எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ எங்கேடா மீதி பணம்… ‘ அம்மாவின் குரல் மட்டும் வந்தது.
‘ ஏம்மா… காய் கேட்டே வந்துடுச்சு… அப்புறம் மீதி கீதின்னுட்டு… ‘ இங்கிருந்தே எரிச்சல் பட்டன் இவன்.
அப்புறம் அம்மா எதுவும் சொல்லவே இல்லை.
மணி படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான். அப்பா ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். தங்கை ஒன்பதாவது படிக்கிறாள்,
‘ ஒழுங்கா ஒரு வேலைக்குப் போனா கையில காசு இருக்குமா… இப்படி மளிகை சாமான் வாங்கினா, காய் கறி வாங்கினா எதுலயுமே மிச்ச காசு தர்றதே இல்லை… . ‘
அம்மா புலம்புவதும் இவன் பதிலுக்கு, ‘ போதும்மா, உன் ஒப்பாரியை நிறுத்து… ‘ என்று எரிச்சல் படுவதும் வாடிக்கையே.
‘ சரி சரி… நான் மாலாக்கா வீட்டுக்குப் போறேன்… இன்னிக்கு பேப்பர் பார்க்கவே இல்லை… ‘ என்றபடி மடமடவென் கிளம்பிவிட்டான்.
மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் மாலா வீட்டில்தான் தினசரி பேப்பர் வாங்குகிறார்கள். இவன் இரண்டு விஷயங்களை மட்டும்தான் பார்ப்பான். ஒன்று விளையாட்டு செய்திகள். மற்றொன்று வேலைவாய்ப்பு பகுதிகள்.
அவனும்தான் ஒவ்வொரு விளம்பரமுமாகப் பார்த்து பார்த்து விண்ணப்பம் போடுகிறான். எதுவுமே அமையவில்லை.
ஒன்று பைக் இருக்கிறதா… இல்லை… லைசன்ஸ் இருக்கிறதா… இல்லை… நேரமெல்லாம் பார்க்கக் கூடாது… கண்டிஷன் கண்டிஷன்… கண்டிஷன்… வேலை தரும் முன்பே ஏகப்பட்ட கண்டிஷன்கள்.
போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று வெறுத்துப் போய் வீடு திரும்புவான்.
‘ என்னடா ஆச்சு, கூப்பிட்டாங்கன்னு போயிருந்தியே… ‘
‘ அதெல்லாம் ஒரு வேலையாம்மா… விடும்மா… உனக்கு அப்பைக்கப்ப காய்கறி வாங்க, பால் வாங்க, மளிகை வாங்க ஒரு ஆள் தேவைப் படுதில்ல… நான் வீட்டுலேயே இருந்து அந்த வேலையையெல்லாம் பார்த்துக்கறேம்மா… ‘
‘ அடி செருப்பாலா… கம்பெனி வேலைக்குப் போடான்னா, வீட்டு வேலை செய்றான்னாம்ல, வீட்டுவேலை… ஒழுங்கா ஏதாவது ஒரு வேலைக்குப் போயி சம்பாதிக்கறதப் பாரு. திடீர்னு ஒரு நாளைக்கு தட்டுல சோறு போடறத நிறுத்திப் புடுவேன்… பார்த்துக்க… ‘
‘ நான் என்னம்மா செய்ய… ‘ போய் கடை கடையா ஏறி ஆர்டர் பிடிச்சிக்கிட்டு வா ‘ ன்றான்… இல்லே… ‘ பாக்கெட் போடணும், லேபில் ஓட்டனும் ‘ங்கறான்… அதெல்லாம் ஒரு வேலையா… ‘
‘ ஏன்… திருநெல்வேலில ஒரு கலெக்டர் வேலை இருக்காம். போறியா… நாயே… கேடுகெட்ட நாயே… ‘
‘ வெறுப்பாத்தாதம்மா… சரி சரி… மொபெட்டுக்கு பெட்ரோல் போடணும்… இருநூறு ரூபா கொடேன்… ‘
‘ எல்லாம் அம்பது ரூபாய்க்கு போடு போதும்… ‘
‘ ஐயையைய்ய… உன் நச்சு தாங்கல… அம்பது ரூபா போட்டா ரெண்டு நாளுக்கு கூட வராதுமா… ‘
‘ அம்மாமா… இப்படியே தெருத்தெருவா உருப்படாத பயலுகலையா போய் பார்த்துக்கிட்டு அலைஞ்சா பெட்ரோல் தீராம என்ன செய்யும்… ‘
‘ அம்மா நீ வேணா பாரு… நான் ஒரு நல்ல வேலை கிடைச்சு போயி சம்பாதிக்கப் போறேன்… தம்பி ஒரு ஜோடி வளையல் வாங்கிக்கொடு, ஒரு ரெட்டைவட சங்கிலி வாங்கிக்கொடுன்னு நீயே ஒருநாளைக்கு கேட்கப் போறே… ‘
‘ போடா… போ… முதல்ல ஒரு காப்பர் வளையம் வாங்கிக் கொடுக்க முடியுதா பாரு… ‘
‘ நக்கலு… உம்… யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்மா… ‘
‘ சரி சரி… ஸ்டேண்டுல நூறு ரூபா வச்சிருக்கேன்… எடுத்துக்கிட்டு போயி அம்பது ரூபாக்கு மட்டும் போட்டுட்டு மீதியை ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துடு… ‘
‘ அது… ‘ கிளம்பிவிட்டான் அவன்.
xxxxxxxx
பெட்ரோல் போடும் பெண்ணிடம், ‘ அக்கா அம்பது ரூபாக்கு போடுங்கக்கா… ‘ என்றான். அவனுக்கு முன்னாள் ஒரு பெண் தன வண்டியை நிறுத்தியிருந்தாள், அவளும் டேங்க் மூடியைத் திறந்துவிட்டபடியே, ‘ அம்பது ரூபாய்க்கு ‘ என்றாள்.
உடனே இவனைப் பார்த்து சிரித்தாள் பெட்ரோல் போடுபவள்.
ஒருமுறை, ‘ ஏன் தம்பி… எப்போ பாரு அம்பது ரூபாக்கு மேல போடவே மாட்டேன்றே… ஏன், அம்பதுக்கு மேல போட்டா வண்டி ஓடாதா… ‘ என்று கிண்டல் கூட செய்துவிட்டாள் அந்த பெண்மணி. ஆனாலும் அவள் இருக்கும் பைப் பக்கம்தான் இவனும் விடாமல் போவான். இருவருக்கும் அப்படி ஒரு உறவு.
இப்போது முன்னால் இருக்கும் பெண்ணும் ஐம்பது ரூபாய்க்கு என்று சொன்னதால் இன்றைக்கு நம்மிடம் இந்தக்கா நக்கல் விடமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டான்.
பெட்ரோல் பைப்பை டேங்க்குள் விடும் அதேநேரம், ‘ அக்கா… ஜீ.பே. இருக்குதானே… ‘ என்றாள் அந்தப் பெண்.
டக்கென பெட்ரோலை நிறுத்திவிட்டு, ‘ முன்னாலேயே சொல்லியிருக்கலாமில்லையாம்மா… அதோ போர்டு போட்டிருக்கே பாருங்க… ‘ என்று முகத்தை இறுக்கினாள் இவள்.
‘ சாரிங்க்கா… நான் கவனிக்கலை… ‘ என்றாள் அவள்.
சட்டென பொறி தட்டியது மணிக்கு. போகிறாள், பாவம்.
‘ மேடம்… என் மொபைலுக்கு ஜீ.பே. பண்ணுங்க… நான் காசு கொடுத்துடறேன்… ‘ என்றான் இவன். உடனே புன்னகைத்தாள் அவள்.
பெட்ரோல் போடுபவள் இவனைப் பார்த்தாள், ‘ போட்டுடட்டுமாப்பா தம்பி… ‘ என்றும் கேட்டுக்கொண்டாள்.
‘ போடுங்க்கா… ‘ என்றான் இவன். இப்போது பைப்பை சரியாக டேங்க்குக்குள் விட்டவள், அவளிடம் ‘ ஜீரோ பார்த்துக்கம்மா… ‘ என்றாள்.
அவளோ இவனிடம், ‘ மொபைல் நம்பர் சொல்லுங்க… ‘ என்றாள்.
இவன் சொன்னான். அடுத்த நிமிடம் இவனது மொபைல் சிணுங்கியது. ஐம்பது ரூபாய் ஏறியதற்கான மெசேஜ் வந்திருந்தது.
இவனுக்கும் பெட்ரோல் போட்டுவிட்டு நூறு ரூபாயை வாங்கிக்கொண்டாள் அந்தப் பெண்மணி.
நிமிர்ந்தான், பெட்ரோல் போட்ட பெண்ணை அங்கே காணவில்லை.
‘ அடக் கடவுளே… ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போய்டுச்சே அந்தப் பொண்ணு… ‘
xxxxxxxx
‘ எங்கேடா அம்பது ரூபா… ‘
உடனே அம்மாவிடம் கதைசொல்ல ஆரம்பித்தான்.
‘ இதெல்லாம் உனக்குத் தேவையா… மாடே மாடே… ‘
கொஞ்சம் அவகாசம் கிடைத்தபோது ஐம்பது ரூபாய் வந்த மெசேஜை ஜீ.பே.யில் பார்த்தான். அதற்கு கீழே இருக்கும் மெசேஜ் பெட்டியில், ‘ஹாய்‘ என்று போட்டான்.
பதிலுக்கு ‘ ஹாய் ‘ என்று வந்தது. கூடவே ‘ What do you do… ‘ என்றும் வந்தது. புரிந்து கொண்டாள் அவள், இவன்தான் என்று.
‘ வேலை தேடிக்கிட்டிருக்கேன்… ‘
‘ Qualifications…? ‘
‘ B.Com. in Financial Accounting ‘
‘ Send your profile to abcdef@gmail.com ‘
அனுப்பினான்.
பின்னர்தான் தெரிந்தது, அவள் ஒரு ஐ.டி.கம்பெனியில் HR என்று.
பேப்பர்களை எல்லாம் பார்த்து முடித்து, நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட்டு இப்போது வேலையும் கிடைத்து அதே கம்பெனிக்கு வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறான்.
சம்பளம் இருத்தைந்தாயிரம்.
அம்மா அதிசயத்து சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ பார்டா… பங்க்குல பெட்ரோல் போட உதவி பண்ணினதுக்கு அந்தப் பொண்ணு உனக்கு வேலையே கொடுத்திருக்கு… ‘
நினைத்துக் கொண்டான் இவன், ஓடி வந்தது நல்ல வேளை… தேடாமல் கிடைத்தது நல்ல வேலை… .
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings