எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜாலியாக விஸிலடித்தபடியே லாரியை ஓட்டிக் கொண்டிருந்த திருமூர்த்திக்கு உடம்பு என்னவோ போல் இருந்தது. “ஹும்… வீட்டை விட்டு வந்து சுத்தமாய் நாற்பது நாளாச்சு. வயிற்று பசியை எப்படியோ வழி நெடுக இருக்கும் ஹோட்டல் கடைகளில் தீர்த்துக்கிறோம், இப்ப வேற பசியல்ல எடுக்குது… இதை எங்க போய் தீர்க்கிறது?” தனக்குள் முனங்கினான்.
“என்ன அண்ணே?… என்னவோ போலிருக்கீங்க?… என்ன சமாச்சாரம்?… பொண்டாட்டி ஞாபகமா?” கிளீனர் பையன் சிரித்தபடியே கேட்க, அதிர்ந்து போனான் திருமூர்த்தி.
“அடப்பாவி… எப்படிடா நான் மனசுக்குள்ள நெனச்சத அப்படியே சொல்றே?… சந்திரமுகி படத்துல வடிவேலு உள்ளுக்குள்ளார நினைக்கறதையெல்லாம் ரஜினி சொல்ற மாதிரி!”. சிரித்தபடி கேட்டான் திருமூர்த்தி.
“என்னண்ணே?… இதைக் கண்டுபிடிக்க முடியாதா என்னாலே?… வழி நெடுக ஒவ்வொரு சினிமாப் பட போஸ்டரையும் நீங்க வெச்ச கண்ணு வாங்காமப் பார்க்குறதையும்!… போற வர்ற பொம்பளைகளை வெறிச்சு… வெறிச்சுப் பார்க்கிறதையும் நான் கவனிச்சிட்டுத்தானே இருக்கேன்!”
“ஹி..ஹி… ஆமாம்டா!… உடம்பு என்னவோ கேக்குதுடா!”. என்றான் திருமூர்த்தி அசட்டுச் சிரிப்புடன்.
“அவ்வளவுதானே?… பைபாஸ் ரோட்டை தாண்டினதும் ஒரு லெப்ட் கட் வரும்… அதுல விடுங்க நான் கூட்டிட்டுப் போறேன்!.”
“டேய்…. உனக்கு எப்படிடா அதெல்லாம் தெரியும்?” ஆச்சரியமாய்க் கேட்டான் திருமூர்த்தி.
“அது செரி… பத்து வருஷமா ட்ரான்ஸ்போர்ட் லாரில கிளீனரா இருக்கேன்… இந்த அனுபவம் கூட இருக்காதா?… என் சர்வீஸ்ல… எத்தனை தபா எத்தனை டிரைவர்கள் கூட அந்த மாதிரி இடத்துக்குப் போயிருக்கேன் தெரியுமா?”
“என்னது?… நீ போயிருக்கியா?… அடப்பாவி!”
“அய்யய்யோ… அண்ணே… நான் கூடப் போவேன்… வருவேன்… அவ்வளவுதான்!… வேற தப்பு தண்டாவெல்லாம் செய்ய மாட்டேன்!”.அழுது விடுவான் போலானான்.
“நானும் பதிமூணு வருஷமா லாரி ஓட்டுறேன்!… ஒரு தடவை கூட அந்த மாதிரி இடத்துக்குப் போனதில்லை!… அப்படியொரு சந்தர்ப்பம் வாய்ச்சதேயில்லை!…நீ என்னடான்னா எந்த வயசுலயே…!” சொல்லி விட்டு அமைதியாய் சாலையை கவனித்து லாரியைச் செலுத்திய திருமூர்த்தி, “சரி… சரி… என்னையும் இன்னிக்கு அந்த மாதிரி இடத்துக்குக் கூட்டிட்டு போ!… அதையும் ஒரு தரம் பார்த்திடுவோம்!” என்றான் திருமூர்த்தி ஒருவித வெட்கத்துடன்.
அந்த லாரி பைபாஸ் ரோட்டைத் தொட்டதும் லெப்ட் கட்டில் திரும்பியது.
ஓட்டு வீடு. முன்புறம் சிறிய திண்ணை. திண்ணையின் மேல் நாற்பது வாட்ஸ் குண்டு பல்பின் எரிச்சலூட்டும் மஞ்சள் ஒளி. கதவில் அழுக்குப் படிந்த திரைச்சீலை. உள்ளிருந்து மட்ட ரக ஊதுபத்தி வாசம்.
“யக்கா…. யக்கோவ்” மிகவும் பழகியவன் போல் வெளியே நின்று அழைத்தான் கிளீனர் பையன்.
“ஆரது?: உள்ளிருந்து குரல் மட்டும் வந்தது.
“நான்தான் மாரியப்பன் டிரைவரோட கிளீனர்”.
“யார்ரா அது மாரியப்பன்?” கிசுகிசுப்பாய் கேட்டான் திருமூர்த்தி.
“இதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்துட்டு இருந்தேனல்ல?… அந்த ட்ரான்ஸ்போர்ட் டிரைவர்!… அவனைச் சொன்னால் தான் இவளுக்கு என்னை அடையாளம் தெரியும்!” என்றான் கிளீனர்.
“ஆரு?… கூளை மாரியப்பனா?” உள்ளிருந்து பெண் குரல் சிரிப்புடன் கேட்க,
“ஆமாம்” என்றான் கிளீனர் வெளியில் இருந்தபடி.
“சரி… இப்ப என்ன வேணும்?” பெண் குரல்.
“புது டிரைவர்!… உங்ககிட்ட வரப் பிரியப்படறாரு!.”
“புது டிரைவரா?”…. ஒரு சிறிய அமைதிக்குப் பின், “சரி… உள்ளார வரச் சொல்லு!”.
“அண்ணே!… நான் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வரேன்!… நீங்க உள்ளார போங்க!” சொல்லி விட்டுட் சிட்டாய்ப் பறந்தான் கிளீனர் பையன்.
அந்த அறை அவ்வளவு சுத்தமாக இல்லை. அழுக்குத் துணிகள் கொடியில் ஏகமாய் தொங்கிக் கொண்டிருக்க, தரையில் ஆங்காங்கு காரை பெயர்ந்து சிதிலமாயிருக்க, நாசியைப் பிடுங்கும் அந்த ஊதுவத்தி மணத்துடன் லேசாய் சிகரெட் வாடை.
“எனக்கு முன்னால் வந்து விட்டுப் போனவன் அடித்த சிகரெட் வாடையா?… இல்ல இவளே சிகரெட் குடித்திருப்பாளா?” திருமூர்த்தி மனதில் சிறு பட்டிமன்றம்.
“வாப்பா புது டைவரு!… உனக்கு எந்த ஊரு?” என்று கேட்டவளின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்தான் திருமூர்த்தி.
“இவள்… இவள்… முத்துமாணிக்கம் அல்லவா?”
“நீ…. முத்துமாணிக்கம் தானே?” கேட்டே விட்டான்.
“அட என்னோட அந்த உண்மையான பேரு இதுவரைக்கும் யாருக்குமே தெரியாதே… உனக்கெப்படி?… நீ யாரு?” என்றபடி அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், “நீ… திருமூர்த்திதானே?” ஆச்சரியத்தோடு கேட்டாள்.
இருவர் மனதும் ஒரே நேரத்தில் இருபது வருடம் பின்னோக்கிச் செல்ல…
————-
அன்று காந்தி ஜெயந்தி. அந்தப் பள்ளி விழாக் காலம் பூண்டிருந்தது.
காந்தி வாழ்க்கை வரலாறு கூறும் புகைப்படக் கண்காட்சி. மாணவ மாணவியரின் மாறுவேடப் போட்டிகள். சின்னச் சின்ன நாடகங்கள்.
கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாவட்டக் கலெக்டர் பரிசுகள் வழங்கத் துவங்கினார்.
“காந்தியடிகள் வெளிநாடு செல்லும் போது அவரிடம் அவரது தாயார் மது… மாது… மாமிசம் ஆகியவற்றைத் தொடக் கூடாது என்று சத்தியம் வாங்கும் காட்சியை மிகவும் தத்ரூபமாக உண்மையிலேயே ஒரு தாயும் மகனுமாய் மாறி நடித்துக் காட்டிய திருமூர்த்தி மற்றும் முத்து மாணிக்கம் ஆகிய இரண்டு பேருக்குமே முதல் வரிசை வழங்குகிறேன்”.
அன்றிலிருந்து பள்ளியில் அனைவருமே அவர்கள் இருவரையும் “அம்மா… மகன்” என்றே அழைக்க தொடங்க, அவர்களும் பரஸ்பரம் “அம்மா” என்றும் “மகனே” என்றும் அழைத்துக் கொண்டனர்.
பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு அந்த முத்து மாணிக்கத்தை எப்போதாவது ஒரு தடவை சந்தையில் சந்திப்பான். “அம்மா சௌக்கியமா?” என்பான் அவளும் ஒரு தாயின் பரிவுடன் “நான் பெத்தெடுக்காத என் மவனே உடம்பைப் பார்த்துக்கப்பா!” என்பாள்.
பல வருடங்களுக்குப் பிறகு அந்த தாயை இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு இடத்தில் சந்திப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
நீண்ட அமைதிக்கு பிறகு லேசாய் செருமிய முத்து மாணிக்கம், “மகனே நல்லா இருக்கியாடா?” என்று கம்மிய குரலில் கேட்க, அவன் வெறுமனே தலையை மட்டும் ஆட்டி விட்டு,
“அம்மா….. நான் கிளம்புறேன்மா” என்றான்.
“ஏன்ப்பா?”.
மெலிதாய்ச் சிரித்தவன், “நான் மகன்… நீ தாய்… அதனால்!” என்றான்.
முத்து மாணிக்கம் தலை குனிய, பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி, “இது அம்மாவுக்கு மகன் கொடுக்கிற பணம்!” என்றான்.
மறுப்பே தெரிவிக்காமல் அதை வாங்கிக் கொண்டவள், அந்த ரூபாய் நோட்டை விரித்துப் பார்த்தாள்.
அதிலிருந்து காந்தியின் பொக்கை வாய் சிரிப்பில் திருமூர்த்தி தெரிந்தான்
வெளியே லாரி ஸ்டார்ட் ஆகும் சத்தம் மட்டும் கேட்டது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings