2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சொந்தக் காலில் நிற்க விரும்பும் அரசு
“ஆம் கொஞ்சநாளாக என் பிஸினஸை கவனிக்க வர மறுக்கிறான். சொந்தக் காலில் நின்று தனியாக வியாபாரம் செய்யப் போவதாக சத்யாகிரகம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.”
“விட்டு விட வேண்டிய தானே?”
“நான் இவ்வளவு ஓடி ஓடி சேர்த்து வைத்திருப்பது யாருக்காக.. இந்த பிஸினஸ் சாம்ராஜ்யத்திற்கு எனக்கு ஒரு வாரிசு இல்லை என்றால் எதற்கு இவ்வளவு அலைச்சல், மனஉளைச்சல்.”
“கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள் ஜே.கே”
“பாபு உங்களுக்கு நன்றாகத் தெரியும், அவன் படிப்பு முடித்து ஓராண்டு தாண்டி விட்டது. நானும் இவ்வளவு நாளும் விட்டுப் பிடிப்போம் என்றுதான் நினைத்தேன். இனி பிந்த முடியுமா?”
“உங்கள் பையன் தோளுக்குமேல் வளர்ந்த பிறகு தோழன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.”
“அதற்காக சும்மா சோம்பேறியாக ஊரைச் சுற்றிக்கொண்டு திரிந்தால்…. ஆம் பாபு ஒன்று செய்யுங்கள். என் தங்கை பத்மினி வீட்டிற்கு நேரடியாகப் போய் என் பையன் அரசு இருக்கிறானா என்று பார்த்துச் சொல்கிறீர்களா?”
“சரி.” என்றது எதிர்முனை.
தொடர்பை துண்டித்ததும் திரும்பவும் செல்போன் பாடல் ஒலிக்க “ஹலோ” என்றார்.
“அப்பா நான் அரசு பேசுகிறேன்.” என்றது எதிர்முனை.
“அரசு எங்கிருக்கிறாய்?” கொஞ்சம் கோபமும், எரிச்சலும், ஆதங்கமும், பயமும் கலந்து குரலை அடக்கிக் கொண்டார்.
“நான் அத்தை வீட்டிலேயிருந்து பேசுகிறேன் அப்பா.” என்றான் தமிழரசு.
“ஏண்டா மூன்று நாட்களாக போனும் பண்ணாமல், செல்போனையும் அணைத்துப் போட்டு விட்டு.. வீட்டுக்கும் வராமல் அம்மா எவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டு” கோபமாக சப்தம் தெறிக்க….
“அப்பா….. சப்தம் போடுவதில் நீங்கள் சூரர்தான். பேசுங்கள்.” என்றான் தமிழரசு.
சுதாரித்துக் கொண்டு “ஏண்டா இப்படி அம்மாவைக் கஷ்டப்படுத்துகிறாய்.” என்றார் சன்னமாக.
“அப்படீன்னா என் அப்பா என்கிற ஜே.கே. என்னும் ஜெயக்குமார் அவர்களுக்கு அவர் மகன் திரு தமிழரசு காணாமற் போனதில் கவலை இல்லை அப்படித்தானே?”
“ஏன் அரசு…. ஏன் இப்படி பேசுகிறாய். அந்த செங்குப்தா உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தானா?”
“அப்பா அவர் உங்கள் மைத்துனர். உங்கள் மைத்துனர் என்ற மதிப்புக் கொடுங்கள். அவர் உங்கள் தங்கை பத்மினியின் கணவர்.”
“புடுங்கி…. அவன் என் தங்கையை வளைத்துப் போட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இப்போது என் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறான். அரசு நீ நேரே வீட்டிற்கு கிளம்பி விடுகிறாயா? இல்லையென்றால் நான் வந்து பிக்அப் பண்ணிக் கொள்ளட்டுமா?”
“நான் வரணுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது அப்பா.”
“என்ன சொல்கிறாய் நீ”
“நான் உங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க வரவில்லை. நான் என் காலில் சுயமாக நின்று சம்பாதிக்க வேண்டுமென்று ஏற்கனவே இரண்டு மூன்று முறை சொல்லி விட்டேன்.”
“ஓ! நீ இன்னும் அதிலேயிருந்து வெளியே வரவில்லையா. இத்தனை பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யம் உருவாக்கினதே உனக்காகத்தானே.”
“அய்யோ கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு.”
”கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால் அதன் அருமை புளித்திருக்காது மகனே.”
“நீங்கள் எனக்கு ஒரு முடிவு சொல்வதாக இருந்தால் மட்டுமே நான் வீட்டிற்கு திரும்புவதாக உத்தேசம்.”
“இதெல்லாம் போனில் பேசுகிற பேச்சாடா?”
“அப்பா….. பேச வைபது நீங்கள். இதைப்பற்றி எப்போதே பேசி முடிவெடுத்திருக்கலாம்.”
“உன்ன அந்த செங்குப்தா தூண்டி விடுகிறானோ என்று எனக்குள்ளே சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.”
“ஏன் வீணாக மாமாவைச் சந்தேகப்படுகிறீர்கள். அவரிடம் இதைப்பற்றி நான் பேசியது கூட கிடையாது.”
“சரி, வீட்டிற்கு வா. கலந்தாலோசிக்கலாம்.”
“ஆலோசனைக் கூட்டமெல்லாம் நிறைய முடிந்து விட்டது. இன்றைக்கு முடிவிற்கு வந்தாக வேண்டும்.”
“சரி..வா…” போனை துண்டித்து யோசனை செய்தவாறே வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.
மும்பைக்கு வந்து ஒவ்வொரு பைசாவிற்காக, ஒரு நேர சாப்பாட்டிற்காக பட்ட பாட்டினை ஒருமுறை நினைவுத் திரைக்குக் கொண்டு வந்தார். இத்தனை கஷ்டப்பட்டு எத்தனை தடைகளை உடைத்து… எத்தனை இன்னல்களை கடந்து… ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ள என்னிடமிருந்து தனித்துப் போக விரும்புகிறான் என் ஒரே மகன் தமிழரசு.
அப்புறம் யாருக்காக? எதற்காக ஓடி ஓடி அலைந்து இவ்வளவு சொத்துக்களும் வியாபார விரிவுகளும். இந்த விரிவுகளுக்காக உறங்காத இரவுகள் எத்தனை…. எத்தனை முறை மூளையைப் பிழிந்து யோசித்துக் கணக்குப் போட்டு ஆண்டுக் கணக்கில் அடித்தளமிட்டு ஒவ்வொரு கம்பெனியாக ஆரம்பித்து மும்பை மட்டுமின்றி சென்னை, பெங்களூர், கல்கத்தா, ஹைதராபாத், டெல்லி என்று ஏறக்குறைய எழுபது நகரங்களில் விரித்து ஒவ்வொரு இடங்களிலும் அந்தந்த வியாபாரத்தை விருத்தியடையச் செய்ய இரவென்றும் பார்க்காமல் விழித்துக் கொண்டே பயணம் செய்து, எதற்காக…. எனக்கும் என் மனைவிக்கும் மூன்று வேளை உணவிற்காக மட்டுமென்றால் எப்போதே இந்த ஓட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.
நாளைக்கே என் மகனுக்காக ஒரு அலுவலகம் அமெரிக்காவிலும் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று அவசர அவசரமாக மேலதிகாரிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளைய பயணத்திற்காக இப்படி ஓட வேண்டுமா?
ஜப்பானிலும் கால் வைக்க வேண்டும். என் மகன் தமிழரசு உலகளவில் வியாபாரம் நடத்த வேண்டுமென்று ஒரு பெரிய அளவு பணம் செலவழித்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தி புதிய வகையான மின் பொருட்கள் செய்ய ஒரு பெரிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் வேளையில் இப்படி ஒற்ரைக்காலில் நின்று கொண்டிருக்கிரானே.
இன்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லலாம். நான் ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு மூன்று வேளையும் வெறுமெனே தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விட்டு மழைக்கு ஒதுங்க முடியாத இடங்களில் கூட தூறலில் சாரலை வெறுத்துக் கொண்டே தூங்கிய கதைகளை… திருமணமாகி மருத்துவர் செலவிற்கு பணமில்லாமல் டாக்டரின் காலைப் பிடித்து விட்டு… அவருடைய காலில் விழுந்து மன்றாடியதைச் சொல்லலாம்.
எதைச் சொன்னாலும் கேட்க மறுக்கின்ற பிள்ளையை என்ன செய்வது? அடித்து திருத்துகிற வயசில்லை. சொன்னால் கேட்கிற இரகமில்லை. இவனை என்ன சொல்ல. என்ன செய்ய…’
வீட்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்ததும் பொங்கும் மகிழ்ச்சியுடன் அவருடைய மனைவி ராணி வேகமாக வந்து “அரசு வந்தாச்சு, மூணு நாலைக்குளே இளைத்துப் போய்விட்டான்.” என்றாள்.
“என்ன செய்கிறான்?”
“டிபன் சாப்பிடச் சொன்னேன். அப்பா வரட்டும் என்று சொல்லிக் கொண்டு துணி கூட மாற்றாமல் இருக்கிறான்.”
“சரி, வா” என்று சொல்லி விட்டு உள்ளே வந்த ஜே.கே. “வா அரசு எப்போது வந்தாய்?” என்று சொல்லி விட்டு “வசந்தா காபி கொண்டு வா” என்றார் வேலைக்கார பெண்ணிடம்.
“காபி எல்லாம் அப்புறம் சாபிடலாம். நான் கேட்டதற்கு முடிவு சொல்லுங்கள்.”
“அரசு கொஞ்சம் யோசித்துப் பார். இந்த வியாபார சாம்ராஜ்யம் உருவாக்க எத்தனைக் கனவுகள் எத்தனை உழைப்புகள்… யாருக்காக உன்னிடம் ஒப்படைப் பதற்காக நீ கஷ்டப்படாமல் இருப்பதற்காக.”
“அய்யோ அப்பா திரும்பவும் ஆரம்பித்து விட்டீர்களா? இனி அந்தப் பழைய ஒருவேளை சாப்பாடு கிடைக்காத கதை…… எனக்கு சலித்து விட்டது. வருகிறேன்.” என்று கிளம்பினான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings