in ,

மருமகள் மஞ்சுளா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

செல்லம்மாளுக்கு வருத்தமோ வருத்தம்.

தன் மகளுக்கு வளைகாப்பு செய்ய இருப்பதாக சொல்லி குங்குமம் கொடுத்து, கையைப் பற்றி அழைத்தாள் பத்மாவதி.. அப்படியே   பின்வாசற்படியில் உட்கார்ந்து ஜாக்கெட்டிற்கு கொக்கிக் கட்டிக் கொண்டிருந்த மருமகள் மஞ்சுளாவைைப் பார்த்த பத்மாவதி, மெல்ல அருகில் போய், ‘ நீயும் வந்திடுமா மஞ்சுளா ‘ என்று மட்டும்  சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

மஞ்சுளாவிடம் பேசும்போது பத்மாவதியின் பேச்சில் அவ்வளவு சுரத்தில்லை, சுவாரசியமுமில்லை.  ஏதோ ஒப்புக்குச் சப்பாணி போல சொல்லிவிட்டு போய்விட்டாள்.  கொஞ்சம் சுருக் என்றுதான் இருந்தது செல்லம்மாளுக்கும். தனக்கு கிடைக்கும் மரியாதை மருமகளுக்கும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு.

அவளும் போகாத கோவிலில்லை, கும்பிடாத கடவுளில்லை. போன மாதம் கூட  யாரோ சொல்லக் கேட்டு, குலதெய்வத்திற்கு கூட நேர்ந்து கொண்டாள். ஆனாலும் அந்தக் கடவுள்தான் இன்னும் கண் திறக்கவே இல்லை.

ஆறு வருடங்கள் ஆகிவிட்டன, அவளை தன்மகனுக்கு கல்யாணம் செய்து இங்கே கூட்டிவந்து. குலதெய்வம் கோவிலில் வைத்துதான் கல்யாணமே நடத்தினார்கள். மஞ்சுளாவோ மாதாமாதாம் உட்கார்ந்துவிடுகிறாள். எல்லோரும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள், ‘ வீட்டில் ஏதாவது விஷேசம் உண்டா ‘ என்று. கனத்த நெஞ்சுடன் உதட்டை மட்டும் பிதுக்கிவிட்டு மௌனமாய் நகர்ந்து விடுவாள் செல்லம்மாள்.

‘ என் மாமியார் முதல் வருஷத்திலேயே என் புருஷனை பெற்றெடுத்துப் போட்டார்கள். நானும் ராசேந்திரனை முதல் வருஷத்திலேயே பெற்றெடுத்தேன்.  ஆனால் என் மகனுக்கு…? இன்னும் ஒரு தொட்டில் கட்டும் பாக்கியம் வந்தபாடாய் இல்லை.

இதை நெருங்கிய சொந்தக்காரர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் செல்லம்மாள்.

சிலர், ‘ மருகளை டவுனிற்கு கூட்டிப் போய் நல்ல டாக்டராகப் பார்த்துக் காட்டேன் ‘ என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால் விஷயம் கேள்விப்பட்டு சத்தம் போட்டான் ராசேந்திரன். ‘ ஏன், என் மருமகள் இன்னும் உண்டாகலைன்னு உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டப்போறியா… பேசாம இருக்கமாட்டே… ‘ என்றான்.

ஆனால், அந்தக் குறையைத் தவிர மருமகள் மேல் எந்தக் குறையும் சொல்லமுடியாது. காலையில் எழுந்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, பால் கறந்து, டீ போட்டு, தோசை இட்லி சுட்டுப்போட்டு, மத்தியானம் வகை வகையாய் சாப்பாடு செய்து…ராத்திரி தூங்கப் போகும்வரை மாடுபோல உழைத்துக் கொண்டு…

சிலரைப் போல, இவள் வஞ்சகம் நினைப்பதில்லை. மாமியார் மாமனாரை புறக்கணிப்பதில்லை. வாய்நிறைய உறவுமுறை சொல்லித்தான் அழைப்பாள். நெஞ்சு நிறையத்தான் பேசுவாள். ஆனாலும் இந்தக் குடும்ப வாரிசு மட்டும் அவள் வயிற்றில் உண்டாகவே மாட்டேனென்கிறது.

ஹாலில் வரும்போதும் போகும்போதும், உத்திரத்தில் நீட்டிக்கொண்டுக்கும் கொக்கியை பார்த்து பெருமூச்சு விடுவாள் செல்லம்மாள், இந்தக் கொக்கியில்தான் ராசேந்திரனைத் தொட்டில் கட்டி ஆட்டினோம். அவனது மகனை எப்போதுதான்  ஆட்டப்போகிறோமோ.

ஒருநாள் பால் கறந்து வந்து கொடுத்துவிட்டு, ‘ அத்தை…அந்த செவளைச்சி… ஆட்டமா ஆடுது… வெள்ளைச்சிக்கிட்டே பல்கறந்துட்டு எழுந்திருக்கும்போது பால் கிண்ணத்தைத் தட்டிவிட்டிருச்சு… பாலும் கீழே கொஞ்சம் சிந்திடுச்சு. அதைக் கொஞ்சம் தள்ளி தூரத்துலே கட்டிவைச்சா நல்லாயிருக்கும்… ‘

 ஒருசிலர் மருமகளை தள்ளிவைத்துவிட்டு மறுகல்யாணம் செய்துவை, மகனுக்கு வாரிசு வந்துவிடும் என்று. ஆனாலும் செல்லம்மாளின் மனதுக்குள் நமது மருமகள் நிச்சயம் ஒருநாள் முழுகாமல் வந்து நிற்பாள் என்ற நம்புகிறாள்.

செவளைச்சி எட்டு மாதங்களாக இரண்டுவேளைகளும் கறந்துகொண்டிருந்தது. பிறகு ஒருவேளை மட்டும்.. இப்போது கறவையே இல்லை. எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் ராத்திரி பகல் என்று பாராமல் கத்திக் கொண்டு அல்லாடுகிறது.

அது காளைக்கு அலைகிறது என்று செல்லம்மாளுக்கும் தெரியும். போனவாரமே ராசேந்திரனிடம் மாட்டு டாக்டரை கூட்டி வரச் சொல்லி சொல்லியனுப்பினாள். போய் பார்த்துவிட்டு வந்த அவன், டாக்டர் ஒருமாத லீவில் போயிருப்பதாகவும் ஜூனியராக இருப்பவர் பயிற்சி டாக்டர் என்றும் அத்துடன் லீவில் போயிருப்பவர்தான் கைராசிக்காரர் என்றும் யாரோ சொன்னாதாக வந்து சொன்னான். 

இப்போதைக்கு  தீனி போடமுடியும்,  தண்ணீர் காட்டமுடியும். வேறென்ன செய்வது.  சாயங்காலம் ராசேந்திரன் வந்தவுடன், மறக்காமல் செவளைச்சியை கறக்கும் மாட்டருகில் கட்டாமல் கொஞ்சம் தூரத் தள்ளி கட்டிப்போடச் சொல்ல வேண்டும்.

xxxxxx

ருநாள் ராசேந்திரனை உட்காரவைத்து ரொம்பவும் நெஞ்சுருக கேட்டுக்கொண்டாள் செல்லம்மாள்.  ‘ டவுன்ல  ஒரு நல்ல டாக்டர் இருக்காராம்டா தம்பி.  ஒருதடவை போய் பார்த்துட்டு வந்துடலாம்டா… காதும் காதும் வச்சமாதிரி முடிஞ்சுடும்…  யாருக்குத் தெரியப் போவுது… குறை யார்கிட்டே இருந்தாலும் சரி.  இப்போத்தான் உடனே சரி செஞ்சுடறாங்களாமே, ஆறு வருஷம் ஆச்சுடா கல்யாணமாகி… எப்போ உன் புள்ளையை தொட்டில்ல போட்டு ஆட்டப் போறேன்.  அதுமட்டுமா, ஒரு நல்லது கெட்டதுக்கு கூட அவளைக் கூட்டிட்டுப் போகமுடியலை.  எல்லாரும் என்னாச்சு என்னாச்சுனு கேட்டு கேட்டே அவ நொந்து போய்ட்டா…  எங்கேயும் முன்னே மாதிரி, அவ வரவும் மாட்டேன்கிறா. அவளையும் குறைச் சொல்லி என்ன பிரயோஜனம். நம்ம கும்பிடற குலதெய்வமும் கண்ணை திறக்க மாட்டேங்குதே… ‘ சொல்லி உருகினாள் அவள்.

யோசித்துப் பார்த்துவிட்டு, இருவரும் டாக்டரை பார்க்க ஒப்புக்கொண்டனர். ரொம்பவும் பரவசமானாள் செல்லம்மாள். மறுநாள் கிளம்பிவிட்டனர் மூவரும்.

அவர்களை பரிசோதித்துப் பார்த்துவிட்டு செல்லம்மாளை மட்டும் தனியாக கூப்பிட்டு விளக்கமாய் சொன்னார் டாக்டர்.  ‘பாருங்கம்மா, குறைனு சொல்லமுடியாது. கரு உண்டாகறதுக்கு தேவையான உயிரணுக்கள் சரியா போய்ச்சேரலைன்னுதான் தோணுது… ‘  

செல்லம்மாளும், ‘ சரி டாக்டர் என்ன செய்யலாம் சொல்லுங்க…’ என்று கேட்க, ‘இப்போலாம் ரொம்ப சுலபமான வழி வந்திச்சு.  உங்கபையன்கிட்டே இருக்கற அணுக்களை ஊசிமூலம் எடுத்து உங்க மருமக கருப்பையில செலுத்திடலாம்… உங்க மருமக வீட்டுக்கு குளிச்சிட்டு வந்து பத்துநாள் கழிச்சு கூட்டி வாங்க. இன்ஜெக்ஷன் போட்டுடலாம். ரொம்ப சுலபம், வலி இருக்காது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு உடனேயே வீட்டுக்கும் போய்டலாம்… ‘ என்றார்.

xxxxxxx

டாட்டார் சொன்னதுபோல நாள் மறுபடியும் போனார்கள். ட்ரீட்மென்ட் முடிந்தது. அரை நாள் இருந்துவிட்டு திரும்பிவிட்டார்கள்.

நாளாக நாளாக மருமகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வாள் செல்லம்மா ஏதாவது சொல்லுவாளா என்று.

ஒரு நாள் ஓடிவந்து, ‘ அம்மா, அந்த மாட்டு டாக்டர் வந்துட்டாராம். நான் போய் கையோட கூட்டிட்டு வந்திடறேம்மா… ’ என்றுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு ஓடினான் ராசேந்திரன்.

இரண்டு மணி நேரம் கழித்து புல்லட்டில் வந்து சேர்ந்தார் அவர்.  ராசேந்திரன் அவரை செவளைச்சியிடம் கூட்டிப் போனான்.  அதனை பரிசோதித்துவிட்டு அதன் கால்களை ஆடாமல் நிற்கவேண்டி கட்டிப் போட்டவைத்து தனது பெட்டியில் இருந்து மருந்தை எடுத்து ஊசிமூலம் செவளைச்சிக்கு செலுத்தினார் டாக்டர். புன்னகையுடன் திரும்பியவர், ‘நல்லபடியா முடிஞ்சுதுமா. சீக்கிரம் சினையாகிடும். இனிமே அது கத்தாது… கொஞ்ச நாள்லே மாற்றம் தெரியும்… நீங்க கவலைப் படவேண்டாம்…’ என்று விட்டு கைகழுவ சோப்புக் கேட்டார். ராசேந்திரன் சோப்பைக் கொடுத்துவிட்டு அவருக்கு கைகழுவதற்காக தண்ணீரை ஊற்றினான்.

‘ உவ்வே ‘ என்ற சத்தத்துடன் ஓடினாள் மஞ்சுளா பின்கட்டுப்பக்கம்.  அதைக் கேட்டு செல்லம்மாளும் ராசேந்திரனும் இன்ப அதிர்ச்சியுடன் ஓடினார்கள்.

 ‘ ஏன்மா… யாருக்காவது உடம்பு சரியில்லையோ…’ என்றார் டாக்டர்.

‘ எங்க மருமகதாங்க… ஆனா இப்போ சரியாகிடுச்சு… ‘ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள்.

டாக்டர்தான் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தார்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மன் வாசலில் ஒரு கொலை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கண்ணாடிக்கு ஒரு கண்டிஷன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு