செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அன்று வெள்ளிக்கிழமை. பிரமாண்டமான அந்த நகை கடையில் நல்ல கூட்டம்.
வளையல் செக்ஷனில் நின்று கொண்டிருந்த ஸ்வேதாவிடம் மாங்கல்யம் செக்ஷனில் இருந்த தீபா, “ஹே ஸ்வேதா ஒரு பத்து நிமிஷம் என் செக்ஷனில் இருக்க முடியுமா? குழந்தைக்கு உடம்பு சரியில்லை. வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்” என்று அவள் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்து விட்டாள்.
ஸ்வேதா மாங்கல்யம் செக்ஷனை எட்டி பார்த்தாள். நான்கு பெண்மணிகள் மட்டும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகே போனவள், “உட்காருங்க என்ன வேணும் பாருங்க” என்றவளிடம்
“ஏம்மா மத்த நகைகள்னா செலக்ட் பண்ணனும். தாலி வாங்கும் போது அந்த பிரச்சினையே கிடையாதே. எங்கள் வழக்கப்படி அணியும் மாங்கல்யத்தை செலக்ட் பண்ணியாச்சு. இதோ இதுதான்” என்று அவர்கள் காட்டினார்கள்.
“என்ன கிராம் எவ்வளவு விலை என்று சொன்னால் நல்ல நேரம் முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள வாங்கிடணும்னு வீட்ல பெரியவங்க சொல்லி அனுப்பினாங்க” என்று அவர்கள் சொல்லவும், அவளுக்கு படபடப்பு அதிகமானது.
மனதிற்குள் இந்த நிலைமையில் இருக்கும் நான் எப்படி என் கையால் தருவேன் என்று நினைக்கும் போதே அவளுக்கு வியர்த்து கொட்டியது.
“என்னம்மா யோசனை? டைம் ஆகின்றது பார்” என்று அவர்கள் அவசரப்படுத்தவும்
இதையெல்லாம் பார்த்தபடி செயின் செக்ஷனில் இருந்த வாசு வேகமாக நடந்து அருகே வந்து, “என்ன ஸ்வேதா ஏதாவது ஹெல்ப்?” என்றவுடன் அவளுக்கு ‘அப்பாடி’ என்று ஆனது.
“ஆமாம் வாசு, இவங்க மாங்கல்யத்தை செலக்ட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் அவங்களுக்கு பில் போட ஹெல்ப் பண்றீங்களா? என் செக்ஷனில் இரண்டு பேர் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க” என்று வேகமாக நகர்ந்து தன் இருப்பிடத்திற்கு வந்தவள், தண்ணீர் பாட்டிலை திறந்து மடமடவென குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து, “என்ன ஸ்வேதா இப்படி பண்றே?” என்று வாசு உரிமையோடு அவளை கேட்டான்.
“இல்லை வாசு, என் வாழ்க்கையை பத்தி உனக்கு நல்லா தெரியும். யாரோ முகம் தெரியாத அந்த பெண் கல்யாணம் ஆகி நல்லா இருக்கனும். அதனால் தான்” என்று மெல்லிய குரலில் அவனிடம் சொல்லி முடிக்கும் முன் வாசு தொடர்ந்தான்.
“லன்ச் ஹவர்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும். ஒன் ஹவர் பெர்மிஷன் போடு. வெளியே போய் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
சொன்னது போலவே பெர்மிஷன் போட்டுவிட்டு சாப்பிட வந்தார்கள்
வாசு லன்ச் ஆர்டர் செய்துவிட்டு, “உன்கிட்ட நான் ரெண்டு வருஷமா கேட்டுகிட்டு இருக்கேன், நம்முடைய கல்யாணத்தை பத்தி. நீ பதிலே சொல்லலை. ஏன் ஸ்வேதா என்கிட்ட உனக்கென்ன தயக்கம். நாம ரெண்டு பேரும் ஆறாம் கிளாஸ்லேர்ந்து ஒன்னா படிச்சோம், காலேஜிலயும் அது தொடர்ந்தது. மனசுக்குள்ள உன்னை எப்பவோ விரும்ப ஆரம்பிச்சிட்டேன், ஆனால் விதி வேற விதமா யோசிச்சி உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே. கடவுளின் விருப்பம் அதுதான்னு உன்னை மனசார வாழ்த்திவிட்டு ஒதுங்கினேன். ஆனால் ஒரே வருஷத்தில் நீ உன் கணவனை விபத்தில் இழந்து கைக்குழந்தையோடு நின்றதை கேட்டு துடிச்சி போனேன்.
உன்னை மாதிரியே என் அம்மாவும் எனக்கு ரெண்டு வயசாயிருக்கும் போதே கணவனை இழந்து எந்த ஆதரவையும் இல்லாமல் போராடி என்னை வளர்த்தாள். உன்னை இந்த நிலைமையில் பார்த்த அன்னிக்கே நான் முடிவு பண்ணிட்டேன். நானும் என் அம்மாவும் பட்ட கஷ்டத்தை நீயும் உன் குழந்தையும் படக்கூடாது. தயவு செய்து என்னை புரிஞ்சிக்கோ ஸ்வேதா”
அவன் பேசி முடித்தவுடன் அவள் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்தது.
“வாசு நம்முடைய நட்புக்கு இது களங்கம் இல்லையா? இந்த சமூகம் என்னை என்ன சொல்லும் யோசித்து பார்”
உடனே வாசு, “சமூகத்திற்கு நிறைய வேலை இருக்கு. நம்மை பற்றியெல்லாம் கவலைப்படாது. அப்படியே இருந்தாலும் நாம கஷ்டப்படும் போது இந்த சமூகம் உதவிக்கு வந்ததா? இல்லையே. ஏன் ஸ்வேதா நல்ல நட்பு காதலாக மாறும் போது கணவன் மனைவியா ஏன் மாறக் கூடாது? உன்னுடைய பதிலுக்கு நாளை நான் காத்திருப்பேன். உன்னுடைய சம்மதத்தை ஒரு சின்ன சாக்லேட் மூலமாக எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்” என்று சொல்லிவிட்டு “போகலாமா?” என்றான்.
இரவெல்லாம் நன்றாக யோசித்து மறுநாள் காலை வேலைக்கு கிளம்பியவள், வாசுவிற்கு ரொம்ப பிடித்த கேட்பரீஸ் சாக்லெட்டை வாங்கி கொண்டு நேரே வாசுவின் செக்ஷனை புன்னகையுடன் நெருங்கினாள்.
(முற்றும்)
நன்று.