2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“டேய் வெங்கி, எங்கடா இருக்கே உன் சித்தப்பா கூப்பிடறார் பாரு”
அம்மா மூணாவது தடவையா இதை சொல்றா. எனக்கு சித்தப்பாகிட்ட பயம். ஆனா வேற வழியில்லை ஸ்கூலுக்கு போறதுக்குள்ளே பாத்துட்டுதான் போகணும். இல்லைன்னா என்னைத் தேடி ஸ்கூலுக்கே வந்துடுவார், தன் ஓட்டை சைக்கிள்ல.
பின்னந்தலையை சொரிஞ்ச வண்ணம், சைக்கிள் செயினுக்கு எண்ணை ஊத்திட்டே, கிழிஞ்ச வேஷ்டித் துணில சைக்கிளை துடைச்சிண்டிருந்த சித்தப்பா முன்னால நின்னேன்.
“என்னடா சண்டை ஸ்கூல்ல?”
“ஒண்ணுமில்லை சித்தப்பா” முனகினேன்.
“முனகாம சொல்லு, கண்ணனோட சண்டை போட்டயா? அவன் முதுகுல சிராய்ப்பு காயத்தோட வந்தானாமே, அவன் அப்பா காத்தாலை பேப்பர் வாங்கப் போறப்ப சொன்னாரே”
“என் புஸ்தகத்துல மீனா டீச்சர்னு எழுதி டிராயிங் போட்டா சும்மா இருக்க முடியுமா? டீச்சர் பாத்தா என்னைதானே எச்.எம்.கிட்ட கூட்டிட்டு போவாங்க”
“அதுக்காக உன் நண்பணை அப்படி அடிக்கலாமா, சொன்னா கேட்டுப்பானே நல்ல பையன் ஆச்சே கண்ணன். ஏதோ விளையாட்டா செஞ்சிருப்பான், அதுக்காக ஃபிரண்ட்ஸ்க்குள்ளே அடிதடி பண்ணலாமா, சொல்லு. எத்தனை தடவை உனக்காக வீட்டுப்பாடம் செஞ்சு கொடுத்திருக்கான் உனக்கு காச்சல் வந்தப்ப, உன் பக்கத்துலயே இருந்தானே அதெல்லாம் மறந்துடுவயா? இன்னிக்கு போய் அவனோட பேசி திரும்ப ஃபிரண்ட் ஆகணும், என்கிட்ட சாயந்தரம் அவனை கூட்டிண்டு வா. இல்லை நான் உன் முதுகுத் தோலை உறிச்சிடுவேன் தெரிஞ்சதா ஓடு இப்ப ஸ்கூலுக்கு.”
அந்த வயதில் எனக்கு நட்பின் பெருமையை அவர் வழியில் சொல்லிக் கொடுத்தார் சித்தப்பா.
“அம்மா ஏதாவது திங்கக் கொடும்மா”, அம்மாவை நச்சரித்திண்டிருந்த ஒரு மாலையில் “டே வெங்கி இங்கே வாடா” என் சின்ன அத்தை கூப்பிட்டா. உடனே ஓடினேன் மைது அத்தை கிட்டே.
“ஏன்னா, வெங்கிக்கு ஏதோ பாம்பேல இருந்து வாங்கிண்டு வந்தேளே அதை கொடுங்கோ, குழந்தை வந்திருக்கான்.”
மாமா அந்த மரபீரோல இருந்து ஒரு துணிப்பையை எடுத்துக் கொடுத்தார். ஆர்வமா அங்கயே உக்காந்து திறந்து பாத்தேன், உள்ளே அழகான நீலமும் மஞ்சளும் கலந்த டி.ஷர்ட், ஒரு ஸ்வீட் டப்பா, பெரிய பட்டை வெளிநாட்டு சாக்லேட்.
சந்தோஷமா அத்தை மாமா ரெண்டு பேர் கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு, “அம்மா இங்கே பாரேன்” சமையலறைக்கு ஓடினேன்.
அந்த அத்தை மாமாவின் எதிர்பார்ப்பு இல்லாத அளவற்ற அன்பு இன்றும் நெஞ்சை நிறைக்கிறதே.
அப்பாவோட அம்மா, அம்மாயிப் பாட்டி (நிஜப்பேர் இப்பவும் தெரியாது) என்னை, அக்காவை, பெரிய அத்தை பையன், பொண்ணு, சின்ன அத்தை பொண்ணுங்க ரெண்டு பேர், பெரியப்பா பையன் சீனு அண்ணா எல்லாரையும் சுத்தி உக்கார வச்சிண்டு பெரிய மாக்கல் ஜாடில சாதம் பிசைஞ்சு பிடிப் பிடியா கைல போட்டு, கட்டை விரலால சாதத்து நடுவுல சின்ன ஓட்டை போடச் சொல்லி சுண்டக் காச்சின கீரைக் குழம்பை அதுல கொஞ்சம் ஊத்தி சாப்பிடச் சொல்வாளே, ஞாபகம் வருது, கண்ல லேசா கண்ணீர் துளிர்க்கிறது.
சாதம் போடும் போதே எத்தனை கதைகள் எத்தனை பழமொழிகள். அம்மாயிப் பாட்டி நீ எங்கே போனே?
கணேசு தாத்தா (அப்பாவோட அப்பா) சாயந்தரம் ஆனா நாகர்கோவில் அக்கிரஹாரம் தெருவுல இருந்த பெரிய வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பூங்காவுக்கு கூட்டிண்டு போவார் எல்லா குழந்தைகளையும். போகும் போதே ‘பட்டணம் ஐய்யர் பட்சணக் கடைல’ இருந்து ஆளுக்கு ஒரு 10 பைசா பட்சண பொட்டலம். அந்த மந்தார இலை பொட்டலத்து பட்சண ருசி நினைச்சாலே இன்னமும் நாக்கு ஊறரதே. இன்னும் அந்த கடை இருக்குமோ?
லீவுல ஏதோ ஒரு கல்யாணத்துக்கு குடும்பம் பூரா (சுமார் 18 பேர்) டிரெயின்ல போனோமே. புளிசாதம், தயிர் சாதம், அரிசி வடாம், ஊறுகாய்னு சோத்து மூட்டையோட. உடம்பெல்லாம் முகமெல்லாம், நீராவி ரயில் என்ஜின் விட்ட கரிப்புகை பூச்சோட சந்தோஷமா போன தினங்கள் எங்கே போச்சு.
சின்ன அத்தை பொண்ணு சுசிலாவையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா. நாகர்கோவில்ல அந்த விசாலமான வீட்டு முற்றத்துல தென்னை ஓலை பந்தல் போட்டு கல்யாணம்.
மாடி ரூம்லயே சாந்தி முகூர்த்தம். அந்த கதவுக்கு வெளில அத்தை, மாமி, பெரியம்மா, சித்தி ஏன் சின்ன மாமா கூட ராத்திரி 12.30 வரை அட்டகாசமா கேலி பண்ணி பாடின பாட்டுக்கள் இன்னும் காதுல ஒலிக்கறதே. அந்த சந்தோஷ கல்யாண தினம் இனி வருமா.
இப்ப அந்த வீடு பெரிய லாட்ஜ் ஆயிடுச்சு, எங்க தெருவே இப்ப கடைகளும், ஹோட்டல்களுமா மாறியாச்சு.
சுசிலாவோ எங்க குழந்தைகளை (ஒரு பையன், ஒரு பொண்ணு) வளத்து பெரிசாக்கி, அயல்நாட்டுல செட்டிலானப்பறம், பேரன் பேத்திகளையும் பாத்துட்டு என்னை இந்த பரந்த உலகத்துல தனியா விட்டுட்டு பறந்தே போயிட்டா.
அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்கள் ஏன் தொலைஞ்சு போச்சு,இப்ப யாருக்கும் நேரம் இல்லை, பறந்து பறந்து சம்பாதிக்கறா. அப்படியும் திருப்தி இல்லை, சொந்தங்கள் போச்சு, நட்புக்கள் போயிட்டே இருக்கு, முதியோர் இல்லங்கள்தான் நல்ல வியாபாரம் பண்றது.
அச்சோ காலை டிபன் நேரமாச்சு, பிரார்த்தனை கூடத்துக்கு போயிட்டு, டைனிங் ஹால் போகணும்.
“அட்சயா முதியோர் இல்லம்” கோயமுத்தூர்ல ரொம்ப ஃபேமஸ்னு பையன் என்னை இங்கே சேத்து விட்டிருக்கான்.
(என்னை முத நாள் அங்கே கொண்டு விட்டப்ப, அவனை நான் ஸ்கூல்ல முதல் முதல்ல சேத்து விட்ட தினம் ஞாபகம் வந்தது எப்படி அழுதான் விட்டுட்டு போகாதேப்பானு, நான் பெரியவன் என்னால இப்ப வாய் விட்டு அழ முடியலை).
இப்ப டைனிங் ஹால்ல இட்லியை பிட்டு வாயில போடறப்ப அம்மாயிப் பாட்டி உள்ளங்கைல சாதமும் கீரையும் போட்ட ஞாபகம் வருது.
“ஹூம் கரைஞ்சு போன தினங்கள், மறைந்து போன உறவுகள்”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings