எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மா.. என் கூட கிளம்பி வந்துடு..ம்மா..”
ரவி தனது அம்மாவிடம் பத்தாவது முறையாக கோரிக்கை வைத்தான்.
“எங்கேடா வரச் சொல்ற..?”
தாய் மீனாக்ஷி கேட்க..
“என்கூட மெட்ராஸ் வந்திடுமா.. நான் உன்னை காப்பாத்திறே..ம்மா” அழுகையோடு பதில் வந்தது ரவியிடமிருந்து.
“இத்தனை வருஷம் காப்பாத்திட்டியாக்கும்.. இத்தனை வருஷம் நாங்க உசிரோட இருக்கேனா, இல்லயானு உனக்கு அக்கறை இல்ல.. இனிமேலும் உன்னை நான் நம்புற மாதிரி இல்ல..”
தாயின் நியாயமான கோபம் சுள்ளென உரைத்தது.
***
தென்காசி தாலுகா சுப்பனாம்பட்டி கிராமத்தை சார்ந்த கோவிந்தன் – மீனாக்ஷியின் ஒரே மகன் தான் ரவி. வசதியற்ற குடும்பம், ஆனால் பெற்றோருக்கு பிள்ளைமீது அளவுகடந்த பாசம்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த போது, முதல் முதலாக கோவிந்தன் ‘தட்டிக்’ கேட்ட போது, வீட்டில் இருந்த பணத்தையும், அம்மாவின் சங்கிலியையும் எடுத்துக் கொண்டு மதுரைக்கு பறந்தவன் தான்.
கைக்காசு செலவழிந்த பிறகு மதுரையின் உல்லாச வாழ்க்கை பிடித்துப் போக, வீட்டுக்கு திரும்பிச் செல்ல மனம் இல்லாமல், கூடா நட்போடு சேர்ந்து முதலில் பிக் பாக்கெட், அப்புறம் செயின் திருட்டு என இறங்கி, அகப்பட்டு, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வாசம். அங்கிருக்கும் போதே வார்டனை தாக்கிவிட்டு தப்பியோடி, ஒரு தாதாவிடம் அடியாளாக அடைக்கலம். அவ்வப்போது மீண்டும் போதைப் பொருள் விற்பனை வழக்குகளில் கைது, பிணை, விடுதலை என நான்கு ஆண்டுகள் ஓடியும் வழக்குகள் முடியவில்லை.
திருந்தி, உழைத்து வாழலாம் என நினைத்தால் அவனது பழைய வரலாறு தெரிந்த யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாரில்லை.
ஒரு வழியாக சென்னை வந்து உழைத்துப் பிழைக்க ஆரம்பித்தான். அங்கே உள்ள கோடிக்கணக்கான முகங்களில் தானும் ஒன்றாக கரைந்து போனான்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு காய்கறி மண்டியில் வேலை. இரவு அங்கேயே படுத்துக் கொள்வதால், வாடகை செலவு இல்லை. கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டதால், கையில் பணம் ஓரளவு மிச்சம் இருந்தது. ஒரு வருஷம் கழித்து, ஊருக்குப் போய் அப்பா, அம்மாவை பார்க்க சென்றவனுக்கு அங்கே சோதனை காத்திருந்தது.
***
நான்கைந்து ஆண்டுகள் கழித்து ஊருக்குச் செல்ல தென்காசியில் பஸ் ஏறிய ரவி, தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான். ஓரிருவர் இவனைப் பார்த்ததும் அவர்களுக்குள் ஏதோ குசுகுசு வென பேசிக் கொண்டனர். அவ்வளவுதான்.
கிராமத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்த போது எதிர்பட்ட சொர்ணமுத்து தாத்தா தான் முதலில் பேசினார்..
“ஏல.. கோவிந்தன் மகனா நீ..?”
“ஆமா.. தாத்தா..”
“நீ பரிட்சையில ஃபெயில் ஆனதுக்கு உங்கப்பன் தண்டிச்சான்.. நீ ஊரை ஓடிப்போன.. உங்கப்பன் ஒத்த பிள்ளையை ஒழுங்கா வளர்க்கலேனு புலம்பிக் கிட்டு இருந்து, கடைசி வரைக்கும் உன் முகத்தை திரும்ப ஒரு தடவை பார்க்காம செத்தும் போனான்..”
“என்ன?.. அப்பா இறந்து போய்ட்டாரா..?”
ஷாக் கானான் ரவி. அப்பாவின் முகம் நினைவுக்கு வந்தது. தன் மீது எவ்வளவு பிரியமாக இருந்தார்? ஒரே ஒரு நாள் அடித்தார் என்று ஊரை விட்டு ஓடிப் போனோமே..?
“ஆமாடா.. அவன் உயிரோட இருக்கும்போதே நான் கூட சொல்லிப் பார்த்தேன்.. ஏதாவது போலீஸ் ஸ்டேசன் ல புகார் குடுறானு.. “
“புகார் குடுத்தாங்களா..?” என்றான் ரவி, அப்படி
கொடுத்திருந்தா கூட நம்மை சீக்கிரம் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திருப்பாங்களே, நம்ம வாழ்க்கை இவ்வளவு விரயம் ஆகி இருக்காதே என்ற நிராசையில்.
“உங்கப்பன் உறுதியா சொல்லிட்டான்.. ஒரு நாள் அடிச்சதுக்கே ஓடிப் போன பயல தேடி அலையனுமாக்கும் னு சொல்லிட்டான்.. ரெண்டு வருசம் முன்னாடி செத்துப் போனான்.. உங்க பெரியம்மா பையன் தான் கொள்ளி வைச்சான்.. உங்கம்மா மட்டும் உசிரை கையில பிடிச்சிட்டு இருக்கா.. போய்ப் பாரு..” என்று சொல்லியபடி நடந்தார் சொர்ணமுத்து தாத்தா.
வீட்டை அடைந்த ரவியை முதலில் அவனது அம்மா திட்டித் தீர்த்தாலும், கடைசியில் தாய்ப் பாசம் அவனிடம் இணக்கமாகப் பேச வைத்தது.
***
அம்மாவை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, பொதிகை ரயில் பிடித்து அம்மாவோடு சென்னைக்கு வந்தான் ரவி.
எக்மோரில் இறங்கி அம்மாவை உட்கார வைத்துவிட்டு ஆட்டோ பார்த்து கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் தோளில் ஒரு கை விழுந்தது.
“என்ன ரவி.. இங்கே தான் இருக்கியா..?”
என கேட்டவன் காளி, மதுரை தாதா வின் கையாள்.
“காளி.. என்னை விட்டுறு.. உங்க சகவாசமே வேண்டாம்னு தான் இங்கே வந்தேன்.. ஒரு வருசமா உருப்படியா இருக்கேன்.. எங்க அம்மாவை கூட ஊரில இருந்து கூட்டிட்டு வந்திட்டேன்.. “ என்றான் ரவி.
“உன் கதையெல்லாம் அந்த கார் ல இருக்கிற நம்ம பாஸ் கிட்ட சொல்லிட்டுப் போ..”
“நான் வர்ல.. “
காளி இழுக்க, ரவி பிடிவாதமாக மறுக்க, சிறிது நேரத்தில் கைகலப்பாகி அங்கு வந்த போலீஸ் இருவரையும் அள்ளிக் கொண்டு சென்றது.
நடந்தது எதுவும் தெரியாத மீனாக்ஷி, வெளியே போன மகனை காணவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்க, ரவியின் மீது இருந்த பழைய வழக்குகளை தூசி தட்டிக் கொண்டிருந்தது காவல்துறை. அம்மா ஊரிலேயே இருந்திருந்தால், நம்முடைய இன்னொரு முகத்தைப் பற்றித் தெரியாமல் கொஞ்சம் நிம்மதியாகவாவது இருந்திருப்பாளே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் ரவி.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings