எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பா அந்தத் தகவலைச் சொன்னதும் ‘ஜிவ்”வென்று சந்தோஷம் ரத்த நாளங்களில் பரவ ஆகாயத்தில் சிறகடித்தாள் நந்தினி.
“த பாரு நந்தினி… உன்னோட விளையாட்டுத் தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு… இனிமேல் பெரிய பொண்ணா…அடக்க ஒடுக்கமா..லட்சணமா… நடந்துக்க… மாப்பிள்ளை ரகு உனக்கு சொந்த அத்தை மகனாயிருந்தாலும் நெறையப் படிச்சவரு… அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியர் உத்தியோகம் பார்க்கிறவரு…. ரொம்ப கௌரவமானவரா இருப்பாரு… அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் இருக்கணும்… ஞாபகத்துல வெச்சுக்க…”
தலையாட்டி மகளை நெருங்கி வந்து, “இருபத்தஞ்சாம் தேதி இந்தியா வர்றதா கடிதம் போட்டிருக்காரு… ஒரு மாசம் விடுமுறையாம்… வந்ததும் ‘சட்டு..புட்டு’ன்னு கல்யாணத்தை முடிச்சுட்டு அவரு மட்டும் கிளம்பிடுவாராம்… அப்புறம் மூணு மாசம் கழிச்சு… ஏற்பாடுகளையெல்லாம் பண்ணிட்டு உன்னைய அழைச்சுக்குவாராம்….ம்ம்ம்… இன்னிக்குத் தேதி பத்து… அப்படின்னா… இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு..” ஒருவித பரபரப்பிற்குள்ளானார் வெள்ளிங்கிரி.
உள்ளுர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். இளம் வயதிலேயே மனைவியை இழந்தும் தன்னுடைய ஒரே மகள் நந்தினிக்காக வேண்டி மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டியவர். தன்னிடம் படித்த தன் அக்கா மகன் ரகு இன்று அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியராக இருப்பது அவருக்குப் பெருமையாக இருந்தது. அதைவிட சொந்தம் விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக தன் தம்பி மகள் நந்தினியை அவனுக்குக் கட்டி வைப்பதில் உறுதியாக இருக்கும் தன் அக்காளை நினைக்கையில் பெருமையாக இருந்தது.
அப்பா சென்றதும் தன் அறைக்குள் புகுந்து படுக்கையில் மல்லாந்தவள் மேலே சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தாள்.
“அமெரிக்காவுல இருந்து வர்றவரு… அதிலும் ஒரு காலேஜ் புரபஸர் வேற… இங்கிலீஸ் சும்மா வெளுத்துக் கட்டுவாரு… என்னோட இங்கிலீஸோ பட்லர் ரகம்.. இதை வெச்சுக்கிட்டு அவருகிட்ட எப்படிப் பேசுவேன்… பேசினா சிரிச்சுடுவாரே… ம்ஹூம்…. கூடாது… மொத வேலையா என்னோட இங்கிலீஸை சரி பண்ணணும்!… உடனே ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ்ல சேர்ந்துடணும்.. அதே மாதிரி…. இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புக்ஸ் நெறைய வாங்கிப் படிக்கணும்…. அதான் இன்னும் பதினஞ்சு நாள் இருக்கல்ல… அதுக்குள்ளார டெவலப் பண்ண முடியாதா என்ன?..”
மறுநாளே ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸில் சேர்ந்து விட்டுத் திரும்பியவளை கடுப்புடன் பார்த்தார் வெள்ளிங்கிரி.
“ஏம்மா… நீ என்ன ஒரு வெளிநாட்டுக்காரனையா திருமணம் பண்ணிக்கப் போறே…. நம்ம ரகுவைத்தானே கட்டிக்கப் போறே?… அவனுக்குத் தமிழ் தெரியாதா என்ன?”
“அப்பா… நீங்க தமிழ்…தமிழ்ன்னு எப்பப் பார்த்தாலும் தமிழையே கட்டி அழாதீங்க!… வரப் போறது அமெரிக்காவுல காலேஜ் புரபஸரா இருக்கற அல்ட்ரா மாடர்ன் ரகு! தமிழையெல்லாம் சுத்தமா மறந்துட்டு நுனி நாக்கு ஆங்கிலத்துல வெள்ளைக்காரனாட்டம் பொளந்து கட்டப் போற ரகு..”
“சரி… என்னமோ பண்ணு போம்மா” அதற்கு மேல் வாதிட விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தவரை உரக்க அழைத்து நிறுத்தினாள்.
“அப்பா… இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புக் வாங்கணும்… அதுக்கு ஆயிரம் ரூபாய் வேணும்!… இன்னும் பதினாலு நாள்தான் இருக்கு… அதுக்குள்ளார நான் என் இங்கிலீஸை டெவலப் பண்ணியாகணும்”
அவள் செயல்பாடுகளில் விருப்பமில்லாத போதிலும் அவள் ஆசையைக் கெடுக்க மனமில்லாத வெள்ளிங்கிரி பணத்தை எடுத்து அவள் கைகளில் திணித்தார்.
அடுத்து வந்த நாட்களில் புத்தகமும் கையுமாகவே திரிந்தாள் நந்தினி. இரவெல்லாம் கண் விழித்துப் படித்தாள். தனக்குத் தானே பேசிப் பேசி பிராக்டீஸ் செய்தாள். அவளது நடவடிக்கைகளைக் கண்டிக்கவும் முடியாமல் கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் உழன்றார் தந்தை.
இருபத்தைந்தாம் தேதி. காலை நான்கு மணிக்கே எழுந்து பரபரப்பானாள் நந்தினி. “அம்மா… மாப்பிள்ளை சென்னை வந்து…. அங்கிருந்து நம்ம ஊருக்கு வந்து… அவங்க வீட்டுக்குப் போயிட்டு அப்புறம்தான் இங்க வருவாரு…எப்படியும் சாயந்திரமே ஆயிடும்மா…… நீ காலையிலிருந்தே பறக்கறியே” சொல்லிவிட்டு விட்டுச் சிரித்தார்.
நாணத்தால் முகம் சிவந்தவள். ‘டாட்… அவரைப் பார்த்ததும் “ஹாய்…ரகு” ன்னு சொல்லட்டுமா.. இல்லை… “ஹாய் டார்லிங்” ன்னு சொல்லட்டுமா?”
தலையிலடித்துக் கொண்டு, நகர்ந்தார் வெள்ளிங்கிரி.
மாலை ஆறு மணி வாக்கில் டாக்ஸியில் வந்திறங்கிய ரகு நிதானமாய் வீட்டிற்குள் நுழைந்து, “மாமா… நந்தினி….” என்றழைக்க, உள் அறையிலிருந்து நந்தினியும் பின்புறத்திலிருந்து வெள்ளிங்கிரியும் ஒரே நேரத்தில் வந்து நின்றனர்.
தன் மாமாவைக் கண்டதும் நேரே சென்று குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தவன் இரு கைகளையும் கூப்பியபடி “வணக்கம் மாமா… நல்லா இருக்கீங்களா?” வெகு பவ்யமாகக் கேட்டான்.
அவர் தலையாட்டியதும் நந்தினி பக்கம் திரும்பி “வணக்கம் நந்தினி.. எப்படி இருக்கே?” என்று கேட்க
நந்தினி, தடுமாறி… “ஐ யாம் பைன்” என்றாள்.
மெலிதாய் முறுவலித்த ரகு “ஏன் நந்தினி… உனக்கு தமிழ் தெரியுமல்ல?..பிறகேன் ஆங்கிலம்?” எனக் கேட்டான்.
“அது… நீங்க அமெரிக்காவுல ….”
“ஆமாம்… நான் அமெரிக்காவுலதான் இருக்கேன் அங்க ஆங்கிலம்தான் பேசறேன்… அது தொழில் நிர்ப்பந்தம்… அதுக்காக எல்லா இடத்திலேயும் எல்லாரோடவும் ஆங்கிலம்தான் பேசணும்னு அவசியமில்லையே… உண்மையைச் சொல்லப் போனா நான் தொழில் நேரத்துல மட்டும்தான் ஆங்கிலத்தை உபயோகிக்கறேன்… மத்த எல்லா நேரங்களிலும்… எல்லா இடங்களிலும்.. நம்ம தாய் மொழிதான்…”
“அது… மத்தவங்களுக்குப் புரியணுமே” நந்தினி தன் மேதாவிலாசத்தைக் காட்டினாள்.
“ஆமாம்…பல அமெரிக்கர்கள் என்னிடம் வாக்குவாதமே பண்ணியிருக்காங்க…. “எங்களுக்குத் தெரியாத மொழில பேசினா எங்களுக்கு எப்படிப் புரியும்”ன்னு… அதுக்கு நான் “உங்களுக்கு உண்மையிலேயே நான் பேசறது புரியணும்ன்னு ஆசையிருந்தா… பழகணும்னு பிரியமிருந்தா… என்னோட நட்பு அவசியம்ன்னு நீங்க நெனைச்சா…. எங்க மொழியக் கத்துக்கங்க… .நானே கத்துத் தர்றேன்…” என்பேன்….. ‘இப்ப என்னால அங்க ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தமிழ் கத்துக்கிட்டாங்க… என் கூடத் தமிழ்லதான் பேசறாங்க”
வெள்ளிங்கிரிக்கு புல்லரித்தது.
“நான் தமிழாசிரியனா இருந்து நம்ம ஆளுங்களுக்குத்தான் தமிழ் கத்துக் கொடுத்தேன்… ஆனா என் மாணவன் வெளிநாடு போயி… அங்கிருக்கறவங்களுக்கே தமிழ் கத்துக் கொடுத்திட்டானே…” உணர்ச்சி மேலிட ரகுவை நெருங்கி வந்து தழுவிக் கொண்டவர் “பாத்தியாம்மா…நந்தினி… என்னோட மாணவனை…” என்றார் தழுதழுத்த குரலில்.
அவள் பதில் பேசாது விழிக்க “நந்தினி… நம்ப தாய் மொழியை நாமே உதாசீனப்படுத்தினா மத்தவங்க எப்படி மதிப்பாங்க?… யோசிச்சுப் பாரு… நான் பிடிவாதமா தமிழ்ல பேசியதனாலதானே… அந்த அமெரிக்கர்கள் நம்ப தமிழ் மொழியைக் கத்துக்கிட்டாங்க?”
நந்தினியின் மனம் அந்த இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகங்களை நெருப்பிலிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings