டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“சீக்கிரம் வீட்டுக்கு வா…ஒன் லவ்வரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கான். நீங்க ரெண்டு பேரும் நல்லா சிரிச்சு பேசலாம்…அதைப் பார்த்து நா ரசிக்கப் போறேன். குடுத்து வைச்சவ நீ…” கணவனின் சிரிப்பொலியோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது
மதியின் முகம் எந்தவொரு கலவரமும் பதற்றமுமின்றி இயல்பாகக் காணப்பட்டது. கணவனின் விசித்திரமான சிந்தனைக்கும் மனத்தைத் துளைத்து ரணமாக்கும் பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் மௌனித்து நகர்வது மட்டும் அவளது வழக்கமாயிருந்த வேளையில், இவ்வழைப்பு எவ்வித உள்போராட்டத்தையும் நிகழ்த்த முனையவில்லை.
மதியின் கவனம் கொஞ்சமும் சிதறாமல், மேசையின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளின் மீது தான் இருந்தது.
இன்னும் இருநாள்களில் சீனத்தியிடம் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல். என்ன தான் உற்பத்தித் துறையின் கணக்கு வழக்குகளைப் துல்லியமாகச் சரிப் பார்த்திருந்தாலும், மிஸ்.லிம் எங்கிருந்து தான் தவறுகளைச் சுட்டிக் காட்டுவாளோ தெரியவில்லை
ஜப்பானிய தொழிற்சாலை நிர்வாகி எய்சுகே நாகுமோவும் அவளிடம் சிக்கி விடுவார். அனைத்துலக உற்பத்தி தர சான்றிதழுக்காக அவளிடம் இழுப்பறி நிலை தான். ஆராயிரம் முதல் ஏழாயிரம் வரை பணத்தை வாரி இரைத்தும் சீனத்தின் ஆளுமையால் அந்த சிறிய ரக தொழிற்சாலை ஆட்டங்கண்டு தான் போயிருந்தது.
வீட்டிற்குப் கிளம்பி தயாரான மதியை வழிமறித்து நின்ற சக தோழி ஷீடா, “சாயாங்…ஜாகா டிரி யா…” (ஜாக்கிராதையாக இரு அன்பே) என மதியின் தோளில் மீது கை பதித்து, தன் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி நின்றாள்
ஒவ்வொரு நாளின் மாலை வேளையும் மதியின் இனம் புரியாத புன்னகை அவளது கன்னத்தில் தன் கரங்களால் தழுவி நழுவிச் சென்று விடும்.
மதி தனது நான்கு சக்கர வண்டியை முடுக்கி விட்டாலே இனி அவள் கடக்கும் பாதை மரணத்தை நோக்கித் தான் இருக்கும்.
“மதிமா… மாடுங்களோடு பழகிப் போன எனக்கு பொண்ணுங்க மனசுன்றது என்னான்னு தெரியாது. மாட்டோட நெடி, நாத்தம் தான் என் மூச்சுக் காத்து. என்ன தான் நீ பாசத்த காட்டனாலும் மாடு தான் என் மொத பொண்டாட்டி….”
தாயின் பிரிவை விட, நினைவு தெரிந்த நாள் முதல் மாடுகளோடு வாழ்ந்து விட்டவன் இன்று தன் அண்ணனின் சூழ்ச்சியால் தாயிக்குச் சொந்தமான மாடுகளைப் பிரியும் நிலை ஏற்பட்டப் போது ஆறுதலான குடிப்பழக்கம், நாளடைவில் தினசரி நடவடிக்கையானது கணவனின் வாழ்க்கை
குடிப்பழக்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பத்திலேயே மனத்தில் ஒளிந்திருந்த சந்தேக குணமும் குடிக்கொள்ள ஆரம்பித்தப் போது, குடும்பச் சிதைவு தலைத் தூக்க ஆரம்பித்தது
காலத்தால் கடந்து கொண்டிருக்கும் வார்த்தைகளானாலும், தழுவிக் கொண்ட சூழல்களிலிருந்து மதி மீள்வதில்லை. சிந்தை பல திசைகளில் பயணித்தாலும் மரண வாசலுக்குத் தான் அவளது வாகனம் தவறாது சென்று விடும்
வீட்டை நெருங்கையில் மறுபடியும் கைப்பேசி கணத்தது. மார்போரமாக வைக்கப்பட்டிந்த சட்டையின் பாக்கெட்டில் அதன் அதிர்வு மார்பு நாளங்களில் ஊடுருவி தசைகளை இறுக்கிப் பிடித்தது.
“இந்த மாருல தான அவன் சாய்ஞ்சான்…”
பதிலுக்குப் கூட காத்திராமல் கணவன் கொடுத்த குத்தின் வீக்கம் இன்னமும் ஒரு கணத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
நரக வாசலை அடைந்த போது மாலை மணி 6.10. தலை தரையைப் பார்த்து தொங்கியவாறு சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் குறட்டை ஒலி, வாசல் வரை எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டிருந்தது
கணவனது ஆழ்ந்த உறக்கமானது, மதிக்கு நிம்மதியை தரும் சில நிமிடங்களாகும். உள் நுழைந்தவளுக்குத் தலையணைப் பஞ்சுகள் பனிமழைப் போல் வீடெங்கும் சிதறிக் கிடந்தன
அவை தான் கணவன் வர்ணித்த ‘லவ்வர்’ என்பதை உணர்ந்து, கணவன் பிடியிலிருந்த கிரிஷ் ரக கத்தியை லாவகமாக எடுக்க கை நீட்டிய போது, “சங்கறுத்துடுவேன்” என்ற கத்தல் காதைக் கிழித்தது
பயம் சூழ்ந்த நிலையிலும் கத்தியை இழுத்து தலையணையின் கீழ் மறைத்து வைக்க முயன்ற போது, கையில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயத்தின் தழும்பு ஒரு வினாடி நடுங்க வைத்தது
கணவனின் மனநல சீர்கேட்டை நன்கு உணர்ந்தவள் என்றாலும், ஆழ்மனத்தில் ஏற்படும் புலன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து மீளயியலாமையில், மனப்பித்தாகிக் கிடந்தாள்.
பூசையின் போது மணியோசைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் அவ்வீட்டில், மனத்தின் மௌன மொழி இறைவனோடு ஐக்கியமாகி விடுவது தியானத்தின் வழி மட்டும் தான்
ஆழ்மன செயல்பாட்டிற்கு முற்பட்டிருக்கும் போது கழுத்தில் கத்தியின் முனை அழுத்தத்திற்குத் தயாரானது போலான உணர்வு, மதியை திடுக்கிட்டு எழச் செய்தது. கத்தி அங்கொரு மன இறுக்கத்தின் தாக்கத்தின் வெளிப்பாடாக மட்டுமே தெரிந்தது
விடுக்கிட்டு எழுந்தவளுக்குக் கழிவறையின் நீரோட்ட சத்தம் சற்று மன அமைதியைத் தந்தது.
“மூளையில நெய்ரோகெமிக்கல்னு அப்டி ஒன்னு இருக்காம். அது பாதிச்சா இப்படித் தான் நடந்துக்கு வாங்க. போலிநியோரோபதின்னு படிச்சேன், அது பல நரம்புகள வேல செய்ய விடாம பண்ணிடுமாம்…”
கணவனின் அசாதரமான ஆழ்ந்த உணர்வுகளுக்கு மதி மதிப்பிடும் தன்மை வினோதமானது .கணவனை நிலைகளை இருமுனைக் கோளாராக எண்ணினாள்.
“அவன் வரப் போறான்… வந்தா என்ன பண்ணுவான்னு தெரியாது. அவன் மனுசனே இல்லை, ரொம்ப மோசமானவன்…. ஒரு கொல வுழுந்தாலும் வுழும்…”
சொல்லிக் கொண்டே அமைதியில் மூழ்கும் அடுத்த நொடி, கணவனுக்குள் வந்து போகும் ஓர் ‘ஆளுமை’யால் மதிக்கு வீங்கிப் போவது தலையும் கன்னங்களும் கை கால்களும் தான்
அதற்கு மருத்துவமனை எக்ஸ்ரே அறிக்கை மட்டுமே ஆதாரம். கழிவறையிலிருந்து வந்தவன், சுவரின் ஓரமாக மறைத்து வைத்திருந்த சம்சுவை மள மளவென்று தொண்டைக்குள் அழுத்தினான்
அந்த நச்சு அவனது மூளைக்குள் புகுந்து மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தான் தள்ளியது. இவ்வாறான ஆழ்ந்த நிலையில் தான் கணவனுக்குள் வந்து செல்லும் ‘ஆளுமை’ பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
மதியின் தலையும் வீட்டுச் சுவரும் சிறுநீர்த் கழிக்கும் இடமாக மாறுவதும்,கழிவறையில் ஆங்காங்கே மலம் கழிக்கப்படுவதும் சாத்தியமாகும்.
ஆண் பிள்ளைகளைப் பெற்றவளுக்கு இந்த மரபணுப் சார்ந்த பிரச்சனை கணவரோடு ஓய்ந்து விடாமல் தன் வாழ்நாள் முழுவதும் உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கும் நிலை உருவாகலாம் என்பது நெருடலாகவே இருந்தது.
“நீ ஜாலியா கண்டவனோட ஊர் சுத்த தான் ஒன் பிள்ளைங்கள ஒன் அம்மா வீட்டுல வுட்டுட்டு என் ரும்ல கண்டவனோட கும்மாளம் போடற”
உயிரற்ற சில சம்பவங்களுக்கு மனம் மறுத்துப் போய் விடுவதுண்டு. மதியின் தாய்மை என்கிற பெண்மையை அதிகபட்சம் உணரக்கூடியவள் இன்னொரு தாய்மை அவளது தாய் தான்.
“மரகதம் கெபாஜிக்கான் காசுல நம்ம பொலப்பு ஓடுது, இதுல பேரப் பிள்ளைங்க வேறயா…”
“நல்ல மாப்ளன்னு என் பொண்ண கட்டி வச்ச, அவரு என்னான்னா அஞ்சு நிமிசத்துக்கு ஒருவாட்டி அன்னியனா மாறிடறார். என் மவதா சாவுது, பிள்ளங்களாவது நிம்மதியா இருக்கட்டும்…”
தாயும் பலமுறை காவல் துறையில் கணவனைப் பற்றிப் புகாரளிக்க கட்டாயப்படுத்தியும், உளவியல் சிதைவுகளுக்கு சர்வதிகாரம் தலைத்தூக்குமானால் அது மோசமான எதிர்வினைகளைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்ததால், அவள் மௌனமாய் இருந்தாள்
காய்ச்சலுக்கு சாமியார் என்பது போல, இரவு பத்து மணிக்கெல்லாம் தொலைத்து விட்ட நிம்மதியைத் தேடி படுக்கைக்குச் சென்றாள்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் திடீரென பெரிய இரும்பைக் கொண்டு தாக்கியது போல நெஞ்சைப் பிடித்து துடியாய்த் துடித்து கண் விழித்துக் போது, “எங்கிட்டியேவா….உட்டேன் பாரு ஒரு எத்து… ஓடிட்டான்லே அவன்” சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான் கணவன்
வலி தாங்காது துடித்தவள் சிறிது நேரத்தில் மயங்கினாள்.
“சங்கறுத்துடுவேன்” ஈரக்குலையை நடுங்க வைக்கும் இக்கொடூர வார்த்தைகளைக் கேட்கயியலாது செவித் துவாரங்களை இறுக்கி மூடிக் கொண்டாள் மதி
விழி மூடிய கண்களைத் திறந்து பாரென சிந்தையில் ஊடுருவியது ஓர் உணர்வு. ஏதோவொரு உந்துதலில் தூண்டுதலில் இமைகளைத் திறக்கையில், அறையின் மேல் மூலையிலிருந்து கருத்து உருவமாக தென்பட்டதொன்று
அதிவேகத்தில் சுருளையாக மாறி அங்கும் இங்குமாய் அலை மோதியது. பய உணர்வு மதியை முழுமையாய் ஆட்கொண்டது. தொண்டையிலிருந்து வார்த்தைகள் வர இயலாமல் குரல் வளையம் நெறிக்கப்பட்டிருந்தது
கால்கள் நகர்வதற்கு வலிமையில்லாமல் மறுத்துப் போயிருந்தன. கைகளை நகர்த்தி போர்வைக்குள் மறைந்திட யாரோ ஒருவரின் கட்டுக்குள் பிடியைத் தளர்த்திட உடலின் அசைவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது
கண்கள் பிதுங்கிய மூக்கின் நாசித் துவாரத்திற்கு வழி தடம் புரண்டுப் போனது. சுருளையான உருவமானது விரைந்து வந்து மதியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆக்கிரமித்து நடைப்பிணமாக்கும் வேளையில்…
“ம்மா….மணி எத்தனை மா…” எங்கோ கேட்ட குரலோசையைப் போல் மதியின் காதில் விழுந்தது.
“ம்மா மணியாச்சாமா…” இம்முறை மூத்தவன் தன் தாயின் தோளைத் தட்டி அழைத்ததில், மதி மாயவலையிலிருந்து சற்று விலகி அறையைப் பார்த்தாள்
கண் தேய்த்தவாறு மீண்டும் உறக்கத்தில் மூழ்கினாள். நெஞ்சில் படபடப்பு, உடலெங்கும் வியர்வு. கருத்த சுருளையானது போன திசையறியாது கதவில்லாத அலமாரியையும் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை நோட்டமிட்டாள்
அதே மெத்தையில் பால் வடியும் முகங்களில் நிம்மதியான நித்திரையின் முகவரியை விசாலமாக அடையாளங் கண்டாள். இளையவனின் குறட்டை ஒலி ஒரு பெரிய ஆளுமையின் வெற்றிக் களிப்பாக அவள் காதுகளுக்குக் கேட்டது.
தெருவிளக்கின் ஒளி சன்னல்களில் ஊடுருவி மிதமான வெளிச்சத்தை அறை முழுவதும் வழங்கியிருந்தது.
தெருவில் மோட்டார் வண்டியின் ஒலியும் ஒளியும் போலிருக்க, எழுந்து வந்து சன்னலைத் திறந்தாள். அதே யாமாஹா வண்டியில், தலைத் தொங்கியவாறு ஓர் உருவம் வண்டியை முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தது
தலை நிமிர்ந்தவாறு “சங்கறுத்துடுவேன்” மதியின் இதயத்துடிப்பு பன்மடங்கு மேலோங்கிய வேளையில், “ம்மா…ச்ச்சிச்சி ….” கடைக்குட்டி சிலுவாரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்
அவனை நோக்கிய அந்தவொரு விநாடியில் அவ்வுருவம் மறைந்து மாயமானது. மகனிடம் பயத்தைக் காட்டாதவாறு மதி அங்கிருந்து நகர்ந்தாள்.
குழந்தையைத் தூங்க வைத்தவள், கைப்பேசியில் தன் குழந்தைகள் வாசித்த கவிதையின் ஒலியைத் திறந்து விட்டாள்.
“அச்சமில்லை அச்சமில்லை…அச்சமென்பதில்லையே…”
உரக்க வாசித்திருந்த அந்த குரல்களின் வலிமை மதிக்கு மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவியது. வாசல்வரை நடந்து வந்தவள், சற்று நடையை நிறுத்தித் திரும்பிப் பார்த்தாள்
கணவனின் படத்திற்குப் போடப்பட்டிருந்த பூச்சரம் சரிந்து ஓர் உறையின் மீது விழுந்தது.
“உங்க அஸ்பென்டோட டெத் தற்கொலைதானு கேசு முடிச்சிட்டேன், அதோட ரிப்போர்ட் இது. பாடி பக்கத்துல இருந்த கத்திக்கும் ரிப்போட்ல இருக்கிற கத்தியோட சேம்பலுக்கும் சம்மந்தம் இல்ல, இருந்தாலும் உங்கல டிஸ்டப் பண்ண வேணாம்னு ரிப்போர்ட் முடிச்சிட்டேன். கொஞ்சம் ‘கவனிச்சுக்குங்க’”
அறிக்கைக்குக் கொடுத்த முன்னுரிமையை விட காவல்துறை அதிகாரியின் பார்வையில் சலனங்கள் நிறைந்து காணப்பட்டன. பொய்யான காவல் துறை அறிக்கையைப் பெற மனமில்லாமல், உருக்குலைந்து நூறு நாள்கள் கடந்து விட்டன.
சன்னலைத் திறந்தாள். முன்னூறு மீட்டர் தொலைவிலிருந்த காட்டை வெறித்துப் பார்த்தாள். அதிகாலைப் பொழுதில் சிட்டுக்குருவிகள் கீச்சிடும் சத்தம் மட்டுமே காதை வந்தடைந்த வேளையில் மீண்டும் அதே குரல்
“சங்கறுத்துடுவேன்…”
இக்கதையில் காணப்படும் மலாய்ச் சொற்களின் (மலேசிய தேசிய மொழி ) பயன்பாடு:-
- ஜாகா டீரி சாயாங் : ஜாக்கிராதையாக இரு அன்பே
- கெபாஜிகான் : சமூக நல அமைப்பின் உதவித் தொகை
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings