நடப்புச் சமூகம் எத்தனைதான் நவீனத்தில் மிளிர்ந்தாலும், நாகரீகத்தில் ஒளிர்ந்தாலும், இன்னும் சிறுசிறு சண்டைகளும், சச்சரவுகளும், மனஸ்தாபங்களும், மனத்தாங்கல்களும், மாறாமல் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்கான காரணங்கள் எவ்வளவோ இருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு முக்கிய காரணமாக இருப்பது “லூஸ்டாக்” எனப்படும் “தேவையில்லாத பேச்சு”.
நம் வாழ்க்கையில் தினமும் பலவிதமான பிரச்னைகளை சந்திக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் அவசியமில்லாத. அர்த்தமில்லாத பேச்சுக்களே நம்முடைய பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
சிலர் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் தேவையில்லாமல் பிறரிடம் பேச மாட்டார்கள். சிலர் தேவைப்படும் சமயங்களில் கூட பேச மாட்டார்கள். பலர் அடுத்தவருடைய சொந்த விஷயங்களை கற்பனை கலந்து பிறரிடம் பேசுவார்கள். சிலர் மற்றவர்களை குறைவாக எடைபோட்டு அவர்களை உதாசீனப்படுத்தி பேசுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் தான் மட்டுமே இந்த உலகில் புத்திசாலி என்று தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு பிறரைத் தாழ்த்தி. தன்னை உயர்த்தி பேசிக்கொண்டே இருப்பார்கள். சொல்லப்போனால் இவை எல்லாம் தவறான பேச்சுக்களே.
நாம் எப்படிப் பேசினால் அனைவரும் நம்மை மதித்துப் போற்றும்படி வாழலாம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இனிமையான பேச்சு, அன்பான பேச்சு, அவசியமான பேச்சு, அடக்கமான பேச்சு, அளவான பேச்சு, பிறரை குறை கூறாத பேச்சு. பிறருக்கு நன்மை மட்டுமே தரும் பேச்சு. இத்தகைய பேச்சுக்கள் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே பரிசாகத் தரும்.
ஒன்றுமில்லாத விஷயத்தை பேசிப் பேசி பெரிதாக்கி பின்னர் அதனால் அவதிக்குள்ளாகும் பலரை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பேருந்தில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசலில் சகபயணி காலை மிதிப்பது இயல்பு. உடனே மிதித்தவர் அனிச்சையாக மன்னிப்பும் கேட்டு விடுவார். இது பேருந்துப் பயணங்களில் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம். இதோடு விட்டுவிட்டால் பிரச்னை முடிந்தது. ஆனால் மிதிபட்டவர் விடமாட்டார். “உனக்குக் கண்ணு தெரியாதா?” என்று கோபமாக ஒரு கேள்வியைக் கேட்பார். மன்னிப்பு கேட்டும் இப்படிப் பேசுகிறாரே என்று மிதித்தவர் இதற்கு கோபமாக பதில் சொல்லுவார். இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பேச கடைசியில் கைகலப்பு நடக்கும். இதனால் இருவருக்குமே மிஞ்சுவது அவமானம் மட்டுமே.
நாம் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு யோசித்து யோசித்து செலவழிக்கிறோமோ அதுபோலவே பேச்சையும் யோசித்து யோசித்துப் பேசப் பழக வேண்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரூபாயை செலவழிப்பதற்குச் சமம் என்று நாம் கருதப் பழக வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை நம் விருப்பம் போல செலவழித்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் நாம் அனைத்தையும் இழந்து துன்பத்தைச் சந்திக்க நேரிடும். அதுபோலவே எப்போதும் எந்த சூழ்நிலையிலும் யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டுபவர்களும் நிம்மதியை இழந்து சிக்கல்களை சந்திக்க நேருகிறது.
அதிகமாகப் பேசினாலும் ஆபத்து பேசாமல் இருந்தாலும் ஆபத்து. பேசாமல் இருந்துவிட்டால் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அச்சமயங்களில் நீங்கள் மௌனச் சாமியாராக மாறப் பழக வேண்டும். பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. அச்சமயங்களில் நான் ஒரு மௌனச் சாமியார் என்று நீங்கள் பேசாமல் இருந்தால் பிரச்னை இன்னும் பெரிதாகிவிடக் கூடும்.
தேவையில்லாத பேச்சுக்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அளவிற்கு அதிகமாகப் பேசுவதால் நமது சக்தி நம்மையறியாமல் வீணாகிறது. நமது கவனம் சிதறிப்போய் விடுகிறது. ஒரு பிடி சோறு நோய்கள் நம்மை நாடி வராமல் பாதுகாக்கும். ஒரு பிடி பேச்சு வீண் சண்டை சச்சரவுகள் நம்மை நாடி வராமல் பாதுகாக்கும்.
“பேச்சைக் குறை! பெருக உழை!” என்று முன்னோர்கள் சொன்னதை ஊன்றிக் கவனித்துப் பார்க்கும் போது, ஒருவேளை இந்த “லூஸ்டாக்மேனியா” அந்தக் காலத்திலும் இருந்திருக்கக் கூடுமா? என்கிற ஒரு அர்த்தமுள்ள சந்தேகமே மேலோங்குகிறது.
சரி, அதென்ன “லூஸ்டாக்மேனியா?”
இன்றைய நவீன உலகில் எல்லாத் துறைகளிலும் வெற்றி என்பது தகவல் பரிமாற்றத்தின் மூலம் மட்டுமே நிகழ்கின்றது. தகவல் பரிமாற்றம் என்பது மனிதர்களுக்கிடையே கருத்து, மற்றும் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டு செயல் படுவதாகும். எத்தனையோ முறைகளில் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தாலும், பெரும்பாலான அன்றாட வேலைகளுக்கான விபரங்கள் வாய் மொழியாக மட்டுமே வழங்கப்படுகின்றன. தேவையான பேச்சுக்களை மட்டும் ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி விட்டு, ஆக்க வேண்டிய காரியங்களை கச்சிதமாக ஆற்றுவதென்பது, சரியான முறை. இன்றைய காலகட்டத்தில், அவ்வாறான நபர்களைக் காண்பதென்பது வெகு அரிதாகவே இருக்கின்றது. தேவையில்லாத பேச்சுக்களை, தேவையில்லாத நேரத்தில், அதன் பின் விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் பேசிவிட்டு, சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்களே இன்று அதிகமாகக் காணப்படுகிறார்கள். இவர்கள்தான் “லூஸ்டாக் மேனியா” நோயாளிகள்.
உதாரணமாக, ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக இருக்கும் ஒருவர், வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த உடையைப் பற்றி, தானே வலியச் சென்று, “இந்தக் கலர் உங்கள் நிறத்திற்குப் பொருத்தமாக இருக்காது…நீங்கள் கருப்பாக இருப்பதால்…கொஞ்சம் லைட் கலராய் அணிந்தால்தான் நன்றாக இருக்கும்!” என்று கருத்துக் கூறுவாரானால் விளைவு எப்படியிருக்கும்?
முதலில் அந்த வாடிக்கையாளர், விற்பனையாளர் வேண்டுமென்றே தன் நிறத்தைக் குத்திக் காட்டுவதாகத்தான் எண்ணுவார். அடுத்து, உண்மையிலேயே தனக்குப் பிடித்த உடைகள் அங்கு இருந்தாலும் கூட, அவற்றை அங்கு வாங்க பிரியமில்லாமல் வெளியேறுவார். மூன்றாவதாக, தம் நட்பு வட்டாரத்திலும் அந்தக் கடையைப் பற்றி ஒரு எதிர்மறை அபிப்பிராயத்தையே தருவார்.
பாருங்களேன்!… தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு பேச்சை அந்த விற்பனையாளர் பேசப் போக, அடுத்தடுத்து ஏற்படும் அதன் விளைவுகளை!
இதேபோல்தான் குடும்பத்திலும், சில வீடுகளில் ஆண்களும், சில வீடுகளில் பெண்களும், “லூஸ்டாக்மேனியா”வாக இருப்பார்கள். அவர்களது தேவையில்லாத பேச்சுக்களால், அந்தக் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்குக் குறைவே இருக்காது. ஒரே ஒரு நிமிடம், தங்கள் வாயைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டு, மாதக்கணக்கில் மனச் சங்கடங்களோடு கிடப்பர். பொதுவாகவே, இந்த “லூஸ்டாக்மேனியா”க்கள் தங்களுடைய பேச்சினாலேயே தங்களுடைய அறியாமையை, தங்களுடைய இயலாமையை, வெளிப்படுத்திக் கொள்வதோடு, தங்களுடைய பேச்சு தங்களின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே போய்க் கொண்டிருக்கின்றது, என்பதையும் உணராமலே இருப்பர்.
ஒருவர் என்ன பேசுகிறார்? என்பதை விட, ஏன் பேசுகிறார்?…என்பதே முக்கியம். ஒரு அறிஞர் சொல்வார், “உனக்குத் தெரியாத எதையும் பேசாதே!…அதே நேரம் உனக்குத் தெரியும் என்பதாலேயே எல்லாவ்ற்றையும் பேசி விடாதே!” என்று.
சமுதாய வாழ்விற்கு சுவாசம் போன்றது பேச்சு. அது தங்கு தடையின்றி தெளிவாகவும், சுருக்கமாகவும், வரும் போதுதான் அது ஒரு “சக்தி”யாகும், இல்லாவிட்டால் அது ஒரு “சகதி”யாகும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings