2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“எங்கையாவது பராக்கு பார்த்துக்கிட்டு நிக்காம, கால காலத்தில கெளம்பி பாக்கிற சோலிய பார்த்திட்டு வா” என தனக்கே உரிய அதிகார தோரணையில் கூறினாள் என் மனைவி.
“லொக் லொக்” என்ற சத்தத்தில் தன் இருப்பினை உறுதி செய்தாள் என் மகள்.
“தாத்தா வர்ரப்ப சீனி முட்டா வாங்கிட்டு வா” என்று அரைஞாண் கயிறுக்கு அடங்கா அரைக்கால் டவுசரை பிடித்துக் கொண்டு கட்டளையிட்டான் என் பேரன்.
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது, சின்ன பிள்ளைகள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதை பார்க்கும்போது என்னவோ எனக்கு என் மகளின் ஞாபகம் வந்தது. பெயர் சொல்ல ஆண் பிள்ளைகள் இருந்தபோதும் என் மகளின் மீது எனக்கு அதிக பிரியமுண்டு.
என்னை பெற்றவளை அச்சு எடுத்தாற் போல் முகம். பெற்றவளை தாலாட்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்த பாக்கியமாய் என் மகள் பாக்கியம் கிடைத்தாள். என் மகள் ஆசைபட்டதை எல்லாம் என் சக்திக்கு மீறியாதாக இருந்தாலும் நான் வாங்கி கொடுக்க தயங்கியதில்லை. பொட்ட பிள்ளைக்கு இவ்வளவு இடங்கொடுக்காதே என அடுத்தவர்கள் சொன்னாலும், என் மனம் ஏற்றுக்கொண்டதில்லை.
திருமணம் முடிக்கும் காலம் வந்தபோது அடுத்த வீட்டில் கொடுத்தால் என் பிள்ளை கஷ்ட்டபடுவான்னு என் தங்கச்சி மகனுக்கே கலியாணம் என் சத்துக்கேத்தளவில் நடத்தினேன். நல்லா வாழ்ந்துக்கிட்டு இருந்தவக வாழ்க்கையில விதி, பேர் தெரியா நோவின் வடிவில் வந்தது.
“இந்தா மாமா சீக்காளி கூட என்னால குடும்பம் நடத்த முடியாது. நீங்களே உங்க வீட்டில உங்க பிள்ளைய வச்சு பார்த்துங்க” என மொத முறையா என் மருமகன் முகத்துக்கு நேரா சொல்லும்போது, என் அடி வயித்தில யாரோ சம்பட்டியை வச்சு அடித்தது போல இருந்தது.
என் மகளை பார்க்கும் கடமை எனக்கிருக்கிறது, அதை போல அந்த கடமையும் உரிமையும் அவனுக்கில்லையா என ஆதங்கம் வந்தது. என்ன செய்யிறது ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டி மாதிரி, இந்த மாப்பிள்ளைகளுக்கெல்லாம் இளிச்சவாயங்க பொண்ண பெத்தவங்க தானே?.
என் மகளை தீத்து விடணும் என்பதில் குறியா இருந்தவனை கெஞ்சி கூத்தாடி நான் அழுத கண்ணீருக்கு முப்பிடாரி தாயே சாச்சி.
“வயக்காட்ட எம்பேருல எழுதி வச்சிருங்க, சீக்கு தீந்ததும் வச்சி வாழ்ந்திக்கிறேன், இல்லைனா…” என அவன் பேரம் பேசும் போது, நான் மாட்டு சந்தையில ஏவாரம் பார்ப்பதை போல உணர்ந்தேன்.
முத்தாலம்மன் கோவிலருகே கரிசல் பூமியின் இளவரசர்கள் நாடு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆர்பாட்ட சத்தத்தினால் என் மனக்காட்சி தடைபட்டது.
சிறிது நேர காத்திருப்பிற்கு பின் எழுமலையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாண்டியன் பேருந்து வந்தது. நானும் மனுச மூட்டைகளோட மூட்டையாகி பயணித்தேன். உசிலம்பட்டி ஆஸ்பத்திரியில டாக்டரிடம் பரிசோதனை காகிதத்த காட்டினேன். என் தலையெழுத்து மாதிரி எதோ புரியாத பாஷையில நோட்டில எழுதி கையில திணித்தார். மருந்து வாங்கும் போது, “இன்னும் இரண்டு மாசம் மாத்திரய கரக்கட்டான தேரத்துக்கு சாப்பிட்டா சரியாப்போகும்” என்று சன்னலுக்கு பின்னாலிருந்து கேட்ட குரலுக்கு சொந்தக்காரரை கையெடுத்து கும்பிடணும் போலிருந்தது.
ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்து விறுவிறுன்னு என் கால்கள் சீனி முட்டாய் கடையை நோக்கி நடந்தது. ஆம் வாழாவெட்டின்ற பட்டம் இன்னும் ரெண்டே மாசந்தான் என் மக சுமக்க வேண்டும். ஊருக்கு செல்லும் வண்டி பஸ் ஸ்டாண்டில் உள்ளே வந்து கொண்டு இருந்தது. துண்ட போட்டு இடம் பிடித்தவர்கள் ஆக்கிரமித்தது போக எஞ்சிய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டேன். பஸ்ஸில கூட்டம் எக்கி தள்ளியது.
பேருந்து புறப்பட தயாராக இருந்த நேரத்தில யாரோ தெரிஞ்சவுக முன்னாடி படி வழியே ஏறுன மாதிரி இருந்தது. வயசான கண்ணுக்கு கூட்ட நெரிசல்ல ஆள் அடையாளம் காங்க முடியலை. ஒவ்வொரு ஊருலையும் பஸ் தான் சுமந்து வந்த சுமையை இறக்கி கொண்டிருந்தது. இப்போது பஸ்ஸில் முன்னாலிருந்தவர்களை பேச்சு சத்தத்தின் மூலம் அடையாளம் காண முடிந்தது.
என் தங்கச்சி குடும்பந்தான். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். இப்போது எந்த விஷேசமும் இல்லையே என மண்டைக்குள்ளே கேள்விகள் எழுந்தன. அவர்களாக நம்மை பார்த்து பேசாதவரை நாம் பேசக் கூடாது என வைராக்கிய நெஞ்சம் தடுத்தது. பொண்ண பெத்தவனுக்கு எதுக்குடா வீராப்பு என பாச நெஞ்சு அவர்களிடம் சென்று பேச தூண்டியது.
“என்னம்மா எப்படி இருக்கீங்க?”ன்னு என் கூட பிறந்தவகிட்ட கேட்டேன்.
“ம்ம் இருக்கோம்” என்ற பதிலில் என் தங்கை என்பதை விட என் சம்பந்தி என்ற தோரணை தெரிந்தது. என் மருமகன் உட்பட யாரும் சரியாக பேசவில்லை. எப்போதும் வாயடிக்கும் என் தங்கையின் மகள் ஏதோ பறி கொடுத்தது போல உட்கார்ந்திருந்தாள்.
“என்னம்மா என் மகன் வரலையா?” என அவளின் கணவரை பற்றி தங்கச்சி மகளிடம் விசாரிச்சேன். அவள் காதில வாங்காம சன்னல் வழியே தன் பார்வையை ஓடவிட்டாள். நான் என்னுடைய இருக்கையில் வந்தமர்ந்தேன். என் தங்கச்சி வீட்டார் கட்டளையில் அவர்கள் ஊர் செல்வதற்காக இறங்கி விட்டார்கள்.
பஸ் வளைந்து தன் பயணித்த பாதையில் சிறிது தூரம் திரும்பி, ஊரை நோக்கி சென்றது. “என்னா பங்காளி தங்கச்சி வீட்டாளுக எங்க போயிட்டு வராகனு கொழப்பமாக இருக்கா?”ன்னு பழகிய குரல் கேட்டது. ஆமாப்பா என பதில் ஆர்வத்துடன் என் மனதிலிருந்து வந்தது.
“நம்ம பிள்ளைக்கு வந்த மாதிரி தங்கச்சி மகளுக்கும் அதே சீக்கு வந்திருச்சுப்பா. வச்சு வாழமாட்டேன்னு அவ வாழ போன வீட்டில பிரச்சின பண்றாங்க, இப்பத்தாம் போயி பைசல் பண்ணிட்டு வாரோம். வைத்தியம் பார்த்திரது அப்புறம் திருமங்கலத்திலிருக்கிற வீட்டை எழுதிக் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணின பின்னாடி தான் வச்சு வாழ சம்மதிச்சாங்க” என கடகடன்னு பங்காளி பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும்போது
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான் – வீணில்
மனம் தடுமாறுகிறான்
இறைவா… இறைவா… என சௌந்தராசன் குரல் ஒலிபெருக்கியின் மூலம் காற்றில் கரைந்து வந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை 👌👌👌 ரசித்துப் படித்தேன்
நன்றி.