in ,

மறுபக்கம் (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மாநகராட்சியில் புதிதாக இணைந்த புறநகர் பகுதி. ஊரடங்கிய இரவுப் பொழுது. மணி இரவு 11.30ஐ தாண்டியது. தெருவில் நாய்களின் நடமாட்டமும், எப்போதாவது ஒருமுறை வந்து, தெருநாய்கள் தங்களை துரத்தி விடுமோ என்ற பயத்தோடு கடந்து செல்லும் சுவிக்கி வண்டி சத்தமும் மட்டுமே.

 

தெருமுனைக்கு வந்த அந்த ஆண் உருவம் ‘இந்த இடம் வழக்கம் போல இல்லையே..?’ என்று யோசித்தது.  ஆம். அங்கே புதிதாக ஒரு சிசிடிவி கேமரா நிறுவப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ‘இங்கே குப்பை கொட்ட கூடாது, மீறினால் தண்டனை’ என்ற அறிவிப்பும் இருந்தது.

‘இது என்னடா.. வம்பா போச்சு?..’ என்று யோசித்தபடி கொஞ்சம் பின்வாங்கி, அதன் பின் ஒரு முடிவுக்கு வந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டு  கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்துக் கொண்டு, சிசிடிவி கம்பத்தின் மேல் ஏறத்தொடங்கியது. ஒரே போடு.. சிசிடிவி கேமரா நொறுங்கியது. தான் நினைத்த செயலை முடித்து விட்டு கிளம்பியது.

ஃஃஃ

மறுநாள் மாநகராட்சி எங்கும் ஒரே பரபரப்பு. நொறுங்கிய சிசிடிவி ஐ  போட்டோ எடுத்து அந்த தெரு வாட்ஸ் அப் குரூப்பில் யாரோ ஒருவர் போட, செய்தி தீயாய் பரவியது.

எஸ்.ஐ. தினேஷ், மாநகராட்சி அழைப்பின் பேரில் மாநகராட்சி அலுவலகம் சென்றிருந்தார். முந்தைய நாள் சம்பவ இடத்துக்கான சிசிடிவி கேமரா பதிவை எடுத்து போட்டுப் பார்க்கப்பட்டது.

கேமராவை உடைத்தவன் அணிந்திருந்த பெர்முடாஸ் தெரிந்தது. முகம் தெரியவில்லை. ஆனால் அவன் கை மட்டும் தெரிந்தது. கையில் ஒரு மஞ்சள் நிற கயிறும், ஒரு பச்சை நிற கயிறும் கட்டியிருந்தான். பொதுவாக இதுபோல இரண்டு கலர் கயிறு கட்டுபவர்கள் குறைவு. எஸ். ஐ. மனதுக்குள் குறித்துக் கொண்டார்.

“எத்தனை கேமராக்கள் உடைஞ்சிருக்கு..?” கேட்டார் எஸ் ஐ.

“இந்த ஒண்ணு மட்டும் தான்.. சார்” பதில் வந்தது மாநகராட்சி அதிகாரியிடம் இருந்து.

“திருடுறவங்க பொதுவா பல்ப்பை கழட்டிட்டு போகத் தான் பார்ப்பாங்க.. மற்ற குற்றங்கள் செய்கிறவங்க அவங்க செஞ்ச தப்பை அழிக்கிறதுக்கு கூட, ஒரே ஒரு கேமராவை மட்டும் உடைக்க மாட்டாங்க.. அவங்க நடமாடின எல்லா கேமராவையும் உடைச்சிருக்கணும்..” என்று சொன்ன எஸ்.ஐ…

“ஸோ.. தப்பு பண்ணினவன் அந்த ஏரியாவாத் தான் இருக்கணும்..” என்றார்.

மாநகராட்சி அதிகாரி பொறுமையாக இருக்க..

“அங்கே வேறு என்ன கிடந்தது..?” என்று கேட்டார் எஸ்.ஐ.

“வேறென்ன..? குப்பை தான் கிடந்துச்சு..”

“குப்பை..யா..?”

“ஆமா சார்.. குப்பையை தெருமுனைல போடக் கூடாதுனு எத்தனை தடவை சொன்னாலும் இந்த ஜனங்க கேட்கிறதே இல்ல..” என்று அலுத்துக் கொண்டார் மாநகராட்சி சுகாதார அதிகாரி.

சம்பவம் நடந்த தெரு முனைக்கு வந்து பார்த்த எஸ். ஐ. , அந்த வார்டுக்கான கவுன்சிலரை அழைத்து, தெருமுனையில் வந்து இணையும் மூன்று தெருக்களில் நீண்ட வருடங்களாக குடியிருக்கும் நாலைந்து பேரை மட்டும் அடையாளம் காண்பிக்க சொன்னார்.

அவர்கள் வந்ததும்.. “இங்கே பாருங்க.. எனக்கென்னவோ இந்த குற்றத்தை செய்தது இந்த ஏரியாவில் இருப்பவங்க தான்னு தோணுது.. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சா கண்டுபிடிக்கலாம்..” 

“என்ன செய்யணும்னு சொல்லுங்க சார்..”

“என்கிட்ட ஒரு க்ளூ இருக்கு.. நீங்க அதைப் பார்த்திட்டு குற்றத்தை செஞ்சது யாரா இருக்கும்னு உங்க கருத்தை என்கிட்ட தனிப்பட்ட முறையில சொன்னா போதும்..” என்று சொன்னவர் ஒருவொருவரையும் தனித்தனியாக அழைத்து,  தன்னிடம் உள்ள ஃபோட்டோவை காண்பித்தார். 

அதில் அந்த சிசிடிவி கம்பத்தில் ஏறிய மனிதனின் கையில் கட்டியிருந்த கயிறையும், அணிந்திருந்த பெர்முடாஸையையும் குறிப்பிட்டு காண்பித்து  இதை போல உங்கள் ஏரியாவில் யாரையும் பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

முதல் இரண்டு பேரும் இல்லையென்று சொல்ல, மூன்றாவதாக வந்தவர் அதே தெருவில் வசிக்கும் கேசவ் போல தெரிகிறது என்றார்.

***

கேசவ் – கீதா இருவரும் வெவ்வேறு ஐ. டி. கம்பெனிகளில் வேலை செய்கின்றனர். இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது.

கேசவ் ஏன் இந்த செயலை செய்ய வேண்டும்? மனைவிக்கு தெரியாமல் வேறு எந்த பெண்ணோடாவது ரகசிய தொடர்பு இருக்குமோ? எஸ்.ஐ. ஒரு நிமிடம் யோசித்தார். எதற்கும் கேசவ் வை விசாரித்துப் பார்ப்பது என முடிவு எடுத்தார்.

கேசவ் அலுவலகம் சென்றிருந்தால் அவனது தொடர்பு எண்ணை வாங்கி, அலுவலகம் முடிந்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் வரும்படி சொன்னார்.

இரவு எட்டு மணிக்கு கேசவ் காவல் நிலையம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தயக்கத்தோடு நின்றான்.

கேசவ் வை கை குலுக்கி வரவேற்ற எஸ். ஐ. தினேஷ் அவனது கையில் இரண்டுவிதமான கயிறுகள் இருப்பதை கண்டு, நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தார்..

“உங்க தெருவில உள்ள புது சிசிடிவி கேமரா, நேத்து நைட்டு உடைக்கப்பட்டிருக்கு.. உங்களுக்கு தெரியுமா?..”

“ஆமா சார்..”

“சரி.. எதுக்கு உடைச்சீங்க..?” அடுத்த கேள்வி நேரடித் தாக்குதல்.

ஒரு நிமிடம் திகைத்த கேசவ்.. “நான்.. நானா..?” என்றான். வார்த்தைகள் தந்தி அடித்தன.

“ஆமா.. நீங்களே தான்..”

“எப்படி சொல்றீங்க?.. யாரை வேண்டுமானாலும் இப்படி நேரடியாக குற்றம் சாட்டி விடுவீர்களா..?”  பயத்தை காட்டிக் கொள்ளாமல் திரும்ப கேள்வி கேட்டான்.

“ஆதாரம் இருக்கிறதால தான் சொல்றேன்..” என்ற எஸ்.ஐ. தன் கையில் இருந்த ஃபோட்டோ வை காண்பித்தார்.

தான் வந்ததில் இருந்து தன் கையில் உள்ள கயிறையே அவர் வெறித்துப் பார்ப்பது, அப்போது தான் கேசவ் வுக்கு உறைத்தது. ‘அடடா.. மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டமே.?’ என்ற பாணியில் யோசித்தவன்..

“இது.. இது மாதிரி கயிறு.. யார் வேண்டுமானாலும் கட்டலாமே..?” என்றான்.

“கட்டலாம் தான்.. ஆனா நீங்க உபயோகப்படுத்திய கல்லை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்க.. உங்க கை ரேகையை குடுத்தா அதையும் செக் பண்ணி பார்க்கலாம்” என்று சும்மா வாச்சும் ஒரு புருடா விட்டார் எஸ். ஐ.

வெலவெலத்துப் போனான் கேசவ்.

“ஸார்.. நான் தான் நேத்து ஒரு கோபத்தில உடைச்சேன்.. கேமராவுக்கான பணத்தை குடுத்திடுறேன்.. என் மேல வழக்கு எதுவும் போடாம நீங்க தான் ஸார் காப்பாத்தனும்..” என்று எஸ். ஐ. பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

“சரி.. எதுக்கு உடைச்சீங்க..?” ஆர்வமாக கேட்டார் எஸ். ஐ.

கேசவ் சொல்ல ஆரம்பித்தான்..

“இந்த நகராட்சி, மாநகராட்சிக்கு தரம் உயர்ந்தது தான் சிக்கலாக போயிருச்சி.. இப்போ குப்பை வண்டி மதிய நேரம் தான் வருது. ஆனால் நாங்க ரெண்டு பேரும் காலையிலேயே வேலைக்கு போகணும்… வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலும், அதையும் கிரச்சில் விட்டு விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் போய்டுவோம். இதில மதியம் வரும் குப்பை வண்டியை எப்படி பிடிக்கிறது? தெரு ஓரங்களில் இருந்த குப்பைத் தொட்டிகளையும் தூக்கிட்டாங்க..

ஆனாலும் கூட அந்த சந்திப்புகளில சிலர் குப்பையை போட்டுட்டு தான் போறாங்க… வீட்டில சின்ன குழந்தை இருக்கிறதால டயாபர் எல்லாம் வீக் எண்ட் வரைக்கும் வீட்டில வைச்சிருக்க முடியல.. வீடே நாறுது.. அதனாலே ஊரடங்கிய பிறகு, எங்க வீட்டு குப்பையை அங்கே வீசிட்டு வருவேன்.. நேத்து சிசிடிவி கேமரா வேற வைச்சிருந்தத பார்த்ததும் ஒரு கோபத்தில கல் எடுத்து உடைச்சிட்டேன்” என்று அவன் சொன்னதும், இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத எஸ்.ஐ. திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காளையின் கதை (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி

    நசுக்கப்பட்ட இளைய தலைமுறை (சிறுகதை) – முகில் தினகரன்