எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இன்றைய பொழுதில் இப்படி ஒரு சந்திப்பு ஏற்படும் என்று கனவில்கூட எதிர்பாத்திருக்க மாட்டாள் ‘மாலதி’. ஆம்புலன்சில் இருந்து… விபத்தொன்றில் அடிபட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தித் தள்ளிக் கொண்டு போனார்கள்.
மருத்துவமனை வராண்டாவில் அமர்திருந்த மாலதி… அந்த ஸ்ட்ரெச்சர் அவளைக் கடந்தபோது… அழுதபடி சென்ற பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியுற்றாள். அவளின் முகமாற்றத்தைக் கவனித்த ‘இளவரசன்’…
“என்ன மாலதி…ஒரு மாதிரியா இருக்க … வலி எடுக்குதா?”
“இல்ல…”
நிறைமாத கர்ப்பிணி மாலதிக்கு லேசாக இடுப்புவலி எடுத்ததும் பதறிவிட்ட கணவன் இளவரசன்… உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் .தலைப்பிரசவம் என்றதால் கொஞ்சம் பயம் இளவரசனுக்கு .மகப்பேறு மருத்துவர் சில சோதனைகளைச் செய்துவிட்டு…
“இது சாதாரண வலிதான்… பிரசவ வலி எடுக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் ஆகலாம் …நீங்க வீட்டுக்குப் போகலாம் … அதற்குள்ள வலியெடுத்தா உடனே வந்துடுங்க” என்றார்.
இளவரசன் “டாக்டர் … நாங்க இங்கேயே அட்மிட் பண்ணிடறோம் … வீட்டுக்கு போயிட்டு திரும்ப வரணும் …இங்கேயே இருந்தா பாதுகாப்பா இருக்கும்”
“அது உங்க வசதியைப் பொறுத்தது” என்றார் மருத்துவர்.
“பிரசவம் நல்லபடியா ஆகிறவரை அங்கேயே இருப்போம்” என்று ஒரு தனியறையைப் பதிவு செய்து கொண்டார்கள் . கொஞ்சம் நேரம் நடக்கலாம் என்று வெளியே வந்து நடந்த பின்னர் ஓய்வாக வராண்டாவில் உட்கார்ந்த போதுதான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது .
மாலதியின் அம்மா உடன் இருந்தார்… ஸ்ட்ரெச்சருடன் போன பெண்ணைப் பார்த்த மாலதியின் அம்மாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது .இதையும் கவனித்த இளவரசன் மாலதியிடம், “யாரு அவுங்க… தெரிஞ்சவங்களா ?… அவுங்கள பார்த்ததும் உங்க ரெண்டுபேரு முகத்திலும் மாற்றம் வருதே”
“தெரிசவங்க இல்ல …சொந்தகாரங்க”
“சொந்தக்காரங்களா … இதுவரைக்கும் என்கிட்டே சொன்னதே இல்லையே?”
“ஆமாங்க… அவரு எங்க சித்தப்பா … சொத்துப் பிரிக்கும்போது தகராறு … அப்போ பிரிஞ்சிப் போன குடும்பம் …இன்னிக்கி வரைக்கு ஒண்ணு சேரல”
இளவரசன் மீண்டும் எதோ கேட்க வாய்திறக்க, “அதப்பத்தி எதுவும் பேசாதீங்க” என்று ஓரே போடாகப் போட்டார் மாலதியின் அம்மா.
இரவு சாப்பாடு வாங்கி வரச்சொல்லி மாலதியின் அம்மாவை அனுப்பிவிட்டு மாலதியும் இளவரசனும் ஐ.சி.யு.வில் இருக்கும் மாலதியின் சித்தப்பாவை பார்க்கச் சென்றனர். மாலதியின் சித்தி அழுதுக் கொண்டிருந்தாள். மாலதி அமைதியாகத் தான் சித்தப்பாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பார்வையாளர்கள் நேரம் முடிந்து அனைவரும் வெளியே செல்லுமாறு செவிலியர்கள் வலியுறுத்த. மாலதியும் இளவரசனும் தங்களின் அறைக்குத் திரும்பினர் .
அன்றிரவு மாலதிக்கு பிரசவவலி அதிகரித்து, பிரசவ அறைக்குக் கூட்டிப்போனார் … இரவுமுழுதும் குட்டிப் போட்ட பூனையாக இளவரசன் வராண்டாவில் அலைந்து கொண்டிருந்தான் .
அதிகாலை நேரம் … குழந்தை வீர் வீர் என்று கத்தும் சத்தம் வெளியே கேட்டது …அதே நேரம் ஐ.சி.யு வார்டுக்கு வெளியே ஒப்பாரி சத்தம் கேட்டது … நடந்துபோன செவிலியர் “எந்தக் கேஸ் போச்சோ…?” என்று சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போனார்.
இங்கே உதயம் அங்கே அஸ்தமனம். மகப்பேறு வார்டிலிருந்து வெளியே வந்த செவிலியர், “சார்…பையன் பொறந்திருக்கான்… குளிப்பாட்டிட்டு இருக்காங்க…ஒரு மணிநேரத்தல ரூமுக்கு மாத்திடுவாங்க” என்று சொல்லிப் போனார்.
ஒருமணி நேரத்தில் மாலதியுடன் குழந்தையும் அறைக்கு மாற்றப்பட்டனர் . குழந்தையைப் பார்த்ததும் மாலதியின் அம்மா, “பையன் மாலதியின் சித்தப்பா சாயலிலே இருக்கான்” என்றார்.
வெளியே அமரர் ஊர்தியில் மாலதியின் சித்தப்பா உடல் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆன்மாக்கு அழிவில்லை என்று ஆழமாக நம்பினான் இளவரசன்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings