்தவன், ‘ ச்சே… இவ்ளோ குப்பைல்ல போயா நாம கை வைக்கறது…‘ என்று நினைத்தபடி மனதை மாற்றிக்கொண்டு ஸ்கூட்டரை கிளப்பிவிட்டான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings