மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இரவை வரவேற்கத் தயாராக இருக்கும் மாலை பொழுதின் மத்தியப்பகுதி அது. சென்னையிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் வரை செல்லும் அந்த பேருந்தில் அன்று கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
‘வெட்டி வேரு வாசம்… வெடல புள்ள நேசம்….’
மலேசியா வாசுதேவனின் குரல், குளிர்ந்த நீரால் குளிப்பாட்டி விட்டதைப் போன்ற ஒரு சுகமான அனுபவத்தை தந்து கொண்டிருந்தது.
இசையின் ஓட்டத்திற்கு ஏற்ப தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, கண்களை மூடிக்கொண்டு ஜன்னல் கம்பிகளின் வழியே வரும் காற்றை ரசித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
அவன் மட்டும் ஹெட்போன் ஒன்றை காதில் மாட்டிக் கொண்டு, இருக்கையில் சாய்ந்தபடி ஒரு தனி உலகினுள் நீந்திக் கொண்டிருந்தான். மதுரை அருகேயுள்ள மேலூரை நெருங்கும் போது, பேருந்தின் வேகம் மெல்லக் குறைந்தது.
“வண்டி பத்து நிமிஷம் நிற்கும். சாப்பிடுறவங்க சாப்பிடலாம். பாத்ரூம் போறவங்க போகலாம்…”
நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் டீ கடையில் பேருந்தை நிறுத்திவிட்டு, கையில் இருந்த பணப்பையை கட்டிபிடித்துக் கொண்டு கீழே இறங்கினார் கண்டக்டர்.
பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த ஹெட்போன் ஆசாமி, மெல்ல கீழே இறங்கி வந்தான்.
‘ஸ்டார் டீ ஸ்டால்’ என எழுதியிருந்த அந்தக் கடையை நோட்டமிட்ட அவனது பார்வை, கடையின் முகப்பில் இருக்கும் கண்ணாடிப் பெட்டியின் மேல் விழுந்தது.
மிதமான சூட்டோடு இருந்த ‘மிளகாய் பஜ்ஜிக்கள்’ கண்ணாடிப் பெட்டியினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பழைய நியூஸ் பேப்பரின் துணை கொண்டு, இரண்டு மிளகாய் பஜ்ஜிக்களை எடுத்துக் கொண்டான் அவன்.
“ஒரு டீ…” என தனது மெல்லிய குரலால் அவன் கேட்க,
“உள்ள போய் டோக்கன் வாங்கிட்டு வாங்க சார்…” என பதில் வந்தது.
சற்றே அலுத்துக் கொண்ட அவன், அதை முகத்தில் காட்டாதவாறு டோக்கனை வாங்க கடையினுள் நுழைந்தான்.
“ஒரு இஞ்சி டீக்கு டோக்கன் கொடுங்க…” என சொல்லிவிட்டு கையிலிருந்த பஜ்ஜி ஒன்றை வாய்க்கு கொண்டு போக, ‘அத சாப்பிடாத…செத்து போயிடுவ…’ என்ற குரல் ஒலித்தது.
அதைக் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்த அவன் அருகில், கலைந்த முடியுடன் அழுக்கேறிய ஆடைகளோடு நின்று கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.
“சார் நீங்க சாப்பிட்டுங்க, அவரு அப்படித் தான்” என்றார் டோக்கன் கொடுத்த கடையின் உரிமையாளர்.
பஜ்ஜியை முன்னும் பின்னும் பார்த்த அவன், அருகில் குப்பைத் தொட்டி ஏதாவது உள்ளதா என ஆராய முற்பட்டான்.
“சார்… என்ன தேடுறீங்க. நான் தான் சொல்றேன்ல? நம்பி சாப்பிடுங்க…”
“உயிர் போகும்னு ஏதோ சொல்றாரு, எப்படி சாப்பிட முடியும்?”
“சார்… அவரு எங்க அப்பா தான். புத்தி சுவாதினம் இல்லாதவரு. இப்படிச் சொன்னா வாங்கின பஜ்ஜிய சிலர் கீழே போட்டுடுவாங்க. அதை கொண்டு போய் தெரு நாய்களுக்கு போட்டுடுவாரு…”
“தெரு நாய்களுக்கா? ஏன்?”
“அதான் சொன்னேன்ல. புத்தி சுவாதினம் இல்லாதவருனு”
ஒருவித மிரட்சிப் பார்வையுடன் அந்த முதியவரைப் பார்த்த அவன், “இதுக்கு அவர் வீட்டிலேயே…”
அவன் சொல்லி முடிப்பதற்குள், “அவருக்கு வலிப்பு எப்போ வரும்னு சொல்ல முடியாது சார். நான் தான் கூடவே வச்சு பாத்துக்கனும்…” என்றார் அவர்.
அந்த முதியவரைச் சுற்றி, வாலை ஆட்டியபடியே நின்று கொண்டிருந்தன தெருநாய்கள். உரிமையான முகபாவனைகளுடன் ஏதோ அவற்றிடம் பேசிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
அவன் முகம் இப்போது சுருங்கியிருந்தது. சிறுவயதில் தொலைந்து போன தன் அப்பாவின் நினைவு திடீரென வந்தது.
“நம்ம குடும்பம் வாங்கிட்டு வந்த சாபம் இது. உன் தாத்தா புத்திபேதலிப்பால என் கண்முன்ன தீ குளிச்சுட்டு செத்துப் போனாரு. உன் அப்பன வீட்டுக்குள்ள பூட்டி வச்சும் ஒரு நாள் எங்கேயோ ஓடி போயிட்டான். உனக்கும் அந்த நிலைமை வரக்கூடாதுனு தான் படிக்க வெளியூருக்கு அனுப்பறேன். இந்த சூழலே உனக்கு வேண்டாம்…”
கல்லூரியில் சேரும் முன் அம்மா சொன்ன வார்த்தைகள், இதுபோன்ற சம்பவங்களைக் கண்டால் அவன் நினைவிற்கு வரும்.
வற்றியிருக்கும் அவன் தொண்டையில் இஞ்சி டீ இறங்கிய போது, அந்த முதியவர் சொன்னது அவன் காதில் திரும்பவும் ஒலித்தது.
“அத சாப்பிடாத…செத்து போயிடுவ…” என வேறு யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
“அப்பா உயிரோடு இருந்தா இந்த மாதிரி தான் எங்கேயாவது சுத்திட்டு இருப்பாரு…” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.
பேருந்து மீண்டும் கிளம்பத் தயாரானது. இருக்கையில் ஏறி அமர்ந்த அவனின் கைபேசி அலறியது.
“சார்… எங்க இருக்கிங்க? அவ்வளவு சமாதானம் பண்ணி உங்க அம்மா உங்கள அட்மிட் செஞ்சுட்டு போனாங்க. நீங்க இப்படி ஓடிப்போயிட்டிங்களே…” என்றது எதிர்முனையில் ஒலித்த குரல்.
ட்ரூ காலரில் ‘மனநல காப்பகம், சென்னை’ என வந்திருப்பதை கவனித்த அவன், மெல்ல அந்த எண்ணை ப்ளாக் செய்துவிட்டு ஹெட்போனை தேடிக் கொண்டிருந்தான்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings