2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
என்ன ஆச்சு? ‘நீ என்ன தப்பு செய்த’ என்று புவனேஷ் கேட்டான்.
புவனேஷின் இரு கைகளைப் பிடித்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுகிறாள் செண்பகம். அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் நின்ற பாடில்லை.
இப்போது அவள், தன் மெல்லிய குரலில் பேசத் தொடங்குகிறாள்.
முதல் நாள் அன்று காமேஷ் தனது ஆட்டோவில் செண்பகத்தை கடத்தி சென்ற அந்த நிகழ்வை புவனேஷிடம் சொல்லாமல் மறைத்து விட்டு, இன்று நடந்த நிகழ்வுகளை மட்டும் சொல்ல ஆரம்பிக்கிறாள்.
“அப்பாக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு, காய்ச்சல் அனல் போல அடிச்சது. வேகமா மெயின் ரோட்டுக்கு வந்தேன், ஏதாவது ஆட்டோ வருமான்னு பார்க்கும் போதுதான் ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவில் கையை போட்டேன். ஆட்டோ என் பக்கத்துல வந்து நின்னுது.
அந்த ஆட்டோவில், ஆட்டோக்காரனும், ஆட்டோக்குள்ளே ஒருத்தனும் உட்கார்ந்திருந்தான். ஆஸ்பத்திரி வரைக்கும் ஆட்டோ வருமா என்று ஆட்டோகாரன்கிட்ட கேட்டேன். அந்த நேரத்துல ஆட்டோக்குள்ள இருந்தவன், என் கையை பிடிச்சு வேகமா ஆட்டோக்குள்ள இழுத்தான். என்னோட தலை, இடுப்பு வரைக்கும் ஆட்டோவுக்கு உள்ளவும், என்னுடைய கால் ரெண்டும் ஆட்டோவுக்கு வெளியவும் நீட்டிட்டு இருந்தது.
ஆட்டோவை வேகமா ஓட்ட ஆரம்பிச்சான். ஆட்டோவிற்கு உள்ளே இருந்தவன் ஒரு கையால என் வாய பொத்தினான். மறு கையால என் ரெண்டு கையையும் சேர்த்து பிடிச்சிகிட்டான். அந்த நேரத்துல எப்படியாவது தப்பிக்கணும்னு நினைச்சேன். ஆட்டோவில் இருந்து கீழே குதிக்கலாம்னு பார்த்தேன். கீழே குதிச்சா எனக்குதான் ஆபத்து. நான் என்ன தப்பு செஞ்சேன்? தப்பு செய்ய பார்த்தது அவங்கதான், அவங்களுக்கு தண்டனை கொடுக்காமல் என்னை நானே எப்படி தண்டிக்கலாம் என்று நினைச்சேன்.
அவனுடைய ஒரு கையால என் ரெண்டு கையை பிடிச்சிருந்த அவன் கையை, அவன் எதிர்பாராத நேரத்துல பலமா பிடிச்சு, அவனுடைய ஒரு கையை நல்லா முறுக்கினேன். அவன் வலியால கத்துக்கிட்டே என் வாயிலிருந்த கையை எடுத்து என் தலை முடியை பிடித்தான். நான் காப்பாத்துங்க… காப்பாத்துங்கன்னு… சத்தமா கத்தினேன். நான் கத்தியதை பார்த்து என் தலைமுடியை பிடித்திருந்த கையை மறுபடியும் வாயில வச்சு பொத்தினான். அந்த நேரத்துல என்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஆட்டோக்கு மறுபக்கம் இருக்குற சந்து வழியில அவனை வேகமா புடிச்சு தள்ளிட்டேன். தள்ளுன வேகத்தில் அவன் ஆட்டோக்கு வெளியே போய் விழுந்தான்.
ஆட்டோ போன வேகத்துக்கும், தார்ரோட்டுக்கும் அவனுக்கு பலமா தான் அடிபட்டிருக்கும். ஆட்டோவை வேகமா ஓட்டிட்டு போன ஆட்டோகாரனுடைய கழுத்தை இறுக்கி பிடிச்சேன். அவனுடைய தொண்டையை நல்லா அழுத்தினேன், தடுமாற்றத்துல ஆட்டாவை கொண்டு போய் பெரிய மரத்துல மோதுவது போல் சென்றது. மரத்தில் மோதுவதற்கு முன் ஆட்டோவை நிறுத்தினான். நான் ஆட்டக்காரனின் கழுத்தை இறுக்கியதால், மயங்கி விழுந்தான். ஆட்டோவிலிருந்து இறங்கி, ஆட்டக்காரனின் மூக்கில் கை வைத்துப் பார்த்தேன் மூச்சுக்காத்து உள்ளேயும் போகல, வெளியவும் வரல பயந்து போய் அங்கிருந்து வேகமா ஓடி வந்துட்டேன்” என்று கூறி முடித்தாள் செண்பகம்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த புவனேஷ், “உனக்கு ஒன்னும் ஆகல இல்ல'” என்று கேட்டான்.
“எனக்கு ஒன்னும் ஆகல, ஆனா பயமா இருக்கு”
“எதற்கும் நீ பயப்படாத நான் இருக்கிறேன். உனக்கு ஒன்னும் ஆகாது” என்று செண்பகத்திற்கு ஆறுதல் கூறினான் புவனேஷ்.
அந்த நேரத்தில், பலத்த ஹாரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று மெயின் ரோடு வழியாக சென்றது. அதற்குப்பின் போலீஸ் வேன் ஒன்று சென்றது, இதை பார்த்ததும் செண்பகத்திற்கு பயம் இன்னும் அதிகமானது. பயத்தில் இருந்த செண்பகத்திற்கு, புவனேஷ் கூறிய வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது.
“இதையே நினைச்சு கவலைப்படாத, போய் சாப்பிட்டு தூங்கு. நாளைக்கு வேலைக்கு வா, ஒண்ணும் ஆகாது பயப்படாதே” என்று சொல்லிவிட்டு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்புகிறான் புவனேஷ்.
வருத்தத்தில் இருந்த செண்பகத்தின் மனசு, புவனேஷ் சொன்ன வார்த்தைகளால் தெளிந்தது. தன் வீட்டிற்குள் சென்று உணவு சமைத்து, தன் குடும்பத்துடன் சாப்பிட்டு தூங்க சென்றாள்.
மறுநாள் விடிந்தது. தன் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துக் கொண்டு, தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றாள் செண்பகம்.
தன் வீட்டிலிருந்து மெயின் ரோடு வழியாக செல்லும் போது, ஒரு போலீஸ்க்காரர் செண்பகத்தை நோக்கி நடந்து வந்தார். அவரைப் பார்த்த உடனே செண்பகத்திற்கு கை கால் நடுக்கம் வந்து விட்டது.
செண்பகத்தின் அருகில் வந்த போலீஸ், “உன் வீடு எங்க இருக்கு?” என்று கேட்டார்.
பயந்தால் ஏதாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்த செம்பகம், கணத்த குரலில் “என் வீடு இங்கதான் இருக்கு” என்று கையை காட்டினாள், “இங்கிருந்து ரெண்டு நிமிஷம் நடந்தா என் வீடு வந்துரும்” என்று பதில் கூறினாள்.
“எதுக்கு சார் கேக்குறீங்க?” என்று செண்பகம் கேட்டாள்.
“நேத்து இந்த ரோட்ல ரெண்டு கொலை நடந்திருக்கு, அது பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா”
“சார் சார் எனக்கு ஒண்ணுமே தெரியாது” என்று பயந்த குரலில் சொன்னாள்.
“அதுக்கு நீயம்மா பயப்படுற”
“கொலைன்னு சொன்னீங்களே சார் அதான் பயந்துட்டேன்”
“கொலைன்னு சொன்ன வார்த்தைக்கே பயந்துட்டியா நீ, பெண்ணா பிறந்தா தைரியமா இருக்கணும்” என்று சொல்லிட்டு போலீஸ்கார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“சார் ஒரு நிமிஷம் நில்லுங்க. ஏதோ மரத்தில மோதி விபத்து ஆயிடுச்சுன்னு சொன்னாங்க, நீங்க கொலைன்னு சொல்றீங்களே”
“இங்க இருந்து கால் கிலோ மீட்டர் தூரத்தில் ஒருத்தன் அடிப்பட்டு செத்து கிடக்கிறான், வேறொருவன் ஆட்டோக்குள்ள செத்து கிடக்கிறான். அதுவும் மரத்தில் ஆட்டோ மோதி இருந்தா கூட விபத்துன்னு சொல்லலாம், ஆனா ஆட்டோ மரத்துல மோதல. எப்படி இருந்தாலும் இது விபத்தா? கொலையா? என்று நாளைக்குள்ள தெரிஞ்சிடும். ரெண்டு பேருடைய உடம்பையும் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சிருக்காங்க, பிரேத பரிசோதனை பண்ணிட்டாங்கன்னா எல்லாம் தெரிஞ்சுரும்” அப்படின்னு சொல்லிட்டு, போலிஸ் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.
செண்பகத்தின் மனதிற்குள் பயமும் பதட்டமும் நுழைய ஆரம்பித்து விட்டது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
‘நான் மாட்டிப்பேனா? போலீஸ் என்னை புடிச்சுடுமா? என்ன ஜெயில்ல போட்டு விடுவார்களா?’ என்று தனக்குள்ளே பயந்து கொண்டு, தன் குடும்பத்தை நினைத்து பார்க்கிறாள்.
‘நான் ஜெயிலுக்கு போயிட்டனா அப்பா என்ன பண்ணுவாரு, தம்பி என்ன பண்ணுவான்’ அப்படின்னு தன் குடும்பத்தை நினைத்து அழுதுகிட்டு, வேலை செய்யும் நிறுவனத்திற்கு செல்கிறாள் செண்பகம்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!






GIPHY App Key not set. Please check settings