எழுத்தாளர் மைதிலி ராமையா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கிராமத்தில் இருக்கும் பாட்டி மிகவும் உடம்புக்கு முடியாமல் இருப்பதாகவும் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் அம்மா அழுது கொண்டே சொன்னதும் மிகவும் கலங்கிப் போய்விட்டேன்.
விடுதியில் உடன் இருந்த தோழிகளிடம் சொல்லிவிட்டு கிடைத்த பஸ் பிடித்து உடனே ஊருக்குப் புறப்பட்டு விட்டேன். மாலை ஆறுமணி அளவில்தான் நான் எங்க வீட்டிற்கே வர முடிந்தது. அப்பாதான் வீட்டில் இருந்தார். அம்மா, பாட்டி வீட்டில்தான் கடந்த ஒருவாரமாக இருப்பதாகக் கூறிய அப்பா என்னை அழைத்துக் கொண்டு உடனே கிராமத்துக்கு புறப்பட்டார்.
எங்கள் வீட்டிலிருந்தே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் பஸ் நிறுத்தம் இருந்தது. பாட்டி வீடு உள்ளது படு கிராமம். இங்கிருந்து ஒருமணி நேரத்துக்கு ஒன்று என பேருந்து அந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தது.
அங்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வயல் வரப்புகளில் நடந்து சென்றுதான் பாட்டி வீட்டை அடைய முடியும்.
எங்களுக்கு வெகு நேரம் வரை பஸ் கிடைக்கவேயில்லை. வரும்போதே பயணிகளால் நிரம்பி வழிந்து கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டே வந்தது. எனவே நிற்காமலே போய்க்கொண்டு இருந்தது.
கடைசியாக வந்த ஒரு பஸ்ஸில் இடம்பிடித்து ஏறி உட்கார்ந்த பின்னர் நடத்துனரும் ஓட்டுனரும் ஏதோ சாப்பிட்டு வருவதாகக் கூறி இறங்கிச் சென்று விட்டனர்.
அப்போதுதான் அப்பா, பாட்டிக்குப் பழம் வாங்கிய கடையிலேயே பர்ஸை விட்டுவிட்டு வந்ததை கவனித்தார். எனவே நடத்துனரிடம் சென்று சொல்லிவிட்டு கடைத்தெருவுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.
அவர் வருவதற்குள் நடத்துனரும் ஓட்டுனரும் வந்துவிடவே நான் பயந்து போய் என் அப்பா இன்னும் வரவில்லையே என்று அவர்களிடம் சொன்னேன்.
கடைத்தெருவுக்குத் தான் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாரும்மா உக்காரு. பஸ் அந்த திருப்பத்தில போகும் போது வந்து ஏறிடுவாரு என்றார்கள்.
நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. ஏற்கெனவே லேட்டும்மா. அடுத்த வண்டி வந்திடும் பிரச்சனை ஆயிடும் என்று சொல்லிக் கொண்டே வண்டியை எடுத்து விட்டார்கள்.
கடைத்தெரு வந்தும் அப்பா வராததால் நான் தவிப்புடன் ஸார், என்று கூப்பிட்டதுமே, பின்னாடியே அடுத்த வண்டி வருதும்மா அதில வந்திடுவாரு இப்ப இங்க நிறுத்த முடியாதும்மா என்று ஒருமாதிரி மேற்கொண்டு வாயே திறக்க முடியாதவாறு கறாராகக் கூறிவிட்டார்.
செய்வதறியாது நானும் மௌனமாக இருந்து விட்டேன். அப்பா வந்தபோது கண்டக்டர் சொன்னது போல அடுத்த வண்டி வந்து அதே இடத்தில் நின்றிருக்கிறது. அதில் ஏறிப்பார்த்த அப்பா என்னைக் காணாமல் பதறிப் போய் பஸ்ஸிலிருந்து இறங்கி ,அங்குமிங்கும் தேடி கடைசியில் வீட்டிற்கே போய் பார்க்க எண்ணி கிளம்பிப் போய் விட்டார்.
இது எதுவும் தெரியாமல் நான் பாட்டி வீட்டிற்கு செல்வதற்கான நிறுத்தத்தில் இறங்கி அடுத்து வரும் பஸ்ஸில் அப்பா வருவார் என காத்திருந்தேன்.
அந்த நேரத்துக்கு ஊரே அடங்கி விட்டது. ஆள்அரவமே இல்லை. அவ்வப்போது வந்து போகும் பேருந்துகளைத் தவிர வேறு யாருமே இல்லை. அடுத்த பஸ்ஸும் வந்து போய் விட்டது. அப்பா அதிலிருந்து இறங்காததைப் பார்த்ததும் பதறிவிட்டேன்.
அப்பாவுக்கு என்ன ஆனது. இந்த மையிருட்டில் நான் எப்படி தனியாக பாட்டி வீட்டிற்குப் போகமுடியும். ஈரக்குலை நடுங்கியது என்று சொல்வழக்கில் கேட்டிருக்கிறேன் அது இதுதான் போலும். கை கால் உதறுவதைப்போல உடம்புக்குள் ஏதோ உதறுவதாக உணர்ந்தேன்.
ஆள் அரவம் அற்ற சாலையில் கையில் ஒத்தை பைசாகூட இல்லாமல் போகுமிடமும் புரியாமல் அப்பாவைப் பற்றிய கவலையும் சேர்ந்து கொள்ள அழுகை பொங்கியது.
சுற்றிலும் வயல் பரப்பு என்பதால் தவளைகளின் சத்தம் இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தது.
மழையும் லேசாகத் தூறத் தொடங்கியது. என்ன செய்யலாம் இனியும் இங்கேயே நின்று கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று புரிந்தது. ஏதாவது வெளிச்சப் புள்ளி தெரிந்தாலும் அதை நோக்கிப் போகலாம் என்று பார்த்தால் சாலை விளக்குகள் கூட சரியாக எரியாமல் சதி செய்தன.
அப்போதுதான் அந்தப் பக்கமாக சைக்கிளில் வந்த ஒருவர் நான் தனியாக நிற்பதைப் பார்த்து அருகில் வந்தார். எனக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.
என்னம்மா யாரு நீ! இங்க ஏன் தனியா நின்னுகிட்டு இருக்கே என்றார். அவர் குரலில் பதட்டம் தெரிவதாகத் தோன்றியது. நான் என் பயத்தை எல்லாம் ஒரே விழுங்காக விழுங்கினேன். குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு, எங்கப்பா நாவல்பூரிலிருந்து பஸ்ஸில வந்திட்டு இருக்கார் அவருக்குத்தான் வெயிட் பண்றேன் என்றேன்.
இனிமே இங்க பஸ் எதுவும் வராதேம்மா கடைசி பஸ் இன்னேரம் போயிருக்குமே ஆமாம் நீங்க எங்க போகனும் என்றார்.
வேதபுரி போகனும் அங்கே சிவசைலம் அய்யா வீட்டுக்கு என்றேன் மீண்டும் பயப்படாத மாதிரியே.
சிவசைலம் அய்யா வீட்டுக்கா வாம்மா சைக்கிள்ல ஏறு கொண்டு போய் விட்டிடறேன். இங்கெல்லாம் இப்படி ராத்திரி வேளையில தனியா நிக்கக் கூடாதும்மா. அப்பா எப்படியும் பஸ்ஸை விட்டிருந்தாலும் லாரி ஏதாவது பிடிச்சு வந்திடுவாரு வாம்மா என்று மிகக் கனிவாகப் கூப்பிட்டார்.
அந்தக் கனிவுகூட பயமாகத்தான் இருந்தது. இவருக்கென்ன இவ்வளவு அக்கறை என்று மனம் தப்புத்தப்பாகத்தான் யோசித்தது.
பாட்டியை பாக்க வந்தியாம்மா என்றபடி அவர், என் மன ஓட்டம் என்னவென்பதை பற்றி எதுவும் அறியாமல், சைக்கிளை என் அருகே கொண்டுவந்து நிறுத்தினார்.
பாட்டியைப் பற்றி சொன்னதில் கொஞ்சமாக நம்பிக்கை எனக்குள் எட்டிப்பாக்க, வேறு வழியும் இல்லாத நிலையில் அவருடன் திக்திக் மனதுடன் புறப்பட்டேன்.
மிகவும் நல்ல மனிதர் பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு பாட்டியிடம் நலம் விசாரித்து விட்டே புறப்பட்டார்.
நான் உள்ளே நுழையவும் அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அப்போதெல்லாம் கைபேசி வரவில்லை அதுதான் இத்தனை சங்கடங்களுக்கும் காரணம்.
விபரம் அறிந்து பதட்டம் நீங்கிய அப்பா அப்புறம் மறுநாள் காலை வந்து சேர்ந்தார்,
பாட்டியிடம் என் பயண அனுபவத்தை பற்றிச் சொல்லி துணைக்கு வந்தவரையே நம்பாமல் தவித்தேன் என்று சொன்னதும், இன்னும் கிராமங்களில் மனிதம் தழைத்தோங்கித்தான் இருக்கும்மா என்னிக்குமே இந்த விஷயத்தில இது பட்டணம் ஆகாமல் இருக்கனும் என்றார் பாட்டி.
மறுநாள் அப்பா வந்ததும் அவரிடம் சண்டை பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நான், பாட்டி சொன்ன வார்த்தையில் விழித்துக் கொண்டேன். அவரும் தானே தவித்துப் போயிருப்பார்.
மனிதாபிமானம் இல்லாமல் அவரை கோபித்துக் கொள்ள நினைத்தோமே என என்னை நானே குட்டிக் கொண்டேன்.
எழுத்தாளர் மைதிலி ராமையா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings