in ,

நான் அவள் காதல் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சித்திரை மாதத்து வெயில், ரோட்டில் குடையுடன் நடந்து வந்து கொண்டிருந்த அன்பழகன் உடலில் வியர்வை கோடுகள் வழிந்தன. அலுப்புடன் வீட்டினுள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்த அன்பழகன், “சாரு தண்ணி கொஞ்சம் கொண்டாம்மா” என்று கூறியவர் துணுக்குற்றார்.

அவர் மனைவி சாருமதி இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. மனம் இன்னும் மனைவியின் பரிவைத் தேடுகிறது என நினைத்தவரின் கண்கள் பனித்தன.

“ம்… நீ நில்லுன்னா நிற்குமா எல்லாம் அவன் செயல்” என்று முணுமுணுத்தபடி எழுந்து பானையில் நீர் முகர்ந்து குடித்தார். 

டேபிளில் வைத்து இருந்த செல்போன் அழைக்கவும், “யாரு மதிய நேரத்தில” என கூறி போனை எடுத்து பார்த்தார்.

புது நம்பராக இருக்கவும் எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் சற்று நிதானித்தவர் ‘யாராவது தெரிந்த நபராக இருக்கப் போறாங்க’ என நினைத்து போனை ஆன் செய்தார்.  

போனில், “சார் நான் ராஜேந்திரன் உங்க பழைய மாணவன்” என்றது குரல்.

அன்பழகன் யோசனையுடன் “எந்த வருஷ பேட்ச் நீங்க” என்று கேட்டார்.

“சார் நான் 90 பேட்ச்” என்றதும்

“ஸ்கூல் ஃபர்ஸ்ட் ராஜேந்திரன் தானே” என்றார் அன்பழகன் புன்னகையுடன்.

“வாவ் கிரேட், என்ன மெமரி” என்ற ராஜேந்திரன் அவரை நலம் விசாரித்து விட்டு, “சார் எங்க பேட்ச் ரீயூனியனுக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்கோம். அதுல மாணவர்கள் மட்டும் இல்லாம ஆசிரியர்களையும் கலந்து கொள்ள அழைச்சுட்டு இருக்கோம் சார். நீங்களும் தவறாம அதில் கலந்து கொள்ள வேண்டும்” என்று ஆசையும் பாசமுமாக அழைத்தான் ராஜேந்திரன். 

“அதுக்கென்னப்பா கலந்துகிட்டா போச்சு, எங்க மீட்டிங்?” என்று வினவினார் அன்பழகன்.

“நம்ம ஸ்கூல்லதான் சார், அப்ப பணியில் இருந்த எல்லாருமே வரதா சொல்லியிருக்காங்க. உஷா டீச்சர் கூட வரேன் சொல்லி இருக்காங்க சார்” என்றான் ராஜேந்திரன் முடிவாக.

உஷா என்ற பெயரைக் கேட்டதும் மனம் துள்ளியதில் முகம் பூரித்தது. குரலில் அது தெரியாதவாரு மறைத்தபடி பேசினார் அன்பழகன். போனை நிறுத்தியவர் மனம் அவரின் வேதனையான இளமைக்கால நினைவுகளை அசை போட்டது.

கல்லூரியில் எம்.ஏ. முடித்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பி.எட். முடித்ததும் அவரது கிராமத்து மேல்நிலைப் பள்ளியிலேயே அன்பழகனுக்கு போஸ்டிங் ஆனது. இளம் வயது, மிடுக்காக அவர் கையில் பிரம்புடன் நடந்து வருவதை மாணவ மாணவியர் பிரமிப்புடன் பார்ப்பர். வகுப்பறையில் நல்ல நகைச்சுவையுடனும் கண்டிப்புடனும் பாடம் நடத்தியதால் மாணவர் அனைவருக்கும் அவர் ஒரு ஆதர்ச ஆசிரியராக திகழ்ந்தார். 

வீட்டிலும், “ஏன் தம்பி நல்ல வேலை கிடைச்சாச்சு, இனி கல்யாணத்துக்கு பெண் பார்க்க வேண்டியது தானே” என அவர் பெற்றோரும் அவரை நச்சரிக்க ஆரம்பித்தனர்.

அன்று பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் மறுநாள் தனக்கு லீவு கேட்பதற்காக ஆபீஸுக்கு வந்தவர், தலைமை ஆசிரியர் அறையிலிருந்து பளிச் முகத்துடன் வெளிவந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்து திகைத்துப் போனார்.

அதிலும், “சார் எய்த் ஏ க்ளாஸ் ரூம் எங்கே இருக்கு?” என அவரிடமே கேட்ட அந்தப் பெண்ணின் கண்களும் குரலும் அவருக்கு ஒரு வித மயக்கத்தை கொடுத்தது. 

அவர் பதில் கூறுவதற்குள், அங்கு வந்த பியூன் முருகன், “டீச்சர் வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்” என அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றான். 

அடுத்தடுத்த நாட்களில் அவள் பெயர் உஷா, படிப்பு பி.ஏ. பி.எட், பக்கத்து கிராமம்தான் அவள் ஊர் என அனைத்தையும் அறிந்து கொண்டார் அன்பழகன். அதன்பின் உஷாவை பார்க்கும் போதெல்லாம் குளிர் மழையில் நனைந்தார்.

உற்சாகத்தில் காதல் பாட்டுகளை விசிலடித்தார். நடைஉடை என அனைத்திலும் ஒரு நேர்த்தியுடன் மினுமினுப்பாக மிளிர்ந்தார். ஆனால் ஆறு மாதத்திற்கு மேலாகியும் தன் காதலை உஷாவிடம் கூற தயங்கினார் அன்பழகன். 

வீட்டில் அந்த மாற்றத்தை கவனித்த அவர் பெற்றோர் “என்னடா என்ன விஷயம்?” என விசாரித்த போது

அசடு வழிந்தபடி, “இன்னும் அவ மனசு புரியலைம்மா, அது தெரிஞ்சதும் சொல்றேன், நீங்க பொண்ணு கேட்டு போகலாம்” என்றார்.

ஆனால் அவர் பெற்றோரோ, “உனக்கு அந்தப் பெண்ணை பிடிச்சுருக்குதில்லை, மிச்சதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்று கூறி உஷாவின் வீட்டுக்கு ஒரு சுபநாளில் பெண் கேட்டு சென்றனர். 

“உஷாவுக்கும் அவங்க மாமா பையனுக்கும் திருமணம் நிச்சயம் ஆயிடுச்சுங்க. அவ படிப்பு முடிச்சு ஒரு வேலை கிடைச்சதும் கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு இருந்தோம். இப்ப வேலையும் கிடைச்சாச்சு, இனி கல்யாணம்தான்” என்றனர் உஷாவின் பெற்றோர் மகிழ்ச்சியுடன். 

“அடடா அப்படியா நாங்க எங்க பையனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்கோம். உங்க பொண்ணும் எங்க பையனும் ஒரே ஸ்கூல்லதான் வேலை செய்யறாங்க. அதான் வரன் தோதுபடுமேனு வந்தோம்” என்றனர் அன்பழகனின் பெற்றோர் சற்று வருத்தத்துடன். 

“உங்க பையனுக்கும் நல்ல பொண்ணு அமைஞ்சு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் கவலையை விடுங்க” என ஆறுதல் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர் உஷாவின் பெற்றோர். 

மறுநாள் ஸ்கூல் லைப்ரரியிலிருந்து வெளிவந்த அன்பழகனை உஷா எதிர் கொண்டாள். “சார் எங்க வீட்டுக்கு என்னைப் பெண் கேட்க உங்க பேரண்ட்ஸை அனுப்பினீங்களா?” உஷா நேரடியாகவே அன்பழகனிடம் கேட்டாள். 

“நான் அனுப்பலை அவங்களாதான் வந்து இருக்காங்க” என்றார் அன்பழகன் சற்று தடுமாற்றத்துடன்.

“என் மாமா வீட்டு ஆளுங்கெல்லாம் ஒரு மாதிரி சார்” என்ற உஷாவின் கண்கள் கலங்கியது போல் தோன்றியது அன்பழகனுக்கு. மேலும் அவர் பேச இடமளிக்காமல் நகர்ந்து போனாள் உஷா. மனம் வருந்தினார் அன்பழகன். 

விபரம் தெரிந்து பள்ளியில் கண் காது மூக்கு வைத்து மனம் போனபடி பேசினர். அன்பழகன் தன் பெற்றோரிடம் உடனடியாக தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி கூற ஒரே மாதத்தில் அழகும் குணமும் நிறைந்த சாருமதியை கரம் பிடித்தார்.

அந்த வாரத்திலேயே உஷாவுக்கும் அவள் மாமன் மகனுக்கும் திருமணம் நடந்தது. அடுத்த மாதத்தில் உஷா பக்கத்து டவுன் பள்ளிக்கு மாற்றல் வாங்கிச் சென்று விட்டாள். 

‘அதுக்கு பிறகு அந்த பெண்ணை நான் பார்க்கவேயில்லை’ நினைவலைகளிலிருந்து மீண்டு ஒரு நெடிய பெருமூச்செறிந்தார் அன்பழகன். 

அந்த பள்ளி வளாகம் பழைய மாணவர்களின் ரீயூனியனுக்காக நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பதின்ம வயதினராக படித்தவர்கள் இன்று நன்கு முதிர்ந்த இளைஞர்களாக சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியாத வியக்கத்தகு தோற்றம். அன்பழகன் அனைவரிடமும் நலம் விசாரித்தார். ஆனால் மனம் மட்டும் உஷாவின் வரவுக்கு ஏங்கியது.

“இது என்ன புதுவிதமான உணர்வு, அவள் மணமானவள்” ஏங்கிய மனமே இடித்துரைத்து. நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அனைத்து ஆசிரியர்களையும் வரவேற்று மேடையில் அமர்த்தினர்.

அவர்களுடனான தங்களது அனுபவங்களை, பழைய நிகழ்ச்சிகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது ஒரு மாணவி உஷா டீச்சர் அமர்ந்திருந்த வீல் சேரை மேடைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தினாள்.

உஷாவைப் பார்த்து அன்பழகன் விக்கித்துப் போனார். வாழ்க்கையின் வலிகள் அவள் தோற்றத்தை வெகுவாக மாற்றியிருந்தது. அமர்ந்தபடியே அனைவரையும் கை குவித்து வணங்கினாள் உஷா. 

அன்பழகனைப் பார்த்த அவள் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டது. மாலை, மரியாதை, நினைவு பரிசுகள், உணவு என நிகழ்ச்சி நிரல் நீண்டது. நடுவில் மேடையிலிருந்து இறங்கி வந்த அன்பழகன் உஷாவிடம், “எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரித்தார். 

கலங்கிய கண்களுடன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்ட உஷா, “தானா தேடி வந்த மணியை நான் தவற விட்டுட்டேன் அன்பு சார்” என்றாள் தளுதளுத்த குரலில்.

சிலிர்த்த மனத்துடன், “நானும் முயற்சிக்கலை” என்ற அன்பழகன், “போனது போகட்டும் உங்க கணவர் எப்படி இருக்காரு உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?” என விசாரித்தார். 

“சந்தேகப் பேயான குடிகார கணவனை திருத்த முயற்சித்து என் கால் ஒடிந்ததுதான் மிச்சம். அவரும் இறந்து பல வருடங்களாகி விட்டது. ஒரே மகள் அவளும் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டாள்” என தன்னைப் பற்றி கூறியவள், “தனிமை மிகக் கொடுமை அன்பு சார்” என்றாள் உஷா முடிவாக.

அன்பழகனும் அவர் மனைவி இறந்ததைப் பற்றியும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதையும் உஷாவிடம் பகிர்ந்து கொண்டார். “அப்ப நீங்களும் தனியாத்தான் இருக்கீங்களா?” என்றாள் உஷா கவலையுடன். 

இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர். விழா முடிந்து அனைவரும் விடைபெறத் தொடங்கினர்.

உஷாவின் அருகில் வந்த அன்பழகன், “தனிமையின் கொடுமையை தவிர்க்க நாம ஏன் சேர்ந்து வாழக் கூடாது” என்றார் அவளிடம் கெஞ்சும் குரலில்.

“இந்த நிலையிலா?” என்று தன் சக்கர நாற்காலியை காண்பித்தாள் உஷா.

“எந்த நிலையிலும் நண்பர்கள் சேர்ந்தே இருப்பர்” என்று கூறிய அன்பழகன் அவளின் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். 

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பயத்தைத் தூக்கிப் பரணில் போடு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை