2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஊஞ்சப்பாளையம் கிராமம் என் ஞாபகத்தில் வரும் போதெல்லாம் நான் அந்த கிராமத்து வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்த காலத்தில் எனக்கு உதவியாளனாக பணியாற்றிய சங்கிலியின் ஞாபகமும், அங்கு நான் தங்கியிருந்த சிறிய ஓட்டு வீட்டின் எதிர்வீட்டில் குடியிருந்த வயதான பெண்மணியின் ஞாபகமும், அவளது புத்தி சுவாதீனமில்லாத பதினைந்து வயது மகளின் ஞாபகமும் கட்டாயம் எனக்குள் வந்து போகும்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அந்தக் கிராமத்தைக் கடந்து வேறொரு ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் இப்போதுதான் எனக்கு வாய்த்தது. அந்தக் கிராமத்தில் இறங்கி சில மணி நேரங்களைச் செலவழித்து விட்டுப் போனால் என்ன? என்கிற யோசனை தோன்ற செயல்படுத்தினேன்.
“அடடே… மாணிக்கம் சாரா?…வாங்க சார் வாங்க…நல்லா இருக்கீங்களா?” முகமலர்ச்சியோடு என்னை வரவேற்ற சங்கிலி ஐந்து வருட ஓட்டத்தில் சற்று களைத்துப் போயிருந்தான்.
“நல்ல சௌக்கியம் சங்கிலி….நீ எப்படியிருக்கே?”
“ஏதோ பொழப்பு ஓடுது சார்…” என்ற சங்கிலி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த மனைவியிடம் “அம்மணி….ஆரு வந்திருக்கா பாத்தியா?..நம்ம மாணிக்கம் சாரு”
அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்து நலம் விசாரிக்க “அம்மணி சாருக்கு டிபன் தயார் பண்ணு….” என்று அவளுக்கு ஆணை பிறப்பித்த சங்கிலி,
“சார்…குளிக்கறதுன்னா குளிச்சிட்டு வாங்க சார்… அதுக்குள்ளார டிபன் தயாராயிடும்…சாப்பிட்டுட்டுப் பேசலாம்” என்றான்.
நகரத்தில் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அந்த யதார்த்த அன்பு என்னை நெகிழச் செய்தது.
“இல்ல சங்கிலி….குளியல் டிபன் எல்லாமே முடிஞ்சுது…ஒரு ஆடிட்டுக்காக கோவிலூர் போயிட்டிருக்கேன். இந்த வழியாப் போகும் போது ஞாபகம் வந்தது….அதான் இறங்கி உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்….ஊரெல்லாம் எப்படி இருக்கு சங்கிலி?…லட்சுமியம்மாள்…பங்காருக் குட்டியெல்லாம் நல்லா இருக்காங்களா?”
நான் அப்படிக் கெட்டதும் அவன் முகம் திடுமென இருண்டு போனது.
“சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா?…அவங்க ரெண்டு பேரும் இறந்து போய் ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு”
ஆடிப் போனேன்.
நான் அங்கிருந்த காலத்தில் அந்த லட்சுமியம்மாள் என்னிடம் காட்டிய அந்தக் கள்ளமிலா பாசமும், நெசமும் மறக்க முடியாதவை.
“சாரு…என்னைய யாராச்சும் அடிச்சா….நீ அவங்களைக் கொன்னு போடு சாரு” என்று தன் வினோதக் குரலில் சொல்லிவிட்டு வெற்றிடத்தைப் பார்த்து, “டாய்…எங்க சாரு இருக்காருடா…. யாரும் என்னியத் தொட முடியாது….தொட்டுப் பாருங்க… எங்க சாரு…உங்களக் கொன்னே போட்டுடுவாரு…” என்று கத்தி விட்டுச் சிரிக்கும் பங்காருக் குட்டியின் வெகுளித்தனமான பேச்சும் செயலும் என் மனதைப் பிசைய விழியோரத்தில் ஈரம் வாங்கினேன்.
“ஏன் சங்கிலி,…என்ன நடந்தது?…எப்படி இறந்தாங்க அவங்க ரெண்டு பேரும்,” குரல் கரகரக்கக் கேட்டேன்.
“அதையேன் கேக்கறீங்க சார்…அது ஒரு பெரிய கதை” என்று பீடிகை போட்டவன் “அந்தக் கிறுக்குப் பொண்ணை எவனோ ஒரு தறுதலைப் பயல் கெடுத்துப்புட்டான் சார்…பாவம்…சின்ன வயசுல வயத்துல குழந்தைய வாங்கிக்கிட்டு சரியான சாப்பாடு இல்லாம…சரியான வைத்திய வசதி கெடைக்காம சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டுப் போயி…கடைசில செத்தே போயிடுச்சு சார்….அதுக்கப்புறம் கெழவி அந்த வேதனையிலேயே போயிச் சேர்ந்துட்டா…ச்சை…ஊரா சார் இது?..நாதாரிப் பயபுள்ள ஊரு சார்”
நெஞ்சு கனக்க….தள்ளாட்டமாய் நகர்ந்து….பக்கத்திலிருந்த திண்ணையில் அமர்ந்தேன்.
“சாரு…என்னைய யாராச்சும் அடிச்சா….நீ அவங்களைக் கொன்னு போடு சாரு”
எங்கிருந்தோ பங்காருக்குட்டியின் குரல் கேட்க தலை சுற்றுவது போலிருந்தது. கண்கள் இருண்டன.
“சார்…சார்…என்னாச்சு சார்?” என்ற சங்கிலி வீட்டிற்குள் திரும்பி “அம்மணி…சீக்கிரம் ஒரு சொம்புல தண்ணி கொண்டா…” என்று கத்தியது எங்கோ தூரத்தில் கேட்டது.
அவன் மனைவி கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை வாங்கி என்னிடத்தில் அவன் கொடுக்க வாங்கிப் பருகினேன். நெஞ்சில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த பாறைக்கனம் ஓரளவு இறங்கியதும் “சங்கிலி…யாருக்கும் எந்தத் தீங்கும் நெனைக்காத அந்த அப்பாவி ஜீவன்களுக்கா இப்படியொரு சோதனை?”
“சார்…எல்லாம் மாறிப் போச்சு சார்.. உலகமே மாறிப் போச்சு சார்…அநியாயம்…அக்குருமம் செய்யறவனுகளுக்குத்தான் சார் காலம்…நியாயம்…நேர்மைன்னு கெடக்கறவனுகதான் சார்…சாவறானுக…சாவடிக்கப் படறானுக”
அந்தச் சங்கிலி விரக்தியில் பேசியதில் எனக்கொரு பொறி கிடைக்க கேட்டேன். “யாரு சங்கிலி…யாரு இப்படியொரு கொடுமையைச் செஞ்சது?….விவரமே தெரியாத அந்தச் சின்னப்பூவை கசக்கி முகர்ந்தது யாரு?…சொல்லு சங்கிலி…சொல்லு”
நான் உலுக்கிய உலுக்கில் அவன் உணர்வு வரப் பெற்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என் அருகில் வந்தமர்ந்து “எல்லாம் அந்தச் சின்னப் பண்ணையோட வேலைதான்” என்றான் தாழ்வான குரலில்.
“யாரு…செல்ல பூபதியா?”
அவன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினான்.
சங்கிலி குறிப்பிட்ட அந்த செல்ல பூபதி ஏற்கனவே ரெண்டு மூணு தரம் பஞ்சாயத்தில் அபராதம் கட்டியவன்தான். தன் பண்ணையில் வேலை பார்க்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்திற்காய்.
பற்களை ‘நற…நற”வென்று கடித்தேன்.
“பணத்திமிர் உடம்பு பூராவும் ஏறி….தெனவெடுத்துக் கெடக்கான்…அதான் மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூட விட்டு வைக்காமல் வெளையாடியிருக்கான்…அவனை…..”
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி வேறு சில நணபர்களையும் சந்தித்து விட்டு மாலை வாக்கில் பஸ்ஸைப் பிடிக்க சின்னப் பண்ணையின் தெக்காலத் தோப்பு வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது மனது முழுதும் அந்த லட்சுமியம்மாளும்…பங்காருக் குட்டியுமே நிறைந்திருந்தனர்.
அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அவர்களையும் பார்த்து விட்டு முழுத் திருப்தியுடன் திரும்பியிருக்கலாம்…ஹூம்…எல்லாம் காலக் கொடுமை”
“என்ன ஆபீசர் சார்…எப்ப வந்தீரு…வந்த சுவடே தெரியாமக் கௌம்பிட்டீரு போலிருக்கு….எங்களையெல்லாம் ஞாபகமிருக்கா?”
குரல் வந்த திசையில் திரும்பினேன். சின்னப் பண்ணை செல்ல பூபதி நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே எனக்குள் ஒரு கனல் பந்து தாறுமாறாக உருண்டது.
“பொம்பளப் பொறுக்கி ராஸ்கல்…” என அடி மனது சத்தமில்லாமல் கத்தியது.
“ம்ம்ம்…அது…வந்து…காலைல பதினோரு மணிக்கு வந்தேன்..நம்மாளுக ரெண்டு மூணு பேரு வீட்டுக்குப் போயிட்டு அப்படியே கௌம்பிட்டேன்…கடைசி பஸ் வர்ற நேரமாச்சல்ல?”
“அப்புறம்…சௌக்கியம்தானே,” கேட்டபடியே மோட்டார் ரூமிற்குச் சென்றவன் பின்னால் பவ்யமாய் நானும் நடந்தேன். உள்ளே மோட்டார் அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிப் போடப்பட்டிருந்தது.
“ஏன் மோட்டாரெல்லாம் இப்படிக் கெடக்கு?” கேட்டேன்.
“ஹூம்…அதையேன் கேக்கறீங்க….ரிப்பர் பண்ண ஆள் வந்திருந்தான்…இப்படி மானாவாரியாப் பிரிச்சுப் போட்டுட்டு கடைசில ‘இந்த மோட்டார் இனி வேலைக்கு ஆவாதுங்க…பேசாம புதுசா ஒண்ணு வாங்கி மாட்டுங்க” ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்…அவனுக்கு சரியா தொழில் தெரியாது போலிருக்கு…அதான் அவன் சொன்னது சரிதானனு பரிசோதனை பண்ணிப் பார்க்க நானே வந்தேன்”
அந்த செல்ல பூபதி கீழே அமர்ந்து பிரித்துப் போடப்பட்டிருந்த மோட்டாரின் பாகங்களைத் தானே நிதானமாக இணைத்து “இப்ப கனெக்ஷன் குடுக்கறேன்…நல்லா ஓடும் பாருங்க” சொல்லியபடி வயர்களை எடுத்தான்.
“அப்ப நான் புறப்படறேனே…கடைசி பஸ் விட்டுட்டா அப்பறம் கஷ்டம்…” சொன்னேன்.
“ஆமா…ஆமா…கௌம்புங்க…கௌம்புங்க…”
அந்த மோட்டார் ரூமை விட்டு வெளியேறி வலது புறம் திரும்பிய போது என் கண்களில் அது பட்டது. மெயின் சுவிட்ச் பாக்ஸ்!. அதன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
“சாரு…என்னைய யாராச்சும் அடிச்சா….நீ அவங்களைக் கொன்னு போடு சாரு”
பங்காருக்குட்டியின் குரல் என் காதுகளில் ஒலித்தது. எனக்குள்ளிருந்த ஆவேசம் என்னை இயக்கியது. மோட்டார் ரூமிற்குள் எட்டிப் பார்த்தேன். அந்த செல்ல பூபதி மின்சார வயர்களை கையில் பிடித்து இணைப்புப் பணியில் மும்முரமாயிருந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆளரவமேயில்லை. மெயின் சுவிட்ச் அருகே சென்று அதை ஆன் செய்தேன்.
‘ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆஆஆஆ”
சின்னப்பண்ணையின் ஹீனக்குரல் ஆக்ரோஷமாய் ஆரம்பமாகி…மெல்ல மெல்ல சுதி இறங்கிக் கொண்டிருந்தது.
“சாரு…என்னைய யாராச்சும் அடிச்சா….நீ அவங்களைக் கொன்னு போடு சாரு”
மயிர் கருகும்…உடல் தீயும்…. வாசனை லேசாய் காற்றில் கலக்க ஆரம்பித்தது.
“நீ சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன்..பங்காருக்குட்டி.” கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings