in ,

மரப்பாச்சி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஆடிட்டிங் வேலை நிமித்தமாக அவ்வப்போது மேட்டுப்பாளையம் வருவேன். வரும் போது சப்-ரிஜிஸ்டர் மாமா வீட்டில்தான் ஒரு வாரம் பத்து நாள் தங்கி விட்டு செல்வேன். 

பழைய காலத்து வீடுதான் என்றாலும் எனக்கென ஒரு தனி ரூம் ஒதுக்கித் தந்து விடுவார்கள்.  நானும் அலுவலகப் பணி முடித்து விட்டு வந்தால் ரூமே கதி… ஆபிஸ் ஃபைல்களே கதி என்று கிடப்பேன். சாப்பிடக் கூட அத்தை வந்து அழைத்தால் மட்டுமே செல்வேன்.  

 “கீச்ச்….” அறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு ஃபைலில் இருந்து பார்வையை தூக்கி பார்த்தேன்.  கதவுக்கு வெளியே இருந்து ஒரு தலை மட்டும் எட்டிப் பார்த்தது. பக்கத்து வீட்டு யூகேஜி.

 “ஹாய்… ப்ரியாக் குட்டி… வா உள்ளார” சிரித்தபடி அழைத்தேன்.

 தயங்கி தயங்கி வந்தது.  கையில் ஒரு மரப்பாச்சி பொம்மை.  பழைய  துணியால்  அது சேலை வேறு கட்டியிருந்தது.

 “ஹய்… பொம்மை!…” அந்த மரப்பாச்சியைப் பார்த்துச் சொன்னேன்.

 “இது பொம்மை இல்லை!… இவளோட பேரு தெய்வானை… எங்க அம்மா வெச்சாங்க!” என்றாள் என் கையில் மரப்பாச்சியை தராமலேயே.

 “சரி…சரி… தெய்வானையைக் கொடு… பார்த்துட்டு தர்றேன்”

 “ம்ஹும்… தரமாட்டேன்!…” மழலைக் குரலில் ப்ரியாக்குட்டி சொல்ல,

அப்போது,  ”ப்ரியா… ப்ரியா” என்று அழைத்தபடியே உள்ளே வந்தார் என் அத்தை.

 “ஏய் ப்ரியா… உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்?.. “அங்கிளைத் தொந்தரவு செய்யாதே”ன்னு அதட்டினார்.

  “பரவாயில்லை  விடுங்க  அத்தை… குழந்தைதானே?”

 “நீங்க புதுசா இருக்கீங்க… அதான் அமைதியா இருக்கா!… கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்க!… இவளோட லூட்டியை!… ஏய் வாலு!… வெளிய வாடி!” அவள் கைகளை பிடித்து இழுத்தவாறே வெளியில் நடந்தார் அத்தை போகிற போக்கில் கதவை சாத்தியபடி.

 “ஆன்ட்டி… நான் ரூமுக்கு வெளியே… கதவுக்கு இந்தப் பக்கமே விளையாடிட்டு இருக்கேன்… ப்ளீஸ்!” கெஞ்சியது அந்த யுகேஜி.

 “மறுபடியும் அங்கிளைத் தொந்தரவு பண்ணக் கூடாது…  என்ன சரியா?”

 அரை மணி நேரம் கழிந்திருக்கும். கரண்ட் ஆஃப் ஆனதால் ஃபேன் நின்றது.  புழுக்கம் தாளாமல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன்.  வெளி ஹால் இருட்டாக இருந்தது.

அப்போது  தவறுதலாய்  எதன் மீதோ காலை வைக்க,  “படக்”கென்ற சத்தத்துடன் அது உடைந்தது.  காலை உதறியபடி  குனிந்து  பார்த்தேன் ஒரு சின்ன துணியை மடித்துத் தலையணையாக்கி, அந்த மரப்பாச்சியை உறங்க வைத்திருந்தாள் ப்ரியா குட்டி. அந்த மரப்பாச்சிதான்  இரண்டாகப் பிளந்து கிடந்தது.

இடுப்புக்கு மேல் பகுதி ஒரு துண்டாகவும், கீழ்பகுதி இன்னொரு துண்டாகவும் ஆகி இருந்தது.  “அடப்பாவமே!” கையை தலையில் வைத்தபடி ப்ரியாக் குட்டியை தேடினேன். அவள் அங்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் சட்டென்று அறைக்குள் சென்று அடங்கிக் கொண்டேன்.  

 “கடவுளே!.. அந்த குழந்தைக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?… “தெய்வானை… தெய்வானை”ன்னுட்டு நாள் பூராவும் தூக்கிட்டே திரியுமே!” தவித்தேன்.

  கரண்ட் வந்ததும், எதுவும் தெரியாதவன் போல் ஃபைலில் ஆழ்ந்தேன்.

அறைக்கு வெளியே ப்ரியா அழும் சத்தம் கேட்டது.  அந்த அழுகை உச்சஸ்தாய்க்கு போக,  நான்  வெளியே வந்தேன்.

 “அங்கிள்… தெய்வானையை யாரோ கொன்னுட்டாங்க அங்கிள்!… இருட்டுல திருடன் வந்து இரண்டா வெட்டி போட்டுட்டு போயிட்டான் அங்கிள்!” இரண்டு துண்டுகளையும் இரண்டு கையில் வைத்துக் கொண்டு அந்த பிஞ்சு கதறிய கதறல் என் இருதயத்தை அறுத்தது.

அத்தை என்னை கூர்ந்து நோக்கி,  “நீங்களா.?” என்று பார்வையில் வினவ,  “ஆம்” என்று லேசான தலையை அசைப்பில் சொல்லி,  “ப்ரியாவுக்குத் தெரிய வேண்டாம்” என்று கெஞ்சலாய் கையெடுத்து கும்பிட்டேன்.

 “சரி… ப்ரியாக் குட்டி… அழாதே… உனக்கு இதை விட அழகான மரப்பாச்சி நான் வாங்கி தரேன்!… வா” என்றபடி  அவளை  சமாதானப்படுத்த முயல.

 “வேண்டாம்!… எனக்கு என்னோட தெய்வானைதான் வேணும்!” உடைந்த துண்டுகளை ஒட்ட வைக்க பார்த்து முடியாமல், உதட்டைப் பிதுக்கியது. நிலைமையை புரிந்து கொண்ட அத்தை,  “சரி வாடி… நாம போகலாம் அங்கிளுக்கு நிறைய ஆபீஸ் வேலை இருக்காம்”. அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தார் அத்தை.

 போகும்போது அந்த மழலை என்னைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டே சென்றது. “அடப்பாவி…. தெய்வானையை அநியாயமா கொன்னுட்டியே!… நீ நல்லா இருப்பியா?” என்றது அந்தப் பார்வை.

என்னால் மீண்டும் அலுவலகப் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அன்று முழுவதும் மனசு பாரமாய் இருந்தது.  “எனக்கே இப்படி இருக்கிறது என்றால் அந்த பிஞ்சு மனசுக்கு எப்படி இருக்கும்?”

தொடர்ந்து நான்கு நாட்கள் அந்த ப்ரியாக் குட்டி என் கண்ணில் படவே இல்லை.  “ஒருவேளை நான் தான் மிதித்து விட்டேன் என்று தெரிந்து விட்டதோ?”

 அன்று நான் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். நானே ப்ரியாக் குட்டியை தேடிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றேன்.  “ப்ரியாக் குட்டி!… அங்கிள் ஊருக்குக் கிளம்புறேன்” என்றபடி அவள் பிஞ்சு கன்னத்தைக் கிள்ள, அது சுரத்தேயில்லாமல் தலையாட்டியது.

“ஏய்… அங்கிளுக்கு சிரிச்ச முகத்தோட “டாட்டா” சொல்லுடி” என்று அவள் தாய் அதட்ட, செயற்கைச் சிரிப்போடு ஒரு வெற்றுக் கையாட்டலைத் தந்தாள் ப்ரியாக் குட்டி.

அந்தச் செய்கை,  “க்கும் இந்தக் கொலைகாரனுக்கு டாட்டா ஒரு கேடா?” என்பது போலிருந்தது.

*****

 கோர்வையாக ஓடிக் கொண்டிருந்த பழைய நினைவுகளை பஸ்ஸின் ஹார்ன் சத்தம் கலைக்க, திடுக்கிட்டு சிந்தனை கலைந்தேன். எப்போதும் பஸ்ஸின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டு, கண்களை மூடி, ஏதாவதொரு பழைய நிகழ்ச்சியை அசை போடுவதென்பது எனக்கு இஷ்டமானவொன்று.

நான் மேட்டுப்பாளையம் மாமா வீட்டிற்கு இப்போது சென்று கொண்டிருப்பதால், சென்ற வருட சம்பவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, என்னையுமறியால என் கை பேகினுள் சென்று, பேண்ட் சட்டைகளைத் தாண்டி, அந்தப் பொருளைத் தொட்டது.  “ம்ம்.. பத்திரமாய் இருக்கு” மனம் சொல்லிக் கொண்டது.

 “அங்க போனதும் முதல் வேலையா ப்ரியாக்குட்டி வீட்டுக்குப் போய்.. இந்த மரப்பாச்சியை அவளுக்குக் கொடுத்து அவளை ஒரு அசத்து அசத்திடணும்”

மாமா வீட்டை அடைந்ததும், வழக்கமான சம்பிரதாய பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டு, “ப்ரியாக் குட்டி எப்படியிருக்கா அத்தை?” மெல்லக் கேட்டேன்

 “ம்… நல்லாயிருக்கா!… இப்ப ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு போயிட்டா”

 “நான் போய் பார்த்திட்டு வந்திடறேனே?” சொல்லியபடி வேகமாய் வெளியேறிய என்னை அத்தை வினோதமாய்ப் பார்த்தார்.

“ப்ரியாக் குட்டி…. ப்ரியாக் குட்டி” அழைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தேன்.

 “வாங்க தம்பி!… சௌக்கியமா?” ப்ரியாவின் அம்மா வரவேற்றார்.

 “ம்… நல்ல சௌக்கியம்!… ஆமாம்… ப்ரியா எங்கே?” சுற்றும் முற்றும் தேடியபடியே கேட்டேன்.

 “ப்ரியா…. ப்ரியா…”உள் அறையைப் பார்த்து அவர் அழைக்க, ஓடிவந்தாள் ப்ரியா.

 “ப்ரியா குட்டி!… அங்கிள் உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கிறேன்!… அதை பார்த்தா நீ அசந்தே போயிருவே” என்றவன்,

 “டட்ட டைங்’ என்று வாயால் மியூசிக் கொடுத்தபடியே அந்த மரப்பாச்சியை நீட்டினேன்.

சுவாரஸியமே இல்லாமல் என் முகத்தையும் அந்த மரப்பாச்சியையும் மாறி மாறிப் பார்த்த ப்ரியா, வேண்டா வெறுப்பாய் அதை வாங்கிக் கொண்டு,  நன்றி கூடச் சொல்லாமல் மீண்டும் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் ப்ரியாவின் தாயிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு,  “சரி… நான் கிளம்பறேங்க” என்றபடி வெளியேறப் போனவன், ப்ரியாவிடம் சொல்லி விட்டு செல்லலாம், என்று அந்த அறைக்குள் சென்றேன்.

அங்கே நான் கொடுத்த மரப்பாச்சி ஒரு மூலையில் அனாதையாய்க் கிடக்க, ரிமோட்டில் இயங்கும் கார் பொம்மை ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் ப்ரியாக் குட்டி.

என் மரமண்டைக்கு அப்போதுதான் உறைத்தது.  

“காலங்கள் மாறும் போது பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களிலும் மாற்றங்கள் வரும்.”

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விடியல் வெளிச்சங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மனைவியின் மனம் (சிறுகதை) – ராதா பாலு