2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாஜிஸ்ட்ரேட் சிவஞானம், தன் வீட்டு வேலைக்காரன் சின்னமணி அருகில் அழைத்தார். கையிலிருந்த அழுக்குத் துணியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, பவ்யமாய் வந்து நின்றான் அவன்.
“என்னப்பா… நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மைதானா?” அவர் கேள்வியில் கண்டிப்பு நிறைந்திருந்தது.
வாய் திறந்து பதில் சொல்லக் கூட கூசி, அமைதியாய் நின்று அவரை உற்றுப் பார்த்தான் சின்னமணி. அந்தப் பார்வையே, “நீங்க எதைப் பத்திக் கேட்கறீங்க… எஜமான்?” என்று கேட்க,
“அதான்ப்பா… உன் மகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே?…” மேலும் கீழும் தலையை ஆட்டியபடி கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.
“அது… வந்து… ஆமாங்கய்யா…” கூனிக் குறுகிச் சொன்னான் சின்னமணி. அவன் முகத்தில் அவமான வியர்வை. உடல் மொழியில், இப்படியொரு பெத்து வளர்த்ததற்கான வெட்க அசைவுகள்.
“அது செரி… கூடவே இன்னொரு விஷயமும் கேள்விட்டேன்… நீதான் அவனை போலீஸூக்குக் காட்டிக் குடுத்தியாமே?…” தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி ஊதியபடியே கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.
ஒரு சிறிய அமைதிக்குப் பின், “ஆமாங்கய்யா… நாந்தான் அவனைப் போலீஸில் பிடிச்சுக் குடுத்தேன்!” இந்த வார்த்தைகளைச் சொன்ன போது சின்னமணியின் முகத்தில் ஒரு வெற்றிப் பெருமிதம் தெரிந்தது.
“ஏன்?… எதுக்காக அப்படிச் செஞ்சே?” விடாமல் கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.
“அஞ்சாறு நாளைக்கு முன்னாடி… மூலனூர் நகைக்கடைல கொள்ளை போன செய்தியை டி.வி.லே பார்த்தேன்… நகைக்கடை காமிராவுல சிக்கிய காட்சியை அந்தச் செய்தியின் நடுவில் காட்டினாங்க!… அதுல அரைகுறையாய்த் தெரிஞ்ச ஒரு கொள்ளையன் மூஞ்சி என் மகன் மூஞ்சியாட்டமே இருந்திச்சு!… நல்லா நாலஞ்சு தடவை திரும்பத் திரும்பப் பார்த்ததுல… அது என் மகன்தானோ?ன்னு எனக்கே சந்தேகம் வந்திச்சு… உடனே போலீஸூக்குத் தகவல் குடுத்தேன்…”
“ம்… அப்புறம்?” சிவஞானம் ஆர்வமாய்க் கேட்டார்.
“அப்புறமென்ன?… அவங்க உடனே வந்தாங்க!… அவங்க வந்த நேரத்துல இவன் வீட்டுல அழகாய்த் தூங்கிட்டிருந்தான்… தட்டி எழுப்பி விசாரிச்சாங்க… பயல் ஆரம்பத்துல “தாட்…பூட்”னு குதிச்சான்!… அப்புறம் போலீஸ்காரங்க விசாரிக்கற விதத்துல விசாரிச்சதும்… ஒத்துக்கிட்டான்.” சற்றும் தயங்காமல் சொன்னான் வேலைக்காரன் சின்னமணி.
அவனையே கூர்ந்து பார்த்த ஜட்ஜ் சிவஞானம், “நீ செஞ்ச காரியம் நல்ல காரியம்ன்னு பெருமைப்படறியா?…”
சின்னமணி ஏதோ சொல்ல வாயெடுக்க, “ஹும்… சொந்த மகனையே போலீஸுக்குக் காட்டிக் குடுக்கறது எவ்வளவு பெரிய கேவலமான செயல் தெரியுமா?… அதுவும் உன் மகன் கல்யாணமாகாத இளைஞன்.. அவனோட எதிர்காலமே கேள்விக்குறியாயிடுமே?”
“அய்யா… சொந்த மகனா இருந்தா என்னங்க அய்யா?… திருட்டுப் பயல்தானே அவன்?… அதுவும் ஊரார் பணத்தையெல்லாம் வாங்கிப் பாதுகாக்கற பேங்கிலேயே திருடறான்னா… அவனுக்கு தண்டனை குடுக்கறதுதானே நியாயம்?” ஆணித்தரமாய்ப் பேசினான் சின்னமணி,
“ம்ம்ம்… சரி சின்னமணி…. இத்தனை வருஷமா நீ எங்க வீட்டுல நல்ல முறையில் விசுவாசமா வேலை பார்த்ததுக்காக… இந்தக் கேஸை நான் எடுத்து… உன் மகனுக்காக வாதாடி அவனை தண்டனையிலிருந்து காப்பாத்தறேன்!… நீ என்ன சொல்றே?” தான் ஒரு தொழில் திறமைசாலி என்பதை அவரின் அந்தப் பேச்சு வெளிப்படுத்தியது.
பதிலேதும் சொல்லாமல் அந்த சின்னமணி யோசிக்க, “என்னப்பா… இப்பக் கூட… மகனைக் காப்பாத்தணும்னு தோணலையா உனக்கு?” ஜட்ஜ் சிவஞானம் கேட்க,
“அதெப்படிங்க அய்யா?… நீதிபதியான உங்க வீட்டுல பதிமூணு வருஷமா வேலை பார்க்கறேன்… ஊருக்கே நீதி சொல்ற மகாபிரபு நீங்க!.. சட்டத்தை உயிரா மதிக்கறவர்… உங்க வேலைக்காரன் நான்!… உங்க உப்பைத் தின்னு வளர்ந்தவன்… உங்க வளர்ப்புன்னே சொல்லலாம் என்னை… நானே நீதி தவறினா… அது உங்களுக்குத்தானே அய்யா கேவலம்?” கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னான் சின்னமணி.
பொட்டிலடித்தாற் போலிருந்தது மாஜிஸ்ட்ரேட் சிவஞானத்திற்கு. சட்டென எழுந்து, வியர்வை வடியும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, உள் அறைக்குள் சென்றார்.
சில நிமிடங்கள் கண்ணாடி முன் நின்று தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்தார்.
“த பாருப்பா!… நான் அந்த மாதிரி ஜட்ஜ் இல்லை!… என் கிட்ட அந்த வேலையெல்லாம் நடக்காது!… உன் கிட்டே சூட்கேஸ் வாங்கிட்டு தப்பான தீர்ப்பை எழுத நான் ஒண்ணும் அவ்வளவு கேவலமானவன் இல்லை!… ஒழுங்கா மரியாதையா நீ அனுப்பிய சூட்கேஸை உடனே வந்து எடுத்துட்டுப் போயிடு..!… இல்லேன்னா… நீ எனக்கு லஞ்சம் குடுக்க முயற்சி பண்ணினே!ன்னு சொல்லி அதுக்கும் சேர்த்து தண்டனை எழுதிடுவேன்!” சொல்லி விட்டு அவசரமாய் இணைப்பிலிருந்து விலகிய மாஜிஸ்ட்ரேட் சிவஞானத்தின் மனம் ஒருவித திருப்தியை உணர்ந்தது.
நீதி சொல்லும் நீதிபதிக்கே தான் நீதி சொல்லிக் கொடுத்து விட்ட விஷயம் தெரியாத சின்னமணி, மீண்டும் அழுக்குத் துணியை எடுத்துக் கொண்டு ஜன்னல் கதவுகளைத் துடைக்க ஆரம்பித்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings