அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஆதவன் தன் கதிர்களை பரப்பி, புது விடியலை தொடங்கலாமா, வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்த நேரம். “தடால் தடால்” என்று ஒரு பயங்கரமான சத்தம். சத்தம் கேட்டு அரை தூக்கத்திலிருந்து விழித்தேன் நான்.
வழக்கமாக இந்த நேரத்தில் விழிப்பவள் அல்ல நான். நேற்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை பற்றிய சிந்தனை என்னை மேலும் தூங்க விடாமல் செய்தது. இந்த அளவு மோசமான நிகழ்வு என் வாழ்வில் நடந்தது இல்லை.
அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூனி, குறுகி நின்று கொண்டிருந்ததை இப்போது நினைக்கையிலும், கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் முட்டிக் கொண்டு வருகிறது.
நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. அது ஒரு தனியார் கணிப்பொறி நிறுவனம். கணினி அறிவியலில் பட்டப்படிப்பு முடித்திருந்ததால் அங்கு வேலை கிடைத்தது எனக்கு.
நான்கு வருட வேலை அனுபவம் இருந்ததால் ஐந்து பேர் கொண்ட குழுவில் என்னை சேர்த்துக் கொண்டார்கள். கணினி செய் நிரலாக்கம் (Computer Programming) செய்வது என் பணி. அலுவலகத்தில் உள்ள எல்லோரும் இடைவேளை நேரத்தில் நன்கு பேசி சிரித்துக் கொள்வோம்.
எங்கள் அலுவலக மேலாளர் பெயர் சுந்தர். முகத்தை எப்போதும் தேள் கொட்டியது போன்ற பாவனையில் வைத்திருப்பார். அவர் மிகவும் கண்டிப்பானவர் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டுமாம். அதற்கு தான் அந்த பாவனை. எங்களுக்கு அது சோதனை. இன்று எனக்கு வேதனை.
ஒரு திங்கள்கிழமை காலை அலுவலகத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு, முகமெல்லாம் பல் தெரியுமளவிற்கு புன்னகைத்துக் கொண்டே வந்தார். இவ்வளவு நாள் இந்த புன்னகையை எங்கே ஒளித்து வைத்திருந்தாரோ என்று தோன்றியது எனக்கு.
எங்கள் அலுவலகத்திற்கு ஒரு புதிய செயல்திட்டப்பணி (Project) கிடைத்திருக்கிறது, என்று மேலாளரின் உதவியாளர் கண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவை அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அனைவரையும் அமரச் சொன்னார். அவர் மேசை பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
மரியாதை நிமித்தமாக, அவர் அமர்ந்த பிறகு மேசையைச் சுற்றி வட்ட வடிவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். மேலாளர் சுந்தர் பேனாவை மேசையில் தட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
“எல்லோருக்கும் வணக்கம். ஒரு பெரிய செயல்திட்டப்பணி (Project) நமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து இதில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதற்கான அடிப்படை (Basic) வரைமுறைகளை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். அதைப் பற்றிய அனைத்து தகவல்களும் மேசையின் மேல் உள்ள இந்த கோப்பில் (File) உள்ளது. பேச்சில் நேரத்தை விரயமாக்காமல் உங்கள் செயல்பாடுகளின் வழி உங்களை சந்திக்கிறேன். ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் என் உதவியாளர் கண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று இரத்தின சுருக்கமாக தன் உரையை முடித்து கொண்டார்.
அதன் பிறகு திட்டப்பணிக்கான (Project) வேலை விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது. அலுவலகத்தை பற்றியே விறுவிறுப்பாக பேசி கொண்டிருந்ததில் என்னை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்.
என் பெயர் கயல்விழி. பெயரை போன்றே அழகான கணவர் எழிலரசன். அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அழகுக் குழந்தைகள் இரண்டு. மூத்தவள் பெண் குழந்தை நிவேதா 5 1/2 வயது. சின்னவன் பரத் 3 வயது.
நாங்கள் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். திட்டப்பணிக்கான வேலை மும்முரமாக போய் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று சின்னவன் பரத்திற்கு காய்ச்சல் என்று ஒருநாள் அலுவலக விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உண்டாயிற்று.
அடுத்த நாள் தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான் அலுவலகத்திற்கு வந்த பத்தாவது நிமிடம் கண்களில் கோபத்தனல் பற்றி யெரிய மேலாளர் என்னை நோக்கி வந்தார்.
புது திட்டப்பணிக்கான (Project File) கோப்பை என் மேல் விட்டெறிந்து, “நீ எல்லாம் அலுவலகப் பணிக்கு எதற்கு வருகிறாய்” என்று தொடங்கி சரமாரியாக திட்டினார். அவர் திட்டிய வார்த்தைகளை என் காதினால் கேட்க கூட முடியவில்லை. பிறகு எப்படி சொல்வது?
அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரின் பார்வையும் எங்கள் மீதுதான் இருந்தது. அவர்களின் ஏளனப் பார்வை ஒருபுறமிருக்க என்ன நடந்தது என்று யூகிக்க கூட முடியாமல் தூண்டிலில் அகப்பட்ட மீனைப்போல் துடித்துக் கொண்டிருந்தேன்.
பதில் ஏதும் திருப்பி பேசாததால் வாயில் வந்ததை சொல்லி திட்டிவிட்டு சென்று விட்டார். எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதை அடக்கிக் கொண்டு நின்றிருந்தேன்.
திட்டப்பணியில் (Project) ஏதோ பெரிய தவறு நடந்து இருக்கிறது. என் அன்புக்குரிய குழு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்லி என்னை மாட்டி விட்டுவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள் என்று உதவியாளர் கண்ணனிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன்.
வீட்டிற்கு வந்த பிறகும் அந்த நிகழ்வு என் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது. குழந்தைகளின் கள்ளம் கபடமில்லா சிரிப்பை பார்த்ததும் சற்று ஆறுதலாக இருந்தது.
‘எவ்வளவு சுயநலம் மிகுந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குழந்தைகளாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கடவுளுக்கு தான் என்னே ஒரு ஓரவஞ்சனை. குறைந்தபட்சம் குழந்தையின் மனநிலையையாவது மனிதருக்கு கொடுத்திருக்கலாம்’ என்று தோன்றியது.
இவ்வளவு அவமானத்திற்கு பிறகும், நாளையிலிருந்து அலுவலகத்திற்கு செல்லலாமா, வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனையோடே தூங்கிப் போனேன்.
தற்போது, தூங்கி எழுந்து நேற்றைய ரணம் ஆறாமல், அந்த சிந்தனையிலே, ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் இருப்பது 6-வது மாடி. எங்கள் வீட்டில் நான் கட்டிலில் இருந்து எழும்பி உட்கார்ந்தால், எனக்கு முன்னால் பெரிய கண்ணாடி ஜன்னல் திறந்து மூடும்படி அமைந்து இருக்கும். என் தலைக்கு நேர் பின்னால், பெரிய அளவிலான ஆளுயுர கண்ணாடியால் ஆன அலமாரி இருக்கும்.
கட்டிலில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால், இடையில் சாலை இருக்கும். சாலையைத் தாண்டி இன்னொரு அடுக்குமாடி ஒரு குடியிருப்பு. அதில் குறைந்தது 20 மாடியாவது இருக்கும். எல்லா மாடியின் முகப்பிலும் பால்கனி இருக்கும்.
ஜன்னல் வழியாக தெரியும் அடுக்குமாடி குடியிருப்பை, நான் திரும்பி அலமாரி கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். என்னடா இது, ஜன்னலில் திரை இல்லையா என்று உங்களுக்கு தோன்றலாம்.
அதற்கு காரணகர்த்தா என் குழந்தைகள் தான். ஒரு வாரத்திற்கு முன்னால் ஜன்னல் திரையில் ஆளுக்கொரு புறமாக தொங்கி கம்பியோடு சேர்ந்து கட்டிலில் “மொத்” என்று விழுந்தார்கள். நல்லவேளை அடியொன்றும் படவில்லை.
குழந்தைகள் செய்த புண்ணியத்தால் ஜன்னலின் வழியாக ரம்மியான காலைப் பொழுதை ரசித்துக் கொண்டிருந்தேன். பறவைகளின் ஒலி மெல்லிய ஸ்பரிஸமாக கேட்டுக் கொண்டிருந்தது.
சாலைக்கு எதிர்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியின் பால்கனி முகப்பில் சுமார் 20-25 சாம்பல் நிற புறாக்கள் சிறகடித்து கொண்டு இருந்தன.
அந்த புறாக்கள் செய்வது எனக்கு விநோதமாகப்பட்டது. அந்த பறவைகள் 10வது மாடியிலிருந்து பறந்து நீள்வட்டமாக சென்று 12வது மாடி பால்கனி முகப்பிற்கு சென்றன. பின்பு 12-வது மாடியிலிருந்து நீள் வட்டப்பாதையில் வந்து 10வது மாடி பால்கனி முகப்புக்கு வந்தன.
இவ்வாறு தொடர்ந்து செய்து விளையாடியது போல் இருந்தது. கூர்ந்து கவனித்ததில் ஒரு பெரிய புறாவும் குட்டிப் புறாவும் 10வது மாடியை விட்டு அகலவே இல்லை.
அது தாய் பறவை என்று நினைக்கிறேன். குட்டிப் பறவைக்குப் பறக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது. தாய் புறாவானது விடாமுயற்சியோடு குட்டி புறாக்கு கற்றுக் கொடுத்தது. பக்கத்தில் என்ன நடக்கிறது, மற்ற பறவைகள் போட்ட கூச்சல் எதையும் கண்டுகொள்ளவில்லை இரு புறாக்களும்.
10வது மாடியிலிருந்து, 11வது மாடி வரைக்கும் குட்டிப்புறா பறந்தது. அதற்கு மேல் முடியவில்லை. குறைந்தது 20 நிமிடம் இருக்கும் தொடர்ந்து விடாமுயற்சியோடு போராடிக் கொண்டிருந்தன. இறுதியாக அதன் இலக்கை எட்டிவிட்டன.
ஐந்தறிவு படைத்த அந்த புறாக்களின் விடாமுயற்சி, தைரியம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. எனக்குள் ஒரு புது உற்சாகம் பிறந்தது. தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வதில் சிறிது காலம் நான் எனக்குள் கவனம் செலுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொண்டேன்.
‘எவ்வளவு முறை தோற்றாலும், நான் வெற்றி பெறப் பிறந்தவள்’ என்று எனக்குள் தைரியமாக சொல்லிக் கொண்டேன்.
திடீரென்று உலகம் என்னைச் சுற்றி மலர்வது போன்று ஓர் உணர்வு ஏற்பட்டது. அதன் அழகும், அர்த்தமும் என்னில் தோன்றி ஆழமான ஒரு சந்தோஷத்தை தந்தது.
என் மனதில் நம்பிக்கையோடு, எந்த அவமானத்தையும், போராட்டத்தையும், தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று முகத்தில் புன்னகையை தவழவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட தயாரானேன்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings