எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பெண் பார்க்க வந்த கூட்டம் திரும்பிச் சென்ற பின் தரகர் வேலுச்சாமி மட்டும் ஜமுக்காளத்தில் அமர்ந்து வெற்றிலையை மென்று கொண்டிருந்தார். சட்டையை கழற்றி ஆணியில் தொங்க வைத்து விட்டு பனியனுடன் தரகரின் அருகில் வந்தமர்ந்த செண்பகத்தின் தந்தை கிருஷ்ணசாமி மெல்லக் கேட்டார்.
“என்னப்பா தரகு.. இந்த எடமாவது அமையுமா?”
“எனக்கு நம்பிக்கையிருக்குங்கய்யா… நம்ம பொண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளைப் பையனின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் மாதிரி பளீர்னு ஆயிடுச்சுங்க… பையனோட அம்மா பேச்சைப் பார்த்தால் அவங்களுக்கும் திருப்திதான் போலிருக்கு.. நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்கல்ல போய்ப் பார்த்துட்டு நல்ல பதிலோட வர்றேன்” சொல்லிவிட்டு சந்தோஷமாய்ச் சென்ற தரகர்,
மறுநாள் மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். “மாப்பிள்ளைக்கும் சரி.. அவரைப் பெத்தவங்களுக்கும் சரி.. நம்ம செண்பகத்தைக் கட்டிக்கறதுல ரொம்ப இஷ்டம்… ஆனா… மாப்பிள்ளையோட மூத்த அக்காளுக்கு பிடிக்கலையாம்…”
“அந்தம்மாவுக்கு என்ன நம்ம செண்பகத்து மேல அப்படியொரு வஞ்சம்?”
“அதொண்ணுமில்லைங்கய்யா.. அந்தம்மாவுக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு அதையத் தம்பிக்குக் கட்டி வைக்கணும்னு அதுக்கு ஆசை ஆனா தம்பிக்காரனோ “நாந் தூக்கி வளர்த்த பொண்ணு இதப் போயி நானெப்படிக் கட்டிக்குவேன்”னு தயக்கம் காட்டுறான்… எப்படியும் அவன் மனசைக் கரைச்சிடலாம்கற நம்பிக்கைல அக்காகாரி தம்பிக்கு வேற எங்கியும் அமைய விடாமத் தடுக்கறா” என்றார் தரகர் வேலுச்சாமி.
யோசித்தார் கிருஷ்ணசாமி “அப்ப சரிப்பா இது ஒத்து வராது… நீ ஒண்ணு செய்யி… சூலூர் ஜாதகம் ஒண்ணு பொருந்தி வந்துச்சல்ல.. அதாம்பா மில்லுக்கு வேலைக்குப் போற பையன்… அதை விசாரி”
“அய்யா.. பையன் தினக்கூலிக்கு போறான்.. அதைய எதுக்கு…” தரகர் தயங்க,
“பரவாயில்லை பாருப்பா.. எதையுந் தட்டிக் கழிக்கற நெலையிலயா நாம இருக்கோம்?”
அரைமனதுடன் நிதானமாய்த் தலையாட்டிக் கொண்டே சென்றார் தரகர்.
வான் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயி போல் தரகர் கொண்டு வரப் போகும் தகவலுக்காக காத்திருந்தார் கிருஷ்ணசாமி. கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேலாகியும் தரகர் வராது போக. “ஒரு வேளை அவனே வெறுத்துப் போய்.. செண்பகத்துக்கு வரன் பார்க்கும் வேலையை உதறித் தள்ளி விட்டானோ?” நொந்து நூலாகிப் போனார்.
மதியம் இரண்டு மணியிருக்கும் வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்த செண்பகம் தரகர் வேலுச்சாமியும் கூட ஒரு ஆறு வயதுச் சிறுமியும் நிற்பதைக் கண்டு “வாங்க… உள்ளார வந்து உட்காருங்க… அப்பா வெளிய போயிருக்கார்… இப்ப வந்துடுவார்” என்றாள்.
அவள் சொல்லி முடிக்கும் முன் “என்னப்பா நீ?… அடுத்த நாளே வர்றேனுட்டுப் போயி… மாசக் கணக்காச்சு இப்பத்தான் மெல்ல வர்றே” கேட்டபடியே வந்தார் கிருஷ்ணசாமி.
“அது… வந்து…. வீட்ல ஒரு பெரிய காரியம் ஆயிடுச்சுங்கய்யா.. அதான் வர முடியாமப் போச்சு” சொல்லும் போதே அவன் குரல் கம்மியது.
“என்னப்பா… என்ன ஆச்சு?..” கிருஷ்ணசாமி பரிவுடன் விசாரிக்க,
“சம்சாரம் இறந்திடுச்சுங்கய்யா” அவன் கண்களில் ஈரக்கசிவு.
அதிர்ந்து போனார் கிருஷ்ணசாமி. அறைக்குள் ஏதோவொரு புத்தகத்தில் மூழ்கியிருந்த செண்பகமும் விருட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
“அடக்கடவுளே… எப்படியப்பா?… உடம்புக்கு என்ன?”
“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லைங்க… ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது வேகமா வந்த பஸ் மோதித் தள்ளிடுச்சுங்க”
“ப்பா… ப்பா.. தண்ணி வேணும்” சிறுமி தந்தையைச் சுரண்ட, “போம்மா… போ… உள்ளார அக்கா இருப்பாங்க போ” கிருஷ்ணசாமி சொல்ல, அந்தச் சிறுமி உள்ளறையை நோக்கி நடந்தாள்.
ஏதோ ஒன்றுக்காக வேதனைப்படும் ஒரு உள்ளம் வேதனைப்படும் சக உள்ளத்தைச் சந்திக்கும் போது உணர்ச்சிவயப் பட்டுப் போவது இயல்பு. நீண்ட நேரம் கிருஷ்ணசாமி தன் வார்த்தைகளால் தரகருக்கு ஆறுதல் சொல்லி சொல்லி மாய்ந்தார்.
“என்னைப் பத்திக் கூட கவலையில்லைங்க… இந்தச் சிறுசை நெனச்சாத்தான் ரொம்பப் பாடாயிருக்கு.. பொட்டைப்புள்ள தாய் இல்லாம… தாயன்பு இல்லாம வாழ்றதுங்கறது ரொம்பக் கொடுமைங்க.” தரகர் சொல்ல,
“கவலைப்படாதப்பா.. ஆண்டவன் இருக்கான்.. மக கல்யாணத்தை முடிக்க முடியாம எத்தனை தடவை நான் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கேன்… அப்பெல்லாம் என்னைத் தேத்தி தைரியமூட்டிய நீயே இப்படி நொடிஞ்சு போகலாமா?” தரகர் முதுகைத் தட்டிக் கொடுத்தார் கிருஷ்ணசாமி.
“அப்ப நான் பொறப்படுறேனுங்கய்யா… இன்னிக்கோ.. நாளைக்கோ சூலூர் போறேன்… போயிட்டு வந்து சொல்றேன்”
தந்தையின் புறப்பாட்டைப் புரிந்து கொண்ட சிறுமி அவசரமாய் வந்து தந்தையுடன் ஒட்டிக் கொண்டாள்.
மறுநாள் மாலை.
“சூலூர் போயிருந்தேங்க.. அந்தப் பையனுக்கு கல்யாணமே முடிஞ்சிட்டுதாம்.. பரவாயில்லை விடுங்க… வேற ரெண்டு மூணு ஜாதகம் கொண்டாந்திருக்கேன்.. பாக்கறீங்களா,” தரகர் அடுத்த படையெடுப்புக்கு ஆயத்தமாக, உள்ளறையிலிருந்து வேக வேகமாக வந்த செண்பகம் “அப்பா… இனி எனக்கு ஜாதகம் பாக்கற வேலைய நிறுத்திடுங்க” என்றாள் அதிரடியாக. தரகரும் கிருஷ்ணசாமியும் வாயடைத்துப் போயினர்.
“எ.. என்னம்மா.. பேசறே?”
“எனக்கு மாப்பிள்ளையை நானே தேர்ந்தெடுத்திட்டேன்”
“யாரும்மா.. யாரும்மா அது நம்ம குடும்பத்துக்கு ஏத்தவராயிருந்தா கண்டிப்பா முடிச்சுடலாம்மா” பரபரப்பாகிக் கேட்டார் கிருஷ்ணசாமி.
“ஏத்தவர்தாம்பா.. எனக்கு மட்டுமல்ல… நம்ம குடும்பத்துக்கு மட்டுமல்ல.. பொதுவா எல்லாருக்குமே ஏத்தவர்தாம்பா”
“சொல்லும்மா”
“என் கழுத்துல தாலி ஏறணும்கறதுக்காக தன்னோட சோகத்தையெல்லாம் மனசுக்குள்ளார அமுக்கி வெச்சுக்கிட்டு அலையா அலையறாறே.. இதோ இந்தத் தரகர்… இவருதாம்பா நான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை.. அன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னாரே.. “பொட்டைப்புள்ள தாய் இல்லாம… தாயன்பு இல்லாம வாழ்றது ரொம்பக் கொடுமை”ன்னு… அது சத்தியமான உண்மை.. அதை அனுபவிச்சவ நான் அதனாலதான் சொல்றேன்.. என்னை மாதிரி இன்னொரு சிறுமியும் அந்தக் கொடுமையை அனுபவிக்கக் கூடாது”
கிருஷ்ணசாமி பதிலேதும் பேச முடியாது நிற்க,
“என்னப்பா யோசனை?… கிட்டத்தட்ட நாப்பது வயசான ஒருத்தரையா நம்ம பெண்ணுக்கு கட்டி வைக்கறதுன்னுதானே யோசிக்கறீங்க?… ஒண்ணு தெரிஞ்சுக்கங்க எனக்கும் வயசு இப்ப முப்பத்தி ஒண்ணு”
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தரகர் மெல்ல வெளியேற,
“வேலுச்சாமி நில்லு எம்மக சொன்னதை நானும் யோசிச்சுப் பார;த்தேன்… எனக்கென்னமோ அவளோட தெர்வு சரின்னு படுது.. நீ என்ன நெனைக்கறே?”
“இன்னும் சில ஜாதகங்க வீட்ல இருக்கு.. நாளைக்குக் கொண்டு வர்றேன்” சொல்லி விட்டு வெளியேறிய தரகர்;
மறுநாளே செண்பகத்திற்காக ஒரு நல்ல ஜாதகத்தைக் கொண்டு வந்தார்.
அவருடைய ஜாதகத்தை.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings